பயிர் பெருக்கம் - விதை சேமிப்பு | 12th Botany : Chapter 9 : Plant Breeding
விதை சேமிப்பு
விதையானது வாழ்வியல் முதிர்ச்சியடைந்தவுடன் சேமிப்பானது தாய்த் தாவரத்திலேயே தொடங்குகிறது. விதை சேகரித்த நாளிலிருந்து விதைக்கும் காலம் வரை அதன் முளைதிறனோடு பாதுகாப்பது விதைச் சேமிப்பு எனப்படும். அறுவடைக்குப் பின் விதைகள் பண்டக சாலையிலோ போக்குவரத்தின் இடைப்பட்ட இடங்களிலோ, சில்லரைக் கடைகளிலோ சேமித்து வைக்கப்படுகின்றன.
பாரம்பரிய விதை சேமிப்பு முறை மூங்கில் அமைப்புகளிலும்,
மட்பாண்டங்களிலும், மர அமைப்புகளிலும் மற்றும் பூமிக்குள் சேமித்து வைக்கும் முறைகளையும்
உள்ளடக்கியுள்ளது. கிராமங்களில் அதிக விதைகளைச் சிமெண்ட் உறைகளிலும், உலோக உருளைகளிலும்,
நெகிழி உருளைகளிலும் சேமித்து வைத்தனர். நகர்புறங்களில் விதை சேமித்தலுக்குத் தார்
உருளை, உதைப்பூர் உருளை, மூங்கில் உருளை, பூசா உருளை மற்றும் உலோக உருளைகளைப் பயன்படுத்துகின்றனர்.
அ) குளிர்பாதுகாப்பு
முறையில் சேமித்தல் (Seed storage in cryopreservation): இது
மரபணு வளக்கூறுகளை (germplasm) (செல்கள், திசுக்கள், கரு, விதைகள்) உறைநிலைக்கு மிகவும்
கீழான திரவ நைட்ரஜனில் -196° C க்கும் கீழ்க் குளிர்நிலையில் வைத்து பாதுகாக்கும் தொழில்நுட்ப
முறையாகும். வணிக விதை சேமிப்பிற்கு இம்முறை பயன்படாது. இருப்பினும் இம்முறை பாரம்பரிய
முறைகளால் பாதுகாக்க முடியாத மதிப்புமிக்க மரபணு வளக்கூறுகளை எதிர்காலத் தேவைக்காகச்
சேமித்து வைக்கப் பயன்படுகிறது.
ஆ) மரபணு
வங்கி விதை சேமிப்பு: மரபணு வங்கியில் விதை சேமிப்பது என்பது ஒரு முறையான
கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் பாதுகாக்கப்படுவதாகும். இம்முறையில் வெப்பம், காற்று மற்றும்
விதையின் ஈரப்பதம் போன்றவற்றால் விதையின் முளைப்புத் திறன் பாதிக்காதவாறு மிக நீண்ட
காலத்திற்குப் பாதுகாக்கப்படுகிறது. இம்முறையில் ஒவ்வொரு வகை விதைக்கும் கொள்கலன் மற்றும்
சேமிக்கும் முறைகள் மாறுபடுகின்றன.
இ) சுவல்பார்ட் விதை வங்கி: விதைகள் நான்கடுக்கு மூடிய உறைகளில் இடப்பட்டுப் பின்னர் அவை அடர்ந்த திடமான நெகிழி கொள்கலன்களில் வைக்கப்பட்டு, உலோக அலமாரிகளில் அடுக்கப்படுகிறது. இவ்விதை சேமிப்பு அறைகள் -18°C வெப்ப நிலையில் வைக்கப்படுகின்றன. குறைந்த வெப்பநிலையும் வரையறுக்கப்பட்ட ஆக்ஸிஜனும் விதையின் வளர்சிதை மாற்றத்தையும் ,வயதாவதைத் தள்ளிப்போடுவதையும் உறுதி செய்கின்றன. மின்சாரம் தடைபடும் பொழுது விதைகளுக்குத் தேவையான குறைந்த வெப்பநிலையைக் கொள்கலனைச் சுற்றியுள்ள நிலத்தடி உறைபனியானது வழங்குகிறது
தரக்கட்டுப்பாட்டுடன்கூடிய விதைப் பெருக்கம் மற்றும் உற்பத்திக்கான சட்டபூர்வமான அல்லது சட்டமயமான முறைமையே விதைச் சான்றாகும். விதைகளைப் பராமரித்து அவற்றைப் பொதுமக்களுக்கு அளிப்பதே இத்தரச்சான்றின் நோக்கமாகும். மரபு அடையாளத்துடன் கூடிய கலப்படமற்ற பட்டியலிடப்பட்ட இரகங்களைத் தரம் வாய்ந்த விதைகள் மற்றும் பெருக்கத்திற்கான பொருட்கள் மூலம் வளர்த்து விநியோகிக்க இத்தரச்சான்று முறை பயன்படுகிறது.
வேளாண்மையில் நானோதொழில்நுட்பம் தற்காலத்தில் நானோ தொழில் நுட்பம் பல்வேறு நுண்கருவிகளையும்
நுண்பொருட்களையும் அளிப்பதன் மூலம் வேளாண்மையில் ஒரு தனித்த பங்கு வகிக்கிறது. எடுத்துக்காட்டு:
நுண் - உயிரி - உணர்விகள் மூலம் மண்ணின் ஈரப்பதத்தையும் ஊட்டச்சத்தின் நிறையையும் கண்டறியலாம்.
திறன் வாய்ந்த ஊட்டச்சத்து வேளாண்மைக்கான நுண்உரங்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட களைகளைக்
கட்டுப்படுத்தும் நுண்களைக்கொல்லிகள், விதை வீரியத்தை அதிகப்படுத்தும் நுண் ஊட்டச்சத்துக்கள்,
திறன் வாய்ந்த பூச்சி மேலாண்மைக்காக நுண்பூச்சிக் கொல்லிகள் போன்றவற்றை நுண்தொழில்நுட்பம்
மூலம் பெறலாம். எனவே நானோதொழில்நுட்பம் சூழல் பாதுகாப்பு, சூழல் நீள்நிலைத்தன்மை, பொருளாதார
நிலைத்தன்மை போன்றவற்றின் மூலம் பயிர் விளைச்சலில் பெரும் பங்கு வகிக்கிறது.