Home | 11 ஆம் வகுப்பு | 11வது தமிழ் | துணைப்பாடம்: வாடிவாசல்

சி.சு.செல்லப்பா | இயல் 3 | 11 ஆம் வகுப்பு தமிழ் - துணைப்பாடம்: வாடிவாசல் | 11th Tamil : Chapter 3 : Pedu pera nil

   Posted On :  05.08.2023 08:53 am

11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : பீடு பெற நில்

துணைப்பாடம்: வாடிவாசல்

11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : பீடு பெற நில் : துணைப்பாடம்: வாடிவாசல் - சி.சு.செல்லப்பா | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் 3

விரிவானம்

வாடிவாசல்

- சி.சு. செல்லப்பா


நுழையும்முன்

ஒத்தைக்கு ஒத்தையாகக் கோதாவில் இறங்கும் மிருகத்துக்கும் மனுஷனுக்கும் நடக்கும் விவகாரத்துக்கு இரண்டிலொரு முடிவு காணும் இடம் வாடிவாசல். அந்த வாடிவாசலில் மனுஷ ரத்தம் சிந்தலாம்; காளை உடலில் ஒரு சொட்டு ரத்தம் காணக்கூடாது. எதன் கை ஓங்குதோ அதுதான் தூக்கும். மனுஷன் இதை விளையாட்டாக நினைத்தாலும் மிருகத்துக்கு அது விளையாட்டன்று. அதுதான் ஜல்லிக்கட்டு.

 

வாடிபுரம் காளை!

வாடிவாசலையும் தொழுவத்தையும் பிரித்து நிற்கும் ஆள் உயர வேலி அடைப்பின்மீது உட்கார்ந்து இருந்த ஒரு பையன் கத்தினான்.

"வாடிபுரம் காளை!"

"கருப்புப் பிசாசு!*

கத்திய அத்தனை குரல்களிலும் ஒரு நடுக்கம். திகில் வெடித்துப் பரவியது. வாடிவாசல் அமர்க்களப்பட்டது. சில வினாடிகளில் வாடிவாசலிலே முண்டியடித்து எக்கி நின்ற கூட்டம் போன இடம் தெரியவில்லை. காரிக்கொம்புக்கு எட்டாதபடி எப்படியெல்லாம் பாதுகாத்துக் கொள்வதென்று தவித்து அவனவன் அங்கும் இங்கும் ஓடிப் பதுங்கப் பார்த்தான். திட்டிவாசலைச் சுற்றிக் குழப்பமின்றி விஸ்தாரமாக இருந்தது. அதிலேயும் இரண்டொருத்தன்தான் துணிந்து நின்று காளை உள்ளே அவிழ்க்கப்படுவதைப் பார்த்தான்.


தொழுவத்தில் அதன் அலங்காரங்கள் கலைக்கப்பட்டு உள்வாடிக்குக் கொணரப்பட்ட காளை ஒரு தடவை முக்காரமிட்டுவிட்டு ஒரு சிறுவன் பிடிகயிற்றுக்கு அடங்கிப் பரம சாதுவாக அடைப்புக்குள் ஆடி அசைந்து வந்தது.

"மருதா" என்று உஷார்படுத்திக் கொண்டு பிச்சி லங்கோட்டை ஒருதரம் இறுக்கிவிட்டு, வயிற்றை எக்கிக் கொடுத்து ஒரு முழு மூச்சு இழுத்தான். குனிந்து இரு கைகளையும் தரையில் தேய்த்து, பிடி வழுக்காமல் இருக்கச் சுரசுரப்பாக்கிக் கொண்டான்.

"கிழக்கத்தியான் காரியைப் பிடிக்கப் போறான்"

"பய செத்தான்"

"செல்லாயி வாடியிலே அவனுக்கு முடிவு போட்டிருக்கு"

குருத்துப் பையன், அநியாயமா...!"

பட்டு உருமாவுக்கு ஆசைப்பட்டு உசிரை இந்தான்னு கொடுக்கிறானே பாவி!"

ரெண்டு பவுனுத் தங்கம் கண்ணுல உறுத்துமுல்லே!"

ஆளுக்கொரு அபிப்ராயமாகக் கூட்டம் பரிமாறிக் கொண்டது.

மேடை ஆசனத்திலிருந்து முன்சாய்ந்து குறுக்குக் கம்பியின்மீது கை வைத்து ஆர்வத்துடன் பார்க்கும்போது அவர் பக்கமாகத் திரும்பிய பிச்சியின் பார்வையை ஜமீன்தார் சந்தித்து விட்டார்.

"ஹூம், பிடி!" என்று சொல்வதுபோலத் தன்னை அறியாமலேயே தலையை ஆட்டி விட்டார்.

'பார்த்தியா, காளை வரவும் கிழக்கத்தியான் பம்மிட்டான்."

"அவ்வளவுதான் பய!"

"சும்மா ஆர்ப்பாட்டக்காரனுங்க!"

தன்னைச் சுற்றி எழுந்த இந்தக் கேலி வார்த்தைகளைக் கேட்ட ஜமீன்தார், "உளறாமே பாத்துக்கிட்டிருங்க," என்று சுருக்கெனச் சொல்லி அடக்கினார். "அவன் ஒரு பிறவி! எந்த மாட்டு மேலே எப்படி விழணும்னு அவனுக்குச் சுபாவத்திலேயே ஊறிக் கிடக்கும்!" கண்டன வாய்கள் மூடிக் கொண்டன.

கலித்தொகையில் ஏறுதழுவல்

கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே, ஆய மகள்

அஞ்சார் கொலை ஏறு கொள்பவர் அல்லதை, நெஞ்சிலார் தோய்தற்கு அரிய - உயிர்துறந்து நைவாரா ஆய மகள் தோள்.

- கலி. 103: 63-67

திட்டி வாசலில் காரி ராஜாங்கமாக நின்றது. அதன் புடைத்த பளீரிடும் கருந்திமில் நெஞ்சுயர மரக்கட்டை அடைப்புக்கு மேலாக எடுப்பாகத் துருத்திக்கொண்டு வாடிவாசலில் வந்து நின்றது.

"ராஜாளி மாதிரி வந்து நிக்குது பாரு

"நின்னுகுத்தில் கானைன்னா இதுதான்!"

"இதையா கிழக்கத்தியான் பிடிக்கப் போறான்"

நின்ற காரி, வாடிவாசவில் தன் மீது கை போடும்படி சவால் விட்டமாதிரி இருந்தது. அதன் மூச்சு தரையில் பட்ட இடங்களில் மண் சிதறிப் பறந்தது. ஒருதரம் சறுக்கடித்தது. மறுபடியும் தரையை முகர்ந்து கொண்டிருந்தது.

'அப்பன் ஆசைக்கு மட்டுமன்றி உசிருக்கே உலை வைத்த காரி, அதன் கொம்பில் இன்னும் அப்பன் ரத்தம் வழிந்துகொண்டிருப்பது' போன்ற பிரமை ஏற்பட, பிச்சிக்கு நேரெதிரில் வந்து நின்றபோது அந்தக் கிழக்கத்திய வாலிபனான பிச்சி, அதன் கொம்புக்கு நேராகவும் மருதன் அதன் வால் பக்கமாகவும் அசையாமல் நின்றார்கள். பிச்சியின் முகத்தையே சமிக்ஞைக்கு எதிர்பார்த்துக் கொண்டிருந்தான் மருதன். காளைக்கு மேலாகப் பார்த்துப் பிச்சி மருதனுக்குச் சமிக்ஞை செய்ததுதான் தாமதம்...

"டுர்ரீ!"

மருதன் குரல் வாடிவாசல் முணுமுணுப்பைக் கிழித்துக்கொண்டு எழுந்தது. கூவிக்கொண்டே முன் வந்த காளையின் வாலை ஜாடையாகத் தொட்டுவிட்டு வட்ட விளிம்போரமாகப் பின்னரித்தான். மருதன் கைபடவும் காளை அவன் மீது பாய, சடக்கெனத் திரும்பியது. அது பிச்சியை விட்டுவிட்டு ஒரு சிறு கோண அளவுக்குத் திரும்பி இருக்கும்.

சில்வண்டு மாதிரி அட்டத்திவிருந்து பாய்ந்து அதன் திமிலில் இடது கையைப் போட்டு நெஞ்சோடு நெருக்கி அணைத்துக் கழுத்தோடு தன் உடலை ஒட்டிக்கொண்டு அதன் வலக்கொம்பில் கை போட்டான் பிச்சி.

எதிர்பாராத இந்தப் பாய்ச்சல் காளைக்கு எடுத்த எடுப்பில் பிந்திவிட்ட பாதகமாகப் போய்விட்டது. ஆனாலும் அதனுடைய சுபாவமான மிருக குணம் மறுகணத்தில் சமாளிப்பைக் கொடுத்தது. முழு வேகத்துடன் கொம்பை அலைத்துப் பிச்சியைப் பின்னால் குத்தப் பார்த்தது. கானையின் தலை, கீழ்நோக்கி அழுத்தப்படவே காளை உத்தியை மாற்றி ஒரு எகிறு எகிறி நான்கு கால்களையும் உயரே தூக்கித் தவ்வியது. பிச்சியும் அதோடு உயரே போனான்.

"அட! விராலு மாதிரித் துள்ளுதுடா!"

'குதிரை கணக்கா எறியப் பாக்குது!"

"செத்தாண்டா பய ஊட்டி திருகி விழுந்து

"தூக்கிப் போட்டுப் பட்டையுரிச்சிடப் போகுது!"

மருதன் கத்தினான். 'பிடியை உட்டிராதே பிச்சி"

ஆள் உயரத்துக்கு மேல் எழும்பிய காளை அந்தரத்தில் முதுகு குவிந்து தலை உள்ளடக்கிக் கால்களைத் தரையில் அடித்துக்கொண்டு கீழே இறங்கியது. பிச்சியும் பிடி விடாமல் கூடவே இறங்கி, கால்களைத் தரையில் பதித்து நிலைக்கத் துழாவினான். ஆனால், அவன் நிலைக்கு முன்பே மறுபடியும் காளை எம்பித் தவ்வி விட்டது.


பிடியை விட்டிராதோ விட்டிராதே" கூட்டத்திலிருந்து பதறின ஆர்ப்பரித்த கத்தல்கள்.

"ஒரு தவ்வுக்கு நின்னுட்டாண்டா"

"இரண்டாவது தவ்வுல உருட்டிரும்!"

'கிழக்கத்தியான் கை அந்தா சளைக்குதுடா!"

"! இரண்டு தவ்வுக்கு நின்னுட்டான்!"

"வாடிபுரம் கானை பிடிபட்டுப் போச்சு"

'பிச்சி, பிச்சி! விட்டுராதே, இந்த ஒரு தவ்வுதான்!"

காளையும் சளைக்குதுடோய்! மூன்றாவது எம்புல உரமில்லே!"

ஒரு தவ்வு, இரண்டு தவ்வு, மூன்றாவது தவ்வுக்கும் அவன் நின்றுவிட்டான். மூன்று தடவையும் காளை அவனை உருட்டி எறிந்து கிழித்திருக்க வேண்டும்.

இந்த நாடகத்தின் கடைசி அங்கம் இருக்கிறது என்பது தெரிந்தும் அடக்க முடியாத களிவெறி கொண்ட கூட்டம் எம்பி எம்பிக் குதித்துக் கத்தியது. 'வாடிபுரம் காளை வாயப் பிளந்துடுச்சுடா!"

கிழக்கத்தியான் வெண்டெடுத்துட்டான்!

பிச்சி, காளையின் நெற்றித்திட்டில் கை போட்டு கொம்புக்குக் கொம்பு மாறி மாறிச் சுற்றிக் கட்டியிருந்த உருமாப் பட்டைக்கு அடியில் கை கொடுத்து ஒரு இமு இழுத்தான். மெடல், அலங்காரச் சிறு தங்க நகைகள் கோர்த்திருந்த சங்கிலியுடன் பட்டுத்துணி அவன் கைக்குக் கொத்தோடு வந்துவிட்டது. அப்படியே வாயில் கவ்விக் கொண்டான். தரையில் பதித்த கால்களை அழுத்தித் திமிலைச் சேர்த்து, காளையை ஒரு தம் கொடுத்து எதிர்ப்பக்கமாகத் தள்ளிவிட்டு எகிறிப் பின்னால் பாய்ந்தான்.

தெரிந்து தெளிவோம்

அளவில் சிறுகதையைவிட நீளமாகவும் புதினத்தைவிடச் சிறியதாகவும் இருக்கும் கதை குறும்புதினம். இதனைக் குறுநாவல் என்றும் சொல்வர். சிறுகதைக்கும் புதினத்துக்கும் இடைப்பட்ட வடிவம் என்று கொள்ளலாம்.

ஆர்ப்பரித்த வாடிபுரம் கூட்டத்துக்குள் நெக்கி வரமுடியாமல் திணறி, பிச்சியைப் பார்க்கத் தவித்துக்கொண்டிருந்த கிழவன், இந்தா மவனே என்று உணர்ச்சிப்பெருக்கால் பிச்சியைப் பார்த்து, 'உசிலனூர் அம்பிலியின் பேரைக் காப்பாத்திட்டேடா. நீ மனுசனுக்குப் பொறக்கல்லேடா. புலிக்குப் பொறந்த பயர் வேறெத்தைச் சொல்றது!" என்று உருமாப்பட்டையை நீட்ட, பிச்சியின் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

(வாடிவாசல் குறும் புதினத்தின் சுருக்கப்பட்ட வடிவம்.)

 

நூல்வெளி

சி.சு. செல்லப்பா சிறுகதை, புதினம், விமர்சனம், கவிதை, மொழிபெயர்ப்பு முதலாக இலக்கியத்தின் பல்வேறு தளங்களில் பங்களிப்புச் செய்திருக்கிறார்.

சந்திரோதயம், தினமணி ஆகிய இதழ்களில் உதவி ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்; "எழுத்து" இதழினைத் தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்.

அவருடைய குறிப்பிடத்தக்க படைப்புகள்: வாடிவாசல், சுதந்திர தாகம், ஜீவனாம்சம், பி.எஸ். ராமையாவின் சிறுகதைப்பாணி, தமிழ்ச் சிறுகதை பிறக்கிறது.

இவருடைய 'சுதந்திர தாகம்' புதினத்திற்கு 2001 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது கிடைத்தது.

Tags : by c.su. chellappa | Chapter 3 | 11th Tamil சி.சு.செல்லப்பா | இயல் 3 | 11 ஆம் வகுப்பு தமிழ்.
11th Tamil : Chapter 3 : Pedu pera nil : Supplementary: Vaadi vaasal by c.su. chellappa | Chapter 3 | 11th Tamil in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : பீடு பெற நில் : துணைப்பாடம்: வாடிவாசல் - சி.சு.செல்லப்பா | இயல் 3 | 11 ஆம் வகுப்பு தமிழ் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : பீடு பெற நில்