இயல் 4 : 11 ஆம் வகுப்பு தமிழ் - துணைப்பாடம்: இதழாளர் பாரதி | 11th Tamil : Chapter 4 : Kedil velu Selvam
இயல் 4
விரிவானம்
இதழாளர் பாரதி
நுழையும்முன்
கல்வி என்பது பள்ளியில் அல்லது கல்லூரியில் மட்டும் பெறப்படுவதன்று. கல்விகற்பவர், இதழ்களிலும் நடைமுறை அறிவைப்பெறுவதுடன் அதற்கேற்ப வாழ்வும் முனைகின்றனர். இவ்விதழ்களின் ஆசிரியர்கள் சமூகத்திற்கத் தேவையான பாடங்களை முன்வைக்கின்றனர். சிறந்த பத்திரிகையாளன் 'நல்ல ஆசான்' என்பதில் ஐயமில்லை. பாரதியும் இதற்கு விலக்கன்று செம்மொழியாகத் திகழும் நம் மொழி புதிய நடையும் புதிய உடையும் புதிய பொருளும் கொண்டு எழுச்சியுடன் திகழக் காரணமாக அமைந்த தமிழ்ச்சிற்பி பாரதியின் மற்றொரு பரிமாணம் இதழியல் பணி.
10.10.2018,
10:15 மு.ப.
அன்புசால் அப்பாவிற்கு,
கடிதம் எழுதுவதே மறந்துபோன இன்றைய சூழலில் அத்தனையும் பேசிவிட முடியாத காலப்பெரு இடைவெளியில் இதை எழுதுகிறேன். இப்பொழுது மின்னஞ்சல் வசதி திருப்பதால் கடிதத் தொடர்பில் ஏற்பட்ட பெரும் இடைவெளி குறைந்தது. சிறுவயதில் எனக்குப் பாரதியின் கவிதைகளை அறிமுகப்படுத்தியவர் நீங்கள்தாம். 'மகாகவி என்ற பேரொளியில் பாரதியின் பல பரிமாணங்கள் மறைந்துள்ளன' என நீங்கள் அடிக்கடி கூறுவீர்கள். அண்மைக்காலமாக, பாரதியின் இதழியல் பணி பற்றிய நூல்களைப் படித்து வருகின்றேன். இதைத் தங்களிடம் பகிர்ந்துகொள்ளவே இம்மின்னஞ்சல்.
ஆம் அப்பா, நீங்கள் கூறியதுபோல பாரதி கவிஞர் மட்டுமல்லர், சிறந்த பேச்சாளர்; பாடகர்; கட்டுரையாளர்; கதை ஆசிரியர்; மொழிபெயர்ப்பாளர்; அரசியல் அறிஞர்; ஆன்மிகவாதி. இவை அனைத்திற்கும் மேலாக மிகச்சிறந்த இதழானர் என்பதை அறிந்தபொழுது நான் பாரதியை எண்ணி எண்ணி வியந்தேன்.
அப்பா. எட்டையபுரம் சமஸ்தானத்தின் பணிக் கட்டுப்பாட்டிலிருந்து வெளியேறிய பாரதி. மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியில் சேர்ந்தார். அங்கிருந்து வெளியேறிய அவர், சுதேசமித்திரன் இதழில் உதவி ஆசிரியராகப் பொறுப்பேற்றார். பாரதியின் உலகளாவிய பார்வை கூர்மைப்பட இதழியல் பணியே தூண்டுகோலாக இருந்திருக்கவேண்டும்.
இதழியல் துறைக்குப் பாரதி வந்தது சாதாரண நிகழ்வாக இருக்கலாம். ஆனால் அதில் அசாதாரணமானவற்றை நிகழ்த்திக் காட்டினார். சுதேசமித்திரன், சக்ரவர்த்தினி, இந்தியா. பாலபாரதி (யங் இந்தியா), விஜயா. சூர்யோதயம், கரமயோகி ஆகிய பல இதழ்களில் ஆசிரியராகவும் துணையாசிரியராகவும் பங்காற்றிய அவரை நாம் இதழாளராகக் கொண்டாடத் தவறிவிட்டோம். அப்பா, பாரதியை எண்ணும்போதெல்லாம் நாட்டின் முன்னேற்றத்தில் எனது பங்கும் இடம்பெற வேண்டும் என்ற உந்துதல் ஏற்படுகின்றது.
பாரதி யானை மிதித்துச் சாகவில்லை, வறுமை மிதித்துச் செத்தார் என எங்கேயோ கவித்துவமாகப் படித்த நினைவு. இத்தனை வாழ்க்கைப் போராட்டத்திலும் உலகப் பார்வை கொண்டவராகப் பாரதி இருந்ததை நினைத்தால் வியப்பாய் இருக்கிறது. படைப்பாளர்களும் சிந்தனையாளர்களும் கொண்டாடப்பட வேண்டும். இனி, எந்த ஓர் ஆளுமையையும் இத்தகைய நிலையில் நாம் விட்டுவிடக்கூடாது.
சர்வஜன மித்திரன், ஞானபாநு, காமன் வீல், கலைமகள், தேசபக்தன், கதாரத்னாகரம் போன்ற இதழ்களிலும் பாரதி தம் படைப்புகளை வெளியிட்டுள்ளார். இத்தனைக்கும் பாரதிக்கு எப்படி நேரம் இருந்ததோ' 'நேர மேலாண்மையே பாதி வெற்றி' என நீங்கள் கூறுவதை இப்பொழுதும் நினைவுகூர்கிறேன் அப்பா.
தம் பெயரையும் தம்மையும் முன்னிலைப்படுத்திக்கொள்ள விரும்பும் மனிதர்களுக்கிடையில் "தான்" என்ற ஒன்றை ஒழித்தவர் பாரதி. ஆங்கிலேயர்களின் கெடுபிடிகளால், விடுதலை வேட்கையூட்டும் கருத்துகள் மக்களைச் சென்றடைந்தால் போதும் என்று எண்ணி இளசை சுப்ரமணியன், சாவித்திரி, சி.சு. பாரதி, வேதாந்தி, நித்திய தீரர், உத்தமத் தேசாபிமானி, ஷெல்லிதாசன், கானிதாசன், சக்திதாசன், ரிஷிகுமாரன், காசி, சரஸ்வதி, பிஞ்சுக்காளிதாசன், கிருஷ்ணன் எனப் பல புனைபெயர்களில் எழுதியுள்ளார்.
கருத்துடன் காட்சியும் இடம்பெறுவது வாசகர்களைக் கவரும்தானே அப்பா. பாரதி அன்றே தாம் பணியாற்றிய இதழ்களில் கருத்துப்படங்களையும் கேலிச்சித்திரங்களையும் வெளியிட்டுள்ளார். தமிழ் இதழியல் துறையில் முதன்முதலாகக் கருத்துப் படங்களை அறிமுகப்படுத்தியவர் பாரதிதானே! லண்டன் பஞ்ச், இந்தி பஞ்ச் முதலிய கருத்துப்படங்களைக்கொண்ட இதழ்களைப் பார்த்த பாரதி, தமிழில் 'சித்திராவளி' என்ற பெயரில் கருத்துப்படங்கனை மட்டுமே கொண்ட இதழ் ஒன்றையும் நடத்த விரும்பினார். அதைச் செயல்படுத்த முடியாவிட்டாலும் இந்தியா, விஜயா ஆகிய இரு இதழ்களிலும் கருத்துப்படங்களை வெளியிட்டுள்ளார்.
காட்டின் நெருக்கமான வழிகளில் யானை நடக்கும் தடத்தைப் பின்பற்றிப் பிற விலங்குகளும் அப்பாதையில் சுலபமாக நடக்கும். அதைப்போலவே இதழியலில் பாரதியின் தடம்பற்றி நடந்தவர்கள் பலர் இருந்தனர். அவர்களுள் பாரதியிடம் துணையாசிரியர்களாகப் பணியாற்றியவர்களான பி.பி. சுப்பையா, ஹரிஹரர், என். நாகசாமி, வ. ராமசாமி, பரலி.க.நெல்லையப்பர், கனகலிங்கம் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
ஆங்கிலக் கலப்பின்றித் தமிழில் பேசுவதையே வியப்பாகப் பார்ப்பவர்களுக்கு இடையில் தமிழ் இதழ்களில் தமிழ் ஆண்டு, திங்கள், நாள் ஆகியவற்றை முதன்முதலாகக் குறித்தவர் பாரதி. அவரது மூச்சும் பேச்சும் பணியும் தமிழின் வளர்ச்சியை முன்னிட்டே இருந்திருப்பது என்போன்ற இணையோருக்கு, இன்றைக்கு நினைத்தாலும் பெரும் ஊக்கமாக உள்ளது.
அப்பா, உங்களுக்கு ஒன்று தெரியுமா? பெண் விடுதலைக்குப் பாடுபட்ட பாரதி பெண்களுக்காகத் தமது 'சக்ரவர்த்தினி' இதழில் குறள் வெண்பா எழுதியுள்ளார். அக்குறள்,
பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான்
ஒண்மை யுறஓங்கும் உலகு.
எந்த விஷயம் எழுதினாலும் சரி, ஒரு கதை அல்லது ஒரு தர்க்கம், ஒரு சாஸ்திரம், ஒரு பத்திரிகை விஷயம், எதை எழுதினாலும் வார்த்தை சொல்லுகிற மாதிரியாகவே அமைந்துவிட்டால் நல்லது.
பாரதியார் கட்டுரைகள்
எடுத்துக்கொண்ட ஒவ்வொரு செயலிலும் தமது கொள்கையையும் உணர்வையும் வெளிப்படுத்தும் பண்பைப் பாரதியிடமிருந்து இளைய சமுதாயம் கற்றுக்கொன்ன வேண்டும்.
பாரதியைப் போன்றே பிற ஆளுமைகள் பற்றியும் நீங்கள் கூறியதுண்டு. பிற அறிஞர்களின் பலதுறை அறிவையும் கற்றுப் போற்ற வேண்டியது இன்றைய தேவை. எனக்கு ஓர் ஐயம் உண்டு. "இந்தியா" இதழைச் சிவப்பு வண்ணத்தாளில் ஏன் பாரதி வெளியிட்டார் அப்பா? அதை அறிந்து கொள்ள ஆவல்.
பாரதியைப் பற்றிக் கூடுதலாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் பன்மடங்காகியுள்ளது. தங்களின் பதில் கடிதத்தில் எழுதுவீர்களென்று நம்புகிறேன். பாரதியைப் படித்ததில் அவரைப் பற்றிப் பகிர்ந்து கொள்வதிலேயே கவனமாக இருந்துவிட்டேன். அம்மாவும் தம்பியும் நலம்தானே? என் நினைவு முழுவதும் நம் வயல்வெளியும் கன்றுக்குட்டியும்தாம். உங்களுக்கு என் அன்பும் வணக்கமும் அப்பா.
தங்கள் அன்பு மகள்,
வானதி.
11.10.2018, 20:10
அன்பு மகள் வானதிக்கு,
உன் மின்னஞ்சல் கிடைக்கப்பெற்றேன். பெருமகிழ்வு கொண்டேன். நீயும் உன் நண்பர்களும் நலமாக உள்ளீர்களா? எவ்வளவு கடுமையான வேலைகள் இருப்பினும் காலை உணவைத் தவிர்க்காதே. இங்கு அம்மா,தம்பி, வயல்வெளி, உள் கன்றுக்குட்டி எல்லோரும் நலமே. பாரதி பற்றி அறிந்திருந்த செய்திகளை நீ பகிர்ந்திருந்தது மகிழ்ச்சி. நூல்களை வாசிப்பதை இன்றைய இளைய சமுதாயம் மறந்துபோனதோ என்றெண்ணிக் கவலை கொண்டிருந்தேன். உன் மின்னஞ்சலால் என் பெருங்கவலை தீர்ந்தது.
பாரதி இந்தியா இதழை ஏன் சிவப்பு வண்ணத்தாளில் வெளியிட்டார் எனக் கேட்டிருந்தாய் அல்லவா? சிவப்பு வண்ணம் புரட்சியையும் விடுதலையையும் குறிப்பது என்பதால் அடிமைத்தளையில் இருந்து இந்தியாவை விடுவிக்க வேண்டும் என்ற எண்ணம் பாரதியின் இந்தியா இதழின் வண்ணத்திலும் வெளிப்பட்டது.
பாரதியார் இறக்கும் பொழுதும் இதழாளராகவே இறந்தார்.
இறந்து போவதற்கு முதல்நாள் இரவு, தூங்கச் செல்லும் முன்பு, நாளைக்கு, “அமாணுல்லாகானைப் பற்றி ஒரு வியாசம் எழுதி ஆபிசுக்கு எடுத்துக்கொண்டு போகவேண்டும்" என்று இறுதியாகப் பாரதியார் கூறியுள்ளார்.
- 'பாரதியைப் பற்றி நண்பர்கள்', ரா. அ. பத்மநாபன்.
வானதி, பாரதியின் புனைபெயர்களைப் பட்டியலிட்டிருந்தாய், நல்லது. பாரதி தம்மைப்போலவே பிறரையும் நேசிக்கும் பண்பாளர். அதனால்தான் தமக்கு மட்டுமல்ல தம் நண்பர்களுக்கும் ஆங்கிலேயர்களால் எந்தக் கெடுபிடியும் வந்துவிடக் கூடாது என்பதற்காக நண்பர்களின் பெயர்களையும் அவர்கள் கூடிப்பேசும் இடங்களையும் புனைபெயரில் பயன்படுத்தி வந்துள்ளார். இப்புனைபெயர்களை நகைச்சுவை உணர்வோடு வெளிப்படுத்தியிருப்பது எண்ணிஎண்ணி மகிழத்தக்கதாகும். மேலும், மற்றவர் பெயரை வெளிப்படுத்த விரும்பாத பாரதியின் இதழியல் அறத்தையும் இப்புனைபெயர்களில் காணலாம். தம் மனைவி செல்லம்மாவையும் கண்ணம்மா, வள்ளி என்ற புனைபெயர்களிலேயே குறிப்பிட்டிருப்பார்.
வானதி, தமிழ் இதழ்களில் தமிழ் மாதம், ஆண்டு குறிப்பிடும் முறையைக் கையாண்டதில் முன்னோடியாகப் பாரதி திகழ்ந்ததாக எழுதியிருந்தாய். அதைப்போலவே தமிழ் இதழ்களில் தமிழில் தலைப்பிடுவதற்கும் பாரதியே முன்னோடி. செய்திகளுக்கு ஆங்கிலத்தில் தலைப்பு எழுதிக் கீழே தமிழில் தலைப்பிடுவது அக்கால இதழ்களின் வழக்கம். தலைப்பிடலை 'மகுடமிடல்' என்றே பாரதியார் கூறுகின்றார். இந்தியா, சக்கரவர்த்தினி போன்ற இதழ்களில் 1905-07 காலப்பகுதியில் ஆங்கிலத் தலைப்பையும் கலந்து பயன்படுத்திய பாரதி, பிறகு ஆங்கிலத் தலைப்பு வைப்பதைக் கைவிட்டதோடு சுதேசமித்திரனில் அதைச் சாடியும் எழுதினார். மேலும், ஆங்கிலேயர்களின் கெடுபிடியால் பாரதி பாண்டிச்சேரி சென்றபோது இந்தியா இதமும் உடன் சென்றது வானதி.
எந்த நெருக்கடியான காலகட்டத்திலும் பாரதி தம் இதழியல் பணியைக் கைவிடவில்லை. இந்த இதழ்கள் எல்லாம் சிறப்பாகத் தொகுக்கப்பட்டு இன்றைக்கு நூலாக்கம் பெற்றுள்ளன. இதைப் போலவே பாரதியின் கடிதங்களும் கருத்துப்படங்களின் தொகுப்பும் நூலாக்கம் பெற்றுள்ளன. இவையெல்லாம் தமிழினத்தின் பேறு. இதழாளராகப் பாரதியை நீ அடையாளம் கண்டதைப்போலவே தமிழின் இன்னும் பல ஆளுமைகளையும் அடையாளம் கண்டு எழுத வேண்டும். உன் விசாலப் பார்வைக்கு என் பாராட்டுகள். உன் மின்னஞ்சல்களுக்காகக் காத்திருக்கிறேன் மகளே!
என்றும் உன்,
அன்பு அப்பா.