இயல் 4 : 11 ஆம் வகுப்பு தமிழ் - உரைநடை: தமிழகக் கல்வி வரலாறு | 11th Tamil : Chapter 4 : Kedil velu Selvam
இயல் 4
உரைநடை உலகம்
தமிழகக் கல்வி வரலாறு
நுழையும்முன்
கல்வியின் நோக்கம் நாகரிகத்தையும் பண்பாட்டையும் வளர்ப்பதாகும். பன்னெடுங்காலமாக முன்னோர்களால் வளப்படுத்தப்பட்ட அறிவாற்றலையும் அனுபவத்தையும் ஒவ்வொரு தனிமனிதனும் பெறுமாறு செய்வதுமாகும். ஒருவரின் வாழ்க்கை முழுவதும் தொடர் நடைமுறையாகத் திகழும் கல்வியானது சமூகமாற்றத்தின் இன்றியமையாக் காரணியாகவும் விளங்குகிறது. கல்வியின் முதன்மை நோக்கமான, தனிமனிதனைச் சமுதாயத்துக்கு ஏற்றவனாக மாற்றுதல்' என்னும் சீரிய பணியில் தமிழகம் கடந்து வந்த பாதை போற்றுதலுக்குரியது
வாழ்க்கையை நடத்துவதற்கான அடிப்படைத் திறன்களை வளர்ப்பதற்கு ஒவ்வொரு சமூகத்திலும் வயதில் மூத்தவர்களால் கதைகள், கருத்துகள் வழி வாழ்க்கை நெறிகள் மற்றும் உலகப்பார்வை சார்ந்த கருத்துகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. அவை கற்பவர் மனத்தில் ஆழப் புதைந்துள்ள திறன்களைத் தோண்டி வெளிக்கொண்டு வருவதால் 'கல்லுதல்' என்ற பொருளின் அடிப்படையில் கல்வி என வழங்கலாயிற்று. 'கல்வியில் சிறந்த தமிழ்நாட்டில்' காலத்தோனும் மக்களின் தேவைகளுக்கேற்பக் கற்றலும் கற்பித்தலும் பல்வேறு பரிமாணங்களைப் பெற்று வளர்ந்துள்ளன.
தமிழ் இலக்கியங்களில் கல்வி
பண்டைத் தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம், கல்வி கற்பதற்காகப் பிரிந்து செல்வதை ஓதற்பிரிவு (தொல். அகத். 25) எனக் குறிப்பதோடு எண்வகை மெய்ப்பாடு பற்றிக் கூறும்போது கல்வியின் பொருட்டு ஒருவருக்கு, 'பெருமிதம்' தோன்றும் (தொல்.மெய். 9) என்றும் கூறுகிறது. தொல்காப்பியமும் தன்னூலும் ஆசிரியர்கள், மாணவர்களுக்கான இலக்கணங்களை வகுத்துள்ளன. சங்க இலக்கியங்களும் கல்வியின் சிறப்பைப் பெரிதும் போற்றுகின்றன.
“உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும், பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே!" (புறம். 183, ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்) என்ற புறநானூற்று அடிகள் பொருள் கொடுத்தும் தொண்டு செய்தும் ஆசிரியரிடம் மாணவர்கள் கல்வி கற்றதைச் சிறப்புடன் குறிக்கின்றன.
சங்க காலத்தவர் குடும்பம், அரசு, சமூகம் என்ற மூன்று நிலைகளிலும் சிறப்பிணைப் பெறக் கல்வி தேவை என்பதனை உணர்ந்து கற்றனர்.
கல்வியின் சிறப்பு
துணையாய் வருவது தூயநற் கல்வி - திருமந்திரம்.
கல்வி அழகே அழகு - நாலடியார்
இளமையில் கல் - ஔவையார்.
"சங்ககாலத் தமிழகத்தில் தமிழ் ஆட்சி மொழியாக, பயிற்று மொழியாக. இலக்கிய மொழியாக விளங்கியுள்ளது; தமிழகம் அப்போது பெற்றிருந்த அரசியல்
சுதந்திரத்தினால், தமிழ்நாடெங்கும் தமிழே ஆட்சிமொழியாகவும் கல்விமொழியாகவும் சமயம், வாணிகம் போன்ற எல்லாத் துறைகளிலும் பொதுமொழியாகவும் விளங்கி வந்தது" என்னும் மா. இராசமாணிக்கனாரின் கருத்து, தமிழகத்தில் அன்று நிலவிய கல்விமுறையின் சிறப்பினை எடுத்துக் கூறுகிறது. சங்கம் என்ற அமைப்பு, பலர் கூடி விவாதிக்கும் பாங்குடையது. இதுதவிர. மன்றம், சான்றோர் அவை, அறங்கூர் அவையம், சமணப்பள்ளி, பௌத்தப் பள்ளி போன்ற அமைப்புகள் சங்க காலத்திலும் சங்கம் மருவிய காலத்திலும் கற்பித்தல் பணியைத் தமிழகத்தில் செய்து வந்துள்ளன. மன்னராட்சிக் காலத்தில் போர்ப்பயிற்சிகளைத் தருவதும் முக்கியமான கல்வியாகக் கருதப்பட்டது.
கற்பிக்கும் ஆசிரியர்களும் மூவகைப் பிரிவினராக இருந்தனர்.
இவர்களிடம் கற்ற மாணவர்களை முறையே சிறுவன், மாணவன், கேட்போன் என்று வகைப்படுத்தினர்.
கணக்காயர் - எழுத்தும் இலக்கியமும் உரிச்சொல்லும் (நிகண்டு) கணக்கும் கற்பிப்போர்.
ஆசிரியர் - பிற்காலத்தில் ஐந்தாக விரிக்கப்பட்ட மூவகை இலக்கணத்தையும் அவற்றுக்கு எடுத்துக்காட்டான பேரிலக்கியங்களையும் கற்பிப்போர்.
குரவர் - சமய நூலும் தத்துவ நூலும் கற்பிப்போர்.
பள்ளிகள் - கலைகள், கல்வி போன்றவற்றைக் கற்பிக்கும் இடங்களாக விளங்கின.
மன்றம் - கற்ற வித்தைகளை அரங்கேற்றும் இடமாகத் திகழ்ந்தது.
சான்றோர் அவை - செயல்களைச் சீர் தூக்கிப் பார்க்கும் அவையாக இருந்தது.
கல்வி கற்பிக்கப்படும் இடங்களைப் 'பள்ளி' என்று பெரிய திருமொழியும் ஓதும் பள்ளி என்று திவாகர நிகண்டும் கல்லூரி என்று சீவக சிந்தாமணியும் குறித்துள்ளன. கற்றலுக்கு உதவும் ஏட்டுக் கற்றைகளை ஏடு. சுவடி, பொத்தகம், பனுவல், நூல் எனப் பல பெயரிட்டு அழைத்தனர். முன்மூன்றும் ஓலைக்கற்றையையும் பின்னிரண்டும் உட்பொருளையும் சிறப்பாகக் குறித்தன.
சமண, பௌத்தப் பள்ளிகள்
கல்வி, மருந்து, உணவு, அடைக்கலம் ஆகிய நான்கு கொடைகளும் சமண சமயத்தின் தலையாய அறங்களாகும். சமணத்தைச் சேர்ந்த திகம்பரத் துறவிகள் மலைக்குகையில் தங்கினர். அவர்கள் தங்கனின் தங்குமிடங்களிலேயே கல்வியையும் சமயக் கருத்துகளையும் மாணவர்களுக்குப் கற்பித்தனர். 'பள்ளி' என்ற சொல்லுக்குப் 'படுக்கை' என்று பொருள். அவர்களின் படுக்கைகளின் மீது மாணவர்கள் அமர்ந்து கற்றதனால் கல்விக்கூடம், பள்ளிக்கூடம் என அழைக்கப்படலாயிற்று. பள்ளி என்னும் சொல் சமண, பௌத்த சமயங்களின் கொடையாகும்.
சமணப் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுக்கு எடுத்த படுக்கைகள்பற்றித் திருச்சி மலைக்கோட்டையிலும் தமிழகத்தின் புகழ்பெற்ற சமணக் குன்றான கழுகுமலையிலும் உள்ள கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
வந்தவாசி அருகிலுள்ள வேடல் என்னும் ஊரில் இருந்த சமணப் பள்ளியில் பெண் சமண ஆசிரியர் ஒருவர் 500 மாணவர்களுக்குக் கல்வி கற்பித்தார். பட்டினிக்குரத்தி என்னும் சமணப் பெண் ஆசிரியர் விளாப்பாக்கத்தில் சமணப் பள்ளியொன்றை நிறுவியிருந்தார். இவை, சமணப் பள்ளிகளில் பெண்களும் ஆசிரியர்களாக இருந்துள்ளனர் என்பதை வெளிப்படுத்துகின்றன. பெண்களுக்கெணத் தனியாகக் கல்வி கற்பிக்கும் சமணப் பள்ளிகள் பெண் பள்ளிகள் என்று அழைக்கப்பட்டன.
தமிழர்கள் இன்று பரவலாக ஏற்றுக்கொண்டிருக்கும் பட்டிமண்டபம் என்ற கலைவடிவம் சமயத் துறையிலிருந்து தோன்றியது. பட்டிமண்டபம் என்பது சமயக் கருத்துகள் விவாதிக்கும் இடமென்று மணிமேகலையில் சுட்டப்படுகின்றது. 'ஒட்டிய சமயத்து உறுபொருள்வாதிகள் பட்டி மண்டபத்துப் பாங்கறிந்து ஏறுமின்' என்று அந்நூல் பேசுகிறது.
தமிழகத்திலுள்ள காஞ்சிபுரத்திற்கு வந்த சீனப்பயணி யுவான் சுவாங் அங்கிருந்த பௌத்தப் பல்கலைக்கழகத்தில் தங்கிச் சிறப்புரை ஆற்றியிருக்கிறார் என்ற செய்தி பௌத்தமும் சமணமும் தமிழகத்தின் கல்வி வரலாற்றுக்குச் செய்த பெரும்பங்கிணை விளக்குகிறது.
தெரியுமா?
'ரெவரெண்ட் பெல்' என்ற ஸ்காட்லாந்து பாதிரியார் தமிழகத் திண்ணைப் பள்ளிக் கல்விமுறையைக் கண்டு வியந்தார். இம்முறையில் அமைந்த ஒரு பள்ளியை ஸ்காட்லாந்தில் 'மெட்ராஸ் காலேஜ் என்னும் பெயரில் நிறுவினார். அங்கு இக்கல்விமுறை மெட்ராஸ் சிஸ்டம்,பெல் சிஸ்டம் மற்றும் மானிடரி சிஸ்டம் என்றும் அழைக்கப்பட்டது.
மரபுவழிக் கல்வி முறைகள்
(அ) குருகுலக் கல்விமுறை
இம்முறையில் மாணவர்கள் ஆசிரியர்களை அணுகி அவருடன் பல ஆண்டுகள் தங்கி, அவருக்குத் தேவைப்படும் பணிகளைச் செய்து கல்வி கற்றனர் செய்து கற்றல், வாழ்ந்து கற்றல், எளிமையாக வாழ்தல் என்ற அடிப்படையில் இக்குருகுலக் கல்விமுறை அமைந்திருந்தது. இம்முறை, போதனா முறையைத் தாண்டி வாழ்வியலைக் கட்டமைப்பதில் சிறப்பானதாக விளங்கியது.
(ஆ) திண்ணைப் பள்ளிக் கல்விமுறை
19ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் ஊர்கள் தோறும் பெருமளவில் திண்ணைப் பன்னிகள் இருந்தன. அவற்றினைத் தெற்றிப் பள்ளிகள் என்னும் அழைத்தனர். திண்ணைப் பள்ளிக்கூட ஆசிரியர்கள் கணக்காயர்கள் என்றே அழைக்கப்பட்டனர். அக்காலக் கல்விமுறை, திண்ணைப் பள்ளிமுறை என்றே தமிழகத்தில் அழைக்கப்பட்டது. இப்பள்ளிகள் ஒரேமாதிரியான வரன்முறையுடன் செயல்படவில்லை. எனவே, ஆங்கிலேயர்கள், திண்ணைப் பள்ளிகள், பாட சாலைகள், மக்தாபுகள், மதரஸாக்கள் போன்ற கல்வி அமைப்புகளை நாட்டுக்கல்வி Indigentous
Edvcation) என்று அழைத்தனர். இப்பள்ளிகளில் பாடத்திட்டம், பள்ளி நேரம், பயிற்றுவிக்கும்முறை ஆகியன ஆசிரியரின் விருப்பப்படியே அமைந்திருந்தன. ஆயினும் பொதுமக்களுடைய கல்வித்தேவையை இப்பள்ளிகள் ஓரளவேனும் நிறைவு செய்தன.
தமிழகத்தில் விடுதலைக்கு முன் கல்வி வளர்ச்சி
ஆண்டு நிகழ்வு
1826 - சென்னை ஆளுநர் சர். தாமஸ் மன்றோ ஆணைக்கிணங்கப் பொதுக்கல்வி வாரியம் தொடங்கப்பட்டது.
1835 - சென்னை மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது. இது இந்தியாவில் முதன் முதலில் தொடங்கப்பட்ட இரண்டு மருத்துவக் கல்லூரிகளுள் ஒன்று.
1854 - பொதுக்கல்வித் துறை நிறுவப்பட்டு முதல் பொதுக்கல்வி இயக்குநர் (DPI) நியமிக்கப்பட்டார்.
1857 - சென்னைப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.
1859 - 1794 இல் தொடங்கப்பட்ட ஸ்கூல் ஆஃப் சர்வே என்ற நிறுவனம், 1859 இல் கிண்டி பொறியியல் கல்லூரியாக வளர்ச்சி அடைந்தது.
1910 - தமிழ்நாடு இடைநிலைக் கல்வி வாரியம் தொடங்கப்பட்டது.
1911 - பள்ளியிறுதி வகுப்பு - மாநில அளவிலான பொதுத்தேர்வில் நடைமுறைக்கு வந்தது.
சென்னை மாகாணத்தில் 12,498 திண்ணைப் பள்ளிகள் இயங்கி வந்தன என்றும் அவற்றின் கல்வித்தரம் பல ஐரோப்பிய நாடுகளின் அப்போதைய கல்வித்தரத்தைக் காட்டிலும் உயர்ந்ததாகவே காணப்பட்டது என்றும் தாமஸ் மன்றோ காலத்தில் நடத்திய ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
(இ) உயர்நிலைக் கல்விமுறை
தனிநிலையில் புலவர்களிடத்துக் கற்கும் உயர்நிலைக் கல்விமுறை என்ற வகைமைக்குள் இக்கல்விமுறை அடங்கும். திருவாவடுதுறை ஆதீன மடத்தின் தலைமைப்புலவராக விளங்கிய மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனாரிடம் தமிழ்த்தாத்தா உ.வே. சாமிநாதர் இம்முறையில்தான் பாடம் பயின்றார்.
தமிழகத்தில் ஐரோப்பியர்களின் கல்விப்பணி
கணக்காயர் இல்லாத ஊரும் பிணக்கறுக்கும்
மூத்தோரை இல்லா அவைக்களனும்-பாத்துண்ணும்.
தன்மை யிலாளர் அயலிருப்பும் இம்மூன்றும்
நன்மை பயத்தல் இல் (திரிகடுகம் -11)
1453ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஜெர்மனி நாட்டவரான ஜான் கூட்டன்பர்க் (Johannes Gutenberg ) வடிவமைத்த அச்சு இயந்திரம் கல்வி பெருகக் காரணமாயிற்று. கி.பி.
(பொ.ஆ.) 1706ஆம் ஆண்டு முதல் டச்சுக்காரர்களின் சமயப் பரப்புச் சங்கம் தமிழகத்தில் முதன்முதலாகக் கல்விப் பணியில் ஈடுபட்டது. தரங்கம்பாடியில் முதன்முதலில் அச்சுக்கூடத்தை ஏற்படுத்தி, மாணவர்களுக்குத் தேவையான புத்தகங்களை அச்சடித்தனர். இந்தியாவில் முதன்முதலில் அச்சேறிய மொழி தமிழே ஆகும். டச்சுக்காரர்கள் அறப்பள்ளிகளை (Missionary Schools)
நிறுவியதோடு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளையும் அமைத்தனர்.
1813ஆம் ஆண்டு சாசனச் சட்டப்படி லண்டன் பாராளுமன்றம், இந்தியர்களின் கல்விக்காக ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய் ஒதுக்கியது.
அக்காலத்தில் இந்தியாவில் தாய்நாட்டு இலக்கியங்களையும் கீழைத்தேசத்துக் கலைகளையும் பயிற்றுவிக்க வேண்டும் என்னும் கொள்கை கொண்டவர்கள் கீழைத்தேயவாதிகள் (Orientalists) என்று அழைக்கப்பட்டனர். மாறாக, மேற்கத்தியக் கல்விமுறையான ஆங்கிலவழிக் கல்விமுறை மூலமாகவே இந்தியர்களை முன்னேற்ற முடியும் என்று ஒரு சாரார் வாதிட்டனர். இவர்கள் மேற்கத்தியவாதிகள் (Anglicists) என்று அழைக்கப்பட்டனர். இக்கருத்து வேறுபாடுகளைத் தீர்ப்பதற்காக, 1833ஆம் ஆண்டில் மெக்காலே கல்விக்குழு உருவாக்கப்பட்டது.
ஆசிரியரால் சர்வ வல்லமையிலும் பாதிப்பினை ஏற்படுத்த இயலும் அவரால், ஏற்படப்போகும் நல்ல விளைவுகள் அவர்களாலேயே மதிப்பிட இயலாது
- ஹென்றி ஆடம்ஸ்
1854 ஆம் ஆண்டு சார்லஸ் வுட் தலைமையிலான குழுவின் அறிக்கையை அடிப்படையாகக்கொண்டு, தற்காலக் கல்வியும் தேர்வுமுறையும் உருவெடுத்தன. சார்லஸ் வுட்டின் அறிக்கை, 'இந்தியக் கல்வி வளர்ச்சியின் மகாசாசனம்' என்று போற்றப்படுகிறது. கி.பி. 1882ஆம் ஆண்டு உருவான ஹண்டர் கல்விக்குழு சீருடை முறை, தாய்மொழிவழிக் கல்வி போன்றவற்றைக் கட்டாயமாக்சியது. மேலும், புதிய பள்ளிகளைத் தொடங்கி நடத்தும் பொறுப்பைத் தனியாருக்கும் வழங்கப் பரிந்துரைத்தது.
ஆங்கிலேயர் ஆட்சி புரிந்த 19ஆம் நூற்றாண்டில் நம் நாட்டில் எழுதப் படிக்கத் தெரிந்தவரின் எண்ணிக்கை 15 விழுக்காடாக இருந்தது. நாடு விடுதலை பெற்றவுடன் இந்நிலையை மாற்றக் கருதிய நம் அரசு இந்திய அரசியலமைப்புச் சட்டம் உறுப்பு 45இன் கீழ் நாட்டிலுள்ள 14 வயதிற்குட்பட்ட அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி வழங்கப்படல் வேண்டும் என்பதை வலியுறுத்தியது.
சட்டமியற்றியதுடன் அக்குறிக்கோளை நிறைவேற்ற ஐந்தாண்டுத் திட்டங்கனின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்தது. இதன் விளைவாக நாடெங்கிலும் கல்விநிலையில் வளர்ச்சி ஏற்பட்டது. குறிப்பாக, தமிழகத்தில் கல்விநிலை சீராக வளரத் தொடங்கியது. மேலும், அரசு வளர்ந்து வரும் காலத்திற்கேற்ற கல்விமுறையில் மாற்றமும் ஏற்றமும் கொண்டுவரப் பல குழுக்களை அமைத்தது.
கல்விக்குழுக்களின் பரிந்துரைகள் நம்முடைய நாட்டின் கல்வி வரலாற்றில் முக்கியத் திருப்புமுனைகளாக அமைந்ததோடு இன்றைய ஏற்றமிகு வளர்ச்சிக்கு அடிப்படைகளாகவும் விளங்கின. குருகுலக் கல்விமுறை, திண்ணைப் பள்ளி, கல்வி நிலையம் என்னும் பல்வேறு வளர்ச்சிகளைக் கண்ட கல்வி அமைப்புமுறை இன்று அறிவியல் தொழில்நுட்பத்தின் உதவியால் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.
நம் தமிழக அரசின் கல்வித்துறை பல்வேறு நலத்திட்டங்களை வகுத்துத் திறம்படச் செயல்படுத்தி வருகிறது. அதன் விளைவாக, இக்காலம் கல்வித்துறையின் பொற்காலம் என்று சொல்லும் வகையில் நம் கல்விமுறை மாற்றமும் ஏற்றமும் பெற்று, நாட்டிலேயே முன்னோடி மாநிலமாகத் தமிழகம் விளங்குகிறது.