இயல் 4 : 11 ஆம் வகுப்பு தமிழ் - செய்யுள் கவிதைப்பேழை: தொல்காப்பியம் - சிறப்புப் பாயிர உரை விளக்கப் பாடல் | 11th Tamil : Chapter 4 : Kedil velu Selvam
இயல் 4
கவிதைப்பேழை
தொல்காப்பியம்
சிறப்புப் பாயிர உரைவிளக்கப் பாடல்
நுழையும்முன்
தொல்காப்பியரால் தொகுத்தும் பகுத்தும் சேர்த்தும் எழுதப்பட்ட நூல் தொல்காப்பியமாகும். இந்நூல் எழுத்து, சொல் மட்டுமன்றிப் பொருள் இலக்கணமான வாழ்வின் இலக்கணத்தையும் வகுத்துக் கூறுவதாகும். நாட்டின் எதிர்காலமாய் விளங்கும் மாண்பு பொருந்திய மாணவர் எவ்வாறு கற்க வேண்டும் என்பதை இதன் சிறப்புப் பாயிர உரைவிளக்கப் பாடல் தெள்ளிதின் விளக்குகிறது.
வழக்கின் இலக்கணம் இழுக்கின்று அறிதல்
பாடம் போற்றல் கேட்டவை நினைத்தல்
ஆசாற் சார்ந்துஅவை அமைவரக் கேட்டல்
அம்மாண் புடையோர் தம்மொடு பயிறல்
வினாதல் வினாயவை விடுத்தல் என்றின்னவை
கடனாக் கொளினே மடம்நனி இகக்கும். 1
ஒருகுறி கேட்போன் இருகாற் கேட்பிற்
பெருக நூலிற் பிழைபா டிலனே. 2
முக்காற் கேட்பின் முறையறிந்து உரைக்கும். 3
சொல்லும் பொருளும்
இருக்கும் -
நீக்கும்; இழுக்கு –
குற்றம்; வினாயவை -
கேட்டவை.
பாடலின் பொருள்
சிறப்புடைய மாணவர் எனப்படுவோர் உலக வழக்கு, நூல் வழக்கு ஆகிய இலக்கணங்களை ஆசிரியர்களிடம் குற்றமின்றி அறிவர்; பாடங்களைப் போற்றிக் கற்பர். ஆசிரியர்களிடம் கற்ற பாடங்களை மீண்டும் நிணைத்துப் பயிற்சி பெறுவர். ஆசிரியரை அணுகிப் பாடக்கருத்துகளைக் கேட்டுத் தெளிவு அடைவர். ஆசிரியர்களைப் போன்ற உயர்சிந்தனை உடையவர்களுடன் கலந்துரையாடி விளக்கம் பெறுவர்.தங்களது ஐயங்களை ஆசிரியர்கனிடம் வினவித் தெளிவுறுவர். அவ்வாறு தெளிவுற்ற கருத்துகளைப் பிறர்க்கு உணர்த்தித் தெளிவடையச் செய்வர். ஆசிரியர் கூறும் கருத்துகளை ஒருமுறைக்கு இருமுறை கேட்கும் மாணவர்கள் நூலைப் பிழையின்றிக் கற்கும் திறன் பெறுவர். மூன்றுமுறை கேட்போர் பாடக்கருத்துகளைப் பிறர்க்கு முறையாக எடுத்துரைக்கும் ஆற்றல் பெறுவர். இத்தன்மையில் பாடம் கேட்டலைக் கடமையாகக் கொண்ட மாணவர்கள் அறியாமையிலிருந்து நீங்கிச் சிறந்து விளங்குவர்.
இலக்கணக்குறிப்பு
அறிதல், போற்றல், நினைத்தல், கேட்டல்,
பயிறல் -
தொழிற்பெயர்கள்;
நனிஇகக்கும் – உரிச்சொற்றொடர்
பகுபத உறுப்பிலக்கணம்
விடுத்தல் -
விடு +
த் +
தல்
விடு -
பகுதி; த் -
சந்தி;
தல் – தொழிற்பெயர் விகுதி.
அறிந்து -
அறி +
த் (ந்)
+ த் + உ
அறி -
பகுதி. த் -
சந்தி, ந் ஆனது விகாரம்
த் -
இறந்தகால இடைநிலை
உ - வினையெச்ச விகுதி.
புணர்ச்சி விதி
இழுக்கின்றி -
இழுக்கு +
இன்றி
உயிர் வரின் உக்குறள் மெய் விட்டோடும் -
இழுக்க் +
இன்றி உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே -
இழுக்கின்றி.
முறையறிந்து -
முறை +
அறிந்து
இ ஈ ஐ வழி யவ்வும் -
முறை +
ய் +
அறிந்து உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே –
முறையறிந்து
நூல்வெளி
நமக்குக் கிடைக்கும் தமிழ் நூல்களில் காலத்தால் பழமையான இலக்கண நூல் தொல்காப்பியம். இதன் ஆசிரியர் தொல்காப்பியர். தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என மூன்று அதிகாரங்களைக் கொண்டது. ஒவ்வொரு அதிகாரத்திலும் ஒன்பது இயல்களாக மொத்தம் இருபத்தேழு இயல்கள் உள்ளன. தொல்காப்பியத்திற்குப் பலர் உரை எழுதியுள்ளனர். அவர்களுள் பழமையான உரையாசிரியர்கள் இளம்பூரணர், நச்சினார்க்கினியர், கல்லாடனார், சேனாவரையர், தெய்வச்சிலையார், பேராசிரியர் ஆகியோர் ஆவர். நச்சினார்க்கினியரின் சிறப்புப்பாயிர உரைவிளக்கத்தில் உள்ள பாடல் பாடமாக இடம் பெற்றுள்ளது.