இயல் 4 : 11 ஆம் வகுப்பு தமிழ் - செய்யுள் கவிதைப்பேழை: பிள்ளைக்கூடம் | 11th Tamil : Chapter 4 : Kedil velu Selvam
இயல் 4
கவிதைப்பேழை
பிள்ளைக்கூடம்
நுழையும்முன்
இளமையின் சிறகை முறிக்காத இனிய சூழலில், பிள்ளைகளுக்குப் பிடித்த பள்ளிக்கூடம் எவ்வாறு இருக்க வேண்டும் என்றொரு கனவு அனைவருக்கும் இருக்கும். அந்தக் கனவை ஓர் ஓவியர் வரைந்து காட்டலாம்; ஒரு பாடகர் பாடிக் காட்டலாம்; இங்கொரு கவிஞர் எழுதிக் காட்டுகிறார்.
சொந்தமொழி கற்பிக்கும்
இந்தப் பள்ளிக்கூடம்
மிகவும் பிடித்துப் போய்விட்டது.
இங்கே ஐம்பதாண்டு வேம்பு
கோடையில் கொட்டும் பூக்களை
எண்ணச் சொல்கிறார்கள்.
வேலி ஓணான்
கருங்கல் தூணில் வந்து அமர்ந்து
தியானிக்கும் நேரத்தைக்
குறித்து வைக்கச் சொல்கிறார்கள்.
வெட்டவெளியில்
தட்டுக்கூடையில்
சர்க்கரைப்பண்டம் வைத்தவுடன்
எங்கிருந்தோ வந்து சேரும்
எறும்புகளின் வேகத்தை
அளக்கச் சொல்லுகிறார்கள்
மழை பெய்ய ஆரம்பித்தால்
வட்டரங்க நடுமேடையில்
வீழ்ந்து வழியும்
துளிகளின் வடிவத்தை
ஓவியமாய்த் திட்ட,
செம்மண்தாளும்
வண்ணக்குச்சிகளும் தருகிறார்கள். மேலும்,
காலையில் மயிலுடன் நடக்க வேண்டுமாம்.
மாமரக் குயிலுடன் இசைக்க வேண்டுமாம்.
வண்ணத்துப்பூச்சியுடன் பறந்து
ஆடித்திரிய வேண்டுமாம்.
மாலையில் மரங்களின் முதுகினைச்
செல்லமாய் வருடிவிட வேண்டுமாம்.
குறுஞ்செடிகளுடன் உற்சாகமாய்ப்
பேச வேண்டுமாம்.
இந்தப் பள்ளியில்
சேர்ப்பார்களா
என்னைப் பெற்றவர்கள்?
தாய்மொழியிலே பயின்று
யாதும் ஊரென
உலகின் உறவாகவே
விரும்புகிறேன் நான்.
- இரா.மீனாட்சி
நூல்வெளி
இரா. மீனாட்சி, 1970களில் எழுதத் தொடங்கி நெருஞ்சி, சுடுபூக்கள், தீபாவளிப்பகல், மறு பயணம், வாசனைப்புல், உதயநகரிலிருந்து, கொடி விளக்கு உள்ளிட்ட கவிதைத்தொகுப்புகளைப் படைத்துள்ளார். இவர் பாண்டிச்சேரி ஆரோவில்லில் வாழ்ந்து வருகிறார்; ஆசிரியப்பணியிலும் கிராம மேம்பாட்டிலும் ஈடுபாடு கொண்டவர். 'கொடி விளக்கு' என்னும் நூலிலிருந்து இக்கவிதை எடுத்தாளப்பட்டுள்ளது.