நியமனம், தகுதிகள், அதிகாரங்கள் மற்றும் பணிகள், ஆளுநரின் சிறப்புரிமைகள் - மாநில அரசு - நிர்வாகத் துறை | 10th Social Science : Civics : Chapter 3 : State Government of India

   Posted On :  27.07.2022 05:30 am

10வது சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு - 3 : மாநில அரசு

நிர்வாகத் துறை

மாநில நிர்வாகத்தின் அரசியலமைப்புத் தலைவர் ஆளுநர் ஆவார். மாநில ஆளுநரின் பெயரில் மாநில நிர்வாகம் செயல்படுகிறது. பொதுவாக ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஓர் ஆளுநர் இருக்கிறார். ஆனால் நிர்வாகச் சூழலின் காரணமாக ஒரு மாநிலத்தின் ஆளுநர் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களின் ஆளுநராகவும் நியமிக்கப்படலாம்.

நிர்வாகத் துறை 


ஆளுநர்

மாநில நிர்வாகத்தின் அரசியலமைப்புத் தலைவர் ஆளுநர் ஆவார். மாநில ஆளுநரின் பெயரில் மாநில நிர்வாகம் செயல்படுகிறது. பொதுவாக ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஓர் ஆளுநர் இருக்கிறார். ஆனால் நிர்வாகச் சூழலின் காரணமாக ஒரு மாநிலத்தின் ஆளுநர் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களின் ஆளுநராகவும் நியமிக்கப்படலாம்.

அரசியலமைப்பு சட்டப்பிரிவு 154 மாநில ஆளுநரின் நிர்வாக அதிகாரத்தைப் பற்றி கூறுகிறது.


ஆளுநர் நியமனம்

மாநில ஆளுநர், குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்படுகிறார். வழக்கமாக, அவரது பதவிக்காலம் 5 ஆண்டுகள். ஆனால் குடியரசுத் தலைவரின் விருப்பத்தின் பேரில் அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்படலாம். பொதுவாக, ஒருவர் தனது சொந்த மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்படமாட்டார். மேலும், அவர் குடியரசுத் தலைவரால் ஒரு மாநிலத்திலிருந்து வேறொரு மாநிலத்திற்கு மாற்றப்படலாம். குடியரசுத் தலைவருக்குத் தனது பணித்துறப்பு கடிதத்தைக் கொடுப்பதன் மூலம் ஆளுநர் எந்நேரத்திலும் பதவி விலகலாம்.

மாநில சட்டமன்றமோ அல்லது உயர் நீதிமன்றமோ ஆளுநரின் பணி நீக்கத்தில் பங்கு பெற முடியாது. ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் ஆளுநராக நியமிக்கப்படலாம். ஒருவரை ஒரு மாநில ஆளுநராக நியமனம் செய்யப்படுவதில் இரண்டு மரபுகள் பின்பற்றப்படுகின்றன. அவை: ஆளுநராக நியமிக்கப்படும் ஒருவர் தான் எந்த மாநிலத்திற்கு ஆளுநராக நியமிக்கப்பட உள்ளாரோ அந்த மாநிலத்தில் வசிப்பவராக இருத்தல் கூடாது. மேலும் ஆளுநராக நியமிக்கப்படும் ஒருவரை நடுவண் அரசு, மாநில அரசுடன் கலந்தாலோசித்து அவரது பெயரை முன்மொழிய வேண்டும்.

அரசியலமைப்பு சட்டப்பிரிவு 158 (3A) இன் படி ஒருவர், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களின் ஆளுநராக நியமிக்கப்படும் பொழுது, குடியரசுத் தலைவர் ஓர் ஆணையின் மூலம், ஆளுநரின் ஊதியம் மற்றும் படிகளை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பகிர்ந்து வழங்க தீர்மானிக்கலாம்.


ஆளுநராவதற்கான தகுதிகள்

இந்திய அரசியலமைப்பின் 157 மற்றும் 158வது சட்டப்பிரிவுகள் ஆளுநர் பதவிக்குத் தேவையான பின்வரும் தகுதிகளைக் கூறுகின்றன.

அவர் இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்.

35 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்.

நாடாளுமன்ற உறுப்பினராகவோ அல்லது சட்டமன்ற உறுப்பினராகவோ இருத்தல் கூடாது. அவ்வாறு இருப்பின் அவர் ஆளுநராக பதவியேற்கும் பொழுது தாமாகவே அப்பதவி காலியாகிவிடும்.

மேலும் அவர், இலாபம் தரும் எந்த தொழிலிலும் ஈடுபடக்கூடாது.


ஆளுநரின் அதிகாரங்கள் மற்றும் பணிகள்

ஆளுநர், மாநில நிர்வாகத்தின் தலைவராக செயல்படுவது மட்டுமல்லாமல் ஏராளமான அதிகாரங்கள் பெற்றவராகவும் திகழ்கிறார். சட்டப்பிரிவு 163இன் படி, முதலமைச்சரின் தலைமையிலான அமைச்சரவையின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின்படி ஆளுநர் குறிப்பிட்ட சில நிகழ்வுகளைத் தவிர மற்ற அதிகாரங்களைச் செயல்படுத்துகிறார்.

நிர்வாக அதிகாரங்கள்

மாநில சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பெறும் கட்சியின் தலைவரை முதலமைச்சராக ஆளுநர் நியமனம் செய்கிறார்.

முதலமைச்சரின் பரிந்துரையின் பேரில் அமைச்சரவையின் மற்ற உறுப்பினர்களை நியமனம் செய்கிறார்.

அரசுப் பணியாளர் தேர்வாணையக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்கிறார்.

மாநில தலைமை தேர்தல் அதிகாரியை நியமனம் செய்து, அவரது பணிக்காலம், பணியின் தன்மையைத் தீர்மானிக்கிறார்.

ஆளுநர், மாநிலப் பல்கலைக்கழகங்களின் வேந்தராக செயல்படுவதுடன், துணை வேந்தர்களையும் நியமனம் செய்கிறார்.

குடியரசுத் தலைவரின் அவசரநிலை பிரகடனம் செய்யப்படும் பொழுது, குடியரசுத் தலைவரின் பெயரில் இவரே மாநிலத்தை நேரடியாக ஆட்சி செய்கிறார்.

சட்டமன்ற அதிகாரங்கள்

ஆளுநர் மாநில சட்டமன்றத்தின் ஓர் ஒருங்கிணைந்த பகுதியாவார். ஆனால், அவர் சட்டமன்றத்தின் உறுப்பினராக இல்லை. ஆளுநர் பின்வரும் சட்டமன்ற அதிகாரங்களைப் பெற்றுள்ளார்.

ஆளுநர் சட்டமன்ற கூட்டத்தைக் கூட்டவும் ஒத்திவைக்கவும் சட்டமன்றத்தைக் கலைக்கவும் உரிமைப் பெற்றுள்ளார்.

தேர்தல் முடிந்து சட்டசபை அமைந்த முதல் கூட்டத் தொடரிலும் மற்றும் ஒவ்வொரு ஆண்டு முதல் கூட்டத்திலும் உரையாற்றுகின்றார்.

நிலுவையிலுள்ள மசோதா குறித்து சட்டமன்ற அவைகளுக்கு ஆளுநர் செய்தி அனுப்பலாம்.

சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பணியிடம் காலியாக இருக்கும் பொழுது சட்டமன்றத்தை தலைமை ஏற்று நடத்த எந்த சட்டமன்ற உறுப்பினரை வேண்டுமானாலும் ஆளுநர் நியமனம் செய்யலாம்.

ஆங்கிலோ-இந்தியன் வகுப்பினரிலிருந்து ஓர் உறுப்பினரை மாநில சட்டமன்றத்திற்கு நியமனம் செய்யலாம்.

கலை, இலக்கியம், அறிவியல், கூட்டுறவு இயக்கம் மற்றும் சமூக சேவை போன்றவற்றில் சிறந்து விளங்கும் நபர்களைத் தேர்ந்தெடுத்து மாநில சட்டமேலவையின் 6இல் 1 பங்கு இடங்களுக்கு அவர்களை நியமனம் செய்கிறார்.

மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்படும் ஒவ்வொரு மசோதாவும் ஆளுநர் கையொப்பமிட்ட பின்னர் மட்டுமே சட்டமாகும். ஆனால், சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஒரு மசோதா ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்படும் பொழுது ஆளுநர் கையொப்பமிடலாம் அல்லது நிறுத்தி வைக்கலாம் அல்லது மீண்டும் மறு பரிசீலனைக்காக சட்டமன்றத்திற்கே திருப்பி அனுப்பலாம்.

அரசியலமைப்பு சட்டப்பிரிவு 213இன் கீழ் ஆளுநர் மாநில சட்டமன்றம் நடைபெறாத பொழுது அவசர சட்டத்தைப் பிறப்பிக்கலாம். ஆனால் அந்த அவசரச்சட்டம், 6 மாதத்திற்குள் மாநில சட்டமன்றத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும். அவசரச் சட்டத்தை எந்நேரத்திலும் ஆளுநர் திரும்பப் பெறலாம்.

மாநிலத்தின் ஆண்டு நிதிநிலை அறிக்கை, அரசுப்பணியாளர் தேர்வாணையக் குழுவின் அறிக்கை, அரசின் தணிக்கைக்குழு அறிக்கைகளை சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கின்றார்.

நிதி அதிகாரங்கள்

மாநிலத்தின் ஆண்டு வரவு-செலவு திட்டத்தினை தயார் செய்து சட்டமன்றத்தில் அறிமுகம் செய்யும் கடமையை ஆளுநருக்கு அரசியலமைப்பு வழங்குகிறது. தேவைப்பட்டால், துணை வரவு செலவு திட்டத்தையும் அறிமுகம் செய்யலாம்.

ஆளுநரின் முன் அனுமதியுடன்தான் பண மசோதாவை சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்த முடியும்.

அரசின் எதிர்பாராச் செலவினங்களுக்காக ஆளுநர் அவசர நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்ய முடியும்.

பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சிகளின் நிதிநிலையை ஆய்வு செய்ய ஒவ்வொரு ஐந்தாண்டிற்கு ஒருமுறை நிதி ஆணையம் ஒன்றை அமைக்கிறார்.

நீதித்துறை அதிகாரங்கள்

மாநில அரசின் தலைமை வழக்குரைஞரை நியமனம் செய்கிறார்.

உயர் நீதிமன்றத்தின் ஆலோசனையின் பேரில் மாவட்ட நீதிபதிகளின் நியமனம் மற்றும் பதவி உயர்வு போன்ற பணிகளை மேற்கொள்கிறார்.

ஆளுநரின் ஆலோசனையின் பேரில் குடியரசுத் தலைவர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியை நியமனம் செய்கிறார்.

குற்றவாளிகளின் கருணை மனு அடிப்படையில் குற்றவாளிகளை மன்னிக்கலாம் அல்லது குற்றவாளிகளின் தண்டனையைக் குறைக்கலாம் அல்லது நிறுத்தி வைக்கலாம். (மரண தண்டனையைப் பெற்ற குற்றவாளியைத் தவிர)

விருப்புரிமை அதிகாரங்கள்

குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக ஆளுநர் ஒரு மசோதாவை நிறுத்தி வைக்க முடியும்.

மாநில சட்டமன்ற பொதுத் தேர்தலில் எந்த கட்சியும் அறுதி பெரும்பான்மையைப் பெறாத போது, ஆளுநர் எந்தக் கட்சி தலைவரையும் ஆட்சி அமைக்க அழைக்கலாம்.

சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின் பொழுது பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போனால் அமைச்சரவையை ஆளுநர் கலைக்க முடியும்.

அவசரகால அதிகாரங்கள்

மாநில அரசு அரசியலமைப்பு விதிகளுக்கேற்ப செயல்படவில்லை என்று ஆளுநர் உறுதியாக நம்பினால் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 356இன் கீழ் மாநில அரசை கலைக்க குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்யலாம். மாநில அரசு கலைக்கப்பட்டவுடன், மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைக்கு வரும். ஆளுநர் குடியரசுத் தலைவரின் பிரதிநிதியாக மாநிலத்தை நிர்வாகம் செய்கிறார்.

 

ஆளுநரின் சிறப்புரிமைகள்

சட்டப்பிரிவு 361 (1) ஆளுநருக்கான கீழ்க்காணும் சிறப்புரிமைகளை வழங்குகின்றது.

தனது பணிகள் மற்றும் அதிகாரத்தைச் செய்ய வேண்டும் என எண்ணுவதிலும் செயல்படுத்துவதிலும் எந்த நீதிமன்றத்திற்கும் பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை.

ஆளுநரின் பதவி காலத்தில் அவர் மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்தவோ அல்லது அவரை கைது செய்யவோ எந்த நீதிமன்றமும் உத்தரவு பிறப்பிக்க முடியாது.


Tags : Appointment, Qualification, Powers and Functions, Privileges | The Executive | State Government of India நியமனம், தகுதிகள், அதிகாரங்கள் மற்றும் பணிகள், ஆளுநரின் சிறப்புரிமைகள் - மாநில அரசு.
10th Social Science : Civics : Chapter 3 : State Government of India : The Governor Appointment, Qualification, Powers and Functions, Privileges | The Executive | State Government of India in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு - 3 : மாநில அரசு : நிர்வாகத் துறை - நியமனம், தகுதிகள், அதிகாரங்கள் மற்றும் பணிகள், ஆளுநரின் சிறப்புரிமைகள் - மாநில அரசு : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு - 3 : மாநில அரசு