Home | 10 ஆம் வகுப்பு | 10வது தமிழ் | துணைப்பாடம்: உரைநடையின் அணிநலன்கள்

எழில்முதல்வன் | இயல் 1 | 10 ஆம் வகுப்பு தமிழ் - துணைப்பாடம்: உரைநடையின் அணிநலன்கள் | 10th Tamil : Chapter 1 : Amudha oottru

   Posted On :  21.07.2022 03:35 pm

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 1 : அமுத ஊற்று

துணைப்பாடம்: உரைநடையின் அணிநலன்கள்

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 1 : அமுத ஊற்று : துணைப்பாடம்: உரைநடையின் அணிநலன்கள் - எழில்முதல்வன் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

மொழி

விரிவானம்

உரைநடையின் அணிநலன்கள்

-- எழில்முதல்வன்நுழையும்முன்

சங்க இலக்கியம் நம் பாட்டனார் தோப்பு; இடைக்கால இலக்கியம் நம் தந்தையார் தோட்டம்; இக்கால இலக்கியம் நம் பூங்கா. தோப்பு ஈந்த பயன்களையும் தோட்டம் தந்த நயங்களையும் பூங்காவின் அழகினையும் ஒன்று சேர்த்து உரைநடையின் அணிநலன்களாகக் காண்போமா?...

 

கற்பனை உரையாடல்

பங்கு பெறுவோர் - இணையத் தமிழன், சங்கப் புலவர்


சங்கப் புலவர் ஒருவர் இயற்கைசூழ் இடமொன்றில் எழுத்தாணி கொண்டு ஓலைச் சுவடியில் எழுதிக்கொண்டிருக்கிறார். அப்போது அவர்முன் சிறிய கால இயந்திரம் ஒன்று தோன்றுகிறது. அதிலிருந்து இன்றைய மனிதர் ஒருவர் இறங்கி, புலவரை நோக்கி நடந்து வருகிறார். அச்சமும் அதைவிட வியப்பும் மேலோங்கப் பார்த்துக்கொண்டிருந்த புலவரின் கையைப் பற்றிக் குலுக்குகிறார்.

இணையத் தமிழன்: வணக்கம், ஐயா! நான் இணையத்தமிழன் வந்திருக்கிறேன்.

சங்கப் புலவர்: இணையத்தமிழனா?! வியப்பு! உங்கள் வருகையை என் தோழர் குன்றூர்க் கிழாரிடம் கூறவேண்டும்! அவர் உங்களையும் உங்கள் ஊர்தியையும் குறித்து ஓர் ஆசிரியப்பா இயற்றிவிடுவார்.

இணையத் தமிழன்: இருக்கட்டும் ஐயா! அவரை இன்னொரு வாய்ப்பில் பார்த்துக்கொள்ளலாம். என்னால் உங்களுடன் இங்கு ஒரு மணிநேரம் மட்டுமே இருக்க முடியும். அதற்குள் உங்களோடு இலக்கியம் பற்றிச் சிறிதுநேரம் பேச விரும்புகிறேன்.

சங்கப் புலவர்: கபிலரின் குறிஞ்சிப் பாட்டுப் பற்றியா? எம் போன்ற புலவரின் தனிச் செய்யுள்கள் பற்றியா? யாது குறித்து?

இணையத் தமிழன்: புலவரே! உங்கள் காலத்துப் பாடல்களையெல்லாம் பிற்காலத்தில் சங்கப் பாடல்கள் என்று தொகுத்து வைத்திருக்கிறார்கள். அவையெல்லாம் பாட்டும் தொகையுமாக நூல் விற்பனை நிலையங்களிலும் இணையத்திலும் கிடைக்கின்றன.

சங்கப் புலவர்: இணையமா?

இணையத் தமிழன்: புலவரே! எங்கள் காலத்து அறிவியல் கண்டுபிடிப்புகளைக்காண உங்களை என்னுடன் பின்னர் ஒருமுறை அழைத்துப் போகிறேன். இப்போது இலக்கியம் குறித்துப் பேசலாம்.

சங்கப் புலவர்: நீரும் பாக்கள் இயற்று வீரோ? அகமா? புறமா? அகத்துள் உவமை, மெய்ப்பாடு ஆகியன வைத்திருக்கிறீரா? நும் பாக்கள் ஆசிரியமா?

இணையத் தமிழன்: ஆசிரியப்பாவா!... அதையும் எழுத எங்களில் கொஞ்சம் பேர் இருக்கிறார்கள். எங்கள் காலத்தில் புதுப்புது இலக்கிய வடிவங்கள் தோன்றியிருக்கின்றன. சங்கப் பாடல்களுக்குப் பின், தமிழ் இலக்கியம் அற இலக்கியங்களாகி, காப்பியங்களாகி, சிற்றிலக்கியங்களாகி, சந்தக் கவிதைகளாகி, புதுக்கவிதைகளாகி... இப்போது நவீன கவிதைகளில் வந்து நிற்கிறது. உரைநடையின் வளர்ச்சியோ அளவற்றது! சிறுகதை, கட்டுரை, புதினம்... இவையெல்லாம் எங்கள் கால இலக்கிய வடிவங்கள்!

தெரியுமா?

முதல் தமிழ்க் கணினி

தமிழ் மறையான திருக்குறளைத் தந்த "திருவள்ளுவர் பெயரில் முதல் தமிழ்க் கணினி 1983 செப்டம்பரில் டி.சி.எம். டேட்டா புரொடக்ட்ஸ் என்னும் தனியார் நிறுவனம் உருவாக்கி விற்பனைக்குக் கொண்டுவந்தது. இக்கணினியில் முதல் முறையாகத் தமிழ் மொழியிலேயே விவரங்களை (Data) உள்ளீடாகச் செலுத்தி நமக்குத் தேவையான தகவல்களை வெளியீடாகக் கணினியிலிருந்து பெறமுடிந்தது. இந்தக் கணினி தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளையும் கையாளக் கூடியதாக அமைந்தது. சென்னை தேனாம்பேட்டையில் இருந்த புள்ளிவிவரத் துறை அலுவலகத்திற்கும் தலைமைச் செயலகத்துக்கும் கோப்புகளையும் செய்திகளையும் பறிமாறிக்கொண்ட முதல் நேர்வழிக் கணினியும் "திருவள்ளுவரே'!

சங்கப் புலவர்: உரைநடையா! தொல்காப்பியர் கூறுகிறாரே!.....

இணையத் தமிழன்: அதேதான்! நீங்களும் நானும் பேசுகிறோமே! அதுதான் உரைநடை! பேசினால் உரையாடல்; எழுதினால் உரைநடை. பெரும்பாலும் உரைநடை வடிவில் தான் நாங்கள் இலக்கியம் படைக்கிறோம்.

சங்கப் புலவர்: எம்முடைய பாக்களின் உத்திகளை நீவிர் பயன்படுத்துவீரோ?

இணையத் தமிழன்: என்ன அப்படிக் கேட்டுவிட்டீர்கள்! நீங்கள் தந்த உத்திகளில் சிலவற்றை நீங்கள் தந்த பெயரிலும் சிலவற்றை நாங்கள் வைத்த பெயரிலும் பயன்படுத்துகிறோம்.

சங்கப் புலவர்: மகிழ்ச்சி! உணர்ச்சிகளைக் காட்ட உவமை கொண்ட மொழிநடையே ஏற்ற கருவி. இவற்றை நீவிர் எப்படிப் பயன்படுத்துவீர்?

இணையத் தமிழன்: "திருப்பரங்குன்றத்தின் அழகைப் பார்ப்பதற்கென்றே இயற்கை பதித்து வைத்த இரண்டு பெரிய நிலைக்கண்ணாடிகளைப் போல் வடபுறமும் தென்புறமும் நீர்நிறைந்த கண்மாய்கள்" என்று குறிஞ்சிமலர் என்னும் நூலில் நா.பார்த்தசாரதி உவமையைப் பயன்படுத்தியுள்ளார்.

சங்கப் புலவர்: அருமையான உவமையைக் கூறினீர்! அடுத்து...

இணையத் தமிழன்: இன்னும் உண்டே! உங்களுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்பு வந்த தண்டி என்பவர், உருவகத்தைப் பற்றி 'உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து ஒன்றென மாட்டின் அஃது உருவகமாகும்' என்று எழுதியிருக்கிறார். எங்கள் இலக்கியங்களில் உவமையை விட உருவகமே உணர்வுகளைத் தூண்டி எழுப்புவதில் வெற்றி பெறுகின்றது.

'முகநிலவில் வியர்வை முத்துகள் துளிர்த்தன' என்று உருவகமாக எழுதுகிறார்கள்.

"களம்புகத் துடித்து நின்ற உனக்கு, வெற்றிச்சாறு கிடைத்துவிட்டது, உண்டு மகிழ்ந்தாய்; உன் புன்னகைதான் அதற்குச் சான்று" - இது எங்கள் காலத்தில் வாழ்ந்த அறிஞர் அண்ணா அவர்களின் உரைநடை!

சங்கப் புலவர்: அட! என்னே அவரது கற்பனை! மேலும் கேட்கப் பெருவிழைவு கொள்கிறேன்....

இணையத் தமிழன்: வித விதமான உவமைகளை நீங்கள் பயன்படுத்தியிருக்கிறீர்கள். அவற்றுக்கெல்லாம் பிற்காலத்தில் தோன்றிய இலக்கண நூல்களில் பெயர் வைத்திருக்கிறார்கள். உவம உருபு மறைந்து வந்தால், அதற்கு எடுத்துக்காட்டு உவமை அணி என்று பெயர்.

"புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை

வாய்மையால் காணப் படும்"

இந்தத் திருக்குறளில் உவம உருபு இல்லை. இதை நாங்கள் உரைநடையிலும் பயன்படுத்துகிறோம். எடுத்துக்காட்டு உவமை அணியை உரைநடையில் பயன்படுத்துகையில் 'இணை ஒப்பு' (analogy) என்கிறோம்.

"ஊர் கூடிச் செக்குத் தள்ள முடியுமா? என்று கேட்கிறார்கள், ஊர் கூடின பிறகுதான் செக்குத் தள்ள வேண்டும் என்று காத்திருப்பவர்களின் காரியம் கைகூடாது, புரோகிதருக்காக அமாவாசை காத்திருப்பதில்லை" என்று எழுத்தாளர் வ.ராமசாமி 'மழையும் புயலும்' என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

சங்கப் புலவர்: என்னே செறிவு!

இணையத் தமிழன்: அஃறிணைப் பொருள்களையும் உயர்திணையாகக் கருதிக் கற்பனை செய்து எழுதுவோம்.

சங்கப் புலவர்: இலக்கணத்தில் இது உண்டே! தொல்காப்பியர், "ஞாயிறு, திங்கள், நெஞ்சம் போன்ற அஃறிணைப் பொருள்கள், சொல்லும் போலவும், கேட்குந போலவும் சொல்லியாங்கு அமையும்" (செய்யுளியல், 192) என்று எழுதும் திறத்தைக் குறிப்பிட்டிருக்கின்றார். உயிர் இல்லாத பொருள்களை உயிர் உள்ளன போலவும், உணர்வு இல்லாத பொருள்களை உணர்வுடையன போலவும் கற்பனை செய்வதுண்டு என்று எடுத்துக்காட்டியிருக்கிறார்.

இணையத் தமிழன்: நீங்கள் குறிப்பிட்ட இரண்டையும் நாங்கள் 'இலக்கணை' என்கிறோம்.

"சோலையில் புகுவேன்; மரங்கள் கூப்பிடும்; விருந்து வைக்கும், ஆலமர நிழலில் அமர்வேன்; ஆல், ‘என் விழுதைப் பார். அந்த அரசுக்கு இஃது உண்டா?' என்னும். அரசு கண்ணிற்படும். 'யான் விழுதின்றி வானுற ஓங்கி நிற்கிறேன், என்னை மக்கள் சுற்றிச் செல்கிறார்கள், காண்' என்னும். 'வேம்பு, என் நிழல் நலஞ்செய்யும். என் பூவின் குணங்களைச் சொல்கிறேன் வா' என்னும். அத்தி, நாகை, விளா, மா , வில்வம் முதலிய மரங்கள் விளியாமலிருக்குமோ? சிந்தனையில் அவைகளின் நுட்பங்கள் விளங்கும். மலை என்னை அடிக்கடி அழைக்கும். மலைமீது இவர்வேன்; ஓரிடத்தில் அமர்வேன்; மேலும் கீழும் பார்ப்பேன்; சுற்றுமுற்றும் பார்ப்பேன். மனம் அமைதி எய்தும்" எங்கள் காலத் தமிழ்த்தென்றல் திரு. வி. கலியாணசுந்தரனார் இப்படி எழுதியிருக்கிறார்.

சங்கப் புலவர்: மோனையும் எதுகையும் செய்யுளில் வருமாயின் இனிய ஓசையின்பம் விளையும். இவற்றினை நீவிர் உரைநடையில் பயன்படுத்துவீரோ?

இணையத் தமிழன்: ஆம். இதோ!

"தென்றல் அசைந்துவரும் தென் தமிழ் நாட்டில் அமைந்த திருக்குற்றாலம், மலைவளம் படைத்த பழம்பதியாகும். அம்மலையிலே, கோங்கும் வேங்கையும் ஓங்கி வளரும்; குரவமும் முல்லையும் நறுமணங் கமழும்! கோலமாமயில் தோகை விரித்தாடும்; தேனுண்ட வண்டுகள் தமிழ்ப் பாட்டிசைக்கும்; இத்தகைய மலையினின்று விரைந்து வழிந்திறங்கும் வெள்ளருவி வட்டச் சுனையிலே வீழ்ந்து பொங்கும் பொழுது சிதறும் நீர்த் திவலைகள் பாலாவிபோற் பரந்தெழுந்து மஞ்சினோடு சேர்ந்து கொஞ்சிக் குலாவும்" என்று சொல்லின் செல்வர் இரா.பி.சே., தமிழின்பம் என்னும் நூலில் எழுதியுள்ளார்.

சங்கப் புலவர்: அருமை! உணர்வு வெளிப்பாட்டிற்கும் சொல்லப்படும் கருத்திற்கு அழுத்தம் தரவும் நீவிர் உரைநடையில் வேறு என்ன உத்திகளைப் பயன்படுத்துவீர்?

இணையத் தமிழன்: இதற்காகச் சொல்லையோ கருத்தையோ திரும்பத் திரும்பச் சொல்வதுண்டு! சொற்களை அளவாகப் பயன்படுத்தி உரைநடையை அழகு செய்ய மு.வரதராசனார், தம் நாட்டுப்பற்று என்னும் கட்டுரைத் தொகுப்பில்,

"வாழ்க்கை நடத்துவதற்குப் பொருள்கள் பல வேண்டும். அரிசி, காய், கனி முதலியவை வேண்டும். உடை, வீடு முதலியவை வேண்டும். காசும் காகித நோட்டும் வேண்டும், இன்னும் பல வேண்டும். இவற்றை ஆளும் அறிவும் வேண்டும்" என்று எழுதியிருக்கிறார்.

சங்கப் புலவர்: மிகச் சுவையாக உள்ளது! இன்னும் வேறென்ன உத்திகள்?

இணையத் தமிழன்: இருக்கின்றனவே! படிப்பவருக்கு முரண்படுவதுபோல இருக்கும்; உண்மையில் முரண்படாத - மெய்ம்மையைச் சொல்லுவது 'முரண்படு மெய்ம்மை ' (paradox).

இதோ! அதற்கும் ஓர் எடுத்துக்காட்டு

'இந்த உலகத்தில் பயம் என்ற ஒன்றிற்குத் தவிர வேறு எதற்கு நாம் பயப்பட வேண்டும்?

சங்கப் புலவர்: மேலும் ....

இணையத் தமிழன்: முரண்பட்ட சொற்களைச் சேர்த்து எழுதுவார்கள் ... 'கலப்பில்லாத பொய்'... இதைச் சொல்முரண் (Oxymoron) என்கிறோம். சொல்லும் முறையில் அழுத்தம் கொடுப்பதற்காக எதிரும் புதிருமான முரண்படும் கருத்துகளை அமைத்து எழுதுவோம்... இதனை எதிரிணை இசைவு (Antithesis) என்கிறோம்.

"குடிசைகள் ஒரு பக்கம்; கோபுரங்கள் மறுபக்கம்; பசித்த வயிறுகள் ஒருபக்கம்; புளிச்சேப்பக்காரர்கள் மறுபக்கம்: மெலிந்த எலும்புக்கூடுகள் ஒருபக்கம்; பருத்த தொந்திகள் மறுபக்கம்; கேடுகெட்ட இந்தச் சமுதாயத்திற்கு என்றைக்கு விமோசனம்? தோழர்களே, சிந்தியுங்கள்!" என்று தோழர் ப.ஜீவானந்தம் எழுதியிருப்பது இதற்கு நல்ல எடுத்துக்காட்டு!

சங்கப் புலவர்: கேட்கும் போதிலே சிலிர்ப்பு உண்டாகிறதே!

இணையத் தமிழன்: புலவரே! இதையும் கேளுங்கள்! விடைதரவேண்டிய தேவை இல்லாமல் கேள்வியிலேயே பதில் இருப்பதைப் போலவும் எழுதுவோம்! அது உணர்ச்சி வெளிப்பாட்டுக்கு உதவக்கூடியது!

"அவர் (பெரியார் ஈ.வெ.ரா) பேசாத நாள் உண்டா? குரல் கேட்காத ஊர் உண்டா? அவரிடம் சிக்கித் திணறாத பழமை உண்டா? எதைக் கண்டு அவர் திகைத்தார்? எந்தப் புராணம் அவரிடம் தாக்குதலைப் பெறாதது?... எனவேதான், பெரியாருடைய பெரும் பணியை நான் ஒரு தனிமனிதனின் வரலாறு என்றல்ல ஒரு சகாப்தம் - ஒரு கால கட்டம் - ஒரு திருப்பம் - என்று கூறுகிறேன்."

இது பெரியாரைப் பற்றி அறிஞர் அண்ணா பேசியது.

எப்படி இருக்கிறது ஐயா?

சங்கப் புலவர்: உணர்ச்சிப் பெருவெள்ளம்! இதன் உச்சநிலை (climax) என்ன?

இணையத் தமிழன்: உச்சநிலைதானே? இருக்கிறதே! சொல்லையோ கருத்தையோ அடுத்தடுத்து வைக்கும் முறையிலே உள்ள சிறப்புதான் அது.

"இந்தியாதான் என்னுடைய மோட்சம்; இந்தியாவின் நன்மைதான் என் நன்மை. இந்தியாதான் என் இளமையின் மெத்தை; என் யௌவனத்தின் நந்தவனம்; என் கிழக்காலத்தின் காசி" என்று பாரதி என்னும் தமிழ்க்கவிஞர் நம் நாட்டை உயர்த்திக் கூறுகிறார்.

சங்கப் புலவர்: மிக்க மகிழ்ச்சி! நீர் தமிழ் உரைநடைச் செழுமை பற்றிக் கூறக் கூற மேலும் அவற்றைப் படித்து இன்புற அவாவுறுகிறேன்!

இணையத் தமிழன்: அதற்கென்ன புலவரே! அடுத்த முறை வரும் போது என்னுடைய மடிக்கணினியில் சேமித்து வைத்துள்ள பல்வேறு இலக்கியங்களை உங்களுக்குத் தருகிறேன்! பயன்படுத்திக்கொள்ளுங்கள்! நேரமாகிவிட்டது. போய்வருகிறேன் புலவரே!

சங்கப் புலவர்: போய் வாரும்!.... மடிக்கணினி என்று ஏதோ கூறினார்! அப்படியென்றால் என்னவென்று கேட்பதற்குள் பறந்துவிட்டாரே!

 

நூல்வெளி

எழில்முதல்வன் எழுதிய 'புதிய உரைநடை' என்னும் நூலிலுள்ள உரைநடையின் அணிநலன்கள் என்னும் கட்டுரையின் சுருக்கம், இங்கு உரையாடல் வடிவமாக மாற்றித் தரப்பட்டுள்ளது.

மா.இராமலிங்கம் (எ) எழில்முதல்வன் மாநிலக் கல்லூரியில் பயின்று அங்கேயே பேராசிரியர் பணியைத் தொடர்ந்தவர். குடந்தை அரசு ஆடவர் கல்லூரி, பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணிசெய்தவர். மரபுக் கவிதை, புதுக்கவிதை படைப்பதிலும் வல்லவர். இனிக்கும் நினைவுகள், எங்கெங்கு காணினும், யாதுமாகி நின்றாய் முதலிய நூல்களை இயற்றிய பெருமைக்குரியவர். 'புதிய உரைநடை' என்னும் நூலுக்காக சாகித்திய அகாதெமி விருதுபெற்றவர்.

 

தொன்று தொட்டு இன்றுவரை நின்று நிலவும் ஊர்கள், தொன்மைத் தமிழ் நாகரிகத்தின் வேர்கள்! இலக்கியத்தின் சீர்களில்...


முன்தோன்றிய மூத்தகுடி

"வாழையும் கமுகும் தாழ்குலைத் தெங்கும்

மாவும் பலாவும் சூழ்அடுத்து ஓங்கிய

தென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும்"

சிலப்பதிகாரம், காடுகாண் காதை: 53-55


 

கற்பவை கற்றபின்....

1. நீங்கள் படித்தவற்றுள் நினைவில் நீங்கா இடம்பெற்ற இலக்கியத் தொடர்கள், நயங்களை எழுதுக.


2. கொடுத்த தலைப்பில் பேசுவோம்.

தலைப்பு - நேரம்

தவிர்க்க வேண்டிய சொல் - கடிகாரம்

குறிப்பு - ஒரு நிமிடம் பேச வேண்டும். தமிழ்ச்சொற்களை மட்டும் பயன்படுத்த வேண்டும்.

ஐந்து வினாடிகளுக்குமேல் இடைவெளி இருத்தல் கூடாது.

இது போன்று வேறு வேறு தலைப்புகளில் வகுப்பறையில் பேசிப் பழகுக.

 

 

Tags : by Ezhil mudhalvan | Chapter 1 | 10th Tamil எழில்முதல்வன் | இயல் 1 | 10 ஆம் வகுப்பு தமிழ்.
10th Tamil : Chapter 1 : Amudha oottru : Supplementary: Urainadayin Ani nalankal by Ezhil mudhalvan | Chapter 1 | 10th Tamil in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 1 : அமுத ஊற்று : துணைப்பாடம்: உரைநடையின் அணிநலன்கள் - எழில்முதல்வன் | இயல் 1 | 10 ஆம் வகுப்பு தமிழ் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 1 : அமுத ஊற்று