வேதியியல் - ஹைட்ராக்ஸி சேர்மங்கள் மற்றும் ஈதர்கள் | 12th Chemistry : UNIT 11 : Hydroxy Compounds and Ethers
அலகு 11
ஹைட்ராக்ஸி சேர்மங்கள் மற்றும் ஈதர்கள்
ஆல்பிரட் பெர்ன்ஹார்ட் நோபல்
ஆல்பிரட் பெர்ன்ஹார்ட் நோபல் என்பவர் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஒரு வேதியியல் அறிஞர் மற்றும் பொறியாளர் கண்டுபிடிப்பாளர் மட்டுமல்லாமல் கொடையாளரும் ஆவார். நைட்ரோகிளிசரினை கிசில்கர் என்னும் மண் போன்ற பொருளில் புதைத்து எடுக்கும் போது அது கையாள்வதற்கு எளிதாகவும் பாதுகாப்பாக இருப்பதைக் கண்டறிந்தார். 1867 இக்கலவையை பதிவு செய்து டைனமைட் என பெயரிட்டு காப்புரிமையும் பெற்றார். நோபல் பரிசுக்களுக்கான உயிலினையும் ஏற்படுத்தினார். நோபல் பரிசு என்ற இப்பெருமை வாய்ந்த விருது வேதியியல் இலக்கியம் அமைதி, இயற்பியல் உடற்கூறியியல் அல்லது மருத்துவத்திற்காக வழங்கப்படுகின்றது.
கற்றலின் நோக்கங்கள் :
இப்பாடப்பகுதியை கற்றறிந்த பின்,
• ஆல்கஹால்களின் முக்கியமான தயாரிப்பு முறைகள் மற்றும் ஆல்கஹால்களின் வினைகளை பற்றி விவரித்தல்
• ஆல்கஹால் மற்றும் ஈத்தர்களின் கருக்கவர் பதிலிட்டு வினைகளின் வழிமுறையை விளக்குதல்.
• ஆல்கஹால்களின் நீக்குதல் வினைகளை விளக்குதல்.
• பீனால்களின் தயாரிப்பு மற்றும்பண்புகளை விவரிக்கவும்
• ஈதர்கள் தயாரிப்பது பற்றியும் அவற்றின் வேதி வினைகளையும் விவாதித்து விளக்குதல்.
• ஆல்கஹால் மற்றும் ஈதர்களின் பயன்பாடுகளை கண்டுணர்தல் ஆகிய திறன்களை மாணவர்கள் பெறுவர்.
பாட அறிமுகம்
ஆல்கைல் ஹேலைடுகளை நீராற்பகுக்கும் போது -OH தொகுதியை வினை செயல் தொகுதியாகப் பெற்றிருக்கும் ஆல்கஹால்கள் எனும் கரிமச் சேர்மம் உருவாகிறது. என்பதனை நாம் ஏற்கெனவே பதினோறாம் வகுப்பில் கற்றறிந்துள்ளோம். - OH தொகுதியைக் கொண்டுள்ள பல கரிமச் சேர்மங்கள் நமது உடற்செயற்பாடுகளில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. எடுத்துக்காட்டாக, கொலஸ்ட்ரால் என்றழைக்கப்படும் கொலஸ்டீரைல் ஆல்கஹால் நமது செல்சவ்வின் ஒரு முக்கியமான பகுதிப்பொருளாகும். நமது உடலில் ரெட்டினாலாக சேமிக்கப்படும் வைட்டமின் A நமது கண்களின் இயல்பான செயல்பாட்டிற்கு காரணமாக அமைகிறது. மருந்துப் பொருட்கள், தொழிற்சாலைகள் முதலிய பல்வேறு பிரிவுகளில் ஆல்கஹால்கள் முக்கியமான செயல்பாடுகளைப் பெற்றுள்ளன. எடுத்துக்காட்டாக, மெத்தனால் தொழிற்சாலைகளில் கரைப்பானாகவும், பெட்ரோலுடன் சேர்க்கப்படும் பொருளாக எத்தனாலும், ஊசி போடும் இடத்தில் தோலினை தூய்மையாக்க ஐசோபுரப்பைல் ஆல்கஹால் பயன்படுவது போன்றவற்றைக் கூறலாம். கரிமவேதி தொகுப்பு வினைகளில் ஆல்கஹால்கள் மிக முக்கிய மூலப்பொருட்களாகும். ஆல்கஹால்கள், பீனால்கள் மற்றும் ஈதர்களின் பொதுவான தயாரிப்பு முறைகள், வேதிவினைகள் மற்றும் பயன்களை இப்பாடப்பகுதியில் கற்றறிவோம்.