ஒளிக்காலத்துவம்
(Photoperiodism)
மரங்கள் மலர்தலை தோற்றுவிப்பதற்கு பல வருடங்கள் எடுத்துக்
கொள்கிறது அதேசமயம் ஒரு பருவத்தாவரங்கள் ஒரு சில மாதங்களுக்குள் மலர்ந்து விடுகிறது.
ஒவ்வொரு தாவரத்திற்கும் தழை உடல் வளர்ச்சியை முடிப்பதற்கு குறிப்பிட்ட கால அளவு தேவைப்படுகிறது.
இதைத் தொடர்ந்து வரும் இனப்பெருக்க வளர்ச்சி தாவரத்தின் உள் அமைந்த உயிரியல் கடிகாரத்தினால்
கட்டுப்படுத்தப்படுகிறது. மலர்தலை கட்டுப்படுத்துவதற்கு தேவையான வாழ்வியல் நுட்பங்கள்
(i) ஒளி காலம் (ஒளிக்காலத்துவம்) மற்றும் (ii) வெப்பநிலை (தட்பப்பதனம்). ஒளி மற்றும்
இருள் கால (ஒளி காலம்) அளவிற்கு ஏற்ப மலர்தலுக்கான செயலியல் மாறுபாடு ஒளிக்காலத்துவம் எனப்படுகிறது. ஒளிக்காலத்துவம்
என்ற வார்த்தையை கார்னர் மற்றும் அல்லார்டு (1920) என்பவர்களால் சோயா மொச்சையின்
(கிளைசின் மேக்ஸ்) பைலாக்ஸி ரகத்திலும், புகையிலையின் (நிக்கோடியானா டொபாக்கம்) மேரிலாண்ட்
மாமூத் என்ற ரகத்திலும் இது கண்டறியப்பட்டது. மலர்தலை தூண்டும் ஒளிகாலம் அவசிய பகல் நீளம் (critical day length) எனப்படுகிறது. மேரிலாண்ட்மாமூத் (புகையிலை தாவரத்தின்
ரகம்) இது 12 மணி நேரமாகவும், காக்லிபர் (சாந்தியம் பென்சில்வேனிகம்) தாவரத்தில் 15.05
மணி நேரமாகவும் உள்ளது.
ஒளிக்காலத்துவ பதில்வினைக்கு ஏற்ப தாவரங்கள் பிரிக்கப்பட்டுள்ளது.
i. நெடும் பகல் தாவரங்கள் (Long day plants): அவசிய பகல் நீள அளவைவிட
மலர்தலுக்கு அதிக ஒளிக்காலம் தேவைப்படும் தாவரங்கள் நெடும் பகல் தாவரங்கள் எனப்படுகின்றன.
எடுத்துக்காட்டு: பட்டாணி, பார்லி, ஓட்ஸ்.
ii. குறும் பகல்
தாவரங்கள் (Short day plants): மலர்தலுக்காக குறைவான அவசிய பகல் நீளம் தேவைப்படும்
தாவரங்கள் குறும் பகல் தாவரங்கள் எனப்படும். எடுத்துக்காட்டு: புகையிலை, காக்லிபர்,
சோயாமொச்சை, நெல், கிரைசாந்திமம்.
iii. பகலளவு சாராத்
தாவரங்கள் (Day neutral plants):
ஒரு சில தாவரங்கள் அனைத்து ஒளிக் கால அளவிலும் மலர்தலை
உருவாக்குகின்றன. இவை பகலளவு சாராத் தாவரங்கள்
அல்லது வரம்பீடற்ற தாவரங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.
எடுத்துக்காட்டு: உருளை, ரோடோடெண்ட்ரான்,
தக்காளி, பருத்தி
24 மணி நேர சுழற்சியில் போதுமான ஒளிக் கால அளவு ஒரு
தூண்டல் சுழற்சி என கருதப்படுகிறது. தாவரங்கள் மலர்தலுக்காக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட
தூண்டல் சுழற்சி தேவைப்படலாம். தழை மொட்டு மலர் மொட்டாக மாற்றப்பட தேவைப்படும் தூண்டல்
சுழற்சியே ஒளிக்காலத்துவ தூண்டல் எனப்படுகிறது.
எடுத்துக்காட்டு: சாந்தியம் (SDP) தாவரத்தில் ஒரு தூண்டல் சுழற்சியும் பிளான்டோகோ (LDP) தாவரத்தில் 25 தூண்டுதல்
சுழற்சிகளும் தேவைப்படுகிறது.
இலைகளால் ஒளிக்காலத்துவ தூண்டல்கள் உணரப்படுகிறது.
இலைகளில் மலர்தலுக்கான ஹார்மோன்கள் உருவாக்கப்பட்டு மலர்தல் நிகழ்வதற்காக நுனிப்பகுதிக்கு
கடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சி எளிய ஆய்வின் மூலம் காக்லிபர் (சாந்தியம் பென்சில்வேனிகம்) என்ற குறும் பகல்
தாவரத்தில் விளக்கப்படுகிறது. வழக்கமாக சாந்தியம் குறும் பகல் சூழலில் மட்டும் மலரும்.
இலை நீக்கப்பட்ட தாவரத்தை குறும் பகல் சூழலில் வைத்திருந்தால் மலர்தல் நடைபெறுவதில்லை.
ஒரு இலையைத் தவிர அனைத்து இலைகளையும் நீக்கிவிட்டாலும் மலர்தல் நடைபெறுகிறது. காக்லிபர்
தாவரத்தின் இலைகளை நீக்கி நெடும் பகல் சூழலில் வைக்கும்போது மலர்தல் நடைபெறுவதில்லை.
இதில் ஒரு இலையை குறும் பகல் சூழலிலும் மற்ற இலைகளை நெடும் பகல் சூழலிலும் வைத்தால்
மலர்தல் நடைபெறுகிறது (படம் 15.10).
1. ஒளிக்காலத்துவம் பற்றிய அறிவு கலப்பினமாக்கால் ஆய்வுகளில்
முக்கிய பங்காற்றுகிறது.
2. வாழ்வியல் முன் தயாரிப்புகளுக்கு ஒளிக்காலத்துவம்
சிறந்த உதாரணம் எனவே தாவரங்களின் வாழ்வியலில் மாற்றத்தை தூண்டும் வெளிப்புற காரணியாகவும்
இது கருதப்படுகிறது.
பைட்டோகுரோம்
என்பது ஒளியினை ஈர்க்கும் நீலநிற பிலி புரத நிறமியாகும்.
பட்லர் மற்றும் அவர் குழுவினர் (1959) இந்த நிறமிக்கு இப்பெயரிட்டனர். இது ஒன்றிலிருந்து
ஒன்றாக மாறும் இரண்டு வடிவங்களில் உள்ளது. (i) சிவப்பு ஒளியை உறிஞ்சும் நிறமியை Pr
எனவும் (ii) தொலை சிவப்பு ஒளியை உறிஞ்சும் நிறமியை Pfr எனவும் குறிப்பிடலாம்.
Pr வடிவம் சிவப்பு ஒளியின் 660nm அலைநீள கதிர்களை ஈர்த்து Pfr வடிவமாக மாறுகிறது.
Pfr வடிவம் தொலை சிவப்பு ஒளியின் 730nm அலைநீள கதிர்களை ஈர்த்து Pr வடிவமாக
மாற்றுகிறது. Pr வடிவம் உயிரியல் ரீதியாக செயலற்ற நிலை மற்றும் நிலையானது. Pfr
வடிவம் உயிரியல் ரீதியாக செயல்படும் நிலை மற்றும் நிலையற்றது. குறும் பகல் தாவரங்களில்
Pr மலர்தலை தூண்டுகிறது மற்றும் Pfr மலர்தலை தடை செய்கிறது. ஆனால் நெடும்
பகல் தாவரங்களில் மலர்தல் Pfr ஆல் தூண்டப்படுகிறது, Pr ஆல் தடை செய்யப்படுகிறது.
Pfr எப்போதும் சவ்வு அமைப்புகளின் நீர் வெறுக்கும் பகுதியுடன் பிணைந்துள்ளது.
Pr வடிவம் சைட்டோபிளாசத்தின் கரையும் பகுதிகளில் காணப்படுகிறது. பைட்டோகுரோமின் இரண்டு
மாற்று வடிவங்கள் மலர்தலை தோற்றுவிக்க முக்கிய பங்காற்றுகிறது, இருப்பினும் கூடுதலாக
விதை முளைத்தல் மற்றும் செல் சவ்வு ஒருங்கிணைப்பு மாற்றத்திலும் பைட்டோகுரோம் பங்கு
கொள்கிறது.