ஆர்.பாலகிருஷ்ணன்,இ.ஆ.ப | இயல் 3 | 11 ஆம் வகுப்பு தமிழ் - உரைநடை: மலை இடப்பெயர்கள்: ஓர் ஆய்வு | 11th Tamil : Chapter 3 : Pedu pera nil
இயல் 3
உரைநடை உலகம்
மலை இடப்பெயர்கள்: ஓர் ஆய்வு
- ஆர். பாலகிருஷ்ணன் இ. ஆ ப.
நுழையும்முன்
மலை, மனித சமூகத்தின் ஆதி நிலமாகும். தமிழ் அகத்திணையியல், மலையும் மலை சார்ந்த பகுதியையும் குறிஞ்சி என்று குறிக்கும். குறிஞ்சி நிலம் சார்ந்த சங்கப் பாடல்கள் மலையோடு இயைந்த தமிழர்தம் சீரிய வாழ்வினைப் பேசின. மலை, குன்றுகளின் பெயர்கள் குறித்த ஆய்வை OROLOGY என்ற கலைச்சொல்லால் அழைப்பர். தமிழர் வாழ்வில் மலைகள் பெறும் சிறப்புக் குறிப்பிடத்தக்கது.
திராவிடர்கள் அடிப்படையில் மலைவாழ் மக்கள். திராவிடர்களை,
'மலைநில மனிதர்கள்' என்று அழைக்கிறார் கமில் சுவலபில் (Kamil Zvelebil). "சேயோன் மேய மைவரை உலகம்"
என்று உரைக்கிறது தொல்காப்பியம்.
"விண்பொரு நெடுவரை குறிஞ்சிக்கிழவி" என்கிறது திருமுருகாற்றுப்படை. மேற்குறிப்பிட்டுள்ள பாடல் அடிகள் தமிழரின் கடவுளையும் மலையையும் தொடர்புபடுத்தும் பண்டைய பதிவுகளாக விளங்குகின்றன.
பழந்தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் கடையெழு வள்ளல்கள் எழுவருமே மலைப்பகுதிகளின் தலைவர்களாகவே விணங்கியுள்ளனர். பெருநிலப் பகுதிகளை ஆண்ட முடிமன்னர்களுக்குக்கூட வழங்காத பெருமையைப் பழந்தமிழ் இலக்கியங்கள் இக்குறுநிலத் தலைவர்களுக்கு அளிப்பதைப் பரக்கக் காணலாம்.
திராவிடர்களின் மலைப்பெருமிதம்
இந்தியாவில் தற்போது வாழும் பல்வேறு திராவிடப் பழங்குடிகளின் இனக்குழுப் பெயர்கள் அப்பழங்குடியினரின் மலை சார்ந்த மானுடப் புவிச்சூழலை வெளிப்படுத்துகின்றன. கீழ்க்காணும் இனக்குழுப்பெயர்கள் "மலை" என்ற சொல்வை அடிப்படையாகக்கொண்டு உருவாகியுள்ளன.
மால் பஹாடியா - ஜார்கண்ட்
மல அரயன் - மேற்குத்தொடர்ச்சி மலைகள் கேரளம்
மல குறவன் - நெடுமங்காடு - கேரளம்
மல மூத்தன் - எர்நாட் – கேரளம்
மல பணிக்கர் - வட கேரளம்
மலயன் - பாலக்காடு - கேரளம்
மல வேடா - இடுக்கி - கேரளம்
மலேரு - தட்சிண கன்னடா – கர்நாடகம்
இதைப் போலவே,
கோட்டா - நீலகிரி, தமிழ்நாடு
கொண்டா தோரா - ஆந்திரப்பிரதேசம்
கோண்டு, கொய்ட்டெர் - ஒடிஸா
ஆகிய திராவிடப் பழங்குடி இனக்குழுப் பெயர்களும் 'மலை', 'குன்று' என்ற பொருள் தரும் சொற்களையே அடிப்படையாகக்கொண்டு ஆக்கம் பெற்றுள்ளன.
மலைக்குடியிருப்புகள்
திராவிட மலைவாழ் மக்களின் குடியிருப்புகள், அப்பழங்குடியினர்தம் மலை சார்ந்த வாழ்வியலின் சமூக, சமயக்கூறுபாடுகள் குறித்த புரிதலைத் தருகின்றன.
பழங்குடியினர் ஓடும் நீரையே தங்கள் குடிநீராகப் பயன்படுத்தும் இயல்புடையவர்கள். எனவே, அவர்கள் தங்கள் குடியிருப்புப் பகுதியைவிட உயரமான இடத்திலோடும் சிற்றாறுகள், ஓடைகளில் இருந்து நீரெடுத்துப் பருகுகிறார்கள்.
நீலகிரியில் உள்ள தோடர் இனத்தவர் பால் எருமைக் கொட்டில்களைப் புனித இடமாகக் கருதுபவர்கள். எனவே அவற்றைச் சுற்றி உயர்ந்த மதிற்சுவர்களை அமைத்திருக்கின்றனர். அவர்களின் வீடுகளில் திண்டுகள் (மேடைகள்) முக்கிய இடம் பெறுகின்றன.
குறும்பர் மொழியில் தாழ்வாரத்தைக் குறிக்கும் 'மெட்டு' என்றசொல் அதன் உயரமான, மேடான அமைப்பை விளக்குகின்றது. ஆந்திராவிலும் ஒடிஸாவிலும் உள்ள 'ஜதாப்பு' எனப்படும் திராவிடப் பழங்குடியினரின் குடியிருப்புகள் பெரும்பாலும் மலை உச்சிகளில் அமைந்துள்ளன. பழங்குடித் தலைவரின் வீடு, மற்ற வீடுகளை விட உயரமான இடத்தில் அமைந்துள்ளது. உயரமான மேடை, திண்ணை, சுற்றுச்சுவர்கள், மேலோடை நீர் ஆகியனை திராவிடப் பழங்குடியினரின் வாழ்விட வடிவமைப்பிலும் வாழ்வியலிலும் உயரமான இடங்கள் செலுத்தும் தாக்கத்தைக் காட்டுகின்றன.
வடமேற்குப் பகுதிகளில் திராவிட மலைப்பெயர்கள்
திராவிடச் சொல்லான 'மலை என்பது சமஸ்கிருத மொழியில் 'மலய’ என்று வழங்கப்படுகிறது. பாண்டிய மன்னன் ஒருவன் 'மலயத்துவஜ' என்று அழைக்கப்பட்டான் என்பதும் "மலய" என்ற சொல்லின் திராவிடத் தொடர்புக்கு அரண் சேர்க்கிறது. மேலும். வடமொழியில் 'மலய' என்ற சொல் மலயாருக்கு மேற்கே உள்ள மலைகளையே குறிக்கிறது.
தமிழில் குறிஞ்சி நிலம் தொடர்பான சொற்களில் 'மலை' என்பது 'உயரமானது' என்றும் 'குன்று' என்பது 'உயரம் குறைவானது"
என்றும் பொருள்படுவனவாகும். மலை, குன்று என்னும் இரண்டு சொல்லாட்சிகளும் வெளிக்கொணரும் உயர வேறுபாட்டை வடமேற்குப் பகுதிகளில் பயன்படுத்தப்பட்டிருக்கும் மலை சார்ந்த இடப்பெயர்கள் உறுதிசெய்வது வியப்பளிக்கின்றது.
இதைப்போலவே தமிழ் மொழியில் 'வரை' என்ற சொல் கோடு, மலை, சிகரம், விளிம்பு, கரை, எல்லை, நுனி போன்ற பொருள்களில் பயன்படுத்தப்படுகின்றது. நுனி முதல் அடி வரை மற்றும் அடி முதல் நுனி வரை என்ற தொடர்களில் 'வரை' என்ற சொல் விளிம்பு என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
திராவிட நிலப்பகுதிகளின் மலை தொடர்பான சொற்கள், சிந்துவெளிப் பண்பாட்டு நிலப்பகுதிகளில் தற்செயலாக வழங்கப்படவில்லை. அவை, காரணம் கருதியே வழங்கப்பட்டன. சிந்துவெளி மற்றும் திராவிட மலைவாழ் மக்கள் அன்றாடம் புழங்கும் சொற்களில் காணப்படும் இத்தொடர்ச்சி சிந்திக்கத்தக்கது. இந்தியாவின் வடக்கு, மேற்கு, கிழக்கு மாநில இடப்பெயர்களில் திராவிட இடச்சொற்களின் நேரடித் தொடர்பு இன்றுவரை நீடிப்பதை, கீழுள்ள அட்டவணை உறுதிப்படுத்தும்.
தென்னிந்தியாவில் 'மலை' என்ற இடப்பெயரின் சிறப்பிடம்
தமிழ்நாட்டில் மட்டும் 'மலை' என்ற சொல் 17 இடப்பெயர்களில் முன்னொட்டாகவும் 84 இடப்பெயர்களில் பின்னொட்டாகவும் இடம்பெறுகின்றது. ஆந்திர மாநிலத்தில் "மல்' என்ற வேர்ச்சொல் ஐகார ஈறு பெற்று மலை என வழங்கப்படுவதற்கு மாறாக ஆகார ஈறு பெற்று 'மலா’ என்று வழங்கப்படுகிறது.
கர்நாடகத்தில் மலை என்ற வடிவம் 'தோணிமலை' என்னும் இடப்பெயரில் ஒரே ஒரு முறை பயன்படுத்தப்படுகிறது.மலையைக் குறிக்கும் மற்றொரு சொல்லான 'மலே’ 15 இடப்பெயர்களில் இடம்பெறுகிறது.
கேரள மாநிலத்தில் பத்து 'மலை' விகுதி இடப்பெயர்கள் உள்ளன. மேற்சொன்ன மலை, மலா,மலே எனப்படும் சொற்கள், தென்னிந்தியாவின் எந்த ஒரு மாநிலத்திலும் முன்னொட்டாகவோ பின்னொட்டாகவோ வருகின்றனவே அன்றி, தனிச்சொல்லாக வழங்கப்படவில்லை.
தமிழ் மொழியில் 'கோட்டை' என்ற சொல், காவல் மிகுந்த காப்பரண் கொண்ட மதில் சுவர்களால் சூழப்பட்ட கட்டமைப்பைக் குறிக்கிறது. திராவிட வேர்ச்சொல் அகராதி. கோட்டை என்ற சொல்லோடு தொடர்புடைய பல்வேறு திராவிட மொழிச் சொற்களைக் கீழ்வருமாறு பட்டியலிடுகிறது.
இவ்வாறு. எழுத்து வழக்குக் கொண்ட திராவிட மொழிகளில் மட்டுமல்லாமல் திராவிடப் பழங்குடி மொழிகளிலும்கூட கோட்டை என்ற சொல்லாக்கத்தின் வேர்களை இனங்காண முடிகிறது. இந்தியாவில் 'கோட்டை' என்று முடியும் 248 இடப்பெயர்களும் தமிழ்நாட்டில்தான் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சொல் செயற்கையான காப்பரண்களான கோட்டைகளைக் கட்டியெழுப்பிய நகர நாகரிகத்தின் பின்னணியில் தோன்றியது என்பதைவிட அதற்கும் தொன்மையான மலை சார்ந்த வாழ்வியல் சூழலில் உருப்பெற்றிருக்கும் என்பதுதான் உண்மையாகத் தோன்றுகிறது. ஏனெனில் 'கோடு' என்ற தமிழ்ச்சொல்லுக்கு மலையுச்சி, சிகரம், மலை என்ற பொருளோடு வல்லரண், கோட்டை என்ற பொருள்களும் உண்டு. மலையரண், காட்டரண் போன்ற இயற்கை அரண்கள், மதில் சுவர்களால் அமைந்த செயற்கையான கோட்டைகளை விடவும் தொன்மையானவை. இதைப் போலவே 'கோடை' என்னும் தமிழ்ச்சொல் 'மலை' என்னும் பொருளில் வழங்குவதையும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.
கொற்கை,
வஞ்சி,
தொண்டி,
வளாகம் (KVT
COMPLEX)
கொற்கை,
வஞ்சி,
தொண்டி என்னும் ஊர்ப் பெயர்கள் பழந்தமிழர்களின் அரசியல்,
பொருளியல்,
பண்பாட்டு உருவாக்கத்தின் விளைவாக உருவானவை.
சங்க இலக்கியம் காட்டும் பழந்தமிழ்ச் சமூகத்திற்குக் கொற்கை,
வஞ்சி,
தொண்டி ஆகிய பெயர்கள் ஆணிவேர் அடையாளங்கள் ஆகும்.
இப்பெயர்களில் ஒன்றைக்கூட வடமொழி இலக்கியங்கள் பதிவு செய்யவில்லை.
சங்ககாலத் தமிழ் மன்னர்களின்,
குறுநிலத் தலைவர்களின் தலைநகரங்கள்,
துறைமுகங்கள் போர்க்களங்கள் ஆகியவற்றின் பெயர்களோடு வடமேற்குப் பகுதிகளில் உள்ள ஊர்ப்பெயர்கள் பொருந்திப் போகின்றன.
கொற்கை,
வஞ்சி,
தொண்டி வளாகம்
(KVT
COMPLEX) காட்டும் பொதுத்தன்மைகள் மிக முக்கியமானவை.
இவை கடந்த கால வரலாற்றிற்கான அடையாளச் சின்னங்கள்.
திராவிடர்களின் மலைப் பெருமிதத்தின் நீட்சியாக விளங்கும் இடப்பெயர்கள் வடமேற்கு நாடுகளான பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானின் நெடுமலைகளின் பெயர்களோடு பொருந்திப் போகும். சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. இச்சான்றுகள், அப்பகுதிகளில் திராவிடர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்களை உறுதி செய்வதோடு மலை இடப்பெயர் ஆய்வுகளின் இன்றைய வளர்ச்சிப்போக்கினை வெளிப்படுத்துவனவாகவும் அமைந்துள்ளன.
நூல்வெளி
இந்தியவியல் மற்றும் திராவிடவியல் ஆய்வாளரான ஆர். பாலகிருஷ்ணன் இ.ஆ.ப, 28 ஆண்டுகளாக, இடப்பெயராய்வில் ஈடுபட்டு வருகிறார். வடமேற்கு இந்தியாவில் இன்றுவரை வழக்கிலுள்ள 'கொற்கை, வஞ்சி, தொண்டி வளாகத்தை ஆய்வுலகின் கவனத்திற்குக் கொண்டுவந்தவர். தினமணி நாளிதழில் துணையாசிரியராகவும் கணையாழி இலக்கிய இதழின் ஆலோசகர் குழுவிலும் தீவிரப் பங்காற்றியிருக்கிறார். அன்புள்ள அம்மா, சிறகுக்குள் வானம் உள்ளிட்டவை இவர்தம் நூல்கள் 1984ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப்பணித் தேர்வை, முதன்முதலாக, முழுவதுமாகத் தமிழிலேயே எழுதி, முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றவர். தற்போது ஒடிசா மாநிலத்தில் கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் அம்மாநிலத்தின் வளர்ச்சி ஆணையராகப் பொறுப்பில் இருக்கிறார். பாடப்பகுதி 'சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்' என்னும் இவரது நூலிலிருந்து எடுக்கப்பட்டது.