Home | 11 ஆம் வகுப்பு | 11வது தமிழ் | துணைப்பாடம்: செவ்வி

நர்த்தகி நடராஜ் | இயல் 8 : 11 ஆம் வகுப்பு தமிழ் - துணைப்பாடம்: செவ்வி | 11th Tamil : Chapter 8 : Yaaraiyum mathithu vall

   Posted On :  09.08.2023 07:52 am

11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : யாரையும் மதித்து வாழ்

துணைப்பாடம்: செவ்வி

11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : யாரையும் மதித்து வாழ் : துணைப்பாடம்: செவ்வி - நர்த்தகி நடராஜ் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் 8

விரிவானம்

செல்வி

- நர்த்தகி நடராஜ்

நுழையும்முன்

முத்தமிழ் வளர்த்த மதுரையில் பிறந்து தம் நாட்டியத் திறமையினால் உலகம் முழுவதும் எண்ணற்ற ரசிகர்களைப் பெற்றவர். தன்னம்பிக்கை, உழைப்பு, விடாமுயற்சிகொண்டு நாட்டியக்கலையில் தமக்கெனத் தனியிடத்தைப் பெற்றவர். சிறுபான்மையிலும் சிறுபான்மையினராக வாழும் திருநங்கைகளுக்கு மட்டுமே இருக்கும் தடைக்கற்களையும்கூடப் படிக்கட்டுகளாக மாற்றலாம் என்று உலகுக்குக் காட்டியவர்; அவர், நர்த்தகி நடராஜ்.

 

அமெரிக்காவில் ஒரு நடன நிகழ்ச்சிக்காகத் தமிழகத்தைச் சேர்ந்த பரதநாட்டியக் கலைஞர் ஒருவரை விழா ஏற்பாட்டாளர்கள் அழைத்திருந்தனர். வந்திறங்கியவரைப் பார்த்து அதிர்ந்த அவர்கள், இரண்டு வாரங்கள் நடைபெறுவதாக இருந்த நிகழ்ச்சியை ஒரே நாள் நிகழ்ச்சியாக மாற்றினர். காரணம் அறிந்த அந்தக் கலைஞர், மனக்கலக்கத்துடன் முதல் நாள் நிகழ்வில் கலந்து கொண்டார். மேடைக்குச் சென்றார்; நடனத்தைத் தொடங்கினார். அவருடைய கால் சலங்கை சப்தம் மேடையை நிறைக்க, அரங்கம் அமைதியானது.

கண்களில் நவரசம், கால்களில் துடிப்பு, உயிரோட்டமான உடல்மொழி என இதுவரையிலும் கண்டிராதவொரு புதுமையான உலகுக்குப் பார்வையாளர்களை, அவருடைய நடனம் விரல்பிடித்து அழைத்துச் சென்றது. அரங்கத்திலிருந்து எழுந்த கரவொலியில் அவருடைய கவலைகள் கரைந்தன. ஒரு நாளோடு முடிவதாக இருந்த அவருடைய நடன நிகழ்ச்சி, இரண்டு மாதங்கள் நீண்டது. அந்த நடனக் கலைஞர் நர்த்தகி நடராஜ்.

அவரைத்தான் நாம் நம்முடைய பள்ளி ஆண்டுமலருக்காக இன்றைக்கு நேர்காணல் செய்யப் போகிறோம். அவரைச் சந்திப்போமா?

வணக்கம் நர்த்தகி. உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி. உங்கள் இளமைப்பருவத்தைப் பற்றிச் சொல்லுங்கள்.

நான் மதுரையில் உள்ள அனுப்பானடியைச் சேர்ந்தவள். என் தோழியின் பெயர் சக்தி. நானும் அவளும் ஒன்றாகவே நடனம் பயின்றோம். ஐந்து வயதில் தொடங்கிய எங்கள் நட்பு இன்றுவரையிலும் தொடர்கிறது.

என் முன்னேற்றத்தைத் தன் முன்னேற்றமாகக் கருதும் சக்தி இல்லையேல் நான் இந்த அளவுக்கு வளர்ந்திருக்க முடியாது.

நீங்கள் யாரிடம் நடனம் கற்றீர்கள்?

இளமையில் வைஜெயந்தி மாலாவின் நடனத்தால் ஈர்க்கப்பட்டு, அவருடைய குருவான தஞ்சை கிட்டப்பாவிடம் பரதம் கற்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் சென்று அவரிடம் என் ஆசையைத் தெரிவித்தேன். தொடக்கத்தில் அவர் இசைவு தரவில்லை. ஓராண்டு விடாமுயற்சியுடன் போராடி இறுதியில் வெற்றி பெற்றேன்.

கிட்டப்பா என்னைத் தம் மகளாகவே ஏற்று, தம் இல்லத்திலேயே தங்க வைத்துப் பரதம் கற்றுக் கொடுத்தார். அவரே 'நர்த்தகி' என்று எனக்குப் பெயர் சூட்டினார்.

நீங்கள் பெண்மையை உணர்ந்ததால் பரதம் கற்றீர்களா? பரதம் கற்றதால் பெண்மையை உணர்ந்தீர்களா?

இது ரெட்டைச்சடை மாதிரி. ஒண்றோடு ஒன்று பிணைந்தது. பெண்மையை வெளிப்படுத்துவதற்கான ஊடகமாகப் பரதம் இருந்தது. பரதத்தில் ஊறித் தினைத்தபோது பெண்மை புதிதாகப் பிறந்தது. பரதத்தில் பெண்மையை வெளிப்படுத்தும் நொடி இருக்கிறதே, அது வார்த்தைகளில் சொல்ல முடியாத உணர்வு. நதியலையில் விழுந்த இலைபோல, காற்றில் பறக்கும் இறகுபோல மனம் அதன்போக்கில் செல்லும். எல்லாக் கட்டுகனையும் உடைத்தெறிந்த நிம்மதி அந்த வினாடியில் கிடைக்கும். ஒரு வகை ஆழ்ந்த மயக்கம். கனவுலகின் சஞ்சாரம். அந்த விநாடியில் உலகத்தையே மறந்து பறந்துகொண்டிருப்பேன்.

நீங்கள் தொடக்கத்தில் ஆடத் தொடங்கியதில் இருந்து இப்போது ஏதேனும் மாற்றத்தை உணர்கிறீர்களா?

என்னுடைய குழந்தைப் பருவத்திலேயே எனக்குள் மறைந்திருந்த பெண்மையைக் கண்டுகொண்டேன். எந்த மனத்தடையுமின்றி என்னை உணர்த்துவதற்கு நடனம் உதவி செய்தது. தொடக்கத்தில் திரைப்படங்களில் வரும் நடனம் என்னை ஈர்த்தது. அதைப் பார்த்து நான் நடனம் ஆடத் தொடங்கினேன். நிகழ்ச்சிக்காக ஆடத் தொடங்கியபோது ஒவ்வொரு நிகழ்வும் மூன்று மணி நேரம் எடுத்துக் கொள்ளும். இன்றுபோல் அல்லாமல் நாட்டியத்தைவிட அதன் உட்கூறுகளை அறிமுகம் செய்வதற்கு அதிக நேரமும் காலமும் ஆகும். சில சமயங்களில் நாட்டியத்திற்கான கருத்தை ராக தாளத்துடன் அறிமுகம் செய்வேன்.


உங்களைப் போன்ற திருநங்கையர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய நீங்கள், பரதம் ஆடிக்கொண்டிருக்கிறீர்களே?

தொன்மை வாய்ந்த தமிழர் மரபில் பிறந்த நான் திருநங்கையர்க்கான இடம் என்ன என்பதை அறிய நினைத்தேன். அதுவே இலக்கியத்தின் பக்கம் என்னைத் தள்ளியது. சங்க இலக்கியத்தில் இருந்து சிற்றிலக்கிய காலம் வரை ஆழ்ந்து படித்தேன். இன்று மட்டுமல்ல எல்லாக் காலகட்டத்திலும் திருநங்கையர் இருந்திருக்கின்றனர். தொல்காப்பியத்திலும் அதற்கான சான்று இருக்கிறது. சிலப்பதிகாரத்தில் 11 வகையான ஆடற்கலைகள் பற்றிய குறிப்புகள் உள்ளன. எனவே தமிழச்சி என்பதில் தாளாத பெருமை கொண்ட நான் பரதத்தின் பக்கம் திரும்பினேன். நம் கலையை நாம் ஆடவில்லையானால் வேறு யார் ஆடுவது? சங்க இலக்கியம் தொடங்கித் தற்போதைய நவீன கவிதை வரையிலும் நடனத்தில் முயல்கிறேன். இதுவும் ஒரு வகை விழிப்புணர்வு ஆயுதம்தான்.

வெகுசன மக்களின் நேரடித் தொடர்பில் இல்லாத கலைவடிவத்தை நிகழ்த்துகிறோம் என்ற எண்ணம் உங்களுக்கு எப்போதாவது வந்ததுண்டா?

பரத நாட்டியத்தை, வெகுசன மக்களின் கலை இல்லை என்பதை நான் முற்றிலும் மறுக்கிறேன். பரதம் என்ற சொல்லுக்கு வெறும் எழுபது வயதுதான் என்பதை நான் ஏற்றுக்கொன்கிறேன். பரத நாட்டியம் நிகழ்த்துபவர்களை ஒதுக்கிவிட்டு அவர்களை ஒரு சாரார் எனக் குறுக்கி வைத்தது நம்முடைய தவறு. கலையை எல்லோரும் நுகரவேண்டும். அட்லாண்டாவிலும் ஆண்டிபட்டியிலும் ஒரே மாதிரிதான் பரதம் நிகழ்த்துகிறேன். மக்களும் அதைச் சரியாக உள்வாங்கிக் கொள்கின்றனர்.

உங்கள் அபிநயத்தில் வெளிப்படும் நுட்பமான முத்திரைகளை மக்கள் சரியான முறையில் உள்வாங்கிக் கொள்கின்றனரா?

சமீபத்தில் ஜப்பானிலுள்ள ஓசாகா நகரத்திற்குச் சென்றிருந்தபோது திருவாசக, தேவாரப் பண்ணிசைப் பாடல்களைப் பரதமாக நிகழ்த்தினேன். அங்குத் தமிழர்களும் இல்லை; இந்தியர்களும் இல்லை; முழுக்க ஜப்பானியர்கள் . அவர்களுக்குப் பரதம், தேவாரம், திருவாசகம் எதுவும் தெரியாது. ஆனால், அந்த அபிநயத்தில் அவர்கள் கண்கலங்கியதும் அங்கு நிலவிய மௌனமும் எழுந்த கரகோஷமும் என்னால் மறக்க முடியாதது. எந்த அளவுக்குப் பரதத்தை அவர்கள் முழுமையாக உள் வாங்கினர் என்பதை நான் புரிந்துகொண்டேன்.

உலகமயமாக்கலுக்குப்பின் தமிழகத்தில் பண்பாட்டு மாற்றம் நடந்திருப்பதை மறுக்க முடியாது. காப்பியம், புராணக் கதைகளை மையமாக வைத்து நீங்கள் பரதம் நிகழ்த்துகிறீர்கள். இதன்மூலம், இழந்த பண்பாட்டை மீட்க முடியும் என நினைக்கிறீர்களா?

நமக்கென்று பெரிய பண்பாட்டு மரபு இருக்கிறது. வாழ்வாங்கு வாழ்ந்தவர் நாம். நம் வேர்களை நாம் புறக்கணிக்கக் கூடாது.

நர்த்தகி நடராஜ் பெற்ற விருதுகள்


தமிழக அரசின் கலைமாமணி விருது, இந்திய அரசின் சங்கீத நாடக அகாதெமி விருது, இந்திய அரசுத் தொலைக்காட்சியின் கிரேடு கலைஞர், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் சிறந்த கலைஞர், தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் மதிப்புறு முனைவர் பட்டம்.

ஐரோப்பியப் பண்பாட்டில் ஊறித் திணைத்திருக்கும் நார்வேயில் நிகழ்ச்சி நடத்தும்போது, திருக்குறளை மையமாக வைத்தே மாணவிகளுக்குப் பயிற்சி கொடுத்தேன். அந்த வினாடியில் இருந்து திருக்குறளை ஆர்வமாகப் படித்தனர். அது பற்றி அனைத்துத் தகவல்களையும் விரல்நுனிக்குக் கொண்டு வந்தனர். 'அடுத்த ஜென்மத்தில் நான் தமிழனாகப் பிறந்து திருக்குறள் படிக்க வேண்டும்' என்ற காந்தியின் ஆசையை, வரலாற்றில் இருந்து தோண்டி எடுத்திருந்தனர். கலையின் வழியாகப் பண்பாட்டு மாற்றங்கள் நிகழ்ந்தே தீரும்.

நீங்கள் மிகச்சிறந்த நாட்டியக்காரர் என்பதை அறிவோம். அது தவிர்த்து, உங்களுடைய ஆர்வம், விருப்பம் எத்துறைகளில் உள்ளன?

நான் தமிழ்வழிக் கல்வி பயின்றவள். என்னுடைய ஆசிரியர்கள் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார்கள். உண்மையில் நான் ஒரு வழக்கறிஞர் ஆவதையே முழுமுதல் லட்சியமாகக் கொண்டிருந்தேன். இன்று நான் இதழ்களில் எழுதுவதோடு பல்வேறு தமிழ் இலக்கிய மேடைகளிலும் பேசுகிறேன். நடனமும் வாசிப்புமே என்னை தின்னும் ஒரு குழந்தையாக வைத்திருக்கின்றன. தமிழ் இலக்கியத்தில் சங்கப் பாடல்கள், திவ்வியப் பிரபந்தம். திருப்புகழ் மற்றும் தேவாரம் ஆகியவற்றை நடனம் மூலம் பரப்புவதோடு இவ்விலக்கியங்களைப் பற்றித் தொடர்ந்து ஆய்வு செய்தும் வருகிறேன்.

சோதனைகளை, துயரங்களை எப்படிச் சமாளிக்கிறீர்கள்?

மற்ற மானுடரைவிட எல்லாச் சோதனைகளையும் இரண்டு மடங்கு அனுபவித்திருக்கிறேன். வலிதான் நான் கொடுத்த விலை. அகிலனின் 'தாமரை நெஞ்சம்' கதைநாயகி துக்கம் பொங்கி வரும்போதெல்லாம் ஒரு சொம்புத் தண்ணீர் குடிப்பாள். நான் ஒரு நாட்டியம் ஆடி விடுவேன், அது என் துயரைத் தீர்க்கும்.

உங்களை நெகிழ வைக்கும் தருணம் என்று எதைக் கூறுவீர்கள்?

நான் நடத்தும் வெள்ளியம்பலம் அறக்கட்டளை நடனக் கலைக்கூடம் வாயிலாக நூற்றுக்கணக்கான மாணவிகளை உருவாக்கியுள்ளேன். அம்மாவால் புறக்கணிக்கப்பட்ட என்னை இன்றைக்கு என் மாணவிகள் எல்லோரும் 'அம்மா' என்று அழைக்கும்போது எனக்குள் தாய்மை பெருக்கெடுக்கிறது. அதுவே என்னை நெகிழவும் மகிழவும் வைக்கும் தருணமாக உணர்கிறேன்.

இன்று நர்த்தகி, தன்னுடைய நடனத் திறமையால் அமெரிக்கா, லண்டன், கனடா உள்ளிட்ட உலக நாடுகள் முழுவதும் பயணித்துத் தம் பரதத்தால் பல்லாயிரம் மேடைகளை அழகாக்கி வருகிறார். இவர்தாம் 'திருநங்கை' என்ற சொல்லை அறிமுகப்படுத்தியவர். திருநங்கைகளுள் முதன்முதலில் கடவுச்சீட்டு, தேசிய விருது, மதிப்புறு முனைவர் பட்டம் பெற்றவர் என்ற பல்வேறு முதல் சாதனைகளுக்குச் சொந்தக்காரரான நர்த்தகி நடராஜ் மேலும் பல உயரங்களை எட்ட நம் பள்ளியின் சார்பாக வாழ்த்துவோம்.

சேலத்தைச் சேர்ந்த பிரித்திகா யாஷினி மிகுந்த சிரமங்களுக்கிடையில் 2011ஆம் ஆண்டு கணினிப் பாடப்பிரிவு இளநிலைப் பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். அவர் தற்போது சென்னையில் காவல்துறையின் சட்டம் ஒழுங்குப் பிரிவில் பணியாற்றி வருகிறார். இந்தியாவின் முதல் திருநங்கை காவல் உதவி ஆய்வாளர் என்ற பெருமை இவரைச் சாரும்.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் திருநங்கையான ஜோயிதா மோண்டல் மாகி. இவர் திருநங்கைகளின் முன்னேற்றத்துக்காகப் பணியாற்றி வருகிறார். வடக்கு தினாஜ்பூர் மாவட்டம் இஸ்லாம்பூரில் லோக் அதாலத் நீதிபதியாக அண்மையில் ஜோயிதா மோண்டல் நியமிக்கப்பட்டார். லோக் அதாவத் நீதிபதிப் பதவிக்குத் திருநங்கை ஒருவர் நியமிக்கப்படுவது நாட்டில் இதுவே முதல்முறையாகும்.

தமிழ்நாட்டில், கல்வித்துறையில் மூன்றாம் பாலினப்பிரிவு உருவாக்கப்பட்ட பின்பு பள்ளிப்படிப்பை முடிக்கும் முதலாமவர் தாரிகா பானு. இவர், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அம்பத்தூரில், காமராஜர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் பாடப்பிரிவில் பயின்றார். 2017ஆம் ஆண்டு நடந்த மேல்நிலைப் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற இவர், தற்போது அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் பயின்று வருகிறார்.

Tags : by Nartaki nadaraj | Chapter 8 | 11th Tamil நர்த்தகி நடராஜ் | இயல் 8 : 11 ஆம் வகுப்பு தமிழ்.
11th Tamil : Chapter 8 : Yaaraiyum mathithu vall : Supplementary: Selvi by Nartaki nadaraj | Chapter 8 | 11th Tamil in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : யாரையும் மதித்து வாழ் : துணைப்பாடம்: செவ்வி - நர்த்தகி நடராஜ் | இயல் 8 : 11 ஆம் வகுப்பு தமிழ் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : யாரையும் மதித்து வாழ்