Home | 11 ஆம் வகுப்பு | 11வது தமிழ் | வாழ்வியல்: திருக்குறள்

இயல் 8 : 11 ஆம் வகுப்பு தமிழ் - வாழ்வியல்: திருக்குறள் | 11th Tamil : Chapter 8 : Yaaraiyum mathithu vall

   Posted On :  09.08.2023 08:01 am

11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : யாரையும் மதித்து வாழ்

வாழ்வியல்: திருக்குறள்

11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : யாரையும் மதித்து வாழ் : வாழ்வியல்: திருக்குறள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

வாழ்வியல்

திருக்குறள்


 

அடக்கம் உடைமை

1) அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை

ஆரிருள் உய்த்து விடும்.

2) காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்

அதனினூஉங்கு இல்லை உயிர்க்கு.

3) செறிவுஅறிந்து சீர்மை பயக்கும் அறிவுஅறிந்து

ஆற்றின் அடங்கப் பெறின்.

4) நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்

மலையினும் மாணப் பெரிது.

5) எல்லார்க்கும் நன்றுஆம் பணிதல் அவருள்ளும்

செல்வர்க்கே செல்வம் தகைத்து.

6) ஒருமையுள் ஆமைபோல் ஐந்துஅடக்கல் ஆற்றின்

எழுமையும் ஏமாப்பு உடைத்து.

7) யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

8) ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்

நன்றுஆகா தாகி விடும்.

9) தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினால் சுட்ட வடு.

10) கதம்காத்துக் கற்றுஅடங்கல் ஆற்றுவான் செவ்வி

அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.

 

ஒப்புரவு அறிதல்

1) கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு

என்ஆற்றும் கொல்லோ உலகு.

2) தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு

வேளாண்மை செய்தல் பொருட்டு.

3) புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறல்அரிதே

ஒப்புரவின் நல்ல பிற.

4) ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்

செத்தாருள் வைக்கப் படும்.

5) ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்

பேரறி வாளன் திரு.

6) பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்

நயன்உடை யான்கண் படின்.

7) மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்

பெருந்தகை யான்கண் படின்.

8) இடன்இல் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்

கடன்அறி காட்சி யவர்.

9) நயன்உடையான் நல்கூர்ந்தான் ஆதல் செயும்நீர

செய்யாது அமைகலா வாறு.

10) ஒப்புரவி னால்வரும் கேடுஎனின் அஃதொருவன்

விற்றுக்கொள் தக்கது உடைத்து.

 

புகழ்

1) ஈதல் இசைபட வாழ்தல் அதுஅல்லது

ஊதியம் இல்லை உயிர்க்கு.

2) உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்குஒன்று

ஈவார்மேல் நிற்கும் புகழ்.

3) ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்

பொன்றாது நிற்பதுஒன்று இல்.

4) நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்

போற்றாது புத்தேள் உலகு.

5) நத்தம்போல் கேடும் உளதுஆகும் சாக்காடும்

வித்தகர்க்கு அல்லால் அரிது.

6) தோன்றின் புகழொடு தோன்றுக ; அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று.

7) புகழ்பட வாழாதார் தம்நோவார் தம்மை

இகழ்வாரை நோவது எவன் ?

8) வசைஎன்ப வையத்தார்க்கு எல்லாம் இசையென்னும்

எச்சம் பெறாஅ விடின்.

9) வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா

யாக்கை பொறுத்த நிலம்.

10) வசைஒழிய வாழ்வாரே வாழ்வார் இசைஒழிய

வாழ்வாரே வாழா தவர்.

 

தவம்

1) உற்றநோய் நோன்றல் உயிர்க்குஉறுகண் செய்யாமை

அற்றே தவத்திற்கு உரு.

2) தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவம்அதனை

அஃதிலார் மேற்கொள் வது.

3) துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்

மற்றை யவர்கள் தவம்?

4) ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்

எண்ணின் தவத்தான் வரும்

5) வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம்

ஈண்டு முயலப் படும்.

6) தவஞ்செய்வார் தம்கருமம் செய்வார்மற்று அல்லார்

அவஞ்செய்வார் ஆசையுள் பட்டு.

7) சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்

சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.

8) தன்உயிர் தான்அறப் பெற்றானை ஏனைய

மன்னுயிர் எல்லாம் தொழும்.

9) கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்

ஆற்றல் தலைப்பட் டவர்க்கு.

10) இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார்

சிலர்பலர் நோலா தவர்.

 

நிலையாமை

1) நில்லாத வற்றை நிலையின என்றுணரும்

புல்லறி வாண்மை கடை.

2) கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்

போக்கும் அதுவிளிந் தற்று.

3) அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்

அற்குப ஆங்கே செயல்.

4) நாள்என ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும்

வாள்அது உணர்வார்ப் பெறின்.

5) நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை

மேற்சென்று செய்யப் படும்.

6) நெருநல் உளன்ஒருவன் இன்றுஇல்லை என்னும்

பெருமை உடைத்துஇவ் வுலகு.

7) ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப

கோடியும் அல்ல பல.

8) குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே

உடம்பொடு உயிரிடை நட்பு.

9) உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி

விழிப்பது போலும் பிறப்பு.

10) புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்

துச்சில் இருந்த உயிர்க்கு?

 

துறவு

1) யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்

அதனின் அதனின் இலன்.

2) வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின்

ஈண்டுஇயற் பால பல.

3) அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்

வேண்டிய எல்லாம் ஒருங்கு.

4) இயல்பாகும் நோன்பிற்குஒன்று இன்மை உடைமை

மயலாகும் மற்றும் பெயர்த்து.

5) மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்புஅறுக்கல்

உற்றார்க்கு உடம்பும் மிகை?

6) யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு

உயர்ந்த உலகம் புகும்.

7) பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்

பற்றி விடாஅ தவர்க்கு.

8) தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி

வலைப்பட்டார் மற்றை யவர்.

9) பற்றற்ற கண்ணே பிறப்புஅறுக்கும் மற்று

நிலையாமை காணப் படும்.

10) பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு.

 

அவா அறுத்தல்

1) அவாஎன்ப எல்லா உயிர்க்கும்எஞ் ஞான்றும்

தவாஅப் பிறப்புஈனும் வித்து.

2) வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றுஅது

வேண்டாமை வேண்ட வரும்.

3) வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை

யாண்டும் அஃதுஒப்பது இல்.

4) தூஉய்மை என்பது அவாவின்மை மற்றுஅது

வாஅய்மை வேண்ட வரும்.

5) அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்

அற்றாக அற்றது இலர்.

6) அஞ்சுவது ஓரும் அறனே ஒருவனை

வஞ்சிப்பது ஓரும் அவா.

7) அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை

தான்வேண்டும் ஆற்றான் வரும்.

8) அவாஇல்லார்க்கு இல்லாகும் துன்பம்அஃது உண்டேல்

தவாஅது மேன்மேல் வரும்.

9) இன்பம் இடையறாது ஈண்டும் அவாவென்னும்

துன்பத்துள் துன்பம் கெடின்

10) ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே

பேரா இயற்கை தரும்.

 

வலி அறிதல்

1) வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்

துணைவலியும் தூக்கிச் செயல்.

2) ஒல்வது அறிவது அறிந்ததன் கண்தங்கிச்

செல்வார்க்குச் செல்லாதது இல்.

3) உடைத்தம் வலிஅறியார் ஊக்கத்தின் ஊக்கி

இடைக்கண் முரிந்தார் பலர்.

4) அமைந்தாங்கு ஒழுகான் அளவுஅறியான் தன்னை

வியந்தான் விரைந்து கெடும்.

5) பீலிபெய் சாகாடும் அச்சுஇறும் அப்பண்டம்

சால மிகுத்துப் பெயின்.

6) நுனிக்கொம்பர் ஏறினார் அஃதுஇறந்து ஊக்கின்

உயிர்க்கிறுதி ஆகி விடும்.

7) ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள்

போற்றி வழங்கும் நெறி.

8) ஆகுஆறு அளவுஇட்டிது ஆயினும் கேடில்லை

போகுஆறு அகலாக் கடை.

9) அளவுஅறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல

இல்லாகித் தோன்றாக் கெடும்.

10) உளவரை தூக்காத ஒப்புரவு ஆண்மை

வளவரை வல்லைக் கெடும்.

 

காலம் அறிதல்

1) பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்

வேந்தர்க்கு வேண்டும் பொழுது.

2) பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்

தீராமை ஆர்க்கும் கயிறு.

3) அருவினை என்ப உளவோ கருவியான்

காலம் அறிந்து செயின்.

4) ஞாலம் கருதினும் கைகூடும் காலம்

கருதி இடத்தால் செயின்.

5) காலம் கருதி இருப்பர் கலங்காது

ஞாலம் கருது பவர்.

6) ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர்

தாக்கற்குப் பேரும் தகைத்து.

7) பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து

உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.

8) செறுநரைக் காணின் சுமக்க இறுவரை

காணின் கிழக்காம் தலை.

9) எய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையே

செய்தற்கு அரிய செயல்.

10) கொக்குஒக்க கூம்பும் பருவத்து மற்றுஅதன்

குத்துஒக்க சீர்த்த இடத்து.

 

பொச்சாவாமை

1) இறந்த வெகுளியின் தீதே சிறந்த

உவகை மகிழ்ச்சியின் சோர்வு.

2) பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை

நிச்ச நிரப்புக்கொன் றாங்கு.

3) பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை அதுஉலகத்து

எப்பால்நூ லோர்க்கும் துணிவு.

4) அச்ச முடையார்க்கு அரண்இல்லை ஆங்கில்லை

பொச்சாப்பு உடையார்க்கு நன்கு.

5) முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை

பின்ஊறு இரங்கி விடும்.

6) இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை

வாயின் அதுஒப்பது இல்.

7) அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்

கருவியால் போற்றிச் செயின்.

8) புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது

இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்.

9) இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாம்தம்

மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.

10) உள்ளிய எய்தல் எளிதுமன் மற்றும்தான்

உள்ளியது உள்ளப் பெறின்.

 

குறிப்பு அறிதல்

1) கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்

மாறாநீர் வையக்கு அணி.

2) ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்

தெய்வத்தோடு ஒப்பக் கொளல்.

3) குறிப்பின் குறிப்புஉணர் வாரை உறுப்பினுள்

யாது கொடுத்தும் கொளல்.

4) குறித்தது கூறாமைக் கொள்வாரோடு ஏனை

உறுப்புஓர் அனையரால் வேறு.

5) குறிப்பின் குறிப்புஉணரா ஆயின் உறுப்பினுள்

என்ன பயத்தவோ கண்.

6) அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்

கடுத்தது காட்டும் முகம்.

7) முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்

காயினும் தான்முந் துறும்.

8) முகம் நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி

உற்றது உணர்வார்ப் பெறின்.

9) பகைமையும் கேண்மையும் கண்உரைக்கும் கண்ணின் வகைமை உணர்வார்ப் பெறின்.

10) நுண்ணியம் என்பார் அளக்கும்கோல் காணும்கால்

கண்அல்லது இல்லை பிற.

 

படைமாட்சி

1) உறுப்புஅமைந்து ஊறுஅஞ்சா வெல்படை வேந்தன்

வெறுக்கையுள் எல்லாம் தலை.

2) உலைவிடத்து ஊறுஅஞ்சா வன்கண் தொலைவிடத்துத்

தொல்படைக்கு அல்லால் அரிது.

3) ஒலித்தக்கால் என்ஆம் உவரி எலிப்பகை

நாகம் உயிர்ப்பக் கெடும்.

4) அழிவுஇன்று அறைபோகாது ஆகி வழிவந்த

வன்க ணதுவே படை.

5) கூற்றுஉடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்

ஆற்ற லதுவே படை.

6) மறம்மானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்

எனநான்கே ஏமம் படைக்கு.

7) தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த போர்தாங்கும் தன்மை அறிந்து.

8) அடல்தகையும் ஆற்றலும் இல்எனினும் தானை

படைத்தகையால் பாடு பெறும்.

9) சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்

இல்லாயின் வெல்லும் படை.

10) நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை

தலைமக்கள் இல்வழி இல்.

 

பகைத்திறம் தெரிதல்

1) பகைஎன்னும் பண்பு இலதனை ஒருவன்

நகையேயும் வேண்டற்பாற்று அன்று.

2) வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க

சொல்லேர் உழவர் பகை.

3) ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்

பல்லார் பகைகொள் பவன்.

4) பகைநட்பாக் கொண்டுஒழுகும் பண்புடை யாளன்

தகைமைக்கண் தங்கிற்று உலகு.

5) தன்துணை இன்றால் பகைஇரண்டால் தான்ஒருவன்

இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று.

6) தேறினும் தேறா விடினும் அழிவின்கண்

தேறான் பகாஅன் விடல்.

7) நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க

மென்மை பகைவர் அகத்து.

8) வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்

பகைவர்கண் பட்ட செருக்கு.

9) இளைதுஆக முள்மரம் கொல்க களையுநர்

கைகொல்லும் காழ்த்த இடத்து.

10) உயிர்ப்ப உளர்அல்லர் மன்ற செயிர்ப்பவர்

செம்மல் சிதைக்கலா தார்.

 

மருந்து

1) மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்

வளிமுதலா எண்ணிய மூன்று.

2) மருந்துஎன வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது

அற்றது போற்றி உணின்.

3) அற்றால் அளவுஅறிந்து உண்க அஃதுடம்பு

பெற்றான் நெடிதுஉய்க்கும் ஆறு.

4) அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறுஅல்ல

தய்க்க துவரப் பசித்து

5) மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துஉண்ணின்

ஊறுபாடு இல்லை உயிர்க்கு.

6) இழிவுஅறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்

கழிபே ரிரையான்கண் நோய்.

7) தீயளவு அன்றித் தெரியான் பெரிதுஉண்ணின்

நோயளவு இன்றிப் படும்.

8) நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்.

9) உற்றான் அளவும் பிணிஅளவும் காலமும்

கற்றான் கருதிச் செயல்.

10) உற்றவன் தீர்ப்பான் மருந்துஉழைச் செல்வான்என்று

அப்பால்நாற் கூற்றே மருந்து.

 

இரவு அச்சம்

1) கரவாது உவந்துஈயும் கண்ணன்னார் கண்ணும்

இரவாமை கோடி உறும்.

2) இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து

கெடுக உலகுஇயற்றி யான்.

3) இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்

வன்மையின் வன்பாட்டது இல்.

4) இடம் எல்லாம் கொள்ளாத் தகைத்தே இடம்இல்லாக்

காலும் இரவுஒல்லாச் சால்பு.

5) தெள்நீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது

உண்ணலின் ஊங்குஇனிய தில்

6) ஆவிற்கு நீர்என்று இரப்பினும் நாவிற்கு

இரவின் இளிவந்த தில்

7) இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்

கரப்பார் இரவன்மின் என்று.

8) இரவுஎன்னும் ஏமாப்புஇல் தோணி கரவுஎன்னும்

பார்தாக்கப் பக்கு விடும்.

9) இரவுஉள்ள உள்ளம் உருகும் கரவுஉள்ள

உள்ளதூஉம் இன்றிக் கெடும்.

10) கரப்பவர்க்கு யாங்குஒளிக்கும் கொல்லோ இரப்பவர்

சொல்லாடப் போஒம் உயிர்.

வான்புகழ் வள்ளுவரின் அறக்கருத்துகள் மாணவரிடம் சென்று சேர வேண்டும்; அதன்வழி நன்னெறிப் பண்புகள் மாணவரிடையே வளர வேண்டும் என்ற நோக்கில் புதிய பாடத்திட்டத்தில் திருக்குறளின் 150 பாக்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

திருக்குறளை நாள்தோறும் வழிபாட்டுக் கூட்டத்தில் பொருளுடன் கூறலாம்.

வகுப்பு வாரியாகத் திருக்குறள் ஒப்பித்தல் போட்டி வைக்கலாம்.

குறட்பாக்கள் தொடர்பான கதைகள், நாடகங்களை இலக்கியமன்ற கூட்டங்களில் நடத்தச் செய்யலாம்.

குறட்பாக்கள் தொடர்பான வினாக்களைத் தொகுத்து "வினாடி வினா" நடத்தலாம்.

உலகப் பொதுமுறையாம் திருக்குறளில் இடம் பெற்றிருக்கும் நன்னெறிக் கருத்துகளின் அடிப்படையில் நீதிக்கதைகள், இசைப்பாடல்கள், சித்திரக் கதைகள், அசைவூட்டப் படங்கள் வாயிலாகத் திருக்குறள் வளங்களை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கலாம்.

குறிப்பு: மாணவர்கள் எளிதில் படித்துப் பொருள் புரிந்து கொள்வதற்கு ஏற்றவகையில் குறட்பாக்களின் சொற்கள் பிரித்துத் தரப்பட்டுள்ளன; அலகிடுவதற்கு அன்று.

Tags : Chapter 8 | 11th Tamil இயல் 8 : 11 ஆம் வகுப்பு தமிழ்.
11th Tamil : Chapter 8 : Yaaraiyum mathithu vall : Valviyal: Thirukkural Chapter 8 | 11th Tamil in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : யாரையும் மதித்து வாழ் : வாழ்வியல்: திருக்குறள் - இயல் 8 : 11 ஆம் வகுப்பு தமிழ் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : யாரையும் மதித்து வாழ்