இயல் 8 : 11 ஆம் வகுப்பு தமிழ் - செய்யுள் கவிதைப்பேழை: ஒவ்வொரு புல்லையும் | 11th Tamil : Chapter 8 : Yaaraiyum mathithu vall
இயல் 8
கவிதைப்பேழை
ஒவ்வொரு புல்லையும்
நுழையும்முன்
'காக்கை குருவி எங்கள் ஜாதி' என்னும் மகாகவி கூற்றின் நீட்சியே, கூவும் குயிலும் கரையும் காகமும் விரியும் எனது கிளைகளில் அடையும்' என்னும் இன்குலாபின் தரலாகவும் ஒலிக்கிறது. தம் எழுத்துகள் எளிய மக்களுக்கானவை என்னும் உறுதியுடன் எண்ணம், சொல், செயல் என்ற மூவகையிலும் நின்று வாழ்ந்தவர். அவர் பெயர் சொல்லி அழைக்க ஆசைப்பட்ட ஒவ்வொரு புல்லும் இந்த உண்மையை நமக்குச் சொல்லிக்கொண்டே இருக்கும்.
ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்
பறவைகளோடு எல்லை கடப்பேன்
பெயர் தெரியாத கல்லையும் மண்ணையும்
எனக்குத் தெரிந்த சொல்லால் விளிப்பேன்
நீளும் கைகளில் தோழமை தொடரும்
நீளாத கையிலும் நெஞ்சம் படரும்
எனக்கு வேண்டும் உலகம் ஓர் கடலாய்
உலகுக்கு வேண்டும் நானும் ஓர் துளியாய்
கூவும் குயிலும் கரையும் காகமும்
விரியும் எனது கிளைகளில் அடையும்.
போதியின் நிழலும் சிலுவையும் பிறையும்
பொங்கும் சமத்துவப்புனலில் கரையும்!
எந்த மூலையில் விசும்பல் என்றாலும்
என் செவிகளிலே எதிரொலி கேட்கும்.
கூண்டில் மோதும் சிறகுகளோடு
எனது சிறகிலும் குருதியின் கோடு!
சமயம் கடந்து மானுடம் கூடும்
சுவர் இல்லாத சமவெளி தோறும்.
குறிகள் இல்லாத முகங்களில் விழிப்பேன்
மனிதம் என்றொரு பாடலை இசைப்பேன்!
- இன்குலாப்
நூல்வெளி
சாகுல் அமீது என்னும் இயற்பெயருடைய இன்குலாப் கவிதை, சிறுகதை, கட்டுரை, நாடகம், மொழிபெயர்ப்பு என இலக்கியத்தில் விரிவான தளங்களில் இயங்கியவர். அவருடைய கவிதைகள், 'ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லிஅழைப்பேன்' என்ற பெயரில் முழுமையாகத்தொகுக்கப்பட்டுள்ளன. மரணத்துக்குப் பிறகு அவருடைய உடல், அவர் விரும்பியபடி செங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அளிக்கப்பட்டது.