Home | 11 ஆம் வகுப்பு | 11வது தமிழ் | உரைநடை: தாகூரின் கடிதங்கள்

இயல் 8 : 11 ஆம் வகுப்பு தமிழ் - உரைநடை: தாகூரின் கடிதங்கள் | 11th Tamil : Chapter 8 : Yaaraiyum mathithu vall

   Posted On :  09.08.2023 07:37 am

11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : யாரையும் மதித்து வாழ்

உரைநடை: தாகூரின் கடிதங்கள்

11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : யாரையும் மதித்து வாழ் : உரைநடை: தாகூரின் கடிதங்கள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் 8

உரைநடை உலகம்

தாகூரின் கடிதங்கள்


நுழையும்முன்

செய்தியை உரியவருக்குத் தெரிவிப்பதற்காக எழுதி அனுப்பப்படுவது கடிதமாகும். அதுவே, உரிய வடிவுடன் பொருட்செறிவாலும் கற்பனை நயத்தாலும் மொழிவளத்தாலும் கடித இலக்கியமாக உருப்பெறுகின்றது. உரைநடையில் மட்டுமன்றிக் காப்பியங்களிலும் சிற்றிலக்கியங்களிலும்கூடக் கடித இலக்கியம் காணப்படுவது அதன் காலத்தொன்மையை விளக்கும். கவித்துவ இயல்பு கொண்ட தாகூரின் கடிதங்கள் கற்பனை, நகைச்சுவை, ஆழ்ந்த சிந்தனை ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளன.

 

சிதறிய கடிதங்கள்

சிலாயிதக்

9 ஆகஸ்ட் 1894

ஆறு ஒரேயடியாகக் கரை தளும்ப நிரம்பி இருக்கிறது. எதிர்க் கரையே தென்படவில்லை. ஓரோரிடத்தில் சுழல்களாகப் பொங்குகிறது. மீண்டும் ஓரோரிடத்தில் துள்ளி எழும் வெள்ளத்தைத் தன் இருகரங்களாலும் அடக்கி. அமுக்கிச் சமமாகப் பரவச் செய்தவாறு ஓடுகிறது. இறந்துபோன ஒரு சின்னஞ்சிறு பறவை, ஆற்றுவெள்ளத்தில் மிதந்து வருவதை இன்று கண்டேன். அதனுடைய சாவின் வரலாறு மிகவும் நன்றாகப் புரிந்துவிட்டது.

எங்கேயோ ஓர் ஊரின் எல்லையில் ஒரு தோப்பின் மாமரக் கிளையில் அதன் கூடு இருந்தது. இருட்டும் வேளையில் அது அதன் கூட்டுக்குத் திரும்பித் தன் துணையுடன் மிருதுவான சிறகின் வெம்மையில் தானும் தன் சிறகுகளை விரித்துக்கொண்டு உடல் சோர்ந்து உறங்கியது. திடீரென்று இரவில் 'பத்மா' (கிழக்கு வங்காளத்தின் பெரிய நதி ) சற்று ஒருபுறமாகப் புரண்டான். அவ்வளவுதான்! மரத்தின் கீழிருந்த மண் சரிந்து விழுந்தது. கூட்டை விட்டுச் சிதறிவிழுந்த பறவை ஒருகணம் கண் விழித்தது. அதன் பிறகு கண் விழிக்க வேண்டிய அவசியமே அதற்கு இராமல் போய்விட்டது.

நாட்டுப்புறங்களில் இருக்கும்போது, எல்லாவற்றையும் விழுங்கவல்ல இந்த மாபெரும் இயற்கையே சிறந்து விளங்குகிறது. பட்டணத்திலோ, மனித சமுதாயம்தான் மிகவும் முக்கியமானதாகத் தலைதூக்கி நிற்கிறது. அங்கே மனிதனுடைய கொடூரமான தன்மை வெளிப்படுகிறது. தன் சுகதுக்கத்திற்கு முன் மற்ற உயிர்களின் சுகதுக்கங்களைப் பற்றி மனிதன் எண்ணுவதுகூட இல்லை.

ஐரோப்பாவிலும் மனிதனுக்குத்தான் முக்கியமான இடம். அவனுடைய வழியோ மிகச் சிக்கலானது. அவர்கள் மற்ற பிராணிகளைச் சாதாரணமான உயிர்களென்றே நினைத்து விடுகிறார்கள். பாரத நாட்டினர். மனிதன் விலங்காக மாறுவதையோ, விலங்கு மனிதனாக மாறுவதையோ பற்றி எதுவும் தவறுதலாக எண்ணுவது இல்லை. அதனால்தான் நமது சாத்திரங்கன் எல்லா உயிர்களிடத்தும் கருணை காட்டுவதை, நடக்கமுடியாத ஓர் அதிசயம் என்று விட்டுவிடவில்லை.

நாட்டுப்புறங்களில் இயற்கையோடு ஒன்றி உடனுக்குடன் இணைந்து பழகும்போது என் உள்ளத்தினுள் பாரத நாட்டின் இயல்பு தலைதூக்குகிறது. ஒரு பறவையின் சின்னஞ்சிறு இதயத்தினுள்ளும் வாழ்க்கையின் களிப்பு எத்துணை அதிகமாக இருக்கும் என்பது பற்றிச் சிந்திக்காமல் இருக்க என்னால் முடிவதில்லை.

(சிதறிய பக்கங்கள். 113 ஆம் கடிதம்)

 

வழியிலும் வழிமுடிவிலும்

16, செப்டம்பர் 1929

மரத்தின் கிளையில் பூ மலர்கிறது. அதற்குப் புகலிடம் அதுதான். ஆனால், மனிதன் அதற்குப் பெயரிட்டுத் தன் உள்ளத்தினுள் இடம் அளிக்கின்றான். நமது நாட்டில் மரங்களில் மலரும் பூக்கள் பல உள்ளன. மனிதன் அவை அனைத்தையும் மனத்தினுள் ஏற்றுக்கொள்ளவில்லை.


மலரிடம் இவ்வளவு அலட்சியமனப்பான்மை வேறு எந்த நாட்டிலும் காணப்படுவதில்லை. அதற்குப் பெயர் இருக்கலாம். ஆனால், அது தெரியாததாக இருக்கும். சில மலர்கள் தங்கள் இன்மணத்தின் வலிமையால் புகழ்பெற்றுவிட்டன. அதாவது அலட்சியமாக அவற்றைப் பாராமல் சென்றாலுங்கூட அவை தாமாக முன் வந்து மணத்தினால் தம்மை அறிமுகப்படுத்திக் கொள்கின்றன. நமது இலக்கியங்களில் அவை தவறாமல் அழைப்பைப் பெறுகின்றன. அவற்றுள் பல மலர்களின் பெயர்களை மட்டுமே நாம் அறிவோம். அவைகளைக் கண்டதுமில்லை. அவற்றைத் தெரிந்துகொள்ளும் முயற்சியையும் நாம் எடுத்துக்கொள்ளவில்லை.

பெயரகராதியில் ஜுதீ, ஜாதீ என்றெல்லாம் படிக்கின்றோம். யாப்பு சரிவர அமைந்துவிட்டால் நாம் களிப்பெய்துகின்றோம். ஆனால் 'ஜாதி' என்பது எது. 'ஜுதி' என்பது எது என்றெல்லாம் ஆராய நமக்கு ஆவஸ் பிறப்பதில்லை. பலவாறு முயற்சி செய்தபின் 'ஜாதீ' என்பது முல்லை வகையில் ஒரு பூ (சமேவி) என்பதைத் தெரிந்துகொண்டேன். ஆனால், 'ஸேவுந்தி என்பது எந்த மலரின் பெயர் என்பது இன்றுவரையிலும் பலரைக் கேட்டும் பதில் கிடைக்கவில்லை.

சாந்திநிகேதனத்தில் ஒரு மரம் இருக்கிறது. அதனைப் 'பியால என்று அழைக்கிறார்கள். ஆனால், ஸம்ஸ்கிருத காவியங்களில் புகழ்பெற்ற அந்த மரத்தைப்பற்றி எத்தனை பேருக்குத் தெரியுமோ இன்னொரு விஷயத்தைப் பாருங்கள். ஆறுகள் விஷயத்தில் நமது உள்ளத்தில் இந்த அலட்சியம் இல்லை. மிகவும் சிறிய ஆறுகூட நமது மனத்தில் பிடித்தமாக இடம் பெற்றுள்ளது. புறாக்கண்ணி (கபோதாக்ஷி). மயில் விழியான் (மயூராக்ஷி), விருப்புடையவள் (இச்சாமதி) என்றெல்லாம்! அவை அன்றாடம் நமக்கு உபயோகப்படுகின்றன. பூஜைக்குத் தேவையாண மலர்களைத் தவிர வேறு எந்தப் பூக்களுடனும் நமக்கு அறிமுக அவசியம் எதுவும் இல்லை.

நாகரிக வழக்கத்தில் காலத்துக்கேற்றபடி சீக்கிரமே வாடிடும் மலர்களுடன் தொடர்பு உண்டு. தோட்டக்காரனுடைய கைகளில் அவற்றைப் பராமரிக்கும் பொறுப்பு இருக்கும். மலர்ச் செப்பினுள் வழக்கம்போல் போவதும் வருவதும்தான் அவற்றின் வேலை. இதைத்தான் தாமஸிகம் அதாவது "மெடீரியலிஸம்" என்கின்றோம். ஸ்தரலப் பொருளுக்கு அப்பால் செல்ல இயலாமல் நம் மனம் திகைப்படைந்து நின்றுவிடுகிறது. இது போன்ற பெயரில்லா மலர்களின் நாட்டில் கவிஞரின் நிலை எவ்வளவு மோசமானது என்பதை யோசித்துப் பார். மலர்களின் ராஜ்யத்தில் அவனுடைய பேனாவின் நடமாட்டம் எத்துணைக் குறுகியது!

பறவைகள் விஷயத்திலும் இதேமாதிரிதான். காகம், குயில், மைனா, 'பௌ-கதா-கவோ'  (இந்தச் சொற்களைப்போல் குரல் பயிற்றும் ஒரு புறா இனம்.) இவைகளை எப்படி விட்டுவிட முடியும்? ஆனால், எத்தனையோ நேர்த்தியான புட்கள் உள்ளன. அவைகளின் பெயர் அநேகமாகச் சாதாரண ஜனங்களுக்குத் தெரிந்திருக்கா. இயற்கையிடம் இந்த அலட்சிய மனப்பான்மைதான் நம்முடைய தோல்விகளுக்கெல்லாம் மூல காரணம். இந்தச் சுபாவம் காரணமாகத்தான் நாட்டு மக்களிடமும் நமது அலட்சிய மனப்பான்மை தீவிரமாகத் தலைதூக்குகிறது.


பரீட்சையில் தேறவேண்டின் சரித்திரப் பாடத்தைப் புறக்கணிக்க முடியாது. நமது தேசப்பற்று அந்தப் புத்தக மூட்டையால் உருவானது. தேசத்து மக்களிடம் கொண்டுள்ள பற்றுதலின் காரணமாக உண்டானதல்ல. தமது உலகம் எத்துணை குறுகலானது என்பதை யோசித்துப் பார். அதிலிருந்து எத்தனை பொருள்கன் இடம் பெறவில்லை என்பதையும் நினைத்துப் பார்.

(வழியிலும் வழிமுடிவிலும் 42 ஆம் கடிதம்)

 

நூல்வெளி

'பாரம்பரியத்தில் வேரூன்றிய நவீன மனிதர்' என்றும் 'கிழக்கையும் மேற்கையும் இணைத்த தீர்க்கதரிசிஎன்றும் அழைக்கப்பட்ட தாகூர் தம் இளம் வயதிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார். 1913ஆம் ஆண்டு கீதாஞ்சலி என்ற கவிதை நூலுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார். 1919ஆம் ஆண்டு நடைபெற்ற ஜாலியன்வாலா பாக் படுகொலையால் மனம் வருந்திய தாகூர், ஆங்கிலேய அரசைக் கண்டித்து அவர்கள் வழங்கிய 'சர்' பட்டத்தைத் திருப்பி அளித்தார். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இசைப் பாடல்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகள், ஏறக்குறைய இருபது பெரு நாடகங்கள், குறு நாடகங்கள், எட்டு நாவல்கள், எட்டுக்கும் மேற்பட்ட சிறுகதைத் தொகுப்புகள் என இலக்கியத்தின் பல்வேறு வடிவங்களிலும் நூல்களை எழுதியுள்ளார். அவற்றுடன் அவருடைய ஓவியப் படைப்புகள், பயணக் கட்டுரைகள், ஆங்கில மொழிபெயர்ப்புகள் ஆகியவற்றையும் இணைத்துக்கொண்டால் அவருடைய ஆளுமையின் பேருருவை அறிய முடியும். குழந்தைகள் இயற்கையின் மடியில் எளிமையாக வளர்க்கப்பட வேண்டும். தங்கள் வேலையைத் தாங்களே கவனித்துக்கொண்டு, மற்றவர்களுக்கும் தொண்டு செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டு 1921இல் விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தை நிறுவினார். 'குருதேவ்' என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் தாகூரின் 'ஜனகணமன' என்னும் பாடல் இந்தியாவின் நாட்டுப் பண்ணாகவும் 'அமர் சோனார் பங்களா' என்னும் பாடல் வங்காள தேசத்தின் நாட்டுப் பண்ணாகவும் இன்றும் பாடப்பட்டு வருகின்றன.

சாகித்திய அகாதெமி வெளியிட்டுள்ள தாகூரின் கடிதங்கள் என்னும் நூலைத் தமிழில் மொழியாக்கம் செய்தவர் .நா. குமாரசுவாமி. அவர் தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, வங்கம், பாலி, ஆங்கிலம் ஆகிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்தவர். வங்க அரசு, தமிழ்-வங்க மொழிகளுக்கு அவர் ஆற்றிய தொண்டைப் பாராட்டி 'நேதாஜி இலக்கிய விருதுஅளித்துச் சிறப்பித்துள்ளது.

Tags : Chapter 8 | 11th Tamil இயல் 8 : 11 ஆம் வகுப்பு தமிழ்.
11th Tamil : Chapter 8 : Yaaraiyum mathithu vall : Prose: Thakurin Kadithangal Chapter 8 | 11th Tamil in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : யாரையும் மதித்து வாழ் : உரைநடை: தாகூரின் கடிதங்கள் - இயல் 8 : 11 ஆம் வகுப்பு தமிழ் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : யாரையும் மதித்து வாழ்