வகைகள், வயதாகுதல், உதிர்தல், காரணிகள், தூண்டும் ஹார்மோன்கள், முக்கியத்துவம் - மூப்படைதல் | 11th Botany : Chapter 15 : Plant Growth and Development
மூப்படைதல்
(Senescence)
தாவரங்களின் வாழ்க்கை சில தொடர் நிகழ்ச்சிகளைக் கொண்டது.
அதாவது விதை முளைத்தல், இளம் நிலை, முதிர்ச்சியடைதல், மூப்பு நிலை மற்றும் இறப்பு.
இதில் மூப்பு நிலை தாவரங்களின் மூப்படைதல்
என்பது, உரு அமைதல், வாழ்வியல் செயல்கள் ஆகியவை படிப்படியாக குறைவதால் ஏற்படும் ஒட்டுமொத்தமூப்படைதலாகும்.
விலங்குகளை போல் இல்லாமல் தாவரங்களில் தொடர்ச்சியாக புதிய உறுப்புகளை உருவாக்குவதால்
முதிர்ச்சியடைந்த உறுப்புகளில் அதிகமான சத்துக்களை வெளியேற்றுகிறது. எனவே இவ்வுறுப்புகள்
விரைந்து மூப்படைகின்றன.
லியொபோல்டு (1961) நான்கு விதமான மூப்படைதலை விவரிக்கிறார்.
i. ஒட்டுமொத்த மூப்படைதல்
ii. மேற் பகுதி மூப்படைதல்
iii. இலை உதிர்வு மூப்படைதல்
iv. படிப்படியாக மூப்படைதல்
வயதாகுதல், உதிர்தல், மூப்படைதல் ஆகியவற்றை
பற்றி படிக்கும் அறிவியல் பிரிவு ஃபைட்டொஜெரண்டாலஜி எனப்படுகிறது
i. ஒட்டுமொத்த மூப்படைதல் (Overall senescence). ஒரு பருவத் தாவரங்களில் இந்த வகையான மூப்படைதல் நடைபெறுகிறது முழு தாவரமும் பாதிக்கப்பட்டு இறக்கிறது. எடுத்துக்காட்டு: கோதுமை மற்றும் சோயமொச்சை. சில பல்பருவத் தாவரங்களிலும் கூட இது நடைபெறுகிறது. எடுத்துக்காட்டு: அகேவ் மற்றும் மூங்கில்.
ii. மேற்பகுதி மூப்படைதல் (Top senescence). தாவரங்களின் தரைமேல் பகுதிகளில் இது நடைபெறுகிறது. பொதுவாக பல்பருவத் தாவரங்களில் இது நிகழ்கிறது. தரை கீழ் தண்டு மற்றும் வேர் பகுதிகள் உயிரோடு காணப்படுகிறது. எடுத்துக்காட்டு: வாழை மற்றும் கிளடியோலஸ்.
இலையுதிர் தாவரங்களில் இது பொதுவாக நிகழ்கிறது. இங்கு இலைகள் மட்டுமே மூப்படைந்து உதிர்கின்றன. தண்டு பகுதி மற்றும் வேர் பகுதி உயிருடன் உள்ளன. எடுத்துக்காட்டு: எல்ம் மற்றும் மேப்பில்.
இந்த வகையான மூப்படைதல் மெதுவாக நடைபெறுகிறது. முதலில்
முதிர்ந்த இலைகளிலும் பின்னர் அதனை தொடர்ந்து இளம் இலைகளிலும் பின்னர் தண்டு மற்றும்
இறுதியாக வேர் தொகுப்புகளில் நடைபெறுகிறது. ஒரு பருவத் தாவரங்களில் இது பொதுவாக நிகழ்கிறது (படம்
15.13).
2. மூப்படைதலின்
உடற்செயலியல் (Physiology of Senescence)
• செல் அமைப்புகளில் மாறுதல் நிகழ்கிறது.
• செல்லின் வாக்குவோல் லைசோசோம்களாக செயல்பட்டு நீரற்பகுப்பு
நொதிகளை சுரக்கிறது.
• செல்லுக்குள் ஸ்டார்ச்சின் அளவு குறைகிறது.
• பச்சைய இழப்பினால் ஒளிச்சேர்க்கை குறைந்து அதனை தொடர்ந்து
ஆந்தோசயனின் நிறமிகள் உற்பத்தி மற்றும் சேகரமடைவதால் இலைகள் சிவப்பாக மாறுகின்றன.
• மூப்படையும் உறுப்புகளில் குறிப்பிட்ட அளவு புரதம்
குறைகிறது.
• இலைகளில் RNA-னேஸ்
நொதியின் செயல்பாடு குறைவது குறிப்பிடத்தக்கது. அதிலும் முக்கியமாக rRNA உற்பத்திக்கான நொதிகள் குறைவாக உள்ளன.
• மூப்படைதல் இலைகளில் DNA மூலக்கூறுகள், DNA -னேஸ்
நொதியின் செயல்பாட்டினால் சிதைகிறது.
• ABA மற்றும்
எத்திலின் மூப்படைதலை தூண்டுகிறது மாறக ஆக்சின் மற்றும் சைட்டோகைனின் மூப்படைதலை குறைக்கிறது.
• நைட்ரஜன் குறைபாடு மூப்படைதலை அதிகரிக்கிறது ஆனால்
நைட்ரஜன் அளிப்பு மூப்படைதலை குறைக்கிறது.
• தட்பப்பதன விதைகளில் அதிக வெப்ப நிலை மூப்படைதலை
தூண்டுகிறது ஆனால் தாழ் வெப்ப நிலை மூப்படைதலை குறைக்கிறது.
• பகல் நேரத்தை விட இரவு நேரத்தில் மூப்படைதல் விரைவாக
நடைபெறுகிறது.
• நீர் இறுக்கத்தால் ABA சேகரமடைந்து தூண்டி மூப்படைதலை தூண்டுகிறது.
தாவரங்களில், அதன் மரபியல் அமைப்பு மூப்படைதலை நிர்ணயிக்கக் கூடியதாக உள்ளது. முழுத்தாவரமோ அல்லது அதன் பகுதிகளோ தொடர்ச்சியாக மூப்படைதலின் மூலம் இறப்பதை திட்டமிடப்பட்ட செல் இறப்பு என்கிறோம். தனி செல் இறப்பு எனவும் அழைக்கப்படுகிறது. தாவரங்களில் புரதத் சிதைவின் மூலம் மூப்பை ஏற்படுத்தும் நொதி ஃபைட்டாப்சேஸ்கள் என்றும் விலங்கினங்களில் இவை காஸ்பேஸ்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. சத்துக்கள் மற்றும் பிற தளப்பொருள்கள் மூப்படையும் செல்லிலிருந்து தாவரத்தின் உயிருள்ள பிற பகுதிகளுக்கு மறுஇடப்பெயர்தல் மற்றும் மறுஒதுக்கீடு மூலம் நிலைநிறுத்தப்படுகின்றன. வளர்ச்சி அடையும் சைலக் குழாய்கள் மற்றும் டிரக்கீடுகளின் புரோட்டோபிளாசம் சிதைவடைந்து, நீர் கடத்துதலை எளிதாக்குகிறது. நீர் வாழ் தாவரங்களில் வேர், தண்டு உட்பட பல்வேறு இடங்களில் உள்ள ஏரன்கைமா செல்களில் காணப்படும், பெரிய காற்று இடைவெளிகள், உருவாதற்கு அவ்விடங்களில் உள்ள செல்களில் PCD நிகழ்வதே காரணமாகும். ஒருபால் மலர் உருவாகும் போது ஆரம்பத்தில் ஆண் மற்றும் பெண் பால் பகுதிகள் உருவாக்கப்படுகின்றன. இவை இரண்டில் ஒன்று மட்டும் வளர்ச்சியடைந்து மற்றொன்று PCD வழியாக சிதைவதால் ஒருபால் மலர்கள் உருவாகின்றன. (படம் 15.14).
தாய் தாவர பகுதியிலிருந்து இலைகள், மலர்கள், கனிகள்
மற்றும் விதைகள் உதிரும் செயலியல் நிகழ்ச்சி உதிர்தல் எனப்படும். இந்த தாவர பகுதிகள்
தாவரங்களிலிருந்து நீக்கப்படும் போது அந்த தாவரப்பகுதியின் வாஸ்குலா அமைப்புகள் அடைக்கப்படுவதால்
நீர் மற்றும் சத்துக்களின் இழப்பு தடை செய்யப்படுகிறது. மூப்படைதலின் இறுதிநிலை உதிர்தல்
ஆகும். குளிர் பிரதேசங்களில் உள்ள இலையுதிர் தாவரங்களின் அனைத்து இலைகளும் விழுந்து
வெற்று தாவரங்களாக காட்சியளிக்கிறது, அடுத்து வரும் வசந்தகாலத்தில் பின்னர் புதிய இலைகள்
உருவாகிறது. வசந்த கால தாவரங்களில் வருடம் முழுவதும் படிப்படியான உதிர்தலின் போது முதிர்ந்த
இலைகள் உதிர்ந்து புதிய இலைகள் தோற்றுவிக்கப்படுகிறது.
இலை உதிர்தல் செயல் இலைக்காம்பின் அடிப்பகுதியில் நிகழ்கிறது.இவ்விடத்தில்
குறுக்குவாட்டத்தில் அமைந்த மெல்லிய சுவருடைய செல்களால் ஆன அடுக்கு தோன்றுபதே இதற்கு
காரணமாகும். இந்த அடுக்கு உதிரும் அடுக்கு
எனவும் இதைக் கொண்ட பகுதி உதிரும் பகுதி
எனவும் அழைக்கப்படுகிறது. உதிரும் அடுக்கு என்பது பசுமையான சாம்பல் நிற அடுக்காகும்
இது 2 முதல் 15 வரிசைகளில் அமைந்த செல்களால் ஆனது. செல்லின் இடை அடுக்கு மற்றும் முதலாம்
நிலை சுவர் பெக்டினேஸ் மற்றும் செல்லுலேஸ் நொதியின் செயல்பாட்டினால் கரைந்து
விடுவதால் உதிரும் அடுக்கு உருவாகி செல்கள் தளர்வடைகிறது. கடத்தும் சைலக்குழாய்களில்
டைலோசஸ்கள் அடைத்துக் கொள்கிறது. பச்சைய மூலக்கூறுகளில் இழப்பு ஏற்படும் போது இலை உதிர்தல்
நிகழ்கிறது. சூபரின் உருவாக்கம் உதிர்தலுக்குபின் வெளிப்படும் பகுதியில் உள்ள செல்களில்
சூபரின் படிந்து பெரிடெர்ம் உருவாகிறது
(படம் 15.15).
உதிர்தல் எனும் நிகழ்ச்சியை இயற்கையாக உள்ள அனைத்து
ஹார்மோன்களும் பாதிக்கிறது. ஆக்சின்கள் மற்றும் சைட்டொகைனின்கள் உதிர்தலை தடை செய்கிறது
ஆனால் அப்சிசிக் அமிலம் மற்றும் எத்திலின் இதனை தூண்டுகிறது.
1. தாவரத்தின் இறந்த பகுதிகளான முதிர்ந்த இலைகள் மற்றும்
கனிகள் உதிர்தலினால் பிரிகிறது.
2. இது கனிகள் பரவுதலுக்கும் தாவர வாழ்க்கை சுழற்சியை
தொடர்வதற்கும் உதவுகிறது.
3. கோடைக்காலத்தில் இலையுதிர் தாவரங்களின் இலைகள் உதிர்வதால்
நீரை தக்க வைக்க இந்த நிகழ்ச்சி உதவுகிறது.
4. கீழ்நிலை தாவரங்களின் உடலப்பகுதிகளான ஜெம்மாக்கள்
அல்லது விடுபடும் தாவர பகுதிகள் உதிர்வதால் உடல் இனப்பெருக்கம் நிகழ்கிறது.