பாடச்சுருக்கம்
பொருளாதாரத் தாவரவியல் என்பது மனிதர்களுக்கும்
பொருளாதாரப் பயன்தரும் தாவரங்களுக்கும் இடையேயுள்ள உறைவைக் குறிக்கிறது. இது மனிதர்களின்
மூன்று முக்கியத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம் போன்றவற்றை நிறைவு செய்கிறது. வளர்ப்புச்சூழலுக்கு
உட்படுத்தப்படும் பயிர்கள் (சாகுபடி பயிர்கள்) பல சிக்கலான செயல்முறைகளுக்குப் பிறகே
கொண்டுவரப்படுகின்றன. அதாவது தாவரங்களில் ஏற்படும் மரபணுவிய வேறுபாடுகள் திடீரென ஒரு
நாள் தோன்றுவதில்லை . மாறாக, அதிகக் காலம் அதாவது சில சிற்றினங்கள் உருவாகப் பலநூறு
ஆண்டுகளை எடுத்துக் கொள்ளும் வேளாண்மையின் வரலாற்றில் வாவிலோ என்பவர் முதலில் எட்டுத்தாவரத்
தோற்றமையங்களைக் கூறினார். தற்பொழுது அது பன்னிரெண்டு மையங்களாகப் பிரிந்துள்ளது. இயற்கை
வேளாண்மையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த நுண்ணுயிரி உட்செலுத்திகளைக் கொண்ட உயிரி உரங்கள்
வேதிய உரங்களைக் காட்டிலும் செலவுடையதாக இருந்தாலும் பயன்படுத்தப்படுகிறது. அசோலா,
ஆர்பஸ்குலார் வேர் பூஞ்சை மற்றும் கடல் களைகள் உரங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவை
பயிர் விளைச்சலை அதிகரிக்கின்றன.
பயிர் பெருக்கம் என்பது மனிதத்தேவைக்காகத்
தாவரச் சிற்றினங்களைக் குறிக்கோளுடன் திறமையாகக் கையாண்டு குறிப்பிட்ட விரும்பத்தக்க
மரபணு வகையத்தையும் மற்றும் புறத்தோற்ற வகையத்தையும் உருவாக்குவதாகும். தாவர அறிமுகம்,
தேர்ந்தெடுத்தல், கலப்பு செய்தல், கலப்பின வீரியம், சடுதிமாற்ற பெருக்கம், பன்மடிய
பெருக்கம் மற்றும் பசுமை புரட்சி போன்றவை பாரம்பரியப் பயிர்பெருக்க முறைகளாகும்.
விதையானது தாவரத்தின் மிக முக்கிய பாகமாகும். எதிர்காலச் சந்ததிக்கு உணவை அளிப்பதும் விதையாகும். எனவே இதை மிகக் கவனமாகப்பாதுகாத்துச் சேமித்து வைக்க வேண்டும். விதை நேர்த்தி, கடினமாக்கல் விதை நேர்த்தி, விதை உருண்டைகளாக்குதல், விதைபூச்சு மற்றும் உயிரிதிணிப்பு போன்றவை விதை சேமித்தலில் நவீன வழிமுறைகளாகும். விதைகளானது மூங்கில் அமைப்புகளிலும், மண் அமைப்புகளிலும் சேமிப்பது பாரம்பரிய வழிமுறைகளாகும். கிராமங்களில் விவசாயிகள் சேமித்த மொத்த விதைகளையும் சிமெண்ட் தொட்டிகளிலோ, உலோக அல்லது நெகிழி உருளைகளிலோ சேமித்து வைப்பர். உறைகுளிர் சேமிப்பு, மரபணு வங்கி, சுவல்பார்ட் விதை வங்கி போன்றவை விதைகளை மிக நீண்ட நாட்களுக்குச் சேமிக்கும் நவீன விதை சேமிப்பு வழிமுறைகளாகும்.
இணக்கமாதல் : ஒரு தனித்தாவரம் முற்றிலும் மாறுபட்ட புதிய சூழலுக்கு தன்னை தகவமைத்துக் கொள்ளுதல் அல்லது ஒரு சிற்றினமோ அல்லது கூட்டமோ மாறுபட்ட புதிய சூழலுக்குப் பல தலைமுறைகளுக்குத் தங்களைத் தகவமைத்துக் கொள்ளுதல்.
உழவியல் : விவசாய அறிவியல்
சான்றிதழ் அளிக்கப்பட்ட விதைகள் : நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படும் விதைகள் அல்லது சட்டபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முகவர்களால் நிபந்தனையுடன் சான்றிதழ் அளிக்கப்பட்ட விதைகள்
மரபணுவளக்கூறு தொகுப்பு: பயிரின் மரபணுக்களிலுள்ள பல்வேறு அல்லீல்களின் மொத்தத் தொகுப்பு மரபணுவளக்கூறு தொகுப்பு எனப்படும்.
நான் ரிகரெண்ட்
பெற்றோர்: கலப்புயிரியின் பெற்றோர் தாவரங்களைப் பிற்கலப்பு சோதனைக்கு மீண்டும்
பயன்படுத்தாமை.
தூயவழி: ஒத்த
பண்பிணைவுதன்மையைக் கொண்ட ஒரு தனித் தாவரத்தில் சுயக் கருவுறுதல் மூலம் பெறப்பட்ட வழித்தோன்றல்கள்.
தொற்று
தடைகாப்பு: தொற்றுத்தன்மையுடைய நோய் பரவாவண்ணம் தனிமைப்படுத்ததுல்
ஸ்ட்ரைன்
(Strain): ஒரு பொதுவான தொடக்கத்திலிருந்து தோன்றிய ஒரே மாதிரியாக உள்ள
தாவரங்களின் தொகுதி.