Home | 11 ஆம் வகுப்பு | 11வது பொருளாதாரம் | கூலிக் கோட்பாடுகள்

பொருளாதாரம் - கூலிக் கோட்பாடுகள் | 11th Economics : Chapter 6 : Distribution Analysis

   Posted On :  10.08.2022 04:26 am

11வது பொருளாதாரம் : அத்தியாயம் 6 : பகிர்வு பற்றிய ஆய்வு

கூலிக் கோட்பாடுகள்

கூலிக் கோட்பாடுகளில் மிகப் பழமையான ஒன்று பிழைப்பு மட்டக் கோட்பாடாகும்.
கூலிக் கோட்பாடுகள்

1. பிழைப்பு மட்ட கூலிக் கோட்பாடு

கூலிக் கோட்பாடுகளில் மிகப் பழமையான ஒன்று பிழைப்பு மட்டக் (Subsistence) கோட்பாடாகும். முதன் முதலில் பிரெஞ்சு பொருளியலாளர்களான இயற்கைவாதிகள் இதை விளக்கியுள்ளனர். பின் ரிக்கார்டோ இதை திருத்தியமைத்தார். ஓர் உழைப்பாளி மற்றும் அவர் குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளின் அளவிற்குச் சமமாக கூலி வழங்கப்பட வேண்டும் என்பது இக்கோட்பாட்டின் கருத்தாகும். வாழ்வதற்காக உழைப்பாளி மற்றும் அவர் குடும்பத்திற்குத் தேவையான குறைந்த பட்ச உணவு, உடை மற்றும் இருப்பிடம் ஆகியவற்றையே அடிப்படைத் தேவை என்கிறோம்.

உழைப்பாளிக்கு பிழைப்பு மட்ட அளவைவிட அதிக கூலி வழங்கினால் அவர் நல்ல நிலையையடைந்து அவரின் குடும்பம் பெரிய குடும்பமாக மாறிவிடும். எனவே மக்கள் தொகை பெருகிவிடும். பெருகிய மக்கள் தொகையின் விளைவால் உழைப்பாளர்களின் அளிப்பு அதிகரித்துவிடும். இந்நிலையில் கூலி குறைந்துவிடும்.

மாறாக பிழைப்பு மட்ட அளவை விட கூலி குறைவாக இருந்தால் மக்கள் தொகை குறையும். அதனால் உழைப்பின் அளிப்பு குறையும், இதன் தொடர்விளைவாக அடிப்படை அளவை விட கூலி அதிகரிக்கும். எனவே இக்கோட்பாடானது மால்தஸின் மக்கள் தொகை கோட்டுபாட்டுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது.

இக்கோட்பாட்டின்படி உழைப்பாளியின் (அவர் குடும்பத்தையும் சேர்த்து) பிழைப்பு மட்ட அளவைவிட கூடுதலாகவோ, குறைவாகவோ கூலி இருக்காது.

குறைபாடுகள் 

1. தொழிற்சங்கங்கங்களின் கூட்டு பேரம் பேசும் ஆற்றல் கவனத்தில் கொள்ளப்படவில்லை. 

2. பல்வேறு பணிகளுக்கான, பல்வேறு கூலி நிலைகளை விளக்க இக்கோட்பாடு தவறிவிட்டது. 

3. குழந்தைப் பிறப்பை நிர்ணயிப்பது கூலி மட்டும் இல்லை. கூலி விகிதம் கூடுவதால் மக்கள் தொகை கூடும் என்பது தற்போதைய சூழலில் பொருத்தமாக இல்லை. ஏழைகள் குடும்பத்தில் அதிக குழந்தைகள் உள்ளதையும், குழந்தைகளே வேண்டாம் என்று சொல்கிற செல்வந்தர்களையும் காண முடிகிறது.

2. வாழ்க்கைத்தர கூலி கோட்பாடு 

பிழைப்பு மட்டக் கூலிக் கோட்பாட்டின் சீர்படுத்திய வடிவமாக, வாழ்க்கைத்தர கூலிக் கோட்பாட்டை டோரன்ஸ் (Torrence) அமைத்துள்ளார். உழைப்பாளரின் வாழ்க்கைத் தரத்திற்குச் சமமாக கூலி வழங்குவதை இக்கோட்பாடு குறிப்பிடுகிறது. உயர்ந்த வாழ்கைத் தரம் உயர்ந்த கூலியையும், குறைந்த வாழ்க்கைத் தரம் குறைந்த கூலியையும் தருகிறது.

ஓர் உழைப்பாளர், தனது வாழ்க்கைத் தரத்தை நல்ல பழக்கப்பட்ட அளவில் பராமரிக்க தேவைப்படும் உதவியானது வாழ்க்கைத் தரக் கூலி எனப்படும்.

குறைபாடு

1. இக்கோட்பாடு வாழ்க்கைத் தரம் கூலியை நிர்ணயிக்கிறது என்கிறது. ஆனால் நடைமுறையில் கூலியே வாழ்க்கைத் தரத்தை நிர்ணயிக்கிறது.

3. கூலிநிதிக் கோட்பாடு

இக்கோட்பாட்டை ஆடம்ஸ்மித் முதன் முதலில் எடுத்துரைத்தார். ஆனால், வளப்படுத்திய பெருமை J.S. மில்லைச் (J.S.Mill) சாரும்.

J.S. மில் அவர்களின் கூற்றுப்படி, "ஒவ்வொரு உற்பத்தியாளரும் ஒரு குறிப்பிட்ட மூலதனத் தொகையை உழைப்பாளருக்கு கூலி வழங்க வைத்திருப்பார்" அத்தொகையே கூலி நிதி எனப்படும். இது நிலையானது மற்றும் மாறாதது. கூலி இந்நிதியின் அளவோடு நேரடியாகவும், பணியில் அமர்த்தப்பட்ட உழைப்பாளார்களின் எண்ணிக்கையுடன் எதிர்மறையாகவும் தொடர்பு கொண்டது. உழைப்பாளியின் சராசரி கூலியைக் கணக்கிட கீழ்க்கண்ட முறை பயன்படுகிறது.


உழைப்பாளியின் சராசரி கூலி = மொத்தக் கூலி நிதி /  உழைப்பாளர்களின் எண்ணிக்கை

உழைப்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது ஓர் உழைப்பாளியின் கூலி குறைகிறது. மாறாக எண்ணிக்கை குறையும் போது கூலி கூடுகிறது. 

குறைபாடுகள் 

1. பல்வேறு பணிகளுக்கு பல்வேறு கூலி நிலைகளின் வேறுபாட்டை இது விளக்கவில்லை. 

2. தொழிற் சங்கங்களின் பங்கை இது அறியவில்லை. 

3. உண்மையில் முதலாளிகள் கூலிக்கான நிதியைவிட கூடுதல் தொகையை ஒதுக்கி வைக்கின்றனர்.

4. எச்ச உரிமை கூலி கோட்பாடு

அமெரிக்க பொருளியல் அறிஞர் F.A. வாக்கர் (Walkar) 1875-ல் அவருடைய நூலான "அரசியல் பொருளாதாரத்தில்" இக்கோட்பாட்டை எடுத்துரைத்தார். உற்பத்திக் காரணிகள் நான்கில் மூன்று காரணிகளாகிய நிலம், மூலதனம் மற்றும் அமைப்பு ஆகியவற்றிற்கு வழங்கிய வெகுமதி போக எஞ்சி உள்ள பகுதியே கூலிக்குரியது என இக்கோட்பாடு விளக்குகிறது.

குறைபாடுகள்

1. இக்கோட்பாடானது தொழிற் சங்கங்களின் பங்கினை விளக்கவில்லை. 

2. கூலி நிர்ணயப்பதில் உழைப்பாளியின் தேவைப்பக்கத்தையும் இது சேர்த்திருக்க வேண்டும்.

5. இறுதி நிலை உற்பத்தித்திறன் கூலிக் கோட்பாடு

பொதுப் பகிர்வு கோட்பாட்டின் அடிப்படையில் இறுதிநிலை உற்பத்தித் திறன் கூலிக் கோட்பாடு கூலியை நிர்ணயிக்கிறது.

இக்கோட்பாட்டின்படி உழைப்பாளியின் இறுதி நிலை உற்பத்தி திறனுக்குச் சமமாக கூலி நிர்ணயிக்கப்படுகிறது.

நிறைவுப்போட்டியில் உழைப்பாளியின் இறுதிநிலை உற்பத்தித் திறனுக்குச் சமமாக கூலி வழங்கப்படுகிறது. (கூலி = MPL) ஆனால் உண்மை உலகில் நிறைகுறைப் போட்டியே உள்ளது. இங்கு உழைப்பாளியின் MPL க்கு (உழைப்பாளியின் இறுதிநிலை உற்பத்தித்திறன்) குறைவாக கூலி வழங்கப்பட்டு சுரண்டப்படுகிறார்.


Tags : Economics பொருளாதாரம்.
11th Economics : Chapter 6 : Distribution Analysis : Theories of Wages Economics in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது பொருளாதாரம் : அத்தியாயம் 6 : பகிர்வு பற்றிய ஆய்வு : கூலிக் கோட்பாடுகள் - பொருளாதாரம் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது பொருளாதாரம் : அத்தியாயம் 6 : பகிர்வு பற்றிய ஆய்வு