Home | 10 ஆம் வகுப்பு | 10வது தமிழ் | உரைநடை: சங்க இலக்கியத்தில் அறம்

இயல் 8 | 10 ஆம் வகுப்பு தமிழ் - உரைநடை: சங்க இலக்கியத்தில் அறம் | 10th Tamil : Chapter 8 : Peruvali

   Posted On :  22.07.2022 02:51 am

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : பெருவழி

உரைநடை: சங்க இலக்கியத்தில் அறம்

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : பெருவழி : உரைநடை: சங்க இலக்கியத்தில் அறம் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

அறம்

உரைநடை உலகம்

சங்க இலக்கியத்தில் அறம்



நுழையும்முன்

தமிழர் பொருள் ஈட்டி அறம்செய்து இன்புற்றனர்; இல்வாழ்க்கையை அறவாழ்க்கையாகக் கொண்டனர்; உலகே பரிசாகக் கிடைத்தாலும் பழிதரும் செயல்களைச் செய்ய மறுத்தனர்; சங்க காலத்தில் அறத்தை மனித உறவின் மையமாகக் கொண்டிருந்தனர்; சமயக் கலப்பில்லாத மானிட அறம் இயல்பாக நிலவிய காலம், சங்ககாலம்.


மனிதன் தனியானவன் அல்லன். அவன் என்றால் சமூகக் கடலின் ஒருதுளி. அவனுக்குள்ளே சமூகம் - சமூகத்துக்குள்ளே அவன். மனிதன் எல்லாரோடும் எல்லாவற்றோடும் எவ்வளவுக்கெவ்வளவு தன்னை இணைத்துக் கொள்கிறானோ அவ்வளவுக்கவ்வளவு அவனுடைய மகிழ்ச்சி பெருகுகிறது. இந்த மகிழ்ச்சிப் பெருக்கில் திளைக்க வேண்டும் என்றால் அனைத்தையும் ஊடுருவிச் செல்லும் பொதுவிதியான அறத்தை மனிதன் ஏற்க வேண்டும்.

சங்ககாலத்திற்குப் பிந்தைய அற இலக்கியங்களின் காலத்தை அறநெறிக்காலம் என்பர். அறநெறிக்கால அறங்கள் சமயம் சார்ந்தவை. ஆனால், சங்க கால அறங்கள் இயல்பானவை. ‘கவிதை வாழ்க்கையின் திறனாய்வு’ என்று திறனாய்வாளர் ஆர்னால்டு கூறுகிறார். அந்த வகையில் சங்ககால வாழ்க்கையில் இருந்து உருவான அறங்களே சங்க இலக்கியத்தில் பதிவு பெற்றுள்ளன. சங்க அறங்கள் சமயங்களிடமிருந்து இரவல் பெறப்பட்டவை அல்ல.

 

அறத்தில் வணிக நோக்கம் கொள்ளாமை

அறம் செய்வதில் வணிக நோக்கம் இருக்கக்கூடாது என்பது சங்ககால மக்களின் கருத்தாக இருந்தது. இப்பிறப்பில் அறம் செய்தால் அதன் பயனை மறுபிறப்பில் பெறலாம் என்ற வணிக நோக்கு கூடாது எனக் கூறப்பட்டது.)

இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம்எனும்

அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்“- புறம்.

எனச் சங்ககால மன்னர்களில் ஒருவரான ஆய் பற்றி ஏணிச்சேரி முடமோசியார் குறிப்பிட்டுள்ளார். நோக்கமின்றி அறம் செய்வதே மேன்மை தருவது என்பது இதில் உணர்த்தப்பட்டுள்ளது.

 

அரசியல் அறம்

சங்கப் பாக்களில் அறம் பற்றிய அறிவுரைகள் பெரும்பாலும் அரசர்களை முதன்மைப்படுத்தியே கூறப்பட்டுள்ளன.

'அறநெறி முதற்றே அரசின் கொற்றம்', ‘அறன்நெறி பிழையாத் திறனறி மன்னர்’ மன்னர்களுடைய செங்கோலும் வெண்கொற்றக்குடையும் அறத்தின் குறியீடுகளாகப் போற்றப்பட்டன. அரசன் செங்கோல் போன்று நேரிய ஆட்சியை மேற்கொள்ள வேண்டும் என்பது பல பாடல்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நீர்நிலை பெருக்கி நிலவளம் கண்டு உணவுப்பெருக்கம் காண்பதும் அதனை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதும் அரசனின் கடமையாகச் சொல்லப்பட்டது. குற்றங்களை, அறத்தின் அடிப்படையில் ஆராய்ந்து தண்டனை வழங்க வேண்டும் என்கிறார் ஊன் பொதிப் பசுங்குடையார். அரசன் அறநெறியில் ஆட்சிசெய்வதற்கு அமைச்சரும் உதவினர். நன்றும் தீதும் ஆய்தலும் அன்பும் அறனும் காத்தலும் அமைச்சர் கடமை என்கிறது மதுரைக்காஞ்சி. ‘செம்மை சான்ற காவிதி மாக்கள்' என்று அமைச்சர்களை மாங்குடி மருதனார் போற்றுகிறார்.

 

அறங்கூறவையம்

அறம் கூறும் மன்றங்கள் அரசனின் அறநெறி ஆட்சிக்குத் துணைபுரிந்தன. அறம் கூறு அவையம் பற்றி ‘அறம் அறக் கண்ட நெறிமான் அவையம்' என்கிறது புறநானூறு. உறையூரிலிருந்த அறஅவையம் தனிச்சிறப்புப் பெற்றது என்று இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. மதுரையில் இருந்த அவையம் பற்றி மதுரைக்காஞ்சி குறிப்பிடுகிறது; அங்குள்ள அவையம் துலாக்கோல் போல நடுநிலை மிக்கது என்கிறது.

 

போர் அறம்

தமிழர், போரிலும் அறநெறிகளைப் பின்பற்றினர். போர் அறம் என்பது வீரமற்றோர், புறமுதுகிட்டோர், சிறார், முதியோர் ஆகியோரை எதிர்த்துப் போர் செய்யாமையைக் குறிக்கிறது. போரின் கொடுமையிலிருந்து பசு, பார்ப்பனர், பெண்கள், நோயாளர், புதல்வரைப் பெறாதவர் ஆகியோருக்குத் தீங்கு வராமல் போர் புரிய வேண்டும் என்று ஒரு புறப்பாடல் கூறுகிறது. தம்மைவிட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது என்பதை ஆவூர் மூலங்கிழார் குறிப்பிட்டிருக்கிறார்.

எறியார் எறிதல் யாவணது எறிந்தோர்

எதிர்சென்று எறிதலும் செல்லான் - புறம் 301.

 

கொடை

வீரத்தைப் போலவே கொடையும் தமிழர்களால் விரும்பப்பட்டது. ஒரு மனிதன் தன்னுடைய மகிழ்ச்சியை மறந்து மற்றவர் மகிழ்ச்சியை நாடுவதுதான் உண்மையான மகிழ்ச்சி. அதாவது தன் மகிழ்ச்சியை மறப்பதுதான் மகிழ்ச்சி.

செல்வத்துப் பயனே ஈதல்

துய்ப்பேம் எனினே தப்புந பலவே

(புறம் 189 :7-8)

என்றார் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்.

கொடையின் சிறப்பால் வள்ளல் எழுவர் போற்றப்படுவது, பழந்தமிழர் கொடை மாட்சியைப் புலப்படுத்துகிறது. எழுவரின் கொடைப் பெருமை சிறுபாணாற்றுப்படையிலும் பெருஞ்சித்திரனார் பாடலிலும் பதிவு செய்யப்பட்டிருப்ப து குறிப்பிடத்தக்கது. ஆற்றுப்படை இலக்கியங்கள், கொடை இலக்கியங்களாகவே உள்ளன. பதிற்றுப்பத்து சேர அரசர்களின் கொடைப் பதிவாகவே உள்ளது. புறநானூற்றின் கொடைப்பதிவும் குறிப்பிடத்தக்கது.

அரியன என்று கருதாது, தயங்காது கொடுத்தலும் ஈதலால் வரும் இழப்புக்கு வருந்தாமையும் நாள்தோறும் கொடுத்தலும் கொடைப் பெருமைகளாகப் பேசப்படுகின்றன. வள்ளல்கள் “இல்லோர் ஒக்கல் தலைவன்”, “பசிப்பிணி மருத்துவன்” என்றெல்லாம் போற்றப்பட்டனர். வழங்குவதற்குப் பொருள் உள்ளதா? என்று கூடப் பார்க்காமல் கொடுக்கும் பிடவூர்க்கிழான் மகன் பெருஞ்சாத்தனை நக்கீரர் பாராட்டுகிறார். வள்ளலின் பொருள் இரவலனின் பொருள்; வள்ளலின் வறுமை இரவலனின் வறுமை என்று பெரும்பதுமனார் குறிப்பிடுகிறார்.

உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் அதியன் என்கிறார் ஔவையார். இரவலர் வராவிட்டாலும் அவர்களைத் தேடி வரவழைத்தல் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனின் இயல்பு என்கிறார் நச்செள்ளையார். பேகன் மறுமை நோக்கிக் கொடுக்காதவன் என்கிறார் பரணர். தன்னை நாடி வந்த பரிசிலன் பொருள் பெறாமல் திரும்புவது, தான் நாட்டை இழந்த துன்பத்தைவிடப் பெருந்துன்பம் எனக் குமணன் வருந்தியதாகப் பெருந்தலைச் சாத்தனார் குறிப்பிட்டுள்ளார். எல்லாவற்றையும் கொடுப்பவன் என்று மலையமான் திருமுடிக்காரியைக் கபிலர் பாராட்டுகிறார்.

புற இலக்கியங்களில் மட்டுமன்றி அக இலக்கியங்களிலும் ஈதல் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன. ஈயாமை இழிவு, இரப்போர்க்கு ஈயாது வாழ்தலைவிட உயிரை விட்டுவிடுதல் மேலானது என்றெல்லாம் கலித்தொகையில் கூறப்பட்டுள்ளது.

வள்ளல்கள் மட்டுமன்றிப் புலவர்களும் ஈந்து மகிழ்ந்ததை இலக்கியம் பதிவு செய்துள்ளது. தான் பெற்றதைப் பிறருக்கு வழங்கும் பெருஞ்சித்திரனாரின் பேருள்ளம் புறநானூற்றில் புலப்படுத்தப்பட்டிருக்கிறது.

 

உதவி

பிறருக்கு உதவுதல் என்பதைச் சிறந்த அறமாகச் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. உதவி செய்தலை ஈழத்துப் பூதன் தேவனார் 'உதவியாண்மை' என்று குறிப்பிடுகிறார். தன்னைத் தாண்டிப் பிறரைப் பற்றிச் சிந்திக்கும்போது, இருக்கும் நிலையை ஒதுக்கி, தான் இருக்க வேண்டிய நிலை எது என்பதை மனிதன் உணர்கிறான் எனலாம். அன்பு என்ற சுடருக்குத் தியாகம்தானே எண்ணெய்யாக இருக்க முடியும்?

பிறர் நோயும் தம் நோய்போல் போற்றி அறன்அறிதல்

சான்றவர்க்கு எல்லாம் கடன் (கலி.139)

என்று பிறர் துன்பத்தைத் தம் துன்பமாகக் கருதி, உதவுதல் பற்றி நல்லந்துவனார் குறிப்பிடுகிறார்.

'உண்மையான செல்வம் என்பது பிறர் துன்பம் தீர்ப்பது தான்’ என்கிறார் நல்வேட்டனார்.

சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்

புன்கண் அஞ்சும் பண்பின்

மென்கண் செல்வம் செல்வம் என்பதுவே (நற். 210)

உறவினர் கெட, வாழ்பவனின் பொலிவு அழியும் என்று பெருங்கடுங்கோ குறிப்பிடுகிறார். இதனால்தான் 'செல்வம் என்பது சிந்தையின் நிறைவு' என்கிறது தமிழ் இலக்கியம். 'நிறைவடைகிறவனே செல்வன்' என்கிறது சீன நாட்டுத் தாவோயியம். உடல் உறுப்புகள் ஒன்றுக்கொன்று உதவுவது போலச் சமூக உறுப்புகளான மனிதர்களும் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ள வேண்டும். இதயம் இரத்தத்தை எல்லாம் தனக்கே வைத்துக் கொண்டால் என்ன ஆவது? இரைப்பை, உணவை அப்படியே தானே வைத்துக் கொண்டால் என்ன ஆவது? பிறருக்கு உதவாமல், மனிதத்திற்குக் கொடும்பாவி கட்டுவது சங்க காலத்தில் இல்லை.

 

வாய்மை

வாய்மையைச் சிறந்த அறமாகச் சங்க இலக்கியங்கள் பேசுகின்றன. வாய்மை பேகம் நாவே உண்மையான நா என்ற கருத்தை,

"பொய்யார் செத்தா”, “பொய்படுபறியா வயங்கு செந்தா” என்று இலக்கியங்கள் கூறுகின்றன.

நாக்கு ஓர் அதிசயத் திறவுகோல் என்பார்கள். இன்பத்தின் கதவைத் திறப்பதுவும் அதுதான். துன்பத்தின் கதவைத் திறப்பதுவும் அதுதான். மெய் பேசும் நா மனிதனை உயர்த்துகிறது. பொய்பேசும் நா மனிதனைத் தாழ்த்துகிறது.

'பிழையா நன்மொழி' என்று வாய்மையை நற்றிணை குறிப்பிடுகின்றது; இதற்கு மாறாகப் 'பொய் மொழிக் கொடுஞ்சொல்' என்று பொய்யைக் குறிப்பிடுகிறது. நிலம் புடைபெயர்ந்தாலும் பொய் சொல்லக் கூடாது என்பது பல பாடல்களில் வற்புறுத்தப்பட்டுள்ளது. வாய்மையைப் பற்றி, சங்ககால மக்கள் கொண்டிருந்த கருத்தழுத்தத்தை இப்பகுதிகள் புலப்படுத்துகின்றன. பொய்ச்சான்று கூறாமையும் வலியுறுத்தப்பட்டது.

சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள், ஒரு மனிதன் தனியாகவும் சமூக உறுப்பினனாகவும் இயங்குவதற்கும் அவனது பண்பு நலனை உருவாக்குவதற்கும் உதவும் விதிமுறைகள் எனலாம்.

தாம் சிந்திக்காமல் பிறர் சொல்ல அறியும் அறம் மூன்றாம் தரமானது. சிந்தித்து அறிந்து கொள்ளும் அறம் இரண்டாம் தரமானது. இயல்பாக அறியும் அறம் முதல் தரமானது. சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இயல்பான முதல் தரமான அறங்கள் எனலாம்.

 

எத்திசையும் புகழ் மணக்க.....

போதிதர்மர்

கி.பி.(பொ.ஆ.) ஆறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காஞ்சி மாநகரத்துச் சிற்றரசர் ஒருவர் போதிதர்மர் என்னும் சமயப்பெயர்பூண்டு சீனாவுக்குச் சென்றார். பௌத்த சமயத் தத்துவத்தின் ஒரு பிரிவைப் போதித்தார். அதிலிருந்து உருவானதே "ஜென்" தத்துவம். இது, பின்னர் ஜப்பான் முதலிய நாடுகளுக்கும் பரவிச் செழித்து விளங்கியது. போதி தருமருக்குச் சீனர்கள் கோவில் கட்டி சிலை வைத்து இன்றளவும் வணங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

 

கற்பவை கற்றபின்...

1. பாடப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள அறக்கருத்துகளை வலியுறுத்தும் சங்க இலக்கியப் பாடலடிகள் ஐந்தினைத் தொகுத்து அவை கூறும் அறச் செய்திகளை எழுதுக.

2. கொன்றை வேந்தன் முதலான பிற்கால அறநூல்களின் பெயர்களை அறிந்து, அவற்றுள் ஏதேனும் ஒரு நூலின் அறக் கருத்துக்களை எடுத்துக் கொண்டு அவை இன்றும் பொருந்தி நிற்பது குறித்துக் கலந்துரையாடுக.

 

Tags : Chapter 8 | 10th Tamil இயல் 8 | 10 ஆம் வகுப்பு தமிழ்.
10th Tamil : Chapter 8 : Peruvali : Prose: Sanga illakeyathil aramm Chapter 8 | 10th Tamil in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : பெருவழி : உரைநடை: சங்க இலக்கியத்தில் அறம் - இயல் 8 | 10 ஆம் வகுப்பு தமிழ் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : பெருவழி