இயல் 8 : 11 ஆம் வகுப்பு தமிழ் - செய்யுள் கவிதைப்பேழை: தொலைந்து போனவர்கள் | 11th Tamil : Chapter 8 : Yaaraiyum mathithu vall
இயல் 8
கவிதைப்பேழை
தொலைந்து போனவர்கள்
நுழையும்முன்
மானுட சமுதாயத்தின் விழிகள் ஒளியிழந்து கிடப்பதைத் தம் கவிதையால் உணர்த்தும் கவிஞர், அவ்விழிகளுக்கு ஒளியூட்ட விழைகிறார். நடக்காததை நடந்ததாகக் கருதிக்கொண்டு மாயையில் வாழும் மக்கள், ஒளியில் உண்மையைத் தேடும் தத்துவம் இக்கவிதை.
விடிந்ததென்பாய் நீ அனுதினமும் - வான்
வெளுப்பது உனது விடியலில்லை
முடிந்ததென்பாய் ஒரு காரியத்தை - இங்கு
முடிதல் என்பது எதற்குமில்லை.
கற்றேன் என்பாய் கற்றாயா?
- வெறும்
காகிதம் தின்பது கல்வியில்லை
பெற்றேன் என்பாய் எதைப்பெற்றாய்? - வெறும்
பிள்ளைகள் பெறுவது பெறுவதல்ல.
குளித்தேன் என்பாய் யுகயுகமாய் - நீ
கொண்ட அழுக்கோ போகவில்லை
அளித்தேன் என்பாய் உண்மையிலே - நீ
அளித்த தெதுவும் உனதல்ல.
உடைஅணிந்தேன் எனச் சொல்லுகிறாய் - வெறும்
உடலுக் கணிவது உடையல்ல
விடையைக் கண்டேன் என்றுரைத்தாய் - ஒரு
வினாவாய் நீயே நிற்கின்றாய்.*
தின்றேன் என்பாய் அணுஅணுவாய் – உனைத்
தின்னும் பசிகளுக் கிரையாவாய்
வென்றேன் என்பர் மனிதரெல்லாம் – பெறும்
வெற்றியிலே தான் தோற்கின்றார்.*
'நான்' என்பாய் அது நீயில்லை - வெறும்
நாடக வசனம் பேசுகிறாய்
ஏன்? என்பாய் இது கேள்வியில்லை – அந்த
ஏன் என்னும் ஒளியில் உனைத் தேடு*.
பா வகை: சிந்து
- அப்துல் ரகுமான்
ஆப்கானிஸ்தானில் 1207இல் பிறந்த மௌலானா ரூமி ஆன்ம ஞானியாக மாறி சூஃபி பிரிவைத் தழுவினார். அவருடைய மஸ்னவி என்ற உலகப்புகழ் பெற்ற பாரசீக ஞான காவியம் குறிப்பிடத்தக்கது. அப்துல் ரகுமான் இது பற்றி எழுதியிருக்கிறார். புல்லாங்குழலை ஆன்மாவாகச் குறியீடு செய்து கவிதை படைத்திருக்கிறார் ரூமி.
என்னை
மூங்கிற்காட்டிலிருந்து
வெட்டி வீழ்த்திப்
பிரித்ததற்காக
நூள் எழுப்பும்
கூக்குரல் கேட்டு
ஆடவர் பெண்டிர் யாவரும்
அழுது புலம்புகின்றனர்.
இதை “தீய குணங்கள் என்ற கறைகள் படியாத தூய உலகம் அது. அப்போது ஆன்மா இறைத்தரிசனம் என்ற பேரின்பத்தை அனுபவித்துக் கொண்டிருந்தது. இத்தகைய நிலையிலிருந்த ஆன்மாவைப் போர், பொறாமை, பூசல், அகந்தை, கள்ளம், கபடம், பேராசை, சினம், காமம் நிறைந்த சடவுலகுக்கு அனுப்பினால் அது அழாமல் என்ன செய்யும்?"
என ரகுமான் விளக்குகிறார்.
இலக்கணக் குறிப்பு
கற்றேன் -
தன்மை ஒருமை வினைமுற்று;
உடை அணிந்தேன் -
இரண்டாம் வேற்றுமைத்தொகை;
உரைத்தாய் -
முன்னிலை ஒருமை வினைமுற்று
பகுபத உறுப்பிலக்கணம்
வென்றேன் -
வெல்(ன்)
+ ற் + ஏன்
வெல் – பகுதி (ல், ன் எனத் திரிந்தது விகாரம்)
ற் -
இறந்தகால இடைநிலை
ஏன் -
தன்மை ஒருமை வினைமுற்று விகுதி
நிற்கின்றாய் -
நில்(ற்)
+ கின்று + ஆய்
நில் -
பகுதி (ல், ற் எனத் திரிந்தது விகாரம்)
கின்று -
நிகழ்கால இடைநிலை
ஆய் -
முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி
பெற்றேன் -
பெறு(பெற்று)
+ ஏன்
பெறு -
பகுதி (பெற்று என ஒற்று இரட்டித்து இறந்தகாலம் காட்டியது)
ஏன் -
தன்மை ஒருமை வினைமுற்று விகுதி
அணிந்தேன் -
அணி+த்(ந்)+த்+ஏன்
அணி -
பகுதி
த் -
சந்தி (த், 'ந்' எனத் திரிந்தது விகாரம்)
த் -
இறந்தகால இடைநிலை
ஏன் -
தன்மை ஒருமை வினைமுற்று விகுதி
நூல்வெளி
அப்துல் ரகுமான் புதுக்கவிதை, வசனகவிதை, மரபுக்கவிதை என்று கவிதைகளின் பல வடிவங்களிலும் எழுதியுள்ளார். வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர். வானம்பாடிக் கவிஞர்களில் ஒருவர். பால்வீதி, நேயர்விருப்பம், பித்தன், ஆலாபனை முதலான பல நூல்களை எழுதியுள்ளார். பாரதிதாசன் விருது, தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் தமிழன்னை விருது, ஆலாபனை என்னும் கவிதைத் தொகுப்பிற்குச் சாகித்திய அகாதெமி விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார். இப்பாடல் 'சுட்டுவிரல்' என்னும் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.