தகவல் செயலாக்கம் | அலகு 7 | 8 ஆம் வகுப்பு கணக்கு - நிலவரைபடத்தில் வண்ணமிடல் | 8th Maths : Chapter 7 : Information Processing
நிலவரைபடத்தில் வண்ணமிடல்
நிலவரைபடத்தில் வண்ணமிடல் என்பது நிலவரைபடத்தின் வெவ்வேறு சிறப்பியல்புகளுக்கேற்ப வண்ணங்களைக் குறித்துக்காட்டும் செயலாகும். கணிதத்தில் நிலவரைபடத்தை வண்ணமிடல் என்பது பல்வேறு வகையான நில வரைபடங்களின் அடிப்படைக் கூறுகளை வகைப்படுத்தி அடுத்தடுத்த இரு பரப்புகள் (regions) ஒரே வண்ணத்தில் நிரப்பப்படாமல் மிகக் குறைந்த வண்ணங்களைப் பயன்படுத்தி வண்ணமிடுவதாகும். பின்வரும் சூழ்நிலையிலிருந்து நிலவரைபடத்தில் வண்ணமிடுதலைப் பற்றி அறிந்துகொள்ளலாம்.
சூழ்நிலை:
ஆசிரியர், வகுப்பில் உள்ள மாணவர்களை இரண்டு குழுக்களாகப் பிரித்துக் கீழே கொடுக்கப்பட்டுள்ள படம் 7.14 இல் வடிவங்களுக்கு, ஒரு குழுவை அதிகமான வண்ணங்களைப் பயன்படுத்தியும், மற்றொரு குழுவை மிகக்குறைந்த வண்ணங்களைப் பயன்படுத்தியும் வண்ணமிட அறிவுறுத்துகிறார்.
இங்கு ஒரே ஒரு நிபந்தனை, அடுத்தடுத்த இரண்டு பரப்புகள் (regions) ஒரே வண்ணத்தில் நிரப்பப்படக்கூடாது. தேவைப்படின் இரண்டு பகுதிகளின் முனைகள் ஒரே வண்ணம் கொண்டவைகளாக அமையலாம்.
படம் 7.15 இல் ஒவ்வொரு குழுவும் எவ்வாறு வண்ணமிட்டுள்ளனர் என்பதைக் காணலாம்
நாம் மேற்கண்ட கணிதக் கருத்தைப் புரிந்து கொண்ட பின் நிலவரைபடங்களை வண்ணமிடுதல் என்பது மிக ஆர்வமுள்ளதாகவும் எளிதாகவும் அமைகிறது.
நிலவரைபடத்தில் உள்ள அடுத்தடுத்த இரு பரப்புகளை (regions) வெவ்வேறு வண்ணங்களைக் கொண்டு வண்ணமிடுவதுப் பற்றி நாம் கீழ்காணும் எடுத்துக்காட்டு மூலம் காணலாம்.
எடுத்துக்காட்டு 7.6
படம் 7.16 இல் கொடுக்கப்பட்டுள்ள தென்னிந்திய மாதிரி வரைபடத்தில் மிக குறைந்த அளவு எண்ணிக்கையில் வண்ணங்களைப் பயன்படுத்தி வண்ணமிடவும்.
தீர்வு :
இவ்வாறு மிக குறைந்த அளவு எண்ணிக்கையில் வண்ணங்களைப் பயன்படுத்தி வண்ணமிடுவது ஒரு தீர்வு ஆகும். இதுபோல மேலும் பல வழிகளில் வண்ண மிட முயற்சிக்கவும்.
செயல்பாடு
கொடுக்கப்பட்டுள்ள இந்தியா (மாநிலங்கள்) மாதிரி வரைபடத்தில் மிக குறைந்த அளவு எண்ணிக்கையில் வண்ணங்களைப் பயன்படுத்தி மாவட்டங்களுக்கு வண்ணமிடவும்.
இவற்றை முயல்க
தலைமையாசிரியர் அறை, ஆசிரியர் அறை, வகுப்பறைகள், உடற்கல்விக் கூடம், சத்துணவுக் கூடம், அறிவியல் ஆய்வகம், நூலகம், அலுவலகம் என உங்கள் பள்ளிச் சூழலுக்கேற்ப நிலவரைப்படம் வரைக. நிலவரைப்பட வண்ணமிடல் (Map Colouring) மூலம் மிகக் குறைந்த எண்ணிக்கையில் வண்ணங்களைப் பயன்படுத்தி உங்கள் பள்ளி நிலவரைபடத்தில் வண்ணமிடுக.