வேதியியல் - ஆல்கஹால்களைத் தயாரித்தல் | 12th Chemistry : UNIT 11 : Hydroxy Compounds and Ethers
ஆல்கஹால்களைத் தயாரித்தல்
நீர்த்த காரங்களுடன் ஆல்கைல்ஹாலைடுகளின் கருக்கவர் பொருள் பதிலீட்டு வினை, ஆல்கீனின் நீரேற்றவினையின் மூலம் அதனை ஆல்கஹாலாக மாற்றுதல் மற்றும் கிரிக்னார்டு வினை பொருளை பயன்படுத்தி ஆல்கஹால்களைத் தயாரித்தல் ஆகிய வினைகளை நாம் ஏற்கனவே பதினோராம் வகுப்பில் கற்றிருந்தோம். அவ்வினைகளின் சுருக்கமான விளக்கம் பின்வருமாறு
ஆல்கைல் ஹாலைடுகளை நீர்த்த NaOH உடன் வெப்பப்படுத்தும் போது ஆல்கஹால்கள் உருவாகுகின்றன. ஓரிணைய ஆல்கைல்ஹாலைடுகள் SN2 வினை வழிமுறையில் கருக்கவர் பொருள் பதிலீட்டு வினைக்கு உட்படுகின்றன. ஈரிணைய மற்றும் மூவிணைய ஆல்கைல்ஹாலைடுகள் வழக்கமாக SN2 வினை வழிமுறையில் பதிலீட்டு வினைக்கு உட்படுகின்றன.
R-X + NaOH(aq) -----∆→ R-OH + NaX
R = t – பியூட்டைல், எனில் வினையானது t - பியூட்டைல் கார்பன் நேரயனி உருவாதல் வழிமுறையில் நிகழ்கிறது.
ஆல்கீன்களின் இரட்டை பிணைப்பின் குறுக்கே, கந்தக அமிலத்தின் முன்னிலையில் நீர் மூலக்கூறு சேர்க்கை வினை புரிவதால் ஆல்கஹால்கள் உருவாகின்றன. இச்சேர்க்கை வினையானது மார்கானிகாஃப் வினையினை பின்பற்றி நிகழ்கிறது.
எடுத்துக்காட்டு
H3 -CH=CH2 + H2O ---------Conc.H2SO4→ CH3 -CH(OH)-CH3
புரப்பிலீன் புரப்பன் - 2 - ஆல்
கிரிக்னார்டு வினைப் பொருளிலிருந்து பெறுதல் : ஆல்டிஹைடுகள் / கீட்டோன்களுடன் உலர் ஈதர் முன்னிலையில் கிரிக்னார்டு வினைப்பொருளினை கருக்கவர் பொருள் சேர்க்கை வினை புரியச் செய்து பின் அமில முன்னிலையில் நீராற் பகுக்கும் போது ஆல்கஹால்கள் உருவாகின்றன. ஃபார்மால்டிஹைடானது ஓரிணைய ஆல்கஹாலையும், மற்ற ஆல்டிஹைடுகள் ஈரிணைய ஆல்கஹாலையும், கீட்டோன்கள் மூவிணைய ஆல்கஹாலையும் தருகின்றன.
எடுத்துக்காட்டு
டைபோரேன் ஆல்கீன்களுடன் வினைபட்டு ட்ரைஆல்கைல் போரேனைத் தருகிறது. இதனை மேலும், NaOH முன்னிலையில் H2O2 உடன் வினைப்படுத்த ஆல்கஹால் உருவாகிறது. ஒட்டுமொத்த வினையானது ஆல்கீனின் நீரேற்ற வினையாகும். இவ்வினையில் எதிர் மார்கோனிகாப் விளைப்பொருள் உருவாகிறது.
6CH3 - CH=CH2 + B2H6 → 2(CH3 - CH2 – CH2) 3,B
டிரைபுரப்பைல் போரேன்
(CH3 -- CH2 -- CH2)3B + 3H2O2 ---OH-→ 3CH3 --CH2 --CH2
புரப்பன் - 1- ஆல்
டெட்ராஹைட்ரோபியூரான் (THF) போன்ற கரைப்பான்களின் முன்னிலையில் ஆல்டிஹைடுகள் / கீட்டோன்களை LiAIH4 கொண்டு ஒடுக்கமடையச் செய்து பின் நீராற்பகுக்க ஆல்கஹால்கள் உருவாகின்றன. ரானே நிக்கல், Na-Hg/H2O போன்ற பிற ஒடுக்கும் காரணிகளைப் போலன்றி லித்தியம் அலுமினியம் ஹைட்ரைடானது கார்பனைல் சேர்மங்களில் காணப்படும் இரட்டைப்பிணைப்பினை ஒடுக்குவதில்லை. எனவே நிறைவுறா ஆல்கஹால்களைத் தயாரிக்க இது ஒரு சிறந்த ஒடுக்கும் காரணியாகும்
எடுத்துக்காட்டுகள்
இரண்டிற்கும் மேற்பட்ட வினைசெயல் தொகுதிகள் ஒரு மூலக்கூறில் காணப்படின் அதிக வினைத்திறனுடைய தொகுதியை ஒடுக்கமடையச் செய்ய சற்றே வீரியம் குறைந்த சோடியம் போரோஹைட்ரைடு ஒடுக்கும் காரணியாக பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு சேர்மம் கார்பனைல் மற்றும் கார்பாக்சிலிக் அமிலத் தொகுதி ஆகிய இரண்டினையும் கொண்டிருக்குமாயின், இந்த ஒடுக்கும் காரணி கார்பனைல் தொகுதியை ஒடுக்கும் தன்மையைப் பெற்றுள்ளது.
கிளைக்காலைத் தயாரித்தல்
எத்திலீனை குளிர்ந்த காரம் கலந்த பொட்டாசியம் பெர்மாங்கனேட்டை (பேயரின் காரணி) பயன்படுத்தி ஹைட்ராக்சிலேற்றம் செய்யும் போது எத்திலின் கிளைக்கால் உருவாகிறது என நாம் ஏற்கனவே கற்றறிந்துள்ளோம்.
கிளிசரால் தயாரித்தல்
பல்வேறு இயற்கை கொழுப்புகளில் கிளிசரால் காணப்படுகிறது. மேலும் இது நீண்ட சங்கிலி அமைப்பை உடைய உயர் கொழுப்பு அமிலங்களில் கிளிசரைல் எஸ்டர்களாகக் (ட்ரைகிளிசரைடு) காணப்படுகிறது. இந்த கொழுப்புகளை கார நீராற்பகுப்பிற்கு உட்படுத்தும் போது கிளிசரால் உருவாகிறது. இவ்வினை சோப்பாகுதல் வினை எனப்படும்.
தன் மதிப்பீடு
1. LiAlH4 ஐப் பயன்படுத்தி பென்ட் - 2 - ஈன் - 1 - ஆல் ஐத் தயாரிக்க உதவும் தகுந்த கார்பனைல் சேர்மத்தினை பரிந்துரைக்க.
2. 2 - மெத்தில் புரோப்பீன் - H2SO4 /H2O →
3. பின்வருவனவற்றை கிரிக்னார்டு வினைபொருளைப் பயன்படுத்தி எவ்வாறு தயாரிப்பாய்?
i) மூவிணைய - பியூட்டைல் ஆல்கஹால்
ii) அல்லைல் ஆல்கஹால்
1o, 2° மற்றும் 3o ஆல்கஹால்களை வேறுபடுத்தி அறிய பின்வரும் முறைகள் பயன்படுகின்றன.
அ) லூகாஸ் சோதனை
ஆல்கஹால்களை லூகாஸ் காரணியுடன் (அடர் HCI மற்றும் நீரற்ற ZnCl2 கலவை) அறை வெப்பநிலையில் வினைப்படுத்தும் போது, மூவிணைய ஆல்கஹால்கள் உடனடியாக ஆல்கைல் ஹாலைடுகளைத் தருகின்றன. இது வினை நிகழ்வு ஊடகத்தில் கரையாத் தன்மையினைப் பெற்றிருப்பதால் உடனடியாக கலங்கல் தன்மை உருவாகிறது. ஈரிணைய ஆல்கஹால்கள் 5 முதல் 10 நிமிடங்களில் ஆல்கைல் குளோரைடைத் தருவதால் கலங்கல் தன்மை தாமதமாக ஏற்படுகிறது. ஆனால் அறை வெப்பநிலையில் ஓரிணைய ஆல்கஹால்கள் லூகாஸ் காரணியும் எவ்வித வினையிலும் ஈடுபடாததால் கலங்கல் தன்மையினைத் தருவதில்லை.
ஆ) விக்டர் மேயர் சோதனை
வெவ்வேறு வகையான ஆல்கஹால்கள் உருவாக்கும் நைட்ரோ ஆல்கேன்கள், நைட்ரஸ் அமிலத்துடன் எத்தகைய வினைபுரியும் தன்மையைப் பெற்றுள்ளன என்பதனை அடிப்படையாகக் கொண்டது. மேலும் இம்முறை பின்வரும் படிநிலைகளை உள்ளடக்கியது.
i. ஆல்கஹால்களை I2/P உடன் வினைப்படுத்த ஆல்கைல் அயோடைடு உருவாக்குதல்
ii. இவ்வாறு உருவான ஆல்கைல் அயோடைடை AgNO2 உடன் வினைபடுத்தி நைட்ரோ ஆல்கேன்களை உருவாக்குதல்.
iii. இறுதியாக நைட்ரோ ஆல்கேன்கள் HNO2 உடன் (NaNO2 / HCI கலவை) வினைபடுத்தி பெறப்படும் விளைபொருளுடன் KOH சேர்க்கப்பட்டு கரைசல் காரத்தன்மை பெறச் செய்தல்.
முடிவு
• ஓரிணைய ஆல்கஹால்கள் சிவப்பு நிறத்தினைத் தருகின்றன.
• ஈரிணைய ஆல்கஹால்கள் நீற நிறத்தைத் தருகின்றன.
• மூவிணைய ஆல்கஹால்கள் எவ்வித நிறத்தையும் தருவதில்லை.