இயல் 8 | 10 ஆம் வகுப்பு தமிழ் - துணைப்பாடம்: இராமானுசர் (நாடகம்) | 10th Tamil : Chapter 8 : Peruvali
அறம்
விரிவானம்
இராமானுசர் – நாடகம்
நுழையும்முன்
நாளுக்கு ஒருமுறை மலர்வது சண்பகம்.
ஆண்டுக்கு ஒருமுறை மலர்வது பிரம்ம கமலம். பன்னிரண்டு ஆண்டுக்கு ஒரு முறை மலர்வது
குறிஞ்சி. தலைமுறைக்கு ஒருமுறை மட்டுமே மலர்வது மூங்கில். அதைப்போல் நம்
தலைமுறைக்கு ஒரு முறை பிறப்பவர்கள் ஞானிகள். அவ்வாறு வந்தவரைப் பற்றிய நிகழ்ச்சி
ஒன்று, இதோ நாடகமாய்....
காட்சி - 1
இடம்: திருக்கோட்டியூர் பூரணர் இல்லம்
பாத்திரங்கள்: இராமானுசர் - கூரேசர் -
முதலியாண்டான் - பூரணர்
முதலியாண்டான்: (இராமானுசரைப் பார்த்து)
சுவாமிகளே! புனித திருமந்திரத் திருவருள் வேண்டி மீண்டும் இங்கு வந்துள்ளோம்.
இன்றாவது நமது விருப்பம் நிறைவேறுமா?
இராமானுசர்: முதலி, இதுவரை எத்தனை முறை வந்துள்ளோம்?
முதலியாண்டான்: பெரிய நம்பிகள் கூறினாரென்று
பதினெட்டு முறை வந்துள்ளோம் சுவாமிகளே!
இராமானுசர்: வருந்த வேண்டாம் முதலியாண்டார்.
நம் விருப்பம் இன்று உறுதியாக நிறைவேறும்.
முதலியாண்டான்: எப்படிக் கூறுகிறீர்கள் சுவாமி?
இராமானுசர்: திருமந்திரத் திருவருள் பெறத்
தண்டும்,
கொடியுமாக இராமானுசரை வரச் சொல்லுங்கள் என்னும் செய்தி, பூரணரால் திருவரங்கத்திற்கு அனுப்பப்பட்டதன் அடிப்படையிலேயே வந்துள்ளோம்.
மனம் தளர வேண்டாம். நமது வருகையை அவருக்குத் தெரிவியுங்கள்.
(வீட்டினுள்ளிருந்து வந்த பூரணர் வாசலில் மூவர் நிற்பதைப் பார்த்துத்
திகைக்கிறார்)
கூரேசர்: சுவாமிகளே! வணக்கம்! தங்கள் கட்டளைப்படி
புனித திருமந்திரத் திருவருளுக்காக வந்துள்ளோம்.
பூரணர்: அடியவர்களே வணக்கம்! (இராமானுசரைப்
பார்த்து) தண்டு, கொடியுடன் உங்களை மட்டும் தானே
வரச் சொன்னேன்!
இராமானுசர்: ஆம்
சுவாமி! தங்கள் கட்டளை கிடைத்த பின்பே புறப்பட்டோம்.
பூரணர்: பிறகெதற்குத் தாங்கள் உறவுகளை உடன் அழைத்து
வந்துள்ளீர்கள்?
இராமானுசர் : சுவாமிகள் என்மேல் கோபம் கொள்ள
கூடாது. தங்கள் விருப்பப்படியேதான் வந்துள்ளேன். தாங்கள் கூறிய தண்டு, கொடிக்கு இணையானவர்கள் இவர்கள். எனவே அடியவர்களாகிய எங்கள்மேல் கோபம்
கொள்ளாது பரிவு கொண்டு திருவருள் புரிய வேண்டும்.
பூரணர்: உடையவர்களே! நான் கூறும் மந்திர மறைபொருள்
திருவரங்கனின் திருவருளால் கிடைக்கப் பெற்றது. இது நமது பரம ஆச்சாரியார் ஆளவந்தார்
அவர்களால் எனக்கு மட்டுமே கிடைத்த அரிய பொக்கிசம். இதை நான் உங்களுக்குக்
கூறுகிறேன். இதை நீங்கள் நான் தோறும் தியானிப்பதால், பிறவித்தளை
நீங்கும். இறைவனடி செல்ல இயலும். இளையாழ்வாரே! இவர்கனை நீங்கள் தண்டு, கொடி எனக் கூறியதால் உங்கள் மூவருக்குமாகத் திருமந்திரத்தைக் கூறுகிறேன்.
(மூவரும் வீட்டினுள் சென்று மூன்று மனைப்பலகையில் அமர, பூரணர் எதிர் மனைப்பலகையில் அமர்கிறார்)
இராமானுசர் : கோபம் கொள்ளாது திருவருள்
கொண்டமைக்குத் தலைவணங்குகிறோம் கவாமி!
பூரணர்: ஆண்டவனின் அடியவர்களுக்குத் திருமந்திரம்
உரைப்பதில் நாம் உளம் மகிழ்கிறோம்.
(மூவரும் கைகூப்பி நன்றி கூறுகின்றனர்)
பூரணர்: நான் கூறுவதை நன்றாகக் கவனியுங்கள். கூறப்
போகின்ற திருமந்திர மறைபொருள்கள் உங்கள் மூவருக்கு மட்டுமே தெரிய வேண்டும். வேறு
யாரிடமாவது இதை நீங்கள் கூறுவீர்கள் எனில் அது ஆசிரியர் கட்டளையை மீறியதாகும்.
அப்படி நடந்தால் அதற்குத் தண்டனையாக நரகமே கிட்டும்.
(மூவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்கின்றனர்)
பூரணர்: ஆச்சாரிய நியமத்தை மீறிய பாவிகளாக நீங்கள்
மாற மாட்டீர்கள் என்னும் நம்பிக்கையுடன் திருமந்திரத்தைக் கூறுகிறேன். செவிகளைக்
கூர்மைப்படுத்திக் கேளுங்கள். நான் கூறும் திருமந்திரத்தை நீங்களும் சேர்ந்து
சொல்லுங்கள்.
'திருமகளுடன் கூடிய நாராயணனின் திருப்பாதங்களைப் புகலிடமாகக் கொள்கிறேன்.
திருவுடன் சேர்ந்த நாராயணனை வணங்குகிறேன்.'
(பூரணர் கூறிய திருமந்திரத்தை மூவரும் மூன்று முறை உரக்கச் சொல்கின்றனர்.)
பூரணர்: உங்கள் வாழ்வில் இன்றைய நாள் மிகவும் நல்ல
நாள். இறைவனின் திருவருளால் இன்று திருமந்திரம் உமக்குக் கிடைத்தது.
இராமானுசர்: உங்கள் திருவருளும் அதில்
உள்ளது சுவாமிகளே !
பூரணர்: நான் கூறிய கருத்தைக் கண்டிப்புடன்
பின்பற்ற வேண்டும். ஆசிரியர் கட்டளையை மீறிவிட வேண்டாம்.
மூவரும்: நினைவில் உள்ளது சுவாமிகளே! ஆண்டவனின்
அடியவர்களாகிய எங்களுக்கு, திருவருள் கொண்டு திருமந்திரம்
கூறியமைக்கு மிக்க நன்றி சுவாமிகளே!
காட்சி - 2
இடம் - திருக்கோட்டியூர் சௌம்ய நாராயணன் திருக்கோவில்
பாத்திரங்கள் : இராமானுசர், கூரேசர், முதலியாண்டான், பூரணரின் சீடர், பொதுமக்கள்
பொதுமக்களில் ஒருவர்: எல்லாரும் வேகமா எங்கெ போறாங்க?
பொதுமக்களில் மற்றொருவர்: உமக்குச் சேதி தெரியாதா?
வைணவ சாமியாரு ஒருத்தரு பெறவிப் பிணிகளைத் தீர்க்குற மந்திரத்தெச்
சொல்லப்
போறாராம்.
பொதுமக்களில் இன்னொருவர்: அப்படியா சேதி! வாங்க நாமும்
போகலாம்.
(கோவிலின் மதில் சுவரின் மேல் இராமானுசர் நிற்க, கீழே
பொதுமக்களுடன் கூரேசரும், முதலியாண்டானும் நிற்கின்றனர்)
இராமானுசர் : (உரத்த குரலில்) பெரியோர்களே!
பக்தியால் முக்திக்கு வழிகாணத் துடிப்பவர்களே! அருகில் வாருங்கள் அனைவரும்.
இன்னும் அருகில் வாருங்கள். கிடைப்பதற்கரிய பிறவிப்பிணியைத் தீர்க்கும்
அருமருந்தான திருமந்திரத்தை உங்களுக்குக் கூறுகிறேன். அனைவரும் இணைந்து
மந்திரத்தைச் சொல்லுங்கள்.
(இராமானுசருடன் சேர்ந்து அனைவரும் மூன்று முறை கூறுகின்றனர்)
இராமானுசர் : எம்பெருமானே! நான் இன்று உளம்
மகிழ்கிறேன். எளிய மக்களுக்குத் தங்களது பிறவிப்பிணியைத் தீர்க்கும்
திருமந்திரத்தைக் கூறி அவர்களை உன் திருவடிகளைப் புகலாகப் பெறச் செய்துவிட்டேன்.
கூரேசர்: பார்த்தாயா முதலி, பிறர் நலமாக வாழ, தாம் வருந்திப் பெற்ற
மந்திரத்தையும் கூறிவிட்டாரே!
முதலியாண்டான் : பூரணரின் கண்டிப்பையும் மீறிப்
பொதுமக்கள் நலனுக்காகக் கூறியது, யாரும் செய்ய இயலாத செயல்.
(கூட்டத்திலிருந்த பூரணரின் சீடர், கைகளால் ஓசை
எழுப்பி இராமானுசரைக் கீழே வருமாறு கூப்பிடுகிறார்).
பூரணரின் சீடர்: பூரணரின் வார்த்தையை மீறி
விட்டீர். இங்கு நடந்ததை அறிந்து அவர் கடும் கோபமாக உள்ளார். அவர் இல்லத்துக்குத்
தங்களை அழைத்து வரச் சொன்னார்.
இராமானுசர்: உறுதியாக என்மீது கோபமாகத்தான்
இருப்பார். வாருங்கள்! அவர் இல்லம் செல்வோம்.
(அனைவரும் பூரணர் இல்லம் நோக்கி நடக்கின்றனர்)
காட்சி - 3
இடம் : பூரணர் இல்லம்
பாத்திரங்கள் : இராமானுசர், பூரணர், கூரேசர்,
முதலியாண்டான்
மூவரும்: வணக்கம் சுவாமிகளே !
பூரணர்: வாருங்கள் சுவாமி! வாருங்கள். நீங்கள்
குருவிற்கு நம்பிக்கைக்கேடு செய்து விட்டீர்கள்! இதற்கு என்ன தண்டனை என்று
தெரியுமா?
இராமானுசர்: ஞான குருவே! முதலில் எம்மை
மன்னித்தருளுங்கள். நாங்கள் செய்த இரண்டகத்திற்குக் கொடிய தண்டனையான நரகமே
கிட்டும் சுவாமிகளே! நான் அதை மறக்கவில்லை.
பூரணர்: அது தெரிந்துமா, நீங்கள் பிழை செய்தீர்கள்?
இராமானுசர்: ஆம் சுவாமிகளே!
பூரணர்: தவறு எனத் தெரிந்தும் ஏன் செய்தீர்கள்?
இராமானுசர்: கிடைப்பதற்கரிய மந்திரத்தைத்
தங்களின் திருவருளால் நான் பெற்றேன். அதன் பயன் எனக்கு மட்டுமே கிட்டும். அந்த
அருமந்திரத்தை அனைவருக்கும் கூறினால், துன்பத்தில்
உழன்று பேதை வாழ்வு வாழ்ந்து வரும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களின் பிறவிப்பிணி
நீங்கி பேறு பெறுவார்கள்.
இதனால்
நான் மட்டுமே தண்டனை கிடைக்கப்பெற்று நரகத்தைச் சேர்வேன். ஆனால் என் மக்கள்
அனைவர்க்கும் நலம் கிட்டும். எல்லாரும் நலமுடன் வாழ்வார்கள் கவாமி!
பூரணர்: எம் பெருமானே! உங்களுக்கு இருந்த பரந்த
அருள் உள்ளம் இதுவரை எனக்கு இல்லாமல் போனதே! நம் பரமாச்சாரியார் ஆளவந்தாரின் திரு
உள்ளத்தை அறிந்தவர் தாங்கள் மட்டுமே! இறைவனின் திருவருளை உலகிற்கு உணர்த்தியவர்
தாங்களே! நான் மகிழ்ச்சி பொங்கக் கூறிய ‘எம் பெருமான்' என்னும் திருநாமம் என்றென்றும் உமக்கு நிலைத்து, நீங்கள்
நீடூழி வாழ வேண்டும்.
இராமானுசர்: எம்மை மன்னித்தருளியமைக்கு
நன்றி சுவாமிகளே! விடை தாருங்கள்!
பூரணர்: விடை தருவதற்கு முன்பு, நான் மற்றொன்றையும் அளிக்கிறேன். இதோ என் மகன் செளம்ய நாராயணனைத்
தங்களிடம் அடைக்கலமாக அளிக்கிறேன். ஏற்றுக்கொண்டு விடை பெறுங்கள் எம் பெருமானே!
இராமானுசர்: சுவாமிகளே! முன்பு
கிடைப்பதற்கரிய திருமந்திரத்தை எமக்களித்தீர்கள். இன்றோ உங்களின் அன்புத்
திருமகனையும் எமக்களித்துள்ளீர்கள். நான் பெரும்பேறு பெற்றவன் ஆகிவிட்டேன். மிக்க
மகிழ்ச்சி. விடை தாருங்கள்! புறப்படுகிறோம்!
(பூரணர் விடை தர இராமானுசர் சௌம்ய நாராயணனுடன் முன் செல்லக் கூரேசரும்
முதலியாண்டானும் பின் தொடரப் புறப்பட்டுச் செல்கின்றனர்.)
முன்தோன்றிய மூத்தகுடி
"கூர்வேல் குவைஇய மொய்ம்பின்
தேர்வண் பாரிதண் பறம்பு நாடே!"
புறநானூறு, 118:4-5
கற்பவை கற்றபின்...
1.
கருத்துகளை உரைநடையாகப் படிப்பதிலும் நாடகமாகப் படிப்பதிலும்
நீங்கள் உணரும் வேறுபாடுகள் குறித்துக் கலந்துரையாடுக.
2.
இந்நாடகம் வெளிப்படுத்துவது போன்று இராமானுசர் வாழ்க்கை நிகழ்வுகள்
சிலவற்றைத் தொகுத்து, அவை குறித்த உங்களின் கருத்துகளை
எடுத்துரைக்க.