Home | 10 ஆம் வகுப்பு | 10வது தமிழ் | கவிதைப்பேழை: இரட்டுற மொழிதல்

சந்தக்கவிமணி தமிழழகனார் | இயல் 1 | 10 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: இரட்டுற மொழிதல் | 10th Tamil : Chapter 1 : Amudha oottru

   Posted On :  21.07.2022 02:44 am

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 1 : அமுத ஊற்று

கவிதைப்பேழை: இரட்டுற மொழிதல்

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 1 : அமுத ஊற்று : கவிதைப்பேழை: இரட்டுற மொழிதல் - சந்தக்கவிமணி தமிழழகனார் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

மொழி

கவிதைப் பேழை

இரட்டுற மொழிதல்

- சந்தக்கவிமணி தமிழழகனார்


 

நுழையும்முன்

விண்ணோடும் முகிலோடும் உடுக்களோடும் கதிரவனோடும் கடலோடும் தமிழ் இணைத்துப் பேசப்படுகிறது. இவற்றுக்குள்ள ஆற்றலும் விரிவும் ஆழமும் பயனும் தமிழுக்கும் உண்டு எனப் போற்றப்படுகிறது. தமிழ் கடலோடு ஒத்திருத்தலை இரட்டுற மொழிவதன் மூலம் அறிகையில் அதன் பெருமை ஆழப்படுகிறது; விரிவுபடுகிறது.


ஆழிக்கு இணை

முத்தமிழ் துய்ப்பதால் முச்சங்கம் கண்டதால்

மெத்த வணிகலமும் மேவலால் - நித்தம்

அணைகிடந்தே சங்கத் தவர்காக்க ஆழிக்கு

இணைகிடந்த தேதமிழ் ஈண்டு

- தனிப்பாடல் திரட்டு

 

சொல்லும் பொருளும்

துய்ப்பது - கற்பது, தருதல்

மேவலால் - பொருந்துதலால், பெறுதலால்

 

பாடலின் பொருள்

தமிழ்: தமிழ், இயல் இசை நாடகம் என முத்தமிழாய் வளர்ந்தது; முதல் இடை கடை ஆகிய முச்சங்கங்களால் வளர்க்கப்பட்டது; ஐம்பெருங்காப்பியங்களை அணிகலன்களாகப் பெற்றது ; சங்கப் பலகையில் அமர்ந்திருந்த சங்கப்புலவர்களால் காக்கப்பட்டது.

கடல் : கடல், முத்தினையும் அமிழ்தினையும் தருகிறது; வெண்சங்கு, சலஞ்சலம், பாஞ்சசன்யம் ஆகிய மூன்று வகையான சங்குகளைத் தருகிறது; மிகுதியான வணிகக் கப்பல்கள் செல்லும்படி இருக்கிறது; தன் அலையால் சங்கினைத் தடுத்து நிறுத்திக் காக்கிறது.


தெரிந்து தெளிவோம்

இரட்டுற மொழிதல்

ஒரு சொல்லோ, சொற்றொடரோ இருபொருள்பட வருவது இரட்டுற மொழிதல் அணி எனப்படும். இதனைச் சிலேடை அணி என்றும் அழைப்பர். செய்யுளிலும் உரைநடையிலும் மேடைப்பேச்சிலும் சிலேடைகள் பயன்படுத்தப்படுகின்றன.

 

நூல் வெளி

புலவர் பலரின் பாடல்களின் தொகுப்பான தனிப்பாடல் திரட்டு (ஐந்தாம் பகுதி – கழகப் பதிப்பு) என்னும் நூலிலிருந்து இந்தப்பாடல் எடுத்தாளப்பட்டுள்ளது. இப்பாடலைப் படைத்தவர் தமிழழகனார்.

சந்தக்கவிமணி எனக் குறிப்பிடப்படும் தமிழழகனாரின் இயற்பெயர் சண்முகசுந்தரம். இலக்கணப் புலமையும் இளம்வயதில் செய்யுள் இயற்றும் ஆற்றலும் பெற்ற இவர் பன்னிரண்டு சிற்றிலக்கிய நூல்களைப் படைத்துள்ளார்.

 

கற்பவை கற்றபின்...

1. அ) காலை நேரம் ஒரு நிகழ்ச்சிக்காகத் தொடர்வண்டியில் வந்து இறங்கினார் தமிழறிஞர் கி.வா.ஜகந்நாதன். அவரை மாலையிட்டு வரவேற்றனர். அப்போது கி.வா.ஜ., "அடடே! காலையிலேயே மாலையும் வந்துவிட்டதே!" என்றார். எல்லோரும் அந்தச் சொல்லின் சிலேடைச் சிறப்பை மிகவும் சுவைத்தனர்.

ஆ) இசை விமரிசகர் சுப்புடுவின் விமரிசனங்களில் நயமான சிலேடைகள் காணப்படும். ஒரு முறை ஒரு பெரிய வித்துவானுடைய இசைநிகழ்ச்சியை விமரிசனம் செய்யும் போது அவர் குறிப்பிட்டது: "அன்று கச்சேரியில் அவருடைய காதிலும் கம்மல், குரலிலும் கம்மல்."

இ) தமிழறிஞர் கி.ஆ.பெ.விசுவநாதன் பல் மருத்துவத்தில் சிறப்புப் பட்டம் பெற்ற நண்பர் ஒருவரை அறிமுகம் செய்து வைத்தபோது "இவர் பல்துறை வித்தகர்" என்று குறிப்பிட்டார்!

இவைபோன்ற பல சிலேடைப் பேச்சுகளை நீங்கள் கேட்டிருப்பீர்கள். அவற்றைத் தொகுத்துச் சொல்நயங்களைப் பதிவு செய்து கலந்துரையாடுக.

2. மொழியின் சிறப்புகளைப் பாடும் கவிதைகளுள் உங்களுக்குப் பிடித்தவற்றை வகுப்பறையில் படித்துக்காட்டுக.

 

Tags : by Santha kavimani Tamilalaganaar | Chapter 1 | 10th Tamil சந்தக்கவிமணி தமிழழகனார் | இயல் 1 | 10 ஆம் வகுப்பு தமிழ்.
10th Tamil : Chapter 1 : Amudha oottru : Poem: Irattura mozhithal by Santha kavimani Tamilalaganaar | Chapter 1 | 10th Tamil in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 1 : அமுத ஊற்று : கவிதைப்பேழை: இரட்டுற மொழிதல் - சந்தக்கவிமணி தமிழழகனார் | இயல் 1 | 10 ஆம் வகுப்பு தமிழ் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 1 : அமுத ஊற்று