தமிழ்நாட்டின் தொழில்மயமாதலின் முன்னேற்றம் பற்றிய வரலாறு
தமிழ்நாட்டில் காலனித்துவ முன்காலத்தில் நெசவு, கப்பல் கட்டுமானம், இரும்பு மற்றும் எஃகு தயாரித்தல், மட்பாண்டங்கள் தயாரித்தல் போன்ற தொழில் துறை நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்கான ஏராளமான சான்றுகள் உள்ளன. தமிழ்நாடு பரந்துவிரிந்த கடற்கரையைக் கொண்டுள்ளதால், பல நூற்றாண்டுகளாக தென் கிழக்கு மற்றும் மேற்கு ஆசியாவுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டது. தொழிற்புரட்சிக்குப் பிறகு இங்கிலாந்தில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட இயந்திரங்களின் இறக்குமதியின் காரணமாகப் போட்டி நிலவி கைத்தறி நெசவுத்தொழில் வீழ்ச்சிக்கு காலனித்துவ கொள்கைகளும் பங்களித்தன. இருந்தபோதிலும் சில தொழில்கள் காலனித்துவக் காலத்தில் வளர்ந்தன.
காலனித்துவ காலத்தில்
தொழில்மயமாதலில் இரண்டு காரணிகள் பெரும்பங்கு வகித்தது. முதலாவதாக, மேற்கு
மற்றும் தெற்கு தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பருத்தி சாகுபடி அதிகளவு
நெசவுத்தொழில் தோன்றுவதற்குக் காரணமாக இருந்தது.
இரண்டாவதாக, இந்த
காலகட்டத்தில் வாணிபத்தின் வளர்ச்சியானது சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுக
வட்டாரங்களின் அருகாமையில் தொழிற்சாலைகள் உருவாக காரணமாகவும் இருந்தது. மேலும், காலனித்துவ
காலத்தில் சிவகாசியில் தீப்பெட்டி தொழிற்சாலைகள் நிறுவப்பட்டு பின்னர் பட்டாசு
உற்பத்தி மற்றும் அச்சுத் தொழிலுக்கு முக்கிய மையமாக மாறியது. துறைமுகம் சார்ந்த
தொழில்களும் இதே காலகட்டத்தில் இப்பகுதியின் வளர்ச்சிக்குக் காரணமாகவும் இருந்தது.
தோல் உற்பத்தித் தொழிலானது திண்டுக்கல்,
வேலூர், ஆம்பூர் ஆகிய பகுதியில் நடைபெற்றது.
தமிழ்நாட்டின் மேற்குப் பகுதியில் நெசவுத் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியானது, இயந்திரங்களின் தேவையையும் அதற்கான தொழிற்சாலைகளையும் நிறுவ காரணமாகவும் இருந்தது. இந்த நெசவு இயந்திரத் தொழிற்சாலைகளுக்கான இயந்திர உதிரிபாகங்கள், பழுது பார்த்தல் மற்றும் உற்பத்தி செய்வதற்கான சிறிய அளவிலான தொழிற்சாலைகள் அதிக அளவில் வளர்ச்சி அடைந்தன. 1930களில் தமிழகத்தின் மேற்குப் பகுதியில் நீர் மின் சக்தியில் இருந்து மின்சார உற்பத்தி மற்றொரு முக்கிய தொழில் வளர்ச்சி ஆகும். நிலத்தடி நீரை உறிஞ்சுவதற்கு பயன்படுத்தப்படும் எண்ணெய் இயந்திரங்களுக்கு அனுமதிக்கப்பட்ட மின்சாரம் கிடைத்தமையால், வேளாண்மைத் தொழில் விரிவடைந்ததுடன் எண்ணெய் இயந்திரங்களின் தேவையும் அதிகரித்தது. இதன் காரணமாக, இதனை சார்ந்த எண்ணெய் இயந்திர உதிரிபாகங்கள் பழுதுபார்க்கும் தொழிற்சாலைகள் அதிகளவில் உருவாயின. இதனால் உலோகத் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு வேளாண்மை சார்ந்த இயந்திரங்கள் தயாரிக்கப்பட்டன.
தொழில் வளர்ச்சியானது
சுதந்திரத்திற்குப் பிறகு நடுவண் மற்றும் மாநில அரசுகளால் மாநிலத்தின் பல்வேறு
பகுதிகளில் பல பெரிய நிறுவனங்கள் நிறுவப்பட்டன. சென்னையில் ரயில் பெட்டிகள்
தயாரிக்கப்படும் தொழிற்சாலையும் திருச்சிராப்பள்ளியில் கொதிகலன் மற்றும்
விசையாழிகள் தயாரிப்பதற்காக பாரதகனரக மின்சாதன நிறுவனத்தை (Bharat Heavy Electricals Limited (BHEL) மத்திய அரசு நிறுவியது. BHEL நிறுவனம்
அதனுடைய உள்ளீட்டுப் பொருள்கள், தேவைகள் தொடர்பாக பல சிறிய நிறுவனங்களின் தொழில்
தொகுப்புகளின் தோற்றத்திற்கு வழிவகை செய்தது. சென்னை புறநகரில் உள்ள ஆவடியில் போர்
தளவாடங்கள் தயாரிக்க கனரக வாகனத் தொழிற்சாலை அமைக்கப்பட்டது. ஸ்டாண்டர்ட் மோட்டார்ஸ்
நிறுவனமும் சென்னையில் மகிழுந்துக்களை உற்பத்திச் செய்யத் தொடங்கியது. அசோக்
மோட்டார்ஸ் (பின்னர் அசோக் லேலண்ட்) ஸ்டாண்டர்டு மோட்டார்ஸ் இணைந்து சென்னை
வட்டாரத்தில் வாகனத் தொழில்துறை தொகுப்புகள் வளர்ச்சிக்கு உதவியது. மேலும் இது
வாகன உதிரி பாகங்களின் நகரமாக மாறியது. 1950களில் இப்பகுதியில் உள்ள பெரிய நிறுவனங்களுக்கு வாகன
கூறுகளை வழங்குவதற்கு சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்களுக்கு உதவியாக
ஆவடியில் தொழில் தோட்டங்கள் நிறுவப்பட்டது. மாநிலத்தில் அதிக நீர் மின் சக்தி
திட்டங்கள் மூலம் மின்மயமாதலை பரவலாக அதிகரிக்க வலியுறுத்தப்பட்டது. இந்த அனைத்து
நடவடிக்கைகளிலும் அரசு பெரும் பங்கு வகித்தது. 1973ஆம்
ஆண்டில் எஃகு உற்பத்தி செய்வதற்காக சேலத்தில் இரும்பு எஃகு ஆலை அமைக்கப்பட்டது.
1970 மற்றும் 1980களில் கோயம்புத்தூர் பகுதியில் விசைத்தறி நெசவுத் தொழில் தொகுப்புகள் அதேபோல் திருப்பூரில் பின்னலாடைத் தொழில் தொகுப்புகள் விரிவாக்கம் மற்றும் கரூரில் வீட்டு அலங்காரப் பொருள்கள் தொழில் தொகுப்புகள் இக்காலகட்டத்தில் உருவாகியது. மாநில அரசின் மூலம் பல்வேறு பகுதிகளில் தொழில் துறை தோட்டங்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ஊக்கப்படுத்தப்பட்டது. மாநிலத்தில் பின்தங்கிய வட்டாரங்களில் தொழில் துறைகளை மேம்படுத்துவதற்கு இத்தகைய கொள்கை முயற்சிகளை பயன்படுத்தி வெற்றி பெறச் செய்வதற்கு ஒரு உதாரணமாக தமிழகத்தில் ஓசூரில் விரிவாக்கப்பட்ட தொழில் தோட்டங்களை சான்றாகக் கூறலாம்.
1990களில் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு பிந்தைய காலகட்டம்
தொழில்மயமாதலின் இறுதி கட்டம் ஆகும். இந்த சீர்திருத்தங்கள் மாநில அரசாங்கங்கள்
வளங்களை திரட்டுவதற்கு பொறுப்பேற்கச் செய்தன. மேலும் அவை தொழில்மயமாதலுக்கு
தனியார் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஒருவருக்கொருவர் போட்டியிட வேண்டிய கட்டாயம்
ஏற்பட்டது. மலிவான நிலம், வரிச்சலுகைகள் மற்றும் மானியங்கள் போன்ற சலுகைகள், முதலீட்டாளர்களை
கவர்ந்திழுத்தன. வர்த்தக தாராளமயமாக்கல் மற்றும் நாணய மதிப்பிறக்கம் ஆகியவை
ஏற்றுமதி சந்தைகளைத் திறக்க உதவியன. இது இரண்டு பெரிய முன்னேற்றங்களுக்கு
வழிவகுத்தது.
தமிழகத்தில் மிக நீண்ட
காலமாக இருந்த முக்கிய தொழில்கள் சர்க்கரை, உரங்கள், சிமெண்ட், விவசாயக்
கருவிகள், இரும்பு மற்றும் எஃகு ரசாயனங்கள், மின்மாற்றிகள்
மற்றும் காகிதங்கள் போன்றவைகளாகும்.
இந்தக் காரணிகளின்
விளைவாக தற்போது இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் விட தமிழ்நாடு அதிக
தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளது. மேலும் உற்பத்தித் துறையில் பணிபுரியும்
தொழிலாளர்களின் மிகப் பெரிய பங்கினையும் பெற்றுள்ளது. முக்கியமாக மகாராஷ்டிரா
மற்றும் குஜராத் போன்ற முன்னேறிய மாநிலங்களுடன் ஒப்பிடும் போது இது அதிக உழைப்பு
மிகுந்ததாகும். வாகன தொழில்கள், தானியங்கி கூறுகள், இலகுரக
மற்றும் கனரக பொறியியல், இயந்திரங்கள்,
பருத்தி, ஜவுளி, ரப்பர், உணவுப் பொருள்கள், போக்குவரத்து
உபகரணங்கள், இரசாயனங்கள் மற்றும் தோல் பொருள்கள் போன்றவைகள்
முக்கியத் தொழில்களாகும். மற்ற மாநிலங்களைப் போல் அல்லாமல் தமிழகத்தின் அனைத்துப்
பகுதிகளிலும் (13 மாவட்டங்களில் 27
தொழில் தொகுப்புகள்) தொழில்துறைகள் பரவியிருக்கின்றன. மேலும் அவற்றுள் பல
தொழில்கள் ஏற்றுமதி சார்ந்தவையாகும். மாநிலத்தின் சாலைகள், ரயில்
போக்குவரத்து, வான்வழிப் போக்குவரத்து மற்றும் முக்கிய துறைமுகங்கள்
அனைத்தும் போக்குவரத்து இணைப்பினால் நன்கு வளர்ச்சி அடைந்து காணப்படுகிறது.