Home | 11 ஆம் வகுப்பு | 11வது புவியியல் | வானிலைக் கூறுகளை அளவிடும் கருவிகள்

வானிலை நிலவரைபடம் - புவியியல் - வானிலைக் கூறுகளை அளவிடும் கருவிகள் | 11th Geography : Chapter 12 : Weather Maps

   Posted On :  16.05.2022 01:45 am

11 வது புவியியல் : அலகு 12 : வானிலை நிலவரைபடம்

வானிலைக் கூறுகளை அளவிடும் கருவிகள்

வானிலை வளிமண்டலத்தில் நிலவும் வெப்பநிலை, வனிமண்டல அழுத்தம், காற்று, ஈரப்பதம், மேகமூட்டம், பனிமூட்டம், பார்வை நிலை ஆகியவற்றின் மாறுபாட்டைப் பொறுத்து மாறுகிறது.

வானிலைக் கூறுகளை அளவிடும் கருவிகள்

வானிலை வளிமண்டலத்தில் நிலவும் வெப்பநிலை, வனிமண்டல அழுத்தம், காற்று, ஈரப்பதம், மேகமூட்டம், பனிமூட்டம், பார்வை நிலை ஆகியவற்றின் மாறுபாட்டைப் பொறுத்து மாறுகிறது. இவ்வானிலைக் கூறுகள், வானிலை ஆராய்ச்சி நிலையங்களில் பல கருவிகளைக் கொண்டு கணக்கிடப்பட்டு வருகிறது. அதில் சில முக்கிய உபகரணங்களைக் குறித்து கீழே கற்றறிவோம்.

 

வெப்பநிலை

வெப்பநிலை என்பது ஒரு பொருளின் வெப்ப அல்லது குளிர் நிலையைக் குறிக்கும். ஒரு குறிப்பிட்ட இடத்தின் வெப்பநிலை அட்சரேகை, உயரம், பருவநிலை, காற்றின் வேகம், போன்ற பல காரணிகளால் மாறுபடுகிறது. இவ்வெப்ப நிலை வெப்பமானியால் (Thermometer) அளவிடப்படுகிறது. இந்த அளவையில் பயன்படுத்தப்படும் கருவிகளாவன சென்டிகிரேட் வெப்பமானி, பாரன்ஹீட் வெப்பமானி, ஈரக்குமிழ் வெப்பமானி, உலர் குமிழ்வெப்பமானி, தொலை தொடர் வெப்பமானி போன்றவையாகும்.

உதாரணமாக, சென்டிகிரேட் வெப்பமானியில் வெப்பநிலையானது செல்சியஸில் உறைநிலை என்றும், 100° செல்சியஸ் கொதிநிலை என்றும் வெப்பநிலை அளவிடப்படுகிறது. பாரன்ஹீட் வெப்பமானியில் 32°F யை உறைநிலை என்றும், 212°F யை கொதிநிலை என்றும் அளவிடப்படுகிறது. ஈரக்குமிழ் வெப்பமானி மற்றும் உலர் குமிழ் வெப்பமானிகள் வெப்பநிலையின் ஈரப்பதத்தை அளக்க பயன்படுகிறது. தொலைதொடர் வெப்பமானி கட்டிடத்தின் உள் மற்றும் வெளிபகுதி வெப்பநிலையை தொடர்ந்து பதிவு செய்ய பயன்படுகிறது. வெப்பநிலை வரைபடம் ஒரு இடத்தின் மாறும் வெப்பநிலையின் சுவடை தொடர்ச்சியாகத் தருகிறது.

 

வளிமண்டல அழுத்தம்

வளிமண்டல அழுத்தம் என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிலவுகிற காற்றின் எடையாகும். காற்றழுத்தமானி காற்றின் அழுத்தத்தை அளக்கப் பயன்படுகிறது. காற்றழுத்தமானி மற்றும் திரவமற்ற காற்றழுத்த மானி கருவிகள் கடல் மட்டத்திற்கு மேலும் கீழும் நிலவுகின்ற வளிமண்டல அழுத்தத்தை அளவிடப் பயன்படுகிறது. உயரமானி கடல் மட்டத்திலிருந்து உயரமான இடத்தின் வளிமண்டல அழுத்தத்தை அளக்கப் பயன்படுகிறது. காற்றழுத்த வரைபடம் தொடர்ச்சியாக பதிவு செய்யப்பட்ட காற்றழுத்தத்தை வழங்குகிறது. காற்றின் அழுத்தம் மில்லிபார் என்ற அலகில் அளவிடப்படுகிறது. உலக அளவில் காற்றழுத்தமானது காற்று மற்றும் வானிலையின் தன்மையை வெளிப்படுத்துகிறது. ஓரிடத்தின் அதிக மற்றும் குறைந்த அழுத்தமானது அதிகரிக்கும் அல்லது குறையும் வெப்பநிலையோடு தொடர்புடையது.

 

காற்று

காற்று, புவியின் மேற்பரப்பில் நகரும் தன்மையுடையது. அக்காற்று உயர் காற்றழுத்த பகுதியிலிருந்து குறைந்த காற்றழுத்த பகுதியை நோக்கி கிடைமட்டமாகவோ, செங்குத்தாகவோ நகருகிறது. காற்றின் திசைகாட்டி காற்று வீசும் திசையையும் அது தொடங்கும் திசையையும் காட்டுகிறது. காற்று வேகமானி காற்றின் வேகத்தை நாட் (Knot) (1 நாட் என்பது மணிக்கு 1.852 கி.மீ வேகமுடையது) அளவில் குறிப்பிடுகிறது. காற்று கூம்பு துணி குழாய் (Wind sock)காற்று எத்திசையை நோக்கி, எவ்வேகத்தில் வீசுகிறது என்பதைக் காட்டுகிறது.

 

ஈரப்பதம்

ஈரப்பதம் என்பது வளிமண்டலத்தில் நிலவும் நீராவிகளின் தொகுப்பாகும். ஈரப்பதம் வளிமண்டல அடியடுக்கில் அடர்த்தியாக காணப்படுகிறது. இது நேரம் மற்றும் இடத்திற்கேற்ப மாறுபடுகிறது. ஈரப்பாதமானது தனிநிலை ஈரப்பதம் (Absolute Humidity), தன் ஈரப்பதம் (Specific Humidity) மற்றும் ஒப்பு ஈரப்பதம் (Relative Humidity) என்று மூன்றாக வகைப்படுத்தப்படுகிறது. ஈரப்பதமானி (Hygro metre) ஒப்பு ஈரப்பதத்தை அளவிடப் பயன்படுகிறது. ஈரப்பத வரைபடம் (Hygrograph) வளிமண்டலத்தில் நிலவும் ஈரப்பதத்தின் மாற்றத்தை காட்டுகிறது. ஈரவெப்பமானி (Hygrothrmograph) ஈரப்பதத்தையும் வெப்பத்தையும் அளவிடுகிறது.

 

மேகமூட்டம்

மேகங்களால் சூழப்பட்ட வானத்தின் பரப்பளவை மேகமூட்டம் என்கிறோம். மேகங்கள் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் வெவ்வேறு வடிவங்களிலும் அளவுகளிலும், மாறுபட்ட உயரங்களில் காணப்படுகின்றன. மேகங்கள் உயர்மட்ட, இடைமட்ட, கீழ்மட்ட என வகைப்படுத்தப்படுகின்றன. மேக அளவுமானி (Ceilometer) இலேசரை (Laser) பயன்படுத்தி மேகத்தின் அடித்தள உயரத்தை கணக்கிடுகிறது. மேக கீழ்மட்ட தொலை நோக்கு கருவி (Ceiling Projectors) மேகத்தின் அடிப்பரப்பை தரைக்கு மேலிருந்து கணக்கிடுகிறது. மேகக் கண்ணாடி மேக மூட்டத்தின் விகிதாசாரத்தை அளவீடு செய்கிறது. மேகமூட்டமானது ஓக்டா (Okta) அளவீட்டு மதிப்பீட்டில் கணக்கிடப்படுகிறது. ஓக்டாவின் மதிப்பு பூஜ்யம் எனில் தெளிவான வானம் என்றும், ஓக்டா மதிப்பு எட்டு எனில் முழுவதும் மேகமூட்டத்தால் நிறைந்துள்ள வானம் என்றும் கருதப்படுகிறது.

 

மழை

வளிமண்டலத்தில் இருந்து தண்ணீர் அல்லது பனிக்கட்டித்துகள்கள் தரைமேற்பரப்பை வந்தடைவதை மழை என்று அழைக்கிறோம். இது பனித்துளிகள், பனிமூட்டம், மூடுபனி,தூறல். மழை, பனிகலந்த மழை, ஆலங்கட்டி மழை என பல வடிவங்களில் வெளிப்படுகிறது. மழைமானி மழையின் அளவை பதிவு செய்கிறது. மழையின் அளவு மில்லிமீட்டர் அல்லது சென்டிமீட்டர் என்ற அலகுகளில் அளவீடு செய்யப்படுகிறது. தானியங்கி வானிலை மையங்கள் உணர்விகள் உதவியுடன் மழையின் அளவை பதிவு செய்கின்றன.

 

சூரிய ஒளி

சூரிய ஒளிக்கதிர்கள் புவியின் மேற்பரப்பில் காணக்கூடிய அளவில் தென்படுவது சூரிய ஒளிக்கதிர் அல்லது வெயில் என்றழைக்கப்படுகிறது. வெப்பமானி சூரிய ஒளிவீச்சின் அளவை ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரு நாளில் எந்த அளவுக்கு சூரிய ஒளி விழுகிறது என்பதை அளவிடுகிறது. வெயில் ஒவ்வொரு காலநிலைக்கும் மாறுபட்டு காணப்படுகிறது.

 

தோற்றத்தெளிவு (Visibility)

ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிலவும் வளிமண்டல காற்றைக் காணும் நிலையையே தோற்றத்தெளிவு என்கிறோம். இது வளிமண்டலத்தில் காணப்படும் நீர், பனித்துகள்கள், தூசு, புகை ஆகியவற்றைப் பொருத்து மாறுபடும். பொருள்களுக்கும் அதன் தோற்றத்தெளிவைக் காணும் நிலைக்கும் உள்ள துரத்தைப் பொறுத்து இதன் அளவீடு குறிக்கப்படுகிறது. தோற்றத்தெளிவின் அளவை 25 மீட்டருக்கு மேல் உள்ள தூரத்தில் உள்ள பொருள்களை காண இயலவில்லை என்றால் சுழியம் என்றும், 50 கி.மீ தூரத்தில் உள்ள பொருள்களைக் காண இயலுமென்றால் தோற்றத்தெளிவின் அளவை 9 என்றும் அளவிடப்படுகிறது. வளிமண்டலத்தில் இந்த அளவீட்டின் பயன்பாட்டினால் தோற்றத்தெளிவின் அளவீடு சுழியம் முதல் மூன்று வரை என்றால் மூடுபனி என்றும், அளவீடு நான்கு எனில் பனிபடர்ந்த நிலையையும், அளவீடு 5 முதல் 9 வரை குறைவாக தெரியும் நிலை முதல் தெளிவாகத் தெரியும் நிலையைக் குறிக்கிறது.

Tags : Weather Maps | Geography வானிலை நிலவரைபடம் - புவியியல்.
11th Geography : Chapter 12 : Weather Maps : Instruments for Measuring Weather Elements Weather Maps | Geography in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது புவியியல் : அலகு 12 : வானிலை நிலவரைபடம் : வானிலைக் கூறுகளை அளவிடும் கருவிகள் - வானிலை நிலவரைபடம் - புவியியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது புவியியல் : அலகு 12 : வானிலை நிலவரைபடம்