இடைநிலைத் தனிமங்கள் | வேதியியல் - ஆக்சைடு மற்றும் ஆக்சோ நேரயனிகள் | 12th Chemistry : UNIT 4 : Transition and Inner Transition Elements
d வரிசை இடைநிலைத் தனிமங்களின் முக்கியமானச் சேர்மங்கள்
ஆக்சைடு மற்றும் ஆக்சோ நேரயனிகள்
பொதுவாக இடைநிலைத் தனிமங்கள் அதிக வெப்ப நிலையில் மூலக்கூறு ஆக்சிஜனுடன் வினைபுரிந்து அவைகளின் உலோக ஆக்சைடுகளைத் தருகின்றன. 3d வரிசையில் உள்ள முதல் தனிமமான ஸ்காண்டியத்தை தவிர்த்து பிற அனைத்து இடைநிலைத் தனிமங்களும் அயனித் தன்மையுடைய உலோக ஆக்சைடுகளை தருகின்றன. உலோக ஆக்சைடுகளில் உலோகங்களின் ஆக்சிஜனேற்ற எண் +2 முதல் +7 வரை மாறுபடுகிறது. உலோகத்தின் ஆக்சிஜனேற்ற எண் அதிகரிக்க அதிகரிக்க ஆக்சைடுகளின் அயனித்தன்மை குறைகிறது. எடுத்துக்காட்டாக, Mn2O7 சகப்பிணைப்புத் தன்மையுடையது. பெரும்பாலான உயர் ஆக்சைடுகள் அமிலத் தன்மையுடையவை. Mn2O7 நீரில் கரைந்து பெர்மாங்கனிக் அமிலத்தினைத் (HMnO4) தருகிறது. இதைப்போலவே CrO3 ஆனது குரோமிக் அமிலம் (H2CrO4)மற்றும் டைகுரோமிக் அமிலங்களைத் (H2Cr2O7) தருகின்றது. பொதுவாக தாழ் ஆக்சைடுகள் ஈரியல்புத் தன்மையுடையதாகவோ அல்லது காரத் தன்மையுடையதாகவோ காணப்படுகின்றன. உதரணமாக குரோமியம் (III) ஆக்சைடு (Cr2O3) ஈரியல்புத் தன்மையுடையது மற்றும் குரோமியம் (II) ஆக்சைடு (CrO) காரத் தன்மையுடையது.