Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | தமிழ்நாட்டின் முக்கிய தொழில்துறை தொகுப்புகள் மற்றும் அவற்றின் சிறப்புகள்
   Posted On :  27.07.2022 02:40 pm

10வது சமூக அறிவியல் : பொருளியல் : அலகு - 5 : தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள்

தமிழ்நாட்டின் முக்கிய தொழில்துறை தொகுப்புகள் மற்றும் அவற்றின் சிறப்புகள்

சென்னை பெரிய அளவிலான வாகனத் தொழில்துறை தளமாக இருப்பதால் “ஆசியாவின் டெட்ராய்ட்" என்று அழைக்கப்படுகிறது. சென்னையானது மிக அதிகமான தானியங்கி தொழிலை ஒருங்கிணைக்கும் மற்றும் உதிரிபாகங்கள் செய்யும் தலைமை இடமாகத் திகழ்கிறது.

தமிழ்நாட்டின் முக்கிய தொழில்துறை தொகுப்புகள் மற்றும் அவற்றின் சிறப்புகள்

 


தானியங்கி தொகுப்புகள்

சென்னை பெரிய அளவிலான வாகனத் தொழில்துறை தளமாக இருப்பதால் ஆசியாவின் டெட்ராய்ட்" என்று அழைக்கப்படுகிறது. சென்னையானது மிக அதிகமான தானியங்கி தொழிலை ஒருங்கிணைக்கும் மற்றும் உதிரிபாகங்கள் செய்யும் தலைமை இடமாகத் திகழ்கிறது. சில உள்நாட்டு நிறுவனங்களான TVS, TI சைக்கிளஸ், அசோக் லேலண்ட் மற்றும் ஸ்டாண்டர்ட் மோட்டார்ஸ் ஆகியன இதற்கு முன்னர் இருந்தன. பொருளாதார சீர்த்திருத்தத்திற்கு பின்னர் ஹூன்டாய், ஃபோர்டு, டைம்லர்பென்ஸ் மற்றும் ரெனால்ட் - நிசான் போன்ற பல பன்னாட்டு நிறுவனங்கள் (Multi National Companies - MNC) இப்பகுதியில் தொழிற்சாலைகளைத் திறந்துள்ளன. எனவே வெளிநாடுகளிலிருந்து பல உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளரின் கவனங்கள் இங்கே ஈர்க்கப்பட்டுள்ளது. பல உள்நாட்டு நிறுவனங்களும் சேர்ந்து அனைத்து நிறுவனங்களுக்கான உதிரி பாகங்களின் உற்பத்தித் தேவையைப் பூர்த்தி செய்கின்றன.

ஓசூர் மற்றொரு தானியங்கி தொகுப்பாகும். இங்கு TVS மற்றும் அசோக் லேலண்ட் போன்ற நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளை இயக்கி வருகின்றன. கோயம்புத்தூர் பகுதி ஒரு தானியங்கிகளின் தொகுப்பாக வளர்ந்து வருகிறது.

 

வாகன மற்றும் பேருந்து கட்டுமானத் தொழில் தொகுப்புகள்

தமிழகத்தின் மேற்கு பகுதியில் உள்ள நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு பகுதிகள் சுமை தூக்கும் வாகன முழுபாக கட்டமைப்பிற்கான தொழிற்சாலைகளுக்குப் பெயர் பெற்ற இடங்களாகும். 50க்கும் மேற்பட்ட அலகுகளைக் கொண்டு கரூர் மற்றொரு முக்கிய மையமாகத் திகழ்கிறது. பல தொழில் முனைவோர்கள் பெரிய அளவிலான வாகனக் கட்டுமானத் துறையில் பணிபுரிந்து தற்போது தங்கள் சொந்த அலகுகளை அமைக்க முன்வந்துள்ளனர்.

 

நெசவுத் தொழில் தொகுப்புகள்

இந்தியாவில் மிகப்பெரிய நெசவுத் தொழில் துறைகளுக்கு தமிழ்நாடு தாயகமாக விளங்குகிறது. காலனித்துவ காலத்திலிருந்து பருத்தி நெசவுத் தொழில் வளர்ச்சியின் காரணமாக கோயம்புத்தூர் "தென்னிந்தியாவின் மான்செஸ்டர்" என அழைக்கப்படுகிறது. தற்போது நெசவு ஆலைகளில் பெரும்பாலானவை கோயம்புத்தூரைச் சுற்றியுள்ளன. நமது நாட்டின் மிகப் பெரிய பருத்தி நெசவு தொழில் உற்பத்தியில் தமிழகம் பெரும்பங்கு வகிக்கிறது.


     நெசவுத் தொழிற்சாலை

ஈரோடு மற்றும் சேலம் பகுதியிலும் அதிகளவிலான மின்தறி அலகுகள் இருப்பதால் மின்விசைத்தறித் தொழில் மிகவும் பரவலாக உள்ளது.

திருப்பூரானது பின்னலாடை தயாரிக்கும் ஏராளமான நிறுவனங்களின் தொகுப்புகளுக்கு புகழ்பெற்ற இடமாகும். இது நாட்டின் பருத்தி பின்னலாடை ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 80% பங்கினைக் கொண்டுள்ளது. 1980களின் பிற்பகுதியிலிருந்து மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கியுள்ளது. இது உள்நாட்டுச் சந்தையில் ஒரு மிகப்பெரிய உற்பத்தியாளராகத் திகழ்கிறது. இந்த மிகப்பெரிய வெற்றியின் காரணமாக உலகச் சந்தையில் உலகின் தெற்கு அரைக் கோளத்தில் ஒரு சக்தி வாய்ந்த தொகுப்பாக இந்த இடம் உள்ளது. ஆரம்பத்தில் உள்ளூர் தொழில்முனைவோரால் பெரும்பாலான நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. தற்போது இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் இங்கு தங்கள் தொழிற்சாலைகளை அமைத்துள்ளனர்.

தெற்கு அரைக்கோளத்தில் உள்ள நாடுகள் உலகளாவிய தெற்கு நாடுகள் (Global South) என்று அழைக்கப்படுகின்றன.

வாகனக் கட்டுமானத் தொழிலமைப்பைத் தவிர மேசைத்துணி, திரைச்சீலைகள், படுக்கை விரிப்புகள் மற்றும் துண்டுகள் போன்ற வீட்டு அலங்கார பொருள்களை ஏற்றுமதி செய்யும் முக்கிய மையமாக கரூர் உள்ளது. மேலும் பவானி மற்றும் குமாரபாளையம் உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தைகளுக்கு தரை விரிப்புகளை உற்பத்திச் செய்யும் முக்கிய மையங்களாகத் திகழ்கின்றன.

இத்தகைய நவீன தொகுப்புகளைத் தவிர பட்டு மற்றும் கைத்தறிப் புடவைகளுக்கு பிரபலமான மதுரை மற்றும் காஞ்சிபுரம் போன்ற பாரம்பரிய கைவினைத் தொகுப்புக்களும் உள்ளன.


தோல் மற்றும் தோல் பொருள்களின் தொகுப்பு

இந்தியாவின் 60% தோல் பதனிடும் உற்பத்தித்திறனையும் 38% தோல் காலணிகள் மற்றும் தோல் உதிரி பாகங்கள் அதனைச் சார்ந்த பொருள்களின் உற்பத்தியையும் தமிழ்நாடு பெற்றிருக்கிறது. வேலூர் அதனைச் சுற்றியுள்ள ராணிப்பேட்டை, ஆம்பூர், வாணியம்பாடி ஆகிய நகரங்கள் நூற்றுக்கணக்கான தோல் உற்பத்தி மற்றும் பதனிடும் வசதியைக் கொண்டுள்ளது.

தோல் பொருள்கள் ஏற்றுமதியில் இந்தியாவிலேயே முதன்மை மாவட்டமாக வேலூர் திகழ்கிறது. சென்னையிலும் பல தோல் சார்ந்த உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தொழிற்சாலை நிறுவனங்கள் உள்ளன. திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் தோல் பதனிடுதல் மற்றும் உற்பத்தித் தொழிற்சாலைகளின் தொகுப்பு காணப்படுகிறது. தோல் உற்பத்தித் தொழிற்சாலையும் வேலைவாய்ப்பை அளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.


பட்டாசு, தீப்பெட்டி மற்றும் அச்சிடுதல் தொகுப்பு

தீப்பெட்டி உற்பத்தித் தொழிற்சாலையில் புகழ்பெற்று விளங்கும் சிவகாசி பகுதியானது தற்பொழுது பட்டாசு மற்றும் அச்சிடும் தொழிலில் நாட்டின் சிறந்த நகரமாகத் திகழ்கிறது. இந்தியா 90% பட்டாசு உற்பத்தி 80% பாதுகாப்பான தீப்பெட்டி உற்பத்தி மற்றும் 60% அச்சுப்பணி தேர்வுகளுக்கு முக்கிய பங்காக இதனையே சார்ந்துள்ளது. அச்சிடும் தொழிற்சாலை ஒவ்வொன்றும் அவற்றின் பணிகளில் தனித்துவம் பெற்று மேலோங்கி விளங்குகிறது. காலனித்துவ காலத்தில் தொடங்கப்பட்ட இத்தொழிலானது தற்பொழுது அதிகளவில் வேலை வாய்ப்பை அளிக்கிறது.


    பட்டாசு தொழிற்சாலை

 

மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப தொகுப்புகள்

1990களில் ஏற்பட்ட பொருளாதார சீர்திருத்தத்திற்குப் பின் வந்த நோக்கியா, ஃபாக்ஸ்கான், மோட்டோரோலா, சோனி எரிக்ஸன், சாம்சங் மற்றும் டெல் போன்ற வன்பொருள் மற்றும் மின்னணு பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் கைபேசி கருவிகள், சுழல் பலகைகள், நுகர்வோர் மின் சாதனப் பொருள் தயாரிப்பில் ஈடுபட ஆரம்பித்தன. இந்நிறுவனங்கள் சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிறுவனங்களை நிறுவின.




குறிப்பிட்ட சில தகவல்தொழில்நுட்ப பொருளாதார மண்டலங்கள்

வளர்ச்சியை மேலும் அதிகப்படுத்தும் பொருட்டு சென்னை வட்டார பகுதிகளைத் தவிர, இரண்டடுக்கு (Tier-II) நகரங்களான கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, ஓசூர் மற்றும் சேலம் ஆகியவை தகவல் தொழிற்நுட்ப முதலீட்டிற்கான இடங்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதனை எளிதாக்குவதற்காக ELCOT நிறுவனம் பின்வரும், எட்டு இடங்களில் ELCOSEZs (IT குறிப்பிட்ட பொருளாதார சிறப்பு மண்டலங்கள்) நிறுவியுள்ளது.

சென்னை - சோழிங்கநல்லூர்

கோயம்புத்தூர் - விளாங்குறிச்சி

மதுரை - இலந்தை குளம்

மதுரை - வடபாலஞ்சி, கிண்ணிமங்கலம்

திருச்சிராப்பள்ளி - நாவல்பட்டு

மாநிலத்தின் அலகுகளை அமைக்க விரும்பும் நிறுவனங்கலுக்கு ELCOSEZS மூலம் வசதிகள் வழங்கப்படுகிறது. புதிய இடங்களில் ELCOSEZS அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள், தேவை மற்றும் நம்பகத் தன்மையின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. (வரைபட தகவல் தொழில்நுட்பக் கொள்கை - 2018-19)

திருநெல்வேலி - கங்கைகொண்டான்

சேலம் - ஜாகீர் அம்மாபாளையம்

ஓசூர் – விஸ்வநாதபுரம்


10th Social Science : Economics : Chapter 5 : Industrial Clusters in Tamil Nadu : Major Industrial Clusters and their Specialisation in Tamil Nadu in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : பொருளியல் : அலகு - 5 : தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள் : தமிழ்நாட்டின் முக்கிய தொழில்துறை தொகுப்புகள் மற்றும் அவற்றின் சிறப்புகள் - : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : பொருளியல் : அலகு - 5 : தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள்