இயல் 3 | 11 ஆம் வகுப்பு தமிழ் - செய்யுள் கவிதைப்பேழை: புறநானூறு | 11th Tamil : Chapter 3 : Pedu pera nil
இயல் 3
கவிதைப்பேழை
புறநானூறு
நுழையும்முன்
தமிழரின் வாழ்வியல் கருவூலமான புறநானூறு, வீரத்தையும் ஈரத்தையும் மட்டும் பேசாமல், வாழ்வின் விழுமியங்களையும் பேசுகிறது. பிறர்க்கென வாழ்வதே பிறவிப்பயன் என்ற கருத்தினை விளக்கும் இப்பாடல், தனக்கென வாழா மனிதர்களைப் பற்றிப் பேசுகிறது.
உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவது ஆயினும், இனிதுஎனத்
தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்!
துஞ்சலும் இலர் பிறர் அஞ்சுவது அஞ்சிப்
புகழ் எனின் உயிருங் கொடுக்குவர்; பழியெனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்;
அன்ன மாட்சி அனையர் ஆகித்
தமக்கென முயலா நோன்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மை யானே.* (182)
- கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி
கிடைத்திருப்பதென்னவோ அரிய அமிழ்தம்!
அதனால் என்ன
தனித்துண்ணத் தகுமோ?
எமக்கது பெரிதில்லை
எவரிடத்தும் வெறுப்பில்லை
சோம்பல் சுயமழிக்கும்
உயர்ந்தோர் அஞ்சுவது அஞ்சுவர் தாமும்
புகழா இதோ எம் உயிர்.
இகழா பூமிப்பதிகம் பொருட்டில்லை.
எமக்குள்ளிருப்பது குறுமனம் அன்று
பெருமலையெனத் தமக்கென வாழாது
பிறர்க்கென வாழும் தகைசால் மாண்பினர்
உளதால் அன்றோ
இக்கணமும் உயிர்த்திருக்கிறது உலகம்.
திணை: பொதுவியல் திணை
வெட்சி முதல் பாடாண் வரை உள்ள திணைகளில் கூறப்படாத செய்திகளையும் பிற பொதுவான செய்திகளையும் தொகுத்துக் கூறுவது பொதுவியல் திணையாகும்.
துறை: பொருண்மொழிக்காஞ்சித் துறை
மக்களுக்கு நலம் செய்யும் வாழ்வியல் நெறிகளை எடுத்துக் கூறுதல் பொருண்மொழிக்காஞ்சித் துறையாகும்.
சொல்லும் பொருளும்
தமியர் -
தனித்தவர் ; முனிதல் வெறுத்தல் ; துஞ்சஸ் -
சோம்பவ் ; அயர்வு - சோர்வு ; மாட்சி -
பெருமை ; நோன்மை - வலிமை: தான் - முயற்சி.
பாடலின் பொருள்
தமக்காக உழைக்காமல் பிறர்க்காகப் பெரிய முயற்சியுடன் உழைப்பவர்கள். இந்திரனுக்குரிய அமிழ்தம் கிடைத்தாலும் அஃது உயிர்க்காப்பது என்பதற்காகத் தனித்து உண்ண மாட்டார்கள்; யாரையும் வெறுக்க மாட்டார்கள்; சோம்பலின்றிச் செயல்படுவார்கள்; பிறர் அஞ்சுவதற்குத் தாமும் அஞ்சுவார்கள்: புகழ்வரும் என்றால் தம் உயிரையும் கொடுப்பார்கள்; உலகம் முழுவதும் கிடைப்பதாயிருந்தாலும் பழிவரும் செயல்களைச் செய்யார்; எதற்கும் மனம் தளர மாட்டார்கள். இத்தகைய சிறப்புடையோர் இருப்பதால்தான் இவ்வுலகம் இன்றும் இயங்கிக் கொண்டிருக்கிறது. இப்பாடல் நேரிசை ஆசிரியப்பா வகையைச் சார்ந்தது.
இலக்கணக்குறிப்பு
அம்ம -
அசைநிலை; உண்டல்,
துஞ்சல் -
தொழிற்பெயர்கள்;
முயலா –
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
பகுபத உறுப்பிலக்கணம்
துஞ்சல் -
துஞ்சு +
அல்
துஞ்சு -
பகுதி, அல் – தொழிற்பெயர் விகுதி
முனிவிலர் -
முனி +
வ் +
இல் +
அர்
முனி -
பகுதி, வ் -
உடம்படுமெய் சந்தி
இல் – எதிர்மறை இடைநிலை
அர் -
பலர்பால் வினைமுற்று விகுதி
புணர்ச்சி விதி
இயைவதாயினும் -
இயைவது +
ஆயினும்
உயிர்வரின் உக்குறள் மெய் விட்டோடும் –
இயைவத் +
ஆயினும்.
உடல் மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே -
இயைவதாயினும்.
புகழெனின் – புகழ் + எனின்
உடல் மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே -
புகழெனின்.
பேராசிரியர் ஜார்ஜ் எல். ஹார்ட்
(GEORGE
L. HART) என்பவரால் புறநானூறு The
Four Hundred Songs of War and Wisdom: An: Anthology of Poems from Classical
Tamil, the Purananuru என்னும் தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
ஜி.யு.போப்
(G.
U. POPE), புறநானூற்றுப்பாடல்கள் சிலவற்றை Extracts
from purananooru & Purapporul; venbamalai" என்னும் தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
சுவடிகளில் எழுதிப் பயன்படுத்தப்பட்டு அழிந்துபோகும் நிலையில் இருந்த புறநானூற்றின் பல சுவடிகளை ஒப்பிட்டு ஆய்ந்து பயன்பெறும் வகையில்,
உ.வே.சா.
1894 ஆம் ஆண்டு முதன் முதலாக அச்சில் பதிப்பித்து வெளியிட்டார்.
நூல்வெளி
புறநானூறு, எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. புறத்திணை சார்ந்த நானூறு பாடல்களைக் கொண்டது; புறம், புறப்பாட்டு என்றும் வழங்கப்படும்; அகவற்பாக்களால் ஆனது. புறநானூற்றுப் பாடல்கள் சங்ககாலத்தில் ஆண்ட அரசர்களைப் பற்றியும் மக்களின் சமூக வாழ்க்கை பற்றியும் எடுத்துரைக்கின்றன.
கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி: பாண்டிய மன்னருள் பெருவழுதி என்னும் பெயரில் பலர் இருந்தனர். ஆயினும், அரிய பண்புகள் அனைத்தையும் தம் இளமைக்காலத்திலேயே பெற்றிருந்த காரணத்தால் அக்கால மக்கள், இவரை இளம்பெருவழுதி என்று அழைத்தனர். கடற்பயணம் ஒன்றில் இறந்துபோனமையால் இவர், கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி என்று பிற்காலத்தவரால் அழைக்கப்படுகின்றார். இவரது பாடல்கள் புறநானூற்றில் ஒன்றும் பரிபாடலில் ஒன்றும் இடம் பெற்றுள்ளன.