Home | 11 ஆம் வகுப்பு | 11வது தமிழ் | வாழ்வியல்: திருக்குறள்

இயல் 3 | 11 ஆம் வகுப்பு தமிழ் - வாழ்வியல்: திருக்குறள் | 11th Tamil : Chapter 3 : Pedu pera nil

   Posted On :  05.08.2023 08:59 am

11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : பீடு பெற நில்

வாழ்வியல்: திருக்குறள்

11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : பீடு பெற நில் : வாழ்வியல்: திருக்குறள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் 3

வாழ்வியல்

திருக்குறள்


 

அடக்கமுடைமை

1) நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்

மலையினும் மாணப் பெரிது.*

நேர்வழி மாறாது அடக்கமாய் இருப்பவனின் உயர்வு, மலையின் மாண்பைக் காட்டிலும் பெரியது.

2) யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.*

ஒருவர் எதைக் காக்காவிட்டாலும் நாவைக் காக்கவேண்டும். அவ்வாறு காக்காவிட்டால் சொல்குற்றத்தில் சிக்கித் துன்பப்படுவர்.

3) தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினால் சுட்ட வடு.*

தீயினால் சுட்ட புண்ணால் உடலில் வடு உண்டானாலும் உள்ளே ஆறிவிடும்; நாவினால் சுட்ட புண்ணால் உடலின் புறத்தே வடு உண்டாகாவிட்டாலும் உள்ளே ஆறாது.

அணி : வேற்றுமை அணி

 

ஒப்புரவறிதல்

4) தாளாற்றித் தந்த பொருபெல்லாம் தக்கார்க்கு

வேளாண்மை செய்தல் பொருட்டு. .*

விடாமுயற்சி செய்து ஈட்டிய பொருளெல்லாம் தகுதியானவருக்கு உதவி செய்வதற்கே ஆகும்.

5) ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்

செத்தாருள் வைக்கப் படும்.

உயர்ந்தாரின் உலக நடைமுறையோடு ஒத்துப் போகிறவனே உயிர் வாழ்பவன். மற்றவன் செத்தவர்களுன் ஒருவனாகவே கருதப்படுவான்.

6) மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்

பெருந்தகை யான்கண் படின். .*

பெருந்தகையாளனிடம் உள்ள செல்வம் தன் எல்லா உறுப்புகளையும் மருந்தாகத் தரும் மரத்தைப் போன்றது.

அணி : உவமை அணி

 

புகழ்

7) ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்

பொன்றாது நிற்பதொன்று இல்.

இணையற்ற உயர்ந்த புகழைப்போல உலகத்தில் ஒப்பற்ற ஒன்றாக நிலைத்து நிற்பது வேறொன்றும் இல்லை.

8) தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று.*

தோன்றினால் புகழ் தரும் பண்புகளுடன் தோன்றுக! இல்லையெனில் தோன்றாமல் இருப்பதே நல்லது.

9) வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழியா

வாழ்வாரே வாழா தவர்.*

பழியில்லாமல் வாழ்பவரே வாழ்பவர்: புகழில்லாமல் வாழ்பவர் வாழாதவர்.

 

தவம்

10) வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம்

ஈண்டு முயலப் படும்.

விரும்பியதை விரும்பியவாறே பெற முடியும் என்பதால் செய்ய முடிந்த தவத்தை இங்கேயே முயன்று பார்க்கலாம்.

11) சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்

சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.

புடமிடச் சுடுகையில் ஒளிவிடும் பொன்போலத் தவமிருப்பவரைத் துன்பம் வருத்த வருத்த ஞானம் வளரும்.

அணி : உவமை அணி

 

நிலையாமை

12) நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை

மேற்சென்று செய்யப் படும்.

நாக்கு அடைத்து, விக்கல் வந்து, உயிர்க்கு இறுதி வரும்முன், நல்ல செயல்களை விரைந்து செய்ய வேண்டும்.

13) நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்

பெருமை உடைத்துஇவ் வுலகு.*

நேற்று இருந்தவன் இன்று இல்லை என்னும் நிலையாமைப் பெருமை உடையது இவ்வுலகம்.

14) ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப

கோடியும் அல்ல பல.

ஒரு பொழுதுகூட வாழ்வின் நிலையாத் தன்மையைச் சிந்திக்காதவர்கள் எண்ணும் எண்ணங்கள் கோடி அல்ல; இன்னும் மிகுதி.

 

துறவு

15) யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்

அதனின் அதனின் இலன்.*

ஒருவன், எந்தெந்தப் பொருள்களிடமிருந்து பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ அந்தந்தப் பொருள்களால் வரும் துன்பத்தை அவன் அடைவதில்லை.

16) பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு.*

பற்றுகளை அகற்றுவதற்காகவே பற்றில்லாதவனைப் பற்றி நிற்க வேண்டும்.

அணி: சொல் பின்வரும் நிலையணி

 

அவா அறுத்தல்

17) இன்பம் இடையறாது ஈண்டும் அவாவென்னும்

துன்பத்துள் துன்பம் கெடின்.

பேராசை என்னும் பெருந்துன்பம் தொலைந்துபோனால் இன்பத்தை இடைவிடாமல் பெறலாம்.

18) ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே

பேரா இயற்கை தரும்.

ஒருபோதும் நிறைவுசெய்ய முடியாத இயல்புடைய ஆசையை விட்டொழித்தால், நிலையான இன்பம் இயல்பாய் வரும்.

 

வலியறிதல்

19) வினைவலியும் தன்வலியும் மாற்றாண் வலியும்

துணைவலியும் தூக்கிச் செயல்.*

செயலின் வலிமையையும் தன் வலிமையையும் பகைவனின் வலிமையையும் துணையாளர் வலிமையையும் சீர்தூக்கிச் செயல்படுக.

20) அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை

வியந்தான் விரைத்து கெடும். *

மற்றவருடன் ஒத்துப் போகாதவன், தன் வலிமை அறியாதவன், தன்னைப் பெரிதாக நினைப்பவன் விரைவாகக் கெடுவான்.

21) பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்

சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகுதான் என்றாலும் அளவுக்கு மிகுதியாக ஏற்றினாஸ், ஏற்றிய வண்டியின் அச்சும் முறியும். (எனவே வலிமைக்கேற்பச் செயல்படுக)

அணி : பிறிது மொழிதல் அணி

22) அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல

இல்லாகித் தோன்றாக் கெடும். *

தன் வருமானத்தின் அளவை அறிந்து வாழாதவனின் வாழ்க்கை, உள்ளதுபோலத் தோன்றிக் கெடும்.

 

காலமறிதல்

23) அருவினை யென்ப உளவோ கருவியான்

காலம் அறிந்து செயின்.

உரிய கருவிகளுடன் தக்க காலம் அறிந்து செய்தால் அரிய செயல் என்று ஒன்று இல்லை.

24) ஞாலம் கருதினும் கைகூடும் காலம்

கருதி இடத்தால் செயின். *

உரிய காலத்தில், பொருத்தமான இடத்தில், ஒரு செயலைச் செய்தால் உலகத்தையே பெறக் கருதினாலும் கிடைத்துவிடும்.

25) காலம் கருதி இருப்பர் கலங்காது

ஞாலம் கருது பவர்.

உலகத்தை வெல்லக் கருதுபவர், கலங்காமல் உரிய காலத்துக்குக் காத்திருப்பர்.

26) எய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையே

செய்தற்கு அரிய செயல்.

கிடைப்பதற்கு அரிய காலம் வாய்த்தால், அப்போதே முடிப்பதற்கு அரிய செயலைச் செய்து முடித்து விடுக.


 

நூல்வெளி

திருக்குறள், உலகப் பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியமாகும். இஃது உலக மக்கள் அனைவருக்கும், எந்தக் காலத்திற்கும் எவ்வகையிலும் பொருந்தும் வகையில் அமைந்தமையால் அவ்வாறு போற்றப்படுகிறது. இது பதிணெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகக் குறிப்பிடப்படும் வாழ்வியல் நூல்; 1330 குறள்பாக்களால் ஆனது.

உலகப்பொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, முப்பால், உத்தர வேதம், தெய்வநூல் எனப் பல பெயர்களாலும் திருக்குறள் அழைக்கப்படுகிறது. இப்பாடல்கள் அனைத்தும் குறள் வெண்பா என்னும் பா வகையால் ஆனவை. பாவின் வகையைத் தன் பெயராகக்கொண்டு உயர்வு விகுதியாகத் 'திரு என்னும் அடைமொழியுடன் திருக்குறள் என்று அழைக்கப்படுகிறது. ஏழு சீர்களில் வாழ்வியல் நெறிகளைப் பேசும் இந்நூல் உலக மொழிகள் பலவற்றிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

திருக்குறளுக்குப் பத்துப் பேருடைய உரை இருப்பதாகப் பழம்பாடல் ஒன்று கூறுகிறது. அவர்கள் பரிமேலழகர், மணக்குடவர், காலிங்கர், பரிதி, பரிப்பெருமாள், தருமர், தாமத்தர், நச்சர், திருமலையர். மல்லர் ஆகியோர். நாளது வரையிலும் பலர் உரை எழுதும் சிறப்புப் பெற்றது இந்நூல் திருக்குறளின் சிறப்பினை விளக்கப் புலவர் பலர் பாடிய பாடல்களின் தொகுப்பு நூலே திருவள்ளுவ மாலை.

தேவர், நாயனார், தெய்வப்புலவர், செந்நாப்போதர், பெருநாவலர், பொய்யில் புலவர் பொய்யாமொழிப் புலவர், மாதானுபங்கி, முதற்பாவலர் என்ற சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படும் திருவள்ளுவரைப் பற்றிய அறுதியான தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை.

Tags : Chapter 3 | 11th Tamil இயல் 3 | 11 ஆம் வகுப்பு தமிழ்.
11th Tamil : Chapter 3 : Pedu pera nil : Valviyal: Thirukkural Chapter 3 | 11th Tamil in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : பீடு பெற நில் : வாழ்வியல்: திருக்குறள் - இயல் 3 | 11 ஆம் வகுப்பு தமிழ் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : பீடு பெற நில்