இயல் 3 | 11 ஆம் வகுப்பு தமிழ் - செய்யுள் கவிதைப்பேழை: குறுந்தொகை | 11th Tamil : Chapter 3 : Pedu pera nil
இயல் 3
கவிதைப்பேழை
குறுந்தொகை
நுழையும்முன்
அன்பும் அறனும் விளையும் திருமண வாழ்வைத் தலைவி விரும்புவதையும் இரு மனம் இணையும் திருமணத்தை உறுதிசெய்ய இரு வீட்டார் முனைவதையும் அகத்திணை இலக்கணத்தின் இலக்கியமாய் விளங்கும் குறுந்தொகை இப்பாடல்வழிக் காட்சிப்படுத்துகிறது.
அம்ம வாழி தோழி நம்மூர்ப்
பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லோ
தண்டுடைக் கையர் வெண்டலைச் சிதவலர்
நன்றுநன் றென்னும் மாக்களோடு
இன்றுபெரிது என்னும் ஆங்கண தவையே.*
(146)
- வெள்ளிவீதியார்
தோழி, நீ வாழி! நானறிய ஒன்று சொல்.
(உன் இதயம் உள்ளவன் தான்முயன்று தேடி)
இன்று கொடுத்த ஈடிலாப் பரிசம்
நன்று நன்றென நம்மூர்ப்
பொது அவையில் சொன்ன
முதுபெரும் சான்றோர்போல்
பிரிந்தோரைச் சேர்ப்போர் இருந்தாரோ அன்றும்.
திணை: குறிஞ்சித்திணை
துறை: தலைவன் சான்றோரைத் தலைவியின் தமர்பால் மணம் பேசி வர விடுப்ப, தன் தமர் மறுப்பாரோ என்று அஞ்சிய தலைவியை நோக்கி, "தலைவன் வரைவை நமர் ஏற்றுக்கொண்டனர்; நீ கவலை ஒழிவாயாக" என்று தோழி கூறியது.
துறை விளக்கம்: தலைவன் தலைவியை மணம் முடிப்பது பற்றிப் பேச, சான்றோரை அனுப்புகிறான். தலைவி, அப்போது எங்கே தன் பெற்றோர் மணம் பேச மறுத்துவிடுவார்களோ என்று கலங்குகிறாள். இந்நிலையில் தோழி அவளிடம் தலைவனின் தரப்பைத் தலைவியின் பெற்றோர் ஏற்றுக்கொண்டனர் என்று தேற்றுகிறாள்.
சொல்லும் பொருளும்
சிதவல் -
தலைப்பாகை, தண்டு -
ஊன்றுகோல்
பாடலின் பொருள்
(ஊர் மக்களின் அவையில் முன்பு பலமுறை தலைவனின் பரிசப் பொருட்கள் திருப்பி அனுப்பப்பட்டன.) 'தலைவி! இன்றோ தலைப்பாகை அணிந்து கையில் தண்டுடன் இருக்கும் முதியவர்கள் மூலமாகத்தலைவன் (போதுமென்று சொல்லத்தக்க அளவு பரிசப் பொருட்களைக் கொண்டுவந்து அவைமுன் வைத்துள்ளான்) மணம் பேசச் செய்துள்ளான். அவையில் இருந்த தலைவியின் உறவிணரும் கண்டு, "நன்று தன்று"
என்று கூறி மகிழ்ந்தனர். நம்முடைய ஊரில் முன்பெல்லாம் பரிசத்தொகை போதவில்லை என்பதற்காகப் பிரித்துவிடப்பட்ட தலைவன் தலைவியரைச் (போதிய பரிசத்தொகை கிடைத்தவுடன்) சேர்த்து வைப்போர் இருந்தணர்தானே?" என்று தோழி கூறுகிறாள்.
இப்பாடல் நேரிசை ஆசிரியப்பா வகையைச் சார்ந்தது.
இலக்கணக்குறிப்பு
பிரிந்தோர் -
வினையாலணையும் பெயர்
நன்றுநன்று -
அடுக்குத்தொடர்
பகுபத உறுப்பிலக்கணம்
பிரிந்தோர் -
பிரி +
த்(ந்)
+ த் + ஓர்
பிரி - பகுதி
த் -
சந்தி 'ந்' ஆனது விகாரம்
த் -
இறந்தகால இடைநிலை
ஓர் -
பலர்பால் வினைமுற்று விகுதி
புணர்ச்சி விதி
தண்டுடை -
தண்டு +
உடை
உயிர்வரின் உக்குறள் மெய் விட்டோடும்
தண்ட் +
உடை
உடல் மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே.
தண்டுடை
நூல்வெளி
குறுந்தொகை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. கடவுள் வாழ்த்து நீங்கலாக, அகத்திணை சார்ந்த 401 பாடல்களை உடையது.
"நல்ல குறுந்தொகை எனச் சிறப்பித்து உரைக்கப்படுவது. உரையாசிரியர்கள் பலராலும் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட நூல். ஆதலால் இந்நூலே முதலில் தொகுக்கப்பட்ட தொகை நூலாகக் கருதப்படுகிறது. இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ ஆவார். இந்நூலின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் ஆவார்.
வெள்ளிவீதியார் சங்ககாலப் பெண்புலவர்களுள் ஒருவர். சங்கத்தொகை நூல்களில் 13 பாடல்கள் இவரால் பாடப்பட்டவை.