Home | 10 ஆம் வகுப்பு | 10வது தமிழ் | கவிதைப்பேழை: அன்னை மொழியே

பாவலரேறு பெருஞ்சித்திரனார் | இயல் 1 | 10 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: அன்னை மொழியே | 10th Tamil : Chapter 1 : Amudha oottru

   Posted On :  21.07.2022 02:36 am

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 1 : அமுத ஊற்று

கவிதைப்பேழை: அன்னை மொழியே

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 1 : அமுத ஊற்று : கவிதைப்பேழை: அன்னை மொழியே - பாவலரேறு பெருஞ்சித்திரனார் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

மொழி

கவிதைப் பேழை

அன்னை மொழியே

- பாவலரேறு பெருஞ்சித்திரனார்


 

நுழையும்முன்

சின்னக் குழந்தையின் சிரிப்பும் ஆனவள்; பழுத்த நரையின் பட்டறிவும் ஆனவள்; வானத்திற்கும் வையத்திற்கும் இடைப்பட்ட யாவற்றையும் கவிதையாகக் கொண்டவள்; உணர்ந்து கற்றால் கல்போன்ற மனத்தையும் கற்கண்டாக்குபவள்; அறிவைப் பெருக்குபவள்; அன்பை வயப்படுத்துபவள்; செப்புதற்கரிய அவள் பெருமையைப் போற்றுவோம்.


அழகார்ந்த செந்தமிழே!

* அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே!

முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே!

கன்னிக் குமரிக் கடல் கொண்ட நாட்டிடையில்

மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே!

 

தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே!

இன்னறும் பாப்பத்தே! எண்தொகையே! நற்கணக்கே!

மன்னுஞ் சிலம்பே! மணிமே கலைவடிவே!

முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே! *

 

செப்பரிய நின்பெருமை

செந்தமிழே! உள்ளுயிரே செப்பரிய நின்பெருமை

எந்தமிழ்நா எவ்வாறு எடுத்தே உரைவிரிக்கும்?

முந்தைத் தனிப்புகழும் முகிழ்த்த இலக்கியமும்

விந்தை நெடுநிலைப்பும் வேறார் புகழுரையும்

 

உந்தி உணர்வெழுப்ப உள்ளக் கனல்மூளச்

செந்தா மரைத்தேனைக் குடித்துச் சிறகார்ந்த

அந்தும்பி பாடும் அதுபோல யாம்பாடி

முந்துற்றோம் யாண்டும் முழங்கத் தனித்தமிழே!

- கனிச்சாறு

 

பாடலின் பொருள்

அன்னை மொழியே! அழகு நிறைந்த செழுந்தமிழே! பழமைக்கும் பழமையாய்த் தோன்றிய நறுங்கனியே! கடல் கொண்ட குமரிக் கண்டத்தில் நிலைத்து அரசாண்ட மண்ணுலகப் பேரரசே! பாண்டிய மன்னனின் மகளே! திருக்குறளின் பெரும் பெருமைக்குரியவளே! பத்துப்பாட்டே! எட்டுத்தொகையே! பதினெண் கீழ்க்கணக்கே! நிலைத்த சிலப்பதிகாரமே! அழகான மணிமேகலையே! பொங்கியெழும் நினைவுகளால் தலைபணிந்து வாழ்த்துகின்றோம்.

செழுமை மிக்க தமிழே! எமக்குயிரே! சொல்லுதற்கரிய நின் பெருமைதனை என்னுடைய தமிழ் நாக்கு எவ்வாறுதான் விரித்துரைக்கும்? பழம் பெருமையும் தனக்கெனத் தனிச் சிறப்பும் இலக்கிய வளமும் கொண்ட தமிழே! வியக்கத்தக்க உன்னுடைய நீண்ட நிலைத்த தன்மையும் வேற்று மொழியார் உன்னைப் பற்றி உரைத்த புகழுரையும் எமக்குள் பற்றுணர்வை எழுப்புகின்றன. எம் தனித்தமிழே! வண்டானது செந்தாமரைத் தேனைக் குடித்துச் சிறகசைத்துப் பாடுவது போன்று நாங்கள் உன்னைச் சுவைத்து உள்ளத்தில் கனல் மூள, உன் பெருமையை எங்கும் முழங்குகின்றோம்.

சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் – என்றன்

சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும்

க. சச்சிதானந்தன்

 

நூல் வெளி

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் கனிச்சாறு (தொகுதி 1) தொகுப்பிலிருந்து இருவேறு தலைப்பில் உள்ள பாடல்கள் (தமிழ்த்தாய் வாழ்த்து, முந்துற்றோம் யாண்டும்) எடுத்தாளப்பட்டுள்ளன. தென்மொழி, தமிழ்ச்சிட்டு இதழ்களின் வாயிலாகத் தமிழுணர்வை உலகெங்கும் பரப்பியவர் துரை. மாணிக்கம் என்ற இயற்பெயர் கொண்ட பெருஞ்சித்திரனார்.

இவர் உலகியல் நூறு, பாவியக்கொத்து, நூறாசிரியம், கனிச்சாறு, எண்சுவை எண்பது, மகபுகுவஞ்சி, பள்ளிப் பறவைகள் முதலிய நூல்களைப் படைத்துள்ளார். இவரின் திருக்குறள் மெய்ப்பொருளுரை, தமிழுக்குக் கருவூலமாய் அமைந்துள்ளது. இவரது நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.

 

கற்பவை கற்றபின்...

1. "நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு

ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்

கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று

இத்திறத்த எட்டுத் தொகை"

இச்செய்யுளில் இடம்பெற்றுள்ள எட்டுத்தொகை நூல்களைப் பெயர்க்காரணத்துடன் எடுத்துக்காட்டுக.

2. "எந்தமிழ்நா நின் பெருமை எடுத்தே உரைவிரிக்கும்" என்ற பாடலடியைக் கொண்டு வகுப்பறையில் ஐந்துநிமிட உரை நிகழ்த்துக.

 

Tags : by Pavalareru Perucithiranaar | Chapter 1 | 10th Tamil பாவலரேறு பெருஞ்சித்திரனார் | இயல் 1 | 10 ஆம் வகுப்பு தமிழ்.
10th Tamil : Chapter 1 : Amudha oottru : Poem: Annai mozhiye by Pavalareru Perucithiranaar | Chapter 1 | 10th Tamil in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 1 : அமுத ஊற்று : கவிதைப்பேழை: அன்னை மொழியே - பாவலரேறு பெருஞ்சித்திரனார் | இயல் 1 | 10 ஆம் வகுப்பு தமிழ் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 1 : அமுத ஊற்று