உயிர் சார் அசைவுகள், இயல்சார் அசைவுகள் (அ) ஈரப்பசை அசைவுகள் - தாவர அசைவுகள் | 11th Botany : Chapter 15 : Plant Growth and Development
தாவர
அசைவுகள்
தாவரங்கள் உள், மற்றும் வெளி தூண்டல்களால், தன் நிலையை மாற்றிக் கொள்ளும் திறன் கொண்டது. இவ்வாறு நிலையை மாற்றிக் கொள்வது தாவர அசைவுகள் எனக் குறிப்பிடப்படுகிறது. தாவரங்களில் அசைவுகளை இரண்டு வகைகளாக பிரிக்கலாம். அவையாவன I. உயிர் சார் அசைவுகள் (Vital movements), II. இயல்சார் அசைவுகள் (Physical movements (Hygroscopic) (படம் 15.10).
உயிருள்ள தாவர செல்களில் அல்லது தாவர உறுப்புகளில்
உள்ள புரோட்டோபிளாசத்தில் ஏற்படும் தூண்டுதல்களால் நிகழும் அசைவுகள். உயிர்சார் அசைவுகள் எனப்படும் இவை மேலும்
இரண்டு வகைப்படும்.
அ. இடப்பெயர்ச்சி அசைவுகள்
ஆ. வளைவு அசைவுகள்
அ. இடப்பெயர்ச்சி
அசைவுகள் (Movements of locomotion)
இவ்வகை அசைவுகள் செல்லினுள் உள்ள புரோட்டோபிளாசம் அல்லது
முழு ஒரு செல் உயிரி அல்லது பல செல் தாவர உடலம் ஆகியவற்றில் நடைபெறுகிறது.
எடுத்துக்காட்டு : கிளாமிடோமோனாஸ், கேமிட்டுகள் மற்றும் சூஸ்போர்களின் இடப்பெயர்வு.
i. தன்னிச்சையான
இடப்பெயர்வு (Autonomic movements
of locomotion)
இத்தகைய இடப்பெயர்வு தாவர உடலத்தில் உட்புற தூண்டல்கள் அல்லது உட்புற மாற்றங்களினால் நடைபெறுகிறது. இத்தகைய இடப்பெயர்வு சிலியா அல்லது கசையிழைகள் மற்றும் சைட்டோபிளாச ஓட்டநிகழ்வு (சைக்ளோசிஸ்) போன்றவற்றில் நடைபெறுகிறது.
ii. தூண்டல் இடப்பெயர்வு
(Paratonic or Tactic (Induced)
movement of locomotion)
இத்தகைய இடப்பெயர்வு புறக்காரணிகள் அல்லது தூண்டல் காரணிகளான ஒளி, வெப்ப நிலை, வேதிப் பொருட்கள் ஆகியவற்றால் நடைபெறுகிறது
ஆ. வளைவு அசைவுகள் (Movement of curvature)
உயர் தாவரங்களில் சில பாகங்களில் மட்டும் மடிதல்
அல்லது வளைதல் நடைபெறுகிறது. இவை (i) தன்னிச்சையான வளர்ச்சி அசைவுகள் (ii) தூண்டல்
வளர்ச்சி அசைவுகள் என இரு
வகைப்படும்.
i. தன்னிச்சையான
வளைவு அசைவுகள் (Autonomic movements
of curvature)
தாவரங்களில் உட்புற தூண்டல்கள் அல்லது உட்புற
மாற்றங்களால் நிகழும் அசைவுகள் தன்னிச்சையான வளைவு அசைவுகள் எனப்படும்.
இதற்கு வெளிப்புற காரணிகள் தேவைப்படுவதில்லை. அவை
இரண்டு வகைப்படும். அவையாவன:
அ) தன்னிசையான வளர்ச்சி வளைவு அசைவுகள் (Autonomic movement of growth)
1. கீழ்திசைச்சார்
(Hyponasty)
அல்லி இதழின் கீழ்புறப்பகுதியில் வேகமான வளர்ச்சியின்போது,
மேல்புறத்தில் வளைவு ஏற்படுவதால் மலர்கள் மூடிக்கொள்கிறது. இவ்வகைக்கு
கீழ்திசைச்சார் அசைவு என்று பெயர்.
2. மேல்திசைச்சார்
(Epinasty)
அல்லி இதழின் மேற்புறப்பகுதியில் வேகமான வளர்ச்சியின்போது,
கீழ்புறத்தில் வளைவு ஏற்படுவதால் மலர்தல் நிகழ்கிறது. இவ்வகைக்கு மேல்திசைசார் அசைவு என்று பெயர். பொதுவாக மலர்கள்
அதிக வெப்பநிலையில் மலர்தலும், குறைந்த வெப்பநிலையில் மலர்கள் மூடுவதும் நிகழ்கிறது
(படம் 15.12).
3. சுழலசைவு
வளர்கின்ற தண்டு நுனிப்பகுதி வலது, இடது என்று
மாறி மாறி வளர்கிறது. இவ்வகை அசைவுக்கு சுழலசைவு
அல்லது பரிதி சுழற்சி அசைவு
என்று பெயர். சில தாவரங்களில் வளர்நுனி தண்டின் அசைவு சுழல்முறையில் மேல்நோக்கி
வளர்கிறது. இவ்வகை வளர்ச்சிக்கு சுற்றித் திருகுதல் வளர்ச்சி
எனப்படும். பொதுவாக குக்கர்பிட்டேசி குடும்பத் தாவரங்களில் தண்டு பற்றுக்
கம்பிகளில் காணப்படுகிறது (படம் 15.13).
ஆ) தன்னிச்சையான
நிலைமாறும் வளைவு அசைவுகள் (Autonomic
movement of variation)
இத்தகைய அசைவுகளில் உட்புற மாற்றங்கள் அல்லது
உட்புறத் தூண்டல்களினால் நடைபெறும் வளைவு அசைவுகள் தன்னிச்சையான நிலைமாறும் வளைவு அசைவுகள் எனப்படும். இது
இந்திய தந்தி கம்பி தாவரத்தில் (டெஸ்மோடியம் கைரன்ஸ்) நடைபெறுகிறது. இத்தாவரத்தின்
கூட்டிலையின் நுனியில் உள்ள ஒரு சிற்றிலை பெரியதாகவும்
பக்கவாட்டில் உள்ள இரண்டு சிற்றிலைகள் சிறியதாகவும்
உள்ளது. பகல் நேரங்களில் பக்கவாட்டு இரண்டு
சிற்றிலைகள் 90˚ கோணத்தில்
மேல்நோக்கி அசைந்து ராக்கிஸிற்கு இணையாக அமைகிறது. பிறகு 180˚
கோணத்தில் கீழ்நோக்கி அசைந்து ராக்கிஸிற்கு இணையாக அமைகிறது. அதன்பிறகு 90˚
கோணத்தில் அசைந்து மீண்டும் பழைய நிலையை அடைகிறது. அனைத்து அசைவுகளும் குறிப்பிட்ட
கால இடைவெளியில் நடைபெறுகிறது ஒவ்வொரு அசைவுகளும் முடிவடைய இரண்டு நிமிடங்கள்
ஆகிறது (படம் 15.14).
ii. தூண்டல் வளைவு
அசைவுகள் (Paratonic (induces) movements of curvature)
வெளிப்புறத் தூண்டல்களால் நடைபெறும் வளைவு
வளர்ச்சிக்குதூண்டல் வளைவு அசைவுகள் எனப்படும். இவை இரண்டு
வகைப்படும். (அ) திசைசார்பசைவுகள் (ஆ) நிலைமாறும் அசைவுகள் (அட்டவணை
2).
அ. திசைசார்பசைவுகள்
(Tropic movements)
ஒரே திசையில் ஏற்படும் தூண்டல்களால் நடைபெறும்
அசைவுகளுக்கு டிராபிக் அசைவுகள் அல்லது திசைசார்பசைவுகள்
எனப்படும். இவை மேலும் ஏழு வகைகளாகப் பிரிக்கலாம். (புவிசார் அசைவு,
ஒளிசார் அசைவு, தொடுசார் அசைவு, நீர்சார் அசைவு,
வேதிசார் அசைவு, வெப்பசார்
அசைவு, காற்றுசார் அசைவு ஆகும்.
1. புவிச்சார்
அசைவு (Geotropism)
ஒரு தாவரத்தின் உறுப்பு புவிஈர்ப்பு திசைக்கு ஏற்றவாறு
அசைவது புவிச்சார்பசைவு எனப்படும். ஆணிவேர் புவிஈர்ப்பு
விசைக்கு நேராக வளர்வது நேர்புவிச்சார்பசைவு எனப்படும். தாவரங்களின் தண்டுப்பகுதிகள்
புவிஈர்ப்பு திசைக்கு எதிர்திசையில் மேல்நோக்கி வளர்வது
எதிர்புவிச்சார்பசைவு எனப்படும். இரண்டாம் நிலை வேர்கள்
புவிஈர்ப்பு விசைக்கு செங்கோணத்தில் வளர்வது புவிஈர்ப்பு குறுக்கு சார்பசைவு எனப்படும். இரண்டாம் நிலை வேர்கள்
சாய்வாக கீழ்நோக்கி வளர்வது புவிஈர்ப்பு கிடைமட்ட சார்பசைவு எனப்படும். பக்க வேர்களும், கிளைகளும்
புவிஈர்ப்பின் உந்துதலுக்கு துலங்குவதில்லை. இதற்கு ஈர்ப்பு சார்பசைவின்மை எனப்படும்.
2. ஒளிச்சார்பசைவு
(Phototropism)
ஒளியின் தூண்டுதலுக்கு துலங்களாக நடைபெறும் அசைவு
ஒளிச்சார்பசைவு எனப்படும். தாவரப் பாகங்களான
தண்டுகள். கிளைகள், இலைகள், மலர் காம்புகள் போன்றவை ஒளியின் தூண்டுதலால் ஒளியின்
திசையை நோக்கி வளருவதால் நேர் ஒளிச்சார்பசைவு எனப்படுகிறது. ஆனால்
வேர்களும், வேரிகளும் ஒளியின் திசைக்கு எதிர்திசையில் வளரும்.
இவை எதிர் ஒளிச்சார்ப்பசைவு உடையவை என
அழைக்கப்படுகின்றன.
அட்டவணை
2: திசை சார்பசைவுக்கும் நிலைமாறும் அசைவுக்கும் இடையேயுள்ள வேறுபாடுகள்
திசை
சார்பசைவு
1. இவ்வசைவுகள் ஒரே திசையிலான உந்துதலால் நிகழ்கின்றன.
2. இந்த உந்துதலானது புரோட்டோபிளாசத்தின்
மீது ஒரு திசையில் செயல்படும்.
3. உந்துதலின் திசைக்கு சம்பந்தபட்ட
திசையில் துலங்கல் நடைபெறும்.
4. ஒரு பக்க வளர்ச்சியால் ஏற்படும் வளைவு
அசைவுகளாகும்.
5. ஒளிச்சார்பசைவு, புவிச்சார்பசைவு, நீர்சார்பசைவு, தொடுச்சார்படைவு, வேதிச்சார்பசைவு, வெப்பமுறு அசைவு, காற்றுசார் அசைவு ஆகியவை சார்பசைவுகளாகும்.
நிலைமாறும்
(அ) உந்த அசைவுகள்
1. இவ்வசைவுகள் ஒரு பரவலான உந்துதலால்
நிகழ்கின்றன.
2. உந்துதலானது புரோட்டோபிளாசத்தின்
அனைத்து நிலைகளிலும் செயல்படும்.
3. உந்துதலின் திசைக்கும் அசையும் உறுப்புக்கும்
தொடர்பு இல்லை.
4. இவை வளைவு அசைவுகளாக இருந்தாலும்
மீளும் விறைப்பு மாற்றங்களாலுமும் நிகழும்.
5. உறக்கமுறு அசைவு, நடுக்கமுறு அசைவு, வெப்பமுறு அசைவு ஆகியவை நிலைமாறும் அசைவுகளாகும்.
ஆ) நிலைமாறும்
(அ) உந்த அசைவுகள் (Nastic movement)
இவ்வகையான அசைவுகள் வெளிப்புறத் தூண்டல்களால் நடைபெறும்
இவை ஒரே திசையில் நடைபெறாமல் பரவலாக நடைபெறுகிறது. இத்தகை அசைவுகள் நிலைமாறும் அல்லது உந்த அசைவுகள் எனப்படும். இவை ஒளி, வெப்பம், வேதிப்பொருள் மற்றும் தொடு உணர்வு ஆகிய வெளிப்புற தூண்டல்களால் தீர்மானிக்கப்படுகின்றன.
1. உறக்கமுறு
அசைவு (Nyctinastic movement (or) sleep
movement)
பகல் இரவு நேரங்களில் ஏற்படும் மாறுபட்ட அசைவுகளால்
சில சிற்றினங்களின் இலைகள்
மற்றும் மலர்கள் இரவு நேரங்களில் உறக்க நிலைக்கு
செல்கின்றன. இதற்கு உறக்கமுறு அசைவு என்று பெயர். இலையடிப்
பகுதியின் எதிர்ப்புறத்தில் உள்ள செல்களில் அளவு மற்றும் அதனுடன் தொடர்புடைய
மாற்றத்தால் ஏற்படும் அமைப்பு ‘பல்வைனஸ்’ எனப்படும். மேலும்
ஆக்ஸின் மற்றும் K+ அயனிகளின் இடப்பெயர்ச்சியினாலும் இத்தகைய
அசைவுகள் ஏற்படுகின்றன. இலையின் அடிப்பகுதியில் நீர் உள்ளே செல்லும் போது இலைகள்
விறைப்புத் தன்மையடைத்து நிமிர்ந்து நிற்கின்றன. அதேபோல்
நீர் வெளியேறும் போது இலைகள் விறைப்புதன்மையை இழந்து தளர்ந்துவிடுகிறது.
இவை இரண்டு வகைப்படும்.
i. ஒளியுறு வளைதல்
(Photonasty)
ஒளியின் துலங்களாக ஏற்படும் வளைதல் நிகழ்ச்சி ஒளியுறு வளைதல் அல்லது ஒளியுறு அசைவு என அழைக்கப்படும்.
பகல் நேரங்களில் இலைகளின்
விரிதலும், மலர்கள் மலர்தலும், இரவில் அவை மூடிக்கொள்ளுதலும்
இதற்கு எடுத்துக்காட்டாகும்.
ii. வெப்பமுறு
வளைதல் (Thermonasty)
வெப்பநிலையின் துலங்களாக ஏற்படும் வளைதல் நிகழ்ச்சி வெப்பமுறு வளைதல் அல்லது வெப்பமுறு அசைவு எனப்படும். கிராக்கஸ் தாவரத்தின் மலர்கள் உயர் வெப்பநிலையில் மலரும், குறைந்த நிலையில் மூடிக்கொள்ளும்.
2. நடுக்கமுறு
வளைதல் (Seismonastic movement)
இவ்வகை வளைதலானது அதிர்வுகளால் ஏற்படுகிறது.
இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு மைமோசா புடிக்கா எனப்படும் தொட்டாற்சிணுங்கி தாவரமாகும்.
இது தொடு உணர்ச்சிமிக்கத்
தாவரமாகும் (படம் 15.17). இத்தாவரம் தொடுதல், மோதுதல்
அல்லது உராய்வு போன்ற உந்துதல்களுக்கு சிற்றிலைகளை மூடிக்
கொண்டு இலைகளை தாழ்த்திக் கொள்கிறது. இந்த தாவரத்தில் உள்ள பல்வைனஸ் அல்லது
பருத்த இலை அடியின் பாரங்கைமா செல்களில் நீர் புகுந்து வெளியேறுவதால் சிற்றிலைகளில்
ஏற்படும் விறைப்பு மாற்றத்தால் இந்த அசைவு ஏற்படுகிறது
(படம் 15.18).
3. தொடுதலுறு
வளைதல் (Thigmonastic movement)
டிரஸீரா மற்றும் டயோனியா
தாவரத்தில் இலைகள் பூச்சிகள் தொடுதல் தூண்டல்களால் அசைவுகள்
ஏற்படுகின்றன. பூச்சிகள் இலைகளின் மீது உட்காரும்போது
உணர்நீட்சிகள் உள்நோக்கி வளைந்து பூச்சியை நெருக்குகிறது. இதே போல டையோனியாவில்
இலைகள் இருபாதியாக மைய நரம்புடன் மையத்திலிருந்து மேல்நோக்கி வளைகிறது.
பூச்சிகள் சீரணித்த பிறகு மீண்டும் பழைய நிலையை இலைகள்
அடைகிறது (படம் 15.19).
II.
இயல்சார் அசைவுகள் (அ) ஈரப்பசை அசைவுகள்
(Physical movement or Hygroscopic movements)
இயல்சார் அசைவுகள் தாவரத்தின் முதிர்ச்சியடைந்த மற்றும் இறந்த பாகங்களில் நடைபெறுகிறது. ஆனால் இவை புரோட்டோபிளாச தூண்டல்களுடன் தொடர்புடையதல்ல. இத்தகைய அசைவுகள் இயல்சார் அசைவுகள் (அ) ஈரப்பசை அசைவுகள் எனப்படும். எடுத்துக்காட்டாக தாவரத்தில் இருந்து விதைகள் மற்றும் ஸ்போர்கள் பரவுதல், ஸ்பொராஞ்சியம் வெளியேற்றம். விதைகள் வெடித்தல் மற்றும் இலேட்டர்களின் இடப்பெயர்ச்சி ஆகியவற்றை குறிப்பிடலாம்.
தரைமேல் தண்டின் எதிர் புவிச்சார்பு விசையின் விளைவை விளக்கும் சோதனை/ கிளினோஸ்டாட்
கிளினோஸ்டாட் கருவியின் நுனிபகுதி தொட்டி போன்ற அமைப்பையும், மையத்தில் சுழலும் ஒர் அச்சையும் கொண்ட அமைப்பாகும். தொட்டி தாவரம் ஒன்றை அதன் நுனியில் கிடைமட்டமாக பொருத்தப்படவேண்டும். பின்னர் இந்த அமைப்பைமைய அச்சின் உதவியால் மெதுவாக சுழற்றப்படவேண்டும். இதனால் புவிஈர்ப்பு விசை முழுவதுமாக நீக்கப்பட்டு தாவரங்கள் அனைத்து பக்கங்களிலும் சமமான வளர்ச்சி தூண்டப்படுகிறது. பின்னர் கிளினோஸ்டாட்டின் சுழற்சியை ஒரு குறிப்பிட்டகால இடைவெளியில் நிறுத்தும்போது தண்டின் நுனி வளைந்து மேல் நோக்கி வளருகிறது. இதன் மூலம் தண்டின் நுனி எதிர்ப்புவிச் சார்பசைவு கொண்டது என நிரூபிக்கப்படுகிறது.
தாவரத்தின் தண்டுநுனியானது ஒளிச்சார்பசைவை கொண்டது என்று விளக்கும் சோதனை
ஒளிபுகாத ஒரு சிறிய அட்டைப் பெட்டியை எடுத்துக்கொண்டு அதில் ஒரு சிறிய துவாரத்தினை ஏற்படுத்தி அதன் வழியே ஒளியானது அட்டைப் பெட்டியினுள் விழுமாறுச் செய்ய வேண்டும். பின்னர் நன்கு நீருற்றப்பட்ட தொட்டித் தாவரம் ஒன்றை அந்த அட்டைப் பெட்டியினுள் வைக்க வேண்டும். இத்தகைய அமைப்பிற்கு ஒளிச்சார்பசைவு அறை அல்லது ஒளி நோக்கிய சாய்வு அறை என்று பெயர். இந்த அமைப்பில் உள்ள ஒளி ஊடுறுவும் துளையை 24 மணி நேரம் மூடி வைத்தால் தாவரமானது சாதாரண வளர்ச்சி நிலையை காட்டுகிறது. ஆனால் ஒளியானது அட்டைப் பெட்டியினுள் விழுமாறுச் செய்தால் தாவரமானது ஒளிவரும் திசையை நோக்கி வளைந்து வளர்ச்சியடைகிறது. இதன் மூலம் நாம் தாவரத்தின் தண்டு நுனியானது ஒளிச்சார்பசைவை உடையது என்பதை அறியலாம்.