பொருள், ரிக்கார்டோவின் வாரக் கோட்பாடு, போலி - வாரம், நவீன வாரக் கோட்பாடு | பொருளாதாரம் - வாரம் | 11th Economics : Chapter 6 : Distribution Analysis
உற்பத்தியாளர் இயந்திரத்தை பயன்படுத்துவதற்கோ, வீட்டைப் பயன்படுத்துவதற்கோ, நிலத்தைப் பயன்படுத்துவதற்கோ கொடுக்கப்படும் வெகுமதியே வாரம் ஆகும். ஆனால் பொருளியலில் வாரம் அல்லது பொருளாதார வாரம் என்பது நிலத்தை பயன்படுத்துவதற்காக மட்டுமே குத்தகைக்காரர் நிலச் சொந்தக்காரருக்கு வழங்கும் பகுதித் தொகை ஆகும்.
டேவிட் ரிகார்டோ (David Ricardo) விளக்கிய வாரக் கோட்பாடு தொன்மைக் கால வாரக் கோட்பாடாகும். ரிகார்டோ கீழ்க்கண்டவாறு வாரக்கோட்பாட்டை விளக்குகிறார்.
1. நிலம் வளத்தில் வேறுபட்டது.
2. வேளாண்மையில் குறைந்து செல் விளைவு விதி செயல்படுகிறது.
3. நிலத்தின் வளம் மற்றும் நிலத்தின் அமைவிடம் ஆகியவற்றைப் பொறுத்து வாரம் அமைகிறது.
4. நிறைவுப் போட்டி நிலவுகிறது.
5. நீண்டகாலத்தை அடிப்படையாகக் கொண்டது.
6. இறுதி நிலை நிலம் அல்லது வாரம் இல்லா நிலம் உண்டு.
7. நிலம் உண்மையானதும், அழிக்கமுடியாத சக்திகளையும் கொண்டது. 8. வேளாண்மைக்காக மட்டும் நிலம் பயன்படுத்தப்படுகிறது.
9. அதிக வளமுள்ள நிலங்கள் முதலில் பயிர் செய்ய பயன்படுத்தப்படுகின்றன.
புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஒரு தீவில் குறிப்பிட்ட சில மக்கள் குடியேறுவதாகக் கொள்வோம். அங்கு மூன்று தரமுடைய நிலங்கள் உள்ளன, அவை A, B மற்றும் C. A என்பது மிகவும் வளம் பொருந்திய நிலம். A யுடன் ஒப்பிடும் போது B குறைந்த வளம் உடைய நிலம்.“C”என்பது மிகக் குறைந்த வளமுடைய நிலம். மக்கள் முதலில் மிகவும் வளம் பொருந்திய நிலமாகிய “A” யை பயிரிடுகின்றனர். அந்த நிலம் பயன்படுத்தப்படாமல் அபரி மிதமாக இருப்பதால் அத்தகைய நிலம் இலவசமாக கிடைக்கிறது, அதுவரை வாரம் கிடையாது. குறிப்பிட்ட அளவு உழைப்பாளரையும், மூலதனத்தையும் பயன்படுத்துவதால் ”A” தரம் உள்ள நிலத்தில் ஒரு ஏக்கருக்கு 40 மூடைகள் நெல் விளைகிறது.
அடுத்ததாக மற்றொரு சிறிய மக்கள் கூட்டம் அதே தீவில் சில காலத்திற்குப் பிறகு குடியேறுவதாக கொள்வோம். எனவே விவசாயப் பொருட்களின் தேவை அதிகரிக்கிறது. A தரம் உள்ள நிலத்தை மட்டுமே தற்போது உணவு தானியத்திற்காக சார்ந்து இருக்க முடியாது. அந்நிலத்தில் குறைந்து செல் விளைவு விதி செயல்பட தொடங்கியிருக்கும். ஆதலால் அடுத்த தர ”B” நிலத்தை பயிர் செய்ய பயன்படுத்துவார்கள். வளம் குறைந்த ”B” தர நிலத்தில் 30 மூட்டைகள் நெல் விளைவிக்கப்படுகிறது. இப்போது “A” தர நிலத்தில் ஒரு ஏக்கருக்கு 10 மூட்டைகள் உபரியாக உள்ளது (40-30). இதை ”A” தர நிலத்திற்கான பொருளாதார வாரம் என அழைக்கிறோம்.
இன்னும் ஒரு சிறு மக்கள் கூட்டம் அதே தீவில் குடியேறுகிறது. மிகக் குறைந்த வளமுடைய ”C” தர நிலத்தில் 20 மூட்டைகள் நெல் விளைவிக்கப்படுகிறது. இச்சூழலில் A- தர நிலத்தின் உபரி தற்போது 20 மூட்டைகளாக அதிகரிக்கிறது (40-20) இது ”A” தர நிலத்தின் பொருளாதர வாரமாகும்.
”வாரம் என்பது நிலத்தின் உண்மையானதும் அழிக்க முடியாததுமான சக்திகளைப் பயன்படுத்திக் கொள்வதற்காக நிலத்தின் விளைச்சலிருந்து ஒரு பகுதியை நில உரிமையாளருக்கு கொடுப்பதே ஆகும்”.
-டேவிட் ரிகார்டோ
"B" தர நிலத்தின் உபரி 10 மூட்டைகளாகும் (30-20), இது "B" தர நிலத்தின் பொருளாதர வாரமாகும்.
மேலே குறிப்பிடப்பட்ட எடுத்துக்காட்டின்படி "C" தர நிலத்தின் உற்பத்திச் செலவு அதன் உற்பத்தி மதிப்பிற்கு சமமாக உள்ளது. எனவே அதற்கு எந்த ஒரு வாரமும் கிடைக்காது (20-20) எனவே "C"- தர நிலம் "வாரமில்லா நிலம்" அல்லது "இறுதி நிலை நிலம்" என அழைக்கப்படுகிறது. எனவே வாரமில்லா நிலம் அல்லது இறுதிநிலைநிலம் என்றால், அதன் உற்பத்திச் செலவும் உற்பத்தி விலையும் சமமாக இருக்கக் கூடியதாகும். வாரம் பெறக்கூடிய நிலத்தை உள் இறுதிநிலை (Intra Marginal Land) நிலம் என்கிறோம். எனவே வாரம் என்பது வளம் பொருந்திய நிலத்திற்கும் இறுதி நிலை நிலத்திற்கும் உள்ள வேறுபாட்டு நன்மையே ஆகும்.
வரைபடம் 6.3 ல் X- அச்சில் பல்வேறு தரமுடைய நிலங்களைக் குறிப்பிடுகிறோம். Y-அச்சில் 1 ஏக்கருக்கான விளைச்சலைக் குறிக்கிறோம் (மூட்டைகளில்) OA, AB மற்றும் BC ஆகியவை A, B, மற்றும் C தர நிலங்கள் ஆகும். குறிப்பிட்ட அதே அளவு உழைப்பாளரையும் மூலதனத்தையும் பயன்படுத்தி ஒவ்வொரு தர நிலமும் பெற்ற விளைச்சலை வரைபடத்தில் செவ்வக கட்டங்களில் குறிப்பிடுகிறோம். Cதர நிலங்கள் "வாரமில்லா நிலங்கள்" எனப்படும். A மற்றும் B தர நிலங்கள் பெற்ற "இறுதிநிலை வாரமுள்ள நிலம் "(குறுக்கு வெட்டு நிலம் –intra marginal lands) வரைபடத்தில் கோடிடப்பட்ட பகுதியில் குறிக்கப்பட்டுள்ளது.
ரிக்கார்டோவின் வாரக் கோட்பாடு கீழ்க்கண்ட குறைபாடுகளைக் கொண்டது.
1. முதலில் வளம் பொருந்திய நிலம், பின்னர் வளம் குறைந்த நிலம் என்கிற வரிசை வரலாற்றின் அடிப்படையில் தவறானது.
2. இக்கோட்பாடு, வாரமானது விலையில் சேராது என குறிப்பிடுகிறது. ஆனால் வாரமானதுவிலையுடன் சேர்ந்திருக்கும்.
"மனிதனால் உருவாக்கப்பட்ட இயந்திரங்கள் மற்றும் பிற உபகரணங்களில் இருந்து பெறப்படும் வருவாயே போலி வாரம்".
- ஆல்ஃபிரட் மார்ஷல்
போலி வாரம் என்ற கருத்தை மார்ஷல் அறிமுகப்படுத்தினார். நிலம் தவிர பிற காரணிகளான இயங்திரங்கள் மற்றும் நிறுவனம் போன்றவை குறுகிய காலத்தில் அளிப்பில் நிலையானவை ஆகும். அவை தேவை கூடுகின்ற போது உபரி வருவாயைப் பெருகின்றன. இது தற்காலிகமானது. நீண்ட காலத்தில் அளிப்பு கூடும் போது இந்த உபரி வருவாய் மறைந்து விடும். இந்த போலி வாரம் என்பது குறுகியகாலத்தில் மாறும் செலவுக்கு மேலாக உற்பத்தியாளர் பெறும் உபரியாகும்.
போலி வாரம் = மொத்த வருவாய் - மொத்த மாறும் செலவு
தொன்மைப் பொருளியல் அறிஞர்களின் சிந்தனைப்படி பிற உற்பத்திக் காரணிகளைவிட நிலம் வேறுபட்டுக் காணப்படுகிறது. ஆனால் நவீன பொருளியல் அறிஞர்களின் சிந்தனைப்படி அனைத்து உற்பத்திக் காரணிகளும் ஒன்றானவையே; அவற்றிற்கிடையில் அடிப்படை வேறுபாடுகள் இல்லை. எனவே ரிக்கார்டோ வழங்கிய வாரத்திற்கான சிறப்புக் கோட்பாடு தேவையில்லை. ஆகவே ஜோன் ராபின்சன் (Joan Robinson) மற்றும் போல்டிங் (Boulding) போன்றோர் வாரத்தை நிர்ணயிக்க அவர்களுடைய கருத்துக்களை வழங்கினர். இது நவீன வாரக் கோட்பாடு என்றழைக்கப்படுகிறது.
வாரம் என்பதன் கருத்தாக்கம் என்னவென்றால் ஓர் உற்பத்திக் காரணியை உற்பத்தியில் தொடர்ந்து பயன்படுத்த, அதனுடைய குறைந்த பட்ச சம்பாத்தியத்திற்கும் கூடுதலாக தரக்கூடிய உபரி வருவாயாகும்.
- ஜான் ராபின்சன்
வாரம் என்பது ஓர் உற்பத்திக் காரணி பெறக் கூடிய உண்மை வருமானத்திற்கும் அதன் மாற்று வருவாய்க்கும் உள்ள வேறுபாடாகும்.
வாரம் = உண்மை வருவாய் - மாற்று வருவாய்.
மாற்று வருவாய் (Transfer Earning) என்பது ஓர் உற்பத்திக் காரணியை தற்போதைய பயன்பாட்டில் தொடர்ந்து இருக்கச் செய்ய கொடுக்கப்படும் குறைந்தபட்ச ஊதியமாகும்.