பொருள், ஊதிய வகைகள் - கூலிகள் | 11th Economics : Chapter 6 : Distribution Analysis
கூலி
ஒரு உழைப்பாளியின் அறிவையோ, உடல் உழைப்பையோ பயன்படுத்த கொடுக்கப்படும் ஊதியமே கூலி ஆகும். கூலி தினசரியோ, வாரம் ஒரு முறையோ, மாதம் இருமுறையோ, மாதம் ஒரு முறையோ அல்லது வருடத்திற்கு ஒருமுறையோ மேலும் ஆண்டு முடிவில் கொடைக்கூலி (Bonus) யாகவோ வழங்கப்படுகிறது.
உழைப்பாளியின் பணியைப் பயன்படுத்திக்கொள்ள வழங்கப்படும் விலை கூலி ஆகும்.
"ஓர் உற்பத்தியாளர் உழைப்பாளியின் பணியைப் பெற ஒப்பந்தம் செய்து குறிப்பிட்ட தொகையை வழங்குவது கூலி ஆகும்"
- பென்ஹாம் (Benham)
கூலி நான்கு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது.
1. பெயரளவுக் கூலி அல்லது பணக்கூலி
பெயரளவுக் கூலி என்பது ரொக்கமாக (பணமாக) வழங்கப்படும் கூலியைக் குறிக்கும்.
2. உண்மைக் கூலி
பண்டங்களாகவோ, பணிகளாகவோ கூலியை வழங்குவது உண்மைக்கூலி எனப்படும். எனவே பணக்கூலியின் வாங்கும் திறனே உண்மைக் கூலி ஆகும். பணக்கூலி உயர்வைவிட பணவீக்கவிகிதம் அதிகமாக இருந்தால், உண்மைக் கூலி குறைந்துள்ளது என்று பொருள்.
3. துண்டுக் கூலி (piece wage)
முடிக்கப்பட்ட வேலையின் அளவின் அடிப்படையில் வழங்கப்படுவதாகும்.
4. நேரக் கூலி
உழைப்பாளி உழைக்கின்ற நேரத்தின் அளவைப் பொருத்து வழங்கப்படும் கூலி ஆகும்.