Home | 11 ஆம் வகுப்பு | 11வது தமிழ் | இலக்கணம்: படைப்பாக்க உத்திகள்

இயல் 4 : 11 ஆம் வகுப்பு தமிழ் - இலக்கணம்: படைப்பாக்க உத்திகள் | 11th Tamil : Chapter 4 : Kedil velu Selvam

   Posted On :  09.08.2023 01:03 pm

11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : கேடில் விழுச்செல்வம்

இலக்கணம்: படைப்பாக்க உத்திகள்

11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : கேடில் விழுச்செல்வம் : இலக்கணம்: படைப்பாக்க உத்திகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் 4

இனிக்கும் இலக்கணம்

படைப்பாக்க உத்திகள்


 

உவமை

ஒன்றை மற்றொன்றோடு ஒப்பிட்டுப் பார்ப்பது நம்மிடம் இயல்பாக அமைந்துள்ள பண்பாகும். தெரிந்தவற்றைக் கொண்டு தெரியாதவற்றை அறிந்துகொண்டு மனித அறிவு வளர்ந்து வந்திருக்கிறது. மொழி தோன்றிய அன்றே உவமையும் தோன்றியிருக்க வேண்டும். கருத்தைச் சொல்கையில் கேட்போர் மனத்தை ஈர்க்கும் வகையிலும் சொல்வதை எனிதில் உணரும் வகையிலும் கூற உவமைகளை (ஒப்பீடுகளை)ப் பயன்படுத்தினர்.

உவமை வினை(தொழில்), பயன், வடிவம்(மெய்), உரு(நிறம்)என்ற நான்கின் அடிப்படையில் தோன்றும் என்பார் தொல்காப்பியர்.

வினை பயன் மெய் உரு என்ற நான்கே

வகைபெற வந்த உவமத் தோற்றம்

(தொல்காப்பியம்-1222)

புலி போலப் பாய்ந்தான் - வினை (தொழில்)

மழை போலக் கொடுக்கும் கை - பயன்

துடி போலும் இடை - வடிவம் (மெய்)

தளிர் போலும் மேனி - உரு (நிறம்)

கண்ணன் புலிபோலப் பாய்ந்தான் என்பதில் கண்ணன் - உவமேயம் (பொருள்), புலி - உவமானம் (உவமை), போல - உவம உருபு, பாய்தல் - பொதுத்தன்மை. இந்த நான்கு உறுப்புகள் உவமையை அமைக்கின்றன.

ஒன்றை விளக்கவும் தெளிவுபடுத்தவும் அழகுபடுத்தவும் உவமையே எளியதும் தொன்மை மிக்கதாகவும் உள்ளது. சங்கப்பாடல்களில் பெரும்பாலும் உவமை அணியே இடம்பெற்றுள்ளது. பிற அணிகள் குறைவாகவே இடம்பெற்றுள்ளன. சங்க இலக்கியத்தைத் தொகுத்தவர்கள் பாடல் ஆசிரியர்களின் பெயர் தெரியாதபோது அப்பாடலில் உள்ள உவமையைக் கொண்டே பெயர் சூட்டினர். செம்புலப்பெயல்நீரார், தேய்புரிபழங்கயிற்றினார், அணிலாடு முன்றிலார் என்பவை அப்படிப்பட்ட பெயர்கள்.

"ஊர்க் குறுமாக்கள் வெண்கோடு கழாஅலின்

நீர்த்துறை படியும் பெருங்களிறு போல

இனியை பெரும எமக்கே மற்றதன்

துன்னரும் கடாஅம் போல

இன்னாய் பெரும!நின் ஒன்னா தோர்க்கே" (புறம்-94)

ஒளவையார் அதியமானின் வெற்றிப் புகழையும் வீரச் சிறப்பையும் மிகச் சுருங்கிய அடிகளில் அழகாகப் புனைகிறார். குளத்தில் ஊர்ச்சிறு பிள்ளைகள் யானைமீது நீரை இறைத்தும் வெண்கொம்புகளைத் கழுவியும் விளையாடுவர். அவ் யாணைக்கு மதம் பிடித்துவிட்டால் யாரும் பக்கத்தில் அணுக முடியாது. அதியமானும் அப்படிப்பட்டவன்தான். பரிசிலர்க்கு இனியன். பகைவர்க்கு இன்னாதவன். யானை பற்றிய உவமை இப்பாடலுக்கு உயிரூட்டுகிறது.

கண்ணீரை நீ

துடைத்த போது

நட்சத்திரங்கள் துடைக்கப்பட்ட

வானம் போல்

உன் முகம்

இருண்டு போயிருந்தது......

என்னும் புதுக்கவிதை அடிகளிலும் உவமை அமைந்துள்ளதைக் காணலாம்.

வினை உவமை

அவர்கள் மூளையில்

விதையைப் போல்

தூவப்பட வேண்டிய அறிவு

ஆணியைப்போல்

அறையப்படுகின்றது.

பயன் உவமை

வறண்ட வாழ்வு

துளிர்க்க

மழைபோல் வந்தாய் நீ!

மெய் உவமை (வடிவம்)

சுருக்கிய

குடையைப் போலத்

தோன்றும் அசோகமரம்.

உரு உவமை ( நிறம்)

சோடிய விளக்காய்

மாலைநேரச் சூரியனின்

மஞ்சள் வெளிச்சம்

தெருவில் நிரம்பி வழிந்தது.

ஆகிய கவிதைகளில் உவமை தோன்றும் களங்கள் வெளிப்பட்டுள்ளன.

 

உருவகம்

ஒப்பீட்டுச் செறிவும் பொருள் அழுத்தமும் சிறக்க அமையும்பொழுது அது உருவகம் எனப்படுகிறது. உவம உருபுகளை விரித்துச் சொல்வதைவிடத் தொகுத்தும் கருக்கியும் சொல்லுவதில் ஆற்றலும் அழகும் திரிமையும் இருப்பது தெரிந்திருக்கும். அந்தவகையில் உவமை, உவமைத்தொகையாகி உருவகமாக ஆயிற்று.

உவமையையும் உவமிக்கப்படும் பொருளையும் வேறுபடுத்தாமல் இரண்டும் ஒன்றே எனக்கூறுவது உருவகம் ஆகும். உருவகத்தொடரில் உவமேயம் (உவமிக்கப்படும் பொருள்) முன்னும், உவமை (ஒப்பாகக் காட்டப்படும் பொருள்) பின்னுமாக அமையும்.

உவமையின் செறிவார்ந்த வடிவமே உருவகம். தாமரை போலும் முகம் என்ற உவமை செறிவூட்டப்பட்டு முகத்தாமரை என உருவகத்தை உருவாக்குகிறது. உவமையை விட உருவகம் ஆழமானது. உவமை அணியில் உவமானமும் உவமேயமும் வேறுவேறானவை என்ற எண்ணம் இருந்துகொண்டிருக்கும். உருவகத்தில் இரண்டும் ஒன்றே என்ற உணர்வு கிடைக்கிறது.

தீ போல் சினம் என்பதைச் சினத்தீ என்பார் பாரதியார். பாடல் முழுவதும் உருவகமாக அமைவதும் உண்டு.

சுட்டும் விழிச்சுடர்தான் - கண்ணம்மா

சூரிய சந்திரரோ?

வட்டக் கரியவிழி - கண்ணம்மா

வானக் கருமை கொல்லோ?

பட்டுக் கருநீலப் புடவை

பதித்த நல்வயிரம்

நட்ட நடுநிசியில் - தெரியும்

நட்சத்திரங்களடி...

- பாரதி (கண்ணம்மா என் காதலி)

என்னும் கவிதையில்தான் எத்தனை உருவகங்கள். பாஞ்சாலி சபதத்தில் அர்ச்சுனன் பாஞ்சாலியிடம் கதிரவன் ஒளிபட்டு விதவிதமான மாயம் கொள்ளும் மேகங்களுக்குக் கூறுகின்ற உருவகங்கள் உண்னம் கவர்ந்தவை. தீயின் குழம்புகன், செழும்பொன் காய்ச்சிவிட்ட ஓடைகள், தங்கத்தீவுகள், நீலப்பொய்கைகள், தங்கத்தோணிகள். கருஞ்சிகரங்கள். தங்கத் திமிங்கலங்கள் என்றெல்லாம் உருவரிப்பது அழகூட்டுகிறது.

உருவகத்திலும் வினை உருவகம், பயன் உருவகம், வடிவ (மெய்) உருவகம். உரு (நிறம்) உருவகம் என்ற பகுப்பு உண்டு.

எண்ணவலை பின்னும் மூளைச் சிலந்தி... (சிந்தனை) - வினை

ஆவேசப் புயல்களாலும் அசைக்க முடியாத ஆகாசப் பூ... (கதிரவன்) – பயன்

நீலவயலின் நட்சத்திர மணிகள் (வானமும் விண்மீன்களும்) - மெய்

மலைக்கிழவியின் நரைத்த கூந்தல்... (அருவி) - நிறம்

 

உள்ளுறை உவமம்

கவிஞர் தான் கூறக்கருதிய பொருனை வெளிப்படையாகக் கூறாமல், அகமாந்தரின் மன உணர்வுகளைக் கருப்பொருள்கள் மூலம் உவமைப்படுத்துவதை உள்ளுறை உவமம் (உவமை) என்பர்.

உள்ளுறை உவமம் என்பது தமிழ் இலக்கியத்திற்கே உரிய ஒப்பற்ற நெறி. அன்பிற்கு ஆட்படும் தலைவன் தலைவியரின் எண்ணங்களைச் சொற்களால் வெளிப்படுத்தாமல் நாகரிகமாக மறைத்துக் கூறுவதற்காக அமைத்துக்கொள்ளும் வடிவமாகவும் இதைக் கருதுகின்றனர்.

இலக்கியங்களில் காணப்படும் கருப்பொருள்களின் காட்சி இயற்கைப் புனைந்துரைகளாக மட்டும் நின்றுவிடாமல், பாடல்களில் இடம்பெறும் மாந்தர்களின் உள்ளத்தெழும் உணர்வுகளின் குறிப்புப் பொருளாகவும் உள்ளுறை அமையும்,

ஓவியம், சிற்பம் முதலிய நுண்கலைகளிலும் குறிப்புப் பொருள்கள் உண்டு. ஆனால், அவை எல்லாருக்கும் எல்லாக் காலத்திலும் விளங்கும் என்று கூறமுடியாது. கவிதைகளில் உள்ள குறிப்புப்பொருள் காலம் கடந்து நிற்கும் ஆற்றல் உடையது. எனவே கருப்பொருள் கொண்டு விளக்கப்படும் குறிப்புப் பொருளாகிய உள்ளுறை உவமம் தமிழிலக்கியத்தின் நேரிய, இனிய, நாகரிக வழியாகும்.

தோழிக்குச் சொல்வதுபோல் தலைவி, மறைந்து நிற்கும் தலைவனுக்குச் சொல்வதாகப் பெருங்குன்றூர் கிழார் பாடிய பாடல் ஒன்றில் உள்ளுறை உவமம் அமைந்துள்ளதைக் காண்போம்.

உள்ளுறை

வினை, பயன் போன்ற அடிப்படைகளில் தோன்றும்.

குறியீடுகளைக் கொண்டு உருவாக்கப்படும்.

"ஈயல் புற்றத்து ஈர்ம்புறத்து இறுத்த

குறும்பி வல்சிப் பெருங்கை ஏற்றை

தூங்குதோல் துதிய வள்ளுகிர் கதுவலின்

பாம்புமதன் அழியும் பானாட் கங்குல்"

- அகம். 8


தலைவன் பிறர் அறியாமல் தலைவியைச் சந்திக்க இரவு நேரத்தில் வருகிறான். அவ்வேளையில் பசியுடன் அலையும் கரடியொன்று ஈசல்கள் நிறைந்த புற்றில் கையைவிட்டுப் பார்க்கிறது. அந்த ஈசல் புற்றில் சுருண்டு படுத்திருந்த பாம்பினைச் கரடி அறியவில்லை. கரடியின் நகங்கள் பட்டு, பாம்பு வலியால் துடிக்கிறது. இங்குக் கரடியின் செயலும் பாம்பின் துன்பமும் காட்டப்படுகின்றன.

ஆனால், உள்ளே உறைந்திருக்கும் செய்தி வேறு. இரவு நேரத்தில் காட்டைக் கடந்துவரும் தலைவன் செயலால் தலைவி அஞ்சி வருந்துவதை இப்பாடல் தெரிவிக்கிறது. காடி தலைவனுக்கும் பாம்பு தலைவிக்கும் குறியீடுகளாய் அமைந்து உள்ளுறை உவமம் உருவாகிறது. மேலும் இப்பாடலில் உள்ளுறை உவமத்துடன் இறைச்சிப் பொருளும் அமைந்துள்ளது.

 

இறைச்சி

உள்ளுறை போன்றே இறைச்சி என்பதும் அகப்பாடலில் வருகின்ற மற்றொரு உத்தி ஆகும். இதுவும் குறிப்புப்பொருளில்தான் வரும்.

இறைச்சியில் பிறக்கும் பொருளுமா ருளவே

திறத்தியல் மருங்கின் தெரியு மோர்க்கே

(தொல். பொருள். 36)

இறுத்தல் என்றால் தங்குதல் எனப் பொருள்படும். உரிப்பொருளோடு நேரிடைத் தொடர்பில்லாத குறிப்புப் பொருளே இறைச்சி ஆகும். இது வடமொழியினர் குறிப்பிடுகிற தொனிக்கு இணையானது. தொனி அகப்பாடலிலும் புறப்பாடலிலும் வரும். ஆனால், இறைச்சி அகப்பாடலில் மட்டுமே வரும்.

"நசைபெரிது உடையர் நல்கலும் நல்குவர்

பிடிபசி களைஇய பெருங்கை வேழம்

மென்சினை யாஅம் பொளிக்கும்

அன்பின தோழிஅவர் சென்ற ஆறே"

(குறுந்தொகை - 37)


தெரிந்து தெளிவோம்

கவிஞர், தெரியாத பொருள் ஒன்றைத் தெளிவாக விளக்குவதற்குத் தெரிந்த பொருளை உவமையாகப் பயன்படுத்துவர். வெளிப்படையாகப் பொருள்கூறினால் உவமை. உவமைக்குள் மற்றொரு பொருளைக் குறிப்பாக உணர்த்தினால் உள்ளுறை உவமை குறிப்புப் பொருளுக்குள் மேலும் ஒரு குறிப்புப் பொருள் அமைந்திருக்குமானால் அதற்கு இறைச்சி என்று பெயர். உள்ளுறை உவமம் கவிதைப் பொருளோடு சேர்ந்து காணப்படுகிறது. இறைச்சிப் பொருள் கவிதைப்பொருளின் புறத்தே குறிப்புப் பொருளாய் வெளிப்படுகிறது.

தலைவன் விரைவில் வருவான் எனத் தோழி தலைவியை ஆற்றுவிக்கிறான். தலைவன் செல்லும் வழியில் யானை தன் பெண்யானையின் பசியைப் போக்குவதற்காக 'யா' மரத்தின் பட்டையை உரித்து அதிலுள்ள ஈரச்சுவையைப் பருகச்செய்யும். இதுதான் பாடலின் கருத்து. ஆனால், இதில் சொல்லப்படாத குறிப்பு ஒன்றுள்ளது. தலைவன் இந்த அன்புக்காட்சியைப் பார்ப்பான்; உடனே திரும்பி வந்து தலைவியின் துன்பத்தைத் தீர்ப்பான் என்பது இதிலுள்ள குறிப்புப்பொருளாகும். இக்குறிப்புப்பொருளை இறைச்சி ஆகும். உரிப்பொருனின் புறத்தே நின்று அதன் கருத்தை மேலும் சிறப்பிக்கப் பயன்படுகிறது இறைச்சி.

சொல்லாமல் சொல்வதில்தான் கவிதை இன்பம் சிறக்கிறது. தலைவனின் செயலைக் கண்டிப்பதற்கும் எள்ளி நகையாடுவதற்கும் வருத்தத்தை வெளிப்படுத்தவும் திருமணத்தை வலியுறுத்தவும் இறைச்சி உத்தி பயன்படுகிறது.

நீ விளையாடி மகிமும் இடத்தில் உள்ள இப்புன்னைமரம் உன்னைவிடச் சிறந்தது என்றும் உனக்குத் தங்கையாவான் என்றும் நற்றாய் என்னிடம் கூறினாள். அதனால், இம்மரத்தடியில் உம்முடன் விளையாட நாணுகிறேன். ஏனெனில் தங்கை அருகிருக்க தலைவனுடன் பழகுவது முறையா?" என்று தலைவி தலைவனிடம் கூறினாள்.


நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகுமென்று

அன்னை கூறினள் புன்னையது சிறப்பே

அம்ம நாணுதும் நும்மொடு நகையே

(நற்றிணை -172)

இப்பாடலில், நாம் வேறு இடத்தில் சந்திக்கலாம் என்னும் குறிப்புப்பொருளும் தலைவியைத் தலைவன் விரைவில் மணந்துகொள்ள வேண்டும் என்னும் குறிப்புப் பொருளும் அமைந்துள்ளன. இக்குறிப்புப் பொருளே இறைச்சி ஆகும்.

Tags : Chapter 4 | 11th Tamil இயல் 4 : 11 ஆம் வகுப்பு தமிழ்.
11th Tamil : Chapter 4 : Kedil velu Selvam : Grammar: Padaipakka uthigal Chapter 4 | 11th Tamil in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : கேடில் விழுச்செல்வம் : இலக்கணம்: படைப்பாக்க உத்திகள் - இயல் 4 : 11 ஆம் வகுப்பு தமிழ் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : கேடில் விழுச்செல்வம்