மாநில நீதித்துறை உயர் நீதிமன்றங்கள் - மாநில நீதித்துறை ( உயர் நீதிமன்றங்கள்) | 10th Social Science : Civics : Chapter 3 : State Government of India
மாநில நீதித்துறை
உயர்
நீதிமன்றங்கள்
1862இல் உயர் நீதிமன்றங்கள் கொல்கத்தா, மும்பை மற்றும் சென்னையில்
தோற்றுவிக்கப்பட்டன. காலப்போக்கில் பிரிட்டிஷ் இந்தியாவின் ஒவ்வோர்
மாகாணமும் ஓர் உயர் நீதிமன்றத்தைக் கொண்டிருந்தது. 1950க்குப்
பிறகு தோற்றுவிக்கப்பட்ட உயர் நீதிமன்றங்கள் அண்டை மாநிலங்களுக்கும் உயர் நீதிமன்றமாக
விளங்கியது. மாநில அளவில் உயர் நீதிமன்றங்களே மிக உயர்ந்த நீதிமன்றங்களாகும்.
மெட்ராஸ்
உயர் நீதிமன்றம்
இந்திய
அரசியலமைப்புச் சட்டம் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஓர் உயர் நீதிமன்றத்தைத் தோற்றுவிக்க
வழிவகுக்கிறது. ஆனால் 1956ஆம் ஆண்டு ஏழாவது திருத்தச் சட்டம்,
இரண்டு மற்றும் இரண்டிற்கு மேற்பட்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கென்று ஒரு பொதுவான உயர் நீதிமன்றத்தை நிறுவ நாடாளுமன்றத்திற்கு
அங்கீகாரம் வழங்கியது.
எடுத்துக்காட்டாக
பஞ்சாப், ஹரியானா மற்றும் யூனியன்
பிரதேசமான சண்டிகர் ஆகிய பகுதிகளுக்குச் சண்டிகரிலுள்ள உயர் நீதிமன்றம் பொது நீதிமன்றமாக
உள்ளது. இதேபோன்று கவுகாத்தியிலுள்ள உயர் நீதிமன்றம் நான்கு வடகிழக்கு
மாநிலங்களான அஸ்ஸாம், நாகலாந்து, மிசோரம்,
அருணாச்சலப்பிரதேசம் போன்றவைகளுக்கு பொது நீதிமன்றமாக உள்ளது.
இந்த நீதிமன்றத்தின் கிளைகள் இட்டா நகர், கொஹிமா,
அய்ஸ்வால் ஆகிய இடங்களில் அமைந்துள்ளன. டெல்லி
ஒரு மாநிலமாக இல்லாத போதும் தனக்கென்று சொந்தமாக ஓர் உயர் நீதிமன்றத்தைக் கொண்டுள்ளது.
ஒவ்வொரு நீதிமன்றமும் தலைமை நீதிபதி மற்றும் பல நீதிபதிகளைக் கொண்டுள்ளது.
உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும்.
உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை குடியரசுத் தலைவரால் தீர்மானிக்கப்படுகிறது.
தற்போது இந்தியாவில் 28 மாநிலங்கள்
(2019 ஜனவரியில் தோற்றுவிக்கப்பட்டு அமராவதியில் இயங்கும் ஆந்திரப்பிரதேசத்தின்
புதிய உயர் நீதிமன்றத்தையும் சேர்த்து) மற்றும் 9 யூனியன் பிரதேசங்களுக்கும் சேர்த்து 25 உயர் நீதிமன்றங்கள்
செயல்படுகின்றன.
உங்களுக்குத் தெரியுமா?
1862ஆம் ஆண்டு ஜுன் 26ஆம் களுக்குத் நாளில் விக்டோரியா மகாராணி வழங்கிய
காப்புரிமை கடிதத்தின் மூலம் சென்னை, மும்பை, கொல்கத்தா
ஆகிய மாகாணங்களில் உயர் நீதிமன்றங்கள் தோற்றுவிக்கப்பட்டன. இவற்றில் மெட்ராஸ்
உயர் நீதிமன்ற வளாகம் உலகிலேயே இலண்டனுக்கு அடுத்து இரண்டாவது பெரிய நீதித்துறை வளாகமாகும்.
சென்னை, மும்பை, கொல்கத்தா நீதிமன்றங்கள் தங்களுக்கான நீதி வரையறை அதிகாரங்களுடன் மேல்முறையீட்டு
வழக்குகளை விசாரிக்கும் அதிகாரங்களையும் பெற்றுள்ளன. அதே வேளையில்
மற்ற நீதிமன்றங்கள் பெரும்பாலும் மேல்முறையீட்டு வழக்குகளை விசாரிக்கும் அதிகாரங்களை
மட்டுமே பெற்றுள்ளன.
முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள், உயில், திருமணம் சார்ந்த வழக்குகள் மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் ஆகியவற்றை
மட்டும் நேரடியாக விசாரிக்கும் அதிகாரங்களை இவை பெற்றுள்ளன. மாகாண
நீதிமன்றங்கள் தன் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ₹2000 மற்றும்
அதற்கு மேற்பட்ட தொகை மதிப்புடைய குற்றவியல் வழக்குகளை தனக்கே உரிய நீதி வரையறையை பயன்படுத்தி
மாகாண நீதிபதிகள் விசாரிக்க முடியும்.
உயர்
நீதிமன்றங்கள் தங்களிடம் வரும் மேல்முறையீட்டு வழக்குகளையும் கீழ் நீதிமன்றங்களிலிருந்து
வரும் மேல்முறையீட்டு வழக்குகளையும் (உரிமையியல், குற்றவியல்)
விசாரிக்கின்றன.
நாட்டின்
இராணுவ தீர்ப்பாயங்களின் கீழ்வரும் ஆயுதம் சார்ந்த வழக்குகளை விசாரிக்க இவைகளுக்கு
அதிகாரம் இல்லை.
இந்திய
அரசியலமைப்பு சட்டப்பிரிவு
226, அடிப்படை உரிமைகளுக்காக மட்டுமின்றி மற்ற நோக்கங்களுக்காகவும் பேராணைகளை
வெளியிடும் அதிகாரங்களை உயர் நீதிமன்றங்களுக்கு வழங்குகிறது.
சட்டப்பிரிவு 32இன் கீழ் உச்ச நீதிமன்றம்
வழங்கும் நீதிப்பேராணைகள், ஆணைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் போன்றே
உயர் நீதிமன்றமும் அவைகளை வழங்க அதிகாரம் பெற்றுள்ளது.
இந்த
சட்டப்பிரிவுகளின் கீழ் நீதிப்பேராணைகளை வெளியிட உயர் நீதிமன்றங்களுக்கு வழங்கிய அதிகாரம்
பெரியதாகும். அடிப்படை உரிமைகள் மீறப்பட்டால் மட்டுமே உச்ச நீதிமன்றம் இவைகளை வெளியிடுகிறது.
உயர் நீதிமன்றம் இது போன்ற வழக்குகளில் மட்டுமின்றி சாதாரண சட்ட மீறலுக்கும்
நீதிப்பேராணைகளை (ஆட்கொணர்வு நீதிப் பேராணை, கட்டளையுறுத்தும் நீதிப்பேராணை, தடையுறுத்தும் நீதிப்பேராணை,
தகுதி வினவும் நீதிப்பேராணை, ஆவணக் கேட்பு பேராணை), வெளியிட
முடியும்.
இராணுவ
நீதிமன்றங்களைத் தவிர மற்ற அனைத்து சார்பு நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்களின்
பணிகளை மேற்பார்வையிடும் அதிகாரத்தை உயர் நீதிமன்றம் பெற்றுள்ளது.
• கீழ் நீதிமன்றங்களில் கொடுக்கப்பட்ட
அதிகாரங்களை திரும்ப பெறும் அதிகாரம்.
• பொதுச் சட்டங்கள் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட
படிவங்கள் மூலம் பயிற்சி மற்றும் நடவடிக்கைகளை ஒழுங்குப்படுத்த ஓர் ஆணையை வெளியிடச்
செய்தல்.
• பரிந்துரைக்கப்பட்ட முறைகளில் கீழ்
நீதிமன்றங்கள் புத்தகங்கள்,
பதவிகள், கணக்குகளைப் பராமரித்தல்.
• ஷெரிப், எழுத்தர்கள்,
அலுவலர்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள் ஆகியோருக்கான கட்டணத்தைச் செலுத்துதல்
போன்றவை குறித்துத் தீர்மானித்தல்.
உயர்
நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட அனைத்து முடிவுகள் மற்றும் தீர்ப்புகள் அச்சடிக்கப்பட்டு
சான்றாதாரமாக பாதுகாக்கப்படுகின்றன.
எதிர்காலத்தில்
எழும் கேள்விகளுக்கு தீர்வாக கடந்த கால தீர்ப்புகள் உதவுகின்றன. இதனால் உயர் நீதிமன்றம்
பதிவேடுகளின் நீதிமன்றமாக செயல்படுகிறது.