இயல் 8 : 11 ஆம் வகுப்பு தமிழ் - மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள் | 11th Tamil : Chapter 8 : Yaaraiyum mathithu vall
இலக்கணத் தேர்ச்சி கொள்
1. திருத்தக் குறியீடுகளின் வகைகளைக் கூறுக.
விடை
❖ பொதுவானவை
❖ இணைக்கப்பட வேண்டியவை
❖ திருத்தக்குறியீடுகள் தொடர்பானவை
❖ எழுத்து வடிவம்
❖ இடைவெளி தர வேண்டியவை என ஐந்து வகைப்படும்.
2. ஏற்ற இடங்களில் அச்சுத் திருத்தக்குறியீடுகளைப் பயன்படுத்தும் முறையைக் கீழ்க்காணும் பத்தியின் மூலம் அறிக.
கற்பவை கற்றபின்
1. நேரு, இந்திராவிற்கு எழுதிய கடிதம் ஒன்றை வகுப்பறையில் படித்து அது குறித்துக்கலந்துரையாடுக.
விடை
மாணவர்களே!
நாடு விடுதலை பெற்றபின் முதன்மை அமைச்சராய் இருந்த நேரு அவர்கள் சிறையில் இருந்தபொழுது தன் மகள் இந்திரா புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகக் கடிதம் வாயிலாகப் பேசிக் கொண்டிருந்தார். அவற்றில் ஒன்றைப் படிக்கக் கேட்டீர்கள். அதனைப் பற்றிக் கலந்துரையாடுவோமா!
ஆசிரியர்: படிக்கக் கேட்ட கடிதப் பகுதியின் செய்திகளில் நீங்கள் புரிந்ததை எல்லோருக்கும் புரியும் வகையில் கலந்துரையாட வாருங்கள்.
செல்வி : நாம் இப்பொழுது படித்த கடிதம் நேரு எந்த சிறையில் இருந்தபொழுது எழுதியது தெரியுமா.....
பிரியா : நைனி சிறையில் இருந்தபொழுது 1933ஆம் ஆண்டு எழுதியது.
மதன் : உலக சரித்திரத்தை எவ்வளவு அழகாகப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
செல்வி : ஆம் மதன்! நம் இந்தியாவின் சிற்பி, சோஷலிசம், ஜனநாயத்தின் மீதுள்ள உறுதியான நம்பிக்கை இவற்றையெல்லாம் நம் மனதிலும் பதிய வைத்துள்ளார்.
பிரியா : திராவிடத்தின் பழமையும் பெருமையும் கூட சொல்லப்பட்டிருக்கிறது.
செல்வி : இந்தியாவிற்கு வியாபார நோக்கில் வந்தவர்களை ஆதரித்ததால்தான் அடிமைப்பட்டு விட்டோம் என்றும் கூறியுள்ளார்.
மதன் : கிரேக்க நாகரிகம், ஹோமர் இலியட் காப்பியம் பற்றியும் எழுதியுள்ளார்.
செல்வி : 1933 இல் தீர்க்கதரிசனமாக சில செய்திகளையும் கூறியுள்ளார் மீண்டும் இன்னொரு மகாயத்தம் வரும். ஜப்பானுக்கு எதிரி அமெரிக்காதான். இனிமேல் ஆயதப்படை புரட்சி சாத்தியமாகாது. அரசியல் புரட்சியே மலர்ச்சிக்கு வழி வகுக்கும் என தன் கடிதங்கள் வாயிலாக உரைத்திருக்கிறார்.
ஆசிரியர் : என் அருமை மாணவச் செல்வங்களே! இவ்வளவு தெளிவாகப் புரிந்து கொண்ட உங்களை எண்ணும் போது பெருமிதமாக உள்ளது. நாளைய பாரதம் உங்களிடம் பத்திரமாய் இருக்கும்.
மாணவர்கள் : நன்றி ஐயா!
2. உங்களது சுவையான பயண அனுபவம் ஒன்றைக் கடிதமாக எழுதுக.
விடை
பயண அனுபவம்:
திருநெல்வேலி,
20.07.2022
அன்புள்ள தோழி மாலாவுக்கு,
நளினி எழுதுவது. நலம். நலமறிய ஆவல்.
கடந்த வாரம் ஆண்டு இறுதித் தேர்வுமுடிந்த நிலையில் மாற்றம் தேடி நான் என் குடும்பத்தோடு இரண்டு நாள்கள் குற்றாலமும், ஒக்கேனக்கலும் சுற்றுலா சென்றோம்.
முதல் நாள் காலை கிளம்பி 9.00 மணிக்கெல்லாம் குற்றாலம் சென்றுவிட்டோம். இயற்கை எழில் கொஞ்சும் அழகான மலை, மலையிலிருந்து புறப்படும் சாரல் மனதை மயக்கியது. மெயின் அருவி, தேனருவி, ஐந்தருவி எனப் பல்வேறு வீழ்ச்சிகளில் அன்றைய பொழுதைக் கழித்தோம். அன்று இரவே ஒக்கேனக்கல் புறப்பட்டோம். அங்கு ஆர்ப்பரிக்கும் நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்தோம். பிறகு பரிசல் சவாரி மிகவும் இன்பமாகவும், ஆபத்தாகவும் இருந்தது. மிக உயரமான இடத்திலிருந்து சிறார்கள் தண்ணீரில் குதிப்பார்கள். இதெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாத நினைவுகள். இரண்டு நாள் எப்படி கழிந்தது என்பதே தெரியவில்லை.
பிரியா மனதோடு அன்று இரவு இல்லம் திரும்பினோம். ஒரே ஒரு குறை நீ வராததுதான். வரும் ஆண்டு நீ அவசியம் வரவேண்டும்.
அன்பத்தோழி,
நளினி.
உறைமேல் முகவரி:
ம.மாலா,
52, கம்பர் நகர்,
வள்ளியூர் - 2.
3. மனிதநேயம் பேசும் கவிதைகள் எவையேனும் ஐந்தைத் திரட்டி வகுப்பில் பகிர்க.
விடை
துதித்தெழும்பும் தூயமனம்
கனிந்து நோக்கும் கருணைகுணம்
கொடுத்து உதவும் கொடை மனம்
எடுத்தியம்பும் ஆகாந்தம்
பணிந்து செல்லும் பரிவு
மகிழ்ந்துவக்கும் மனோபாவம்
அறம்பரப்பும் ஆன்மஒழுக்கம் - இவற்றால்
சிறக்கும் மனி நேயம்
கற்சிலையென
அறியாது கைகள்
சிவந்திட காக்கையின்
எச்சில்களை துடைத்து
விடும் மழலையின்
மாளிகை குணத்தில்
மலர்கிறது மனித நேயம்
அடுத்தவர்களின் வலிகளை
உணர்வுகளால்
உணரத் தொடங்கும்
போது தான் பிறக்கிறது மனித நேயம்
நாயை வீட்டில் வைத்து
பணிவிடைகள் செய்யும் மனிதன்
தாயைக் கூட்டில் அடைத்து
தயவு காட்ட மறுத்ததில்
மரணித்து விட்டது மனித நேயம்
பிச்சைக்காரனின்
கிழந்த ஆடைக்கிடையே
தெரிவது தேகமல்ல
அதை மறைப்பதுதான்
மனித நேயம்
4. இயற்கையும் மனிதனும் என்னும் தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதுக.
விடை
குறிப்புச் சட்டகம்
முன்னுரை
கருத்துரை
காலமாற்றமும் காட்சி மாற்றமும்
முடிவரை
முன்னுரை:
இயற்கை இறைவன் கொடுத்த கொடை. மனிதன், பூமியில் வாழ முற்பட்டபொழுது இயற்கையோடு வாழ்ந்தான்; இயற்கையைப் பேணிளான்; இயற்கையை வணங்கினான்; இயற்கையோடு இரணர்டறக் கலந்தான்.
கருத்துரை:
மனிதன் தன்னைச்சுற்றி இருந்த இயற்கையை ஐம்பூதங்களாகப் பிரித்து வணங்கினான். ஐவகை நிலங்களாகப் பிரித்து வாழ்ந்தான். நோய் நொடிகளின்றி மகிழ்வுடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ்த்தான். காலமும் மாறியது: காட்சியும் மாறிவிட்டது.
காலமாற்றமும் காட்சி மாற்றமும்:
மனிதன் இயற்கையைச் சிறிது, சிறிதாக அழித்துத் தன் வாழ்வை வளமாக்க முயன்றான். எப்போது இயற்கையை அழிக்க முயன்றானோ. அப்போதே அவன் இன்னல்களுக்கு உள்ளானான். விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் பல்லுயிர்களுக்கும் இன்னலை உருவாக்கினான். பூமிப் பந்தை சிறிது சிறிதாக நரகமாக மாற்றினான். இயற்கையை இழந்து. வாழ்வின் அனைத்து ஆதாரங்களையும் இழந்ததோடு இயற்கை சீற்றங்கள், பருவகால மாற்றங்கள் என அனைத்திற்கும் வித்திட்டான். மரங்களற்ற மண்ணில் சுவாசிக்கக் காற்றின்றித் தத்தளிக்கும் நிலை வெகுதூரத்தில் இல்லை.
முடிவுரை:
நாளைய தலைமுறை நன்றாக வாழ, மரங்களை வளர்த்து, பூமிப்பந்தைப் பசுமையாக்கி இழந்த துன்பங்களை மீட்டுக் கொடுப்போம்! ஏனைய உயிரினங்களையும் வாழ வைப்போம்! பூமியைச் சொர்க்கமாக மாற்றுவோம். மகிழ்வாக வாழ்வோம்!
5. தமிழ்க் கவிதைகளுக்கான சாகித்திய அகாதெமி விருது பெற்ற கவிஞர்களின் பட்டியலைத் திரட்டி நூலின் பெயர், ஆண்டு ஆகியவற்றோடு அட்டவணை உருவாக்குக,
விடை
6. "இப் புல்லின் பரிவும் பொறுமையும் புலனுங் காண்போர், ஒன்றையும் சிறுமையாச் சிந்தனை செயாது” என்னும் பாடல் அடிகளுடன்,
"ஆயிரம் மிதிபடல்களிலும்
நிமிர்ந்து நிற்கும்
புற்களே உன்
வழிகாட்டி”
– என்ற புதுக்கவிதை வரிகளை ஒப்பிட்டு உங்கள் கருத்துகளை உரைக்க.
விடை
ஒப்பிடுதல்:
நடராஜனின் கூற்று மூலம்
புல்லின் தியாகம்
பிறருக்கு உணவளித்து
தாமும் உணவாகி
தன் இனத்தைப் பெருக்கி
இவையெலாம் நடைபெற
பொறுமையாக காத்திருப்பது
போன்ற குணங்களைக் காட்டி எதனையும்
இழிவாக எண்ணுதல் கூடாது என்பதை
உணர்த்துகிறது இப்புதுக்கவிதை.
எவ்வளவு, அவமானம் அடைந்தாலும்
தோல்விகளைச் சந்தித்தாலும்
வீழ்ந்து, அழிந்து விடாமல்
எழுச்சி பெற்று நிமிர்ந்து
நிற்றல் வேண்டும்
என்ற தன்னம்பிக்கையை உணர்த்துகிறது
என்ற கருத்தைப் புரிந்து கொள்ளுங்கள்
மாணவர்களே!
7. நாங்கூழ்ப்புழு நடராசனிடம் பேசியிருந்தால்... - ஒரு பக்க அளவில் உரையாடலை எழுதுக.
விடை
கற்பனை உரையாடல்
நாங்கூழ்ப்புழு : ஐயா நடராசனே! என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறீர்.
நடராசன் : ஆம்! உன்னை நினைத்தேன்... வியப்பாக இருக்கிறது.
நாங்கூழ்ப்புழு : என்ன நினைத்தீர்...
நடராசன் : உன் பணி! உன் தியாகம் ஓயா உன் உழைப்பு..
நாங்கூழ்ப்புழு : ஐயோ! ஏன் என்னை இவ்வாறெல்லாம் புகழ்கிறீர்...
நடராசன் : மண்ணை நன்மண்ணாக்குகிறாய், உழவனுக்கு உதவுகிறாய்.
நாங்கூழ்ப்புழு : அதற்காகத் தானே இறைவன் எனக்கு உடலும் உயிரும் தந்திருக்கிறார்...
நடராசன் : அவை மட்டுமல்ல.. மண்ணை சேறாக்கி ஈரப்பதத்துடன் காத்துக் கொள்கிறாய்...
நாங்கூழ்ப்புழு : அடடா! என்னை இப்படி புகழ்ந்தால் என்ன செய்வது.
நடராசன் : உனக்கு ஏதேனும் கஷ்டம் உண்டா
நாங்கூழ்ப்புழு : அப்படியெல்லாம் எதுவுமில்லை.
நடராசன் : எறும்பு, புழு, பூச்சி உன்னிடம் குறும்பு செய்வது உண்டுதானே.
நாங்கூழ்ப்புழு : அதுவா, குறும்பு அல்ல அது! மனிதர்களுக்கும் பயன்பட்டுப் பிற உயிர்களுக்கும் பயன்படும் வகையில் வாழ்ந்து மடிவது பெருமைதானே..
நடராசன் : இவ்வளவு நல்ல எண்ணமும், பொறுமையும் ஒழுக்கமும் இருக்கும் உன்னைப் பார்த்து மனிதன் எப்போது மாறுவான்.....
நாங்கூழ்ப்புழு : அது அவரவர் விருப்பம் ஐயா. வணக்கம்! நான் என் இருப்பிடம் செல்கிறேன். (குழிக்குள் மறைதல்)
8. பாலினச் சமத்துவம் என்பதன் விளக்கம் அறிக. இது குறித்த நும் கருத்துகளை வகுப்பறையில் கலந்துரையாடுக.
விடை
பாலின சமத்துவம்:
பாலின சமத்துவம் என்பது ஆண், பெண், மூன்றாம் பாலினம் என இறைவனால் படைக்கப்பட்ட மனிதர்கள், ஆண் என்றோ, பெண் என்றோ, மூன்றாம் பாலினம் என்றோ வேற்றுமைப்படுத்தப்படாமல் சமத்துவம், சமவாய்ப்பு இவற்றைப் பற்றிக் கூறுவதே பாலின சமத்துவம் ஆகும்.
கலந்துரையாடல்: கலந்துரையாடுபவர்கள் - அமுதன், மலர்விழி, மாலினி.
அமுதன் : பாலின வேறுபாடு பற்றி நீ என்ன நினைக்கிறாய்?
மாலினி : அது அதிகமாத்தான் இருக்கு.
மலர் : அதிகமாத்தான் இருக்குங்குற பாலின சமத்துவம்னா என்ன என்று தெரியுமா?
மாலினி : இப்பொழுதுதானே நம் ஆசிரியர் கூறினார். ஆண், பெண் என்று
அமுதன் : நம் இந்திய நாட்டில் பாலினப்பாகுபாடு சற்றே அதிகம்தான். ஐ.நா வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில் இந்தியா 130 ஆவது இடத்தில் உள்ளது.
மலர் : ஐயோ! இவ்வளவு மோசமாகவா இருக்கு.
அமுதன் : இன்னும் சொல்றேன். கல்வியில் இடைநிற்றல் என்பதில்கூட நம் நாட்டில் பெண் குழந்தைகள்தாள் அதிகம்.
மலர் : பெண் சுதந்திரம் பெண் கதந்திரமுனு சொல்றாங்களே அதெல்லாம்.
அமுதன் : குழந்தைப் பருவத்தில் இருந்தே நாம் அதையெல்லாம் வளர்க்க வேண்டும். நம் வீடு, அப்பா, அம்மா, பள்ளி, ஊடகங்கள் என அனைத்தும் இணைந்தால்தான் மாற்றம் கொண்டு வர இயலும்.
மலர் : மூன்றாம் பால் குறித்து..
அமுதன் : அவர்களும் இறைவனின் படைப்பு. அவர்களும் இப்பொழுதெல்லாம் நன்கு படித்து காவல்துறை, ஊடகம், அரசியல், கலைத்துறை என அனைத்திலும் இடம்பெற்று கொண்டு இருக்கிறார்கள்.
மூவரும் : நாம் வளர்ந்து பெரியவர்களாகும்போது சமுதாயத்தில் வேறுபாடு பார்க்காது அனைவரையும் மதிக்கக் கற்றுக் கொள்வோம்.
நன்றி!
9. மெய்ப்புத் திருத்தங்களை அறிவது எத்துறை வேலைவாய்ப்புக்கு உதவும்? கலந்துரையாடுக.
விடை
கலந்துரையாடல்: கலந்துரையாடுபவர்கள் - சங்கர், குமார், யாழினி.
சங்கர் : மெய்ப்பத் திருத்தம் என்றால் என்ன?
குமார் : அதாவது ஏற்கனவே அச்சிட்ட பிரதியை, அச்சிட்ட செய்திகளை அதன் மூலப்படி கொண்டு திருத்துவது மெய்ப்பத் திருத்தம் எனப்படும்.
யாழினி : நிறுத்தற்குறிபோல் அதற்கும் குறியீடு உண்டா?
குமார் : உண்டு யாழினி. எழுத்தை நீக்க, சேர்க்க, தொடர்பிழை, இடைவெளி, பத்திப்பிரித்தல் என அனைத்துக்கும் உண்டு.
யாழினி : இதனால் என்ன பயன் குமார்?
சங்கர் : இதழியல் துறை, அச்சுக்கலைத் துறை, ஊடகத்துறை என நிறைய வேலை வாய்ப்புகளைப் பெறலாம்.
யாழினி : ஓ..அப்படியா... எதனையும் நாம் உணர்ந்து தெளிவாகக் கற்றால் சிறந்த வேலை வாய்ப்பு உண்டு அப்படித்தானே.
சங்கர் : ஆம். யாழினி, அதனால் நாம் எதையும் இது எதற்கு என்று புறக்கணிக்கக் கூடாது.