பொருளாதாரம் - இலாபக் கோட்பாடுகள் | 11th Economics : Chapter 6 : Distribution Analysis
அமெரிக்க பொருளியல் அறிஞர் JB கிளார்க் (JB Clark) 1900ல் இக்கோட்பாட்டை எடுத்துரைத்தார். இவரின் கூற்றுப்படி இலாபம் என்பது விலைக்கும், பண்டங்களின் உற்பத்திச் செலவிற்கும் உள்ள வேறுபாடே ஆகும். சமுதாயத்தில் ஏற்பட்ட இயங்குநிலை மாற்றங்களுக்கான வெகுமதியே இலாபம் ஆகும். இவரின் கருத்துப்படி, இயங்கா நிலையில் உள்ள சமுதாயத்தில் இலாபம் தோன்றாது. இந்நிலைச் சமுதாயத்தில் அனைத்தும் செயல்படாதிருக்கும், அங்கு எவ்வித மாற்றமும் ஏற்படாது. இயங்கா சமுதாயத்தில் தொழில் முனைவோருக்கான பங்கு இல்லை. இதில் உற்பத்திச் செலவும் பண்டங்களின் விலையும் சமமாக இருக்கும். எனவே தொழில் முனைவோருக்கு இலாபம் பெற இயலாது. தொழில் முனைவோர் அவருடைய மேலாண்மைப் பணிக்காக கூலி மட்டுமே பெறுவர். அவர்கள் சொந்த முதலீட்டுக்கு வட்டியையும் பெறுவர்.
தற்காலத்தில் சமுதாயம் அதிக மாற்றங்கள் ஏற்பட்டு இயங்கக்கூடிய நிலையில் உள்ளது. கிளார்க்கின் கூற்றுப்படி கீழ்க்கண்ட ஐந்து முக்கிய மாற்றங்களை இயங்கு சமுதாயத்தில் காணலாம்.
1. மக்கள் தொகை பெருகும்.
2. மூலதன அளவு பெருகும்.
3. உற்பத்தி முறைகள் மேம்பாடு அடையும்.
4. தொழில் அமைப்பின் வகைகள் மாற்றமடையும்.
5. நுகர்வோரின் விருப்பங்கள் பெருகும்.
ஜோசப் A சும்பீட்டர் (Schumpeter) புத்தாக்க இலாபக் கோட்பாட்டை எடுத்துரைத்தார். சும்பீட்டரின் கருத்துப்படி. ஒரு தொழில் முனைவோர் உற்பத்தி செயல்பாடுகளில் வணிகத்தை நடத்துவதோடு மட்டுமல்லாமல் புத்தாக்கம் புனைபவராகவும் இருக்கிறார். "புத்தாக்கம் புனைவதற்கான" வெகுமதியே இலாபம். வியாபார நோக்கத்திற்காக புதிய கண்டுபிடிப்புக்களை பயன்படுத்துவதே புத்தாக்கம் புனைதல் எனப்படும்.
சும்பீட்டரின் கூற்றுப்படி, புத்தாக்கம் புனைதல் என்பது கீழ்க்கண்டவற்றை உள்ளடக்கியது.
1. புதிய பண்டங்களை அறிமுகப்படுத்துதல்.
2. புதிய உற்பத்திமுறைகளை அறிமுகப்படுத்துதல்.
3. புதிய சந்தைகளைத் தொடங்குதல்.
4. புதிய மூலப்பொருட்களை கண்டறிதல்.
5. தொழில் நிறுவனங்களை மறுசீரமைத்தல்.
மேற்கண்டவைகளில் ஏதேனும் ஒரு புத்தாக்கத்தை தொழில் முனைவோர் அறிமுகப்படுத்தினால் அது உற்பத்திச் செலவில் குறைவை உண்டாக்கும், அதனால் தொழில் முனைவோர் இலாபம் பெறுவர். புத்தாக்கத்தைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தால்தான் அதிக இலாபம் பெறமுடியும். உண்மையாக புத்தாக்கம் செய்பவர்களால் தொடர்ந்து புத்தாக்கம் செய்ய இயலும். புத்தாக்கம் செய்ய இயலாதவர்களால் இது முடியாது
அமெரிக்க பொருளியல் அறிஞா F.B.ஹாலே (Hawley) 1907 ல் இடர் தாங்கும் இலாபக் கோட்பாட்டை எடுத்துரைத்தார். அவரின் கருத்துப்படி, வணிகத்தில் இடர்களை எதிர்கொள்வதற்கான வெகுமதியே இலாபம் எனப்படும். ஒரு தொழில் முனைவோரின் பணிகளில் இடர்களை எதிர்கொள்ளல் மிக முக்கிய பணி ஆகும். இதுவே இலாபத்திற்கு அடிப்படையாகும். நடைமுறையில் அனைத்து வணிகத்திலும் சில இடர்பாடுகள் உள்ளடங்கியே உள்ளன.
ஆதலால் தொழில் முனைவோர் இடர்களை எதிர் கொண்டு இலாபத்தைப் பெறுகிறார்கள். தொழில் முனைவோர் வெகுமதியைப் பெறவில்லை எனில், இடர்பாடுகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்கமாட்டார்கள். எனவே இலாபம் அதிகமாகப் பெறவேண்டுமெனில் இடர்களை அதிகமாக சமாளிக்க வேண்டும்.
அனைத்து தொழில் முனைவோரும் தேவையை எதிர்நோக்கியே பண்டங்களை உற்பத்தி செய்கின்றனர். அவர்களின் தேவையின் எதிர்பார்ப்பு சரியெனில் இலாபம் கிடைக்கிறது; தவறெனில் இழப்பு ஏற்படுகிறது. இலாபமே தொழில் முனைவோரை இடர்பாடுகளை எதிர்கொள்ளத் தூண்டுகிறது.
அமெரிக்கப் பொருளியல் வல்லுநர் பிராங்க் H. நைட் (Frank H. Knight) நிலையின்மைக் கோட்பாட்டை எடுத்துரைத்தார். இவரின் கூற்றுப்படி நிச்சயமற்ற தன்மையைத் தாங்குவதற்கான வெகுமதியே இலாபம் ஆகும். இவர் காப்பீட்டு இடர்பாடு மற்றும் காப்பீடற்ற இடர்பாடு என இடர்பாடுகளை இரு வகைப்படுத்துகிறார்.
சில இடர்பாடுகள் அளவிடக்கூடியவை அல்லது கணக்கிடக் கூடியவை. இத்தகைய இடர்பாடுகளுக்கு சில எடுத்துக்காட்டுகள் தீ விபத்து மற்றும் கொள்ளை, இயற்கை சீற்றம் இவை காப்பீடு செய்யத்தக்கவை. இத்தகைய இடர்பாடுகளுக்கு காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீடு வழங்கிவிடும்.
சில இடர்பாடுகள் அளவிட முடியாதவை அல்லது கணக்கிடமுடியாதவை. இவை நிகழ்வதற்கான சாத்தியக் கூறுகளை அனுமானிக்க முடியாது. ஏனெனில் அவை நிச்சயமற்ற தன்மையைக் கொண்டவை. நிறுவனங்களிடையே போட்டி, சந்தை நிலை, தொழில்நுட்ப மாற்றம், அரசின் பொது கொள்கை போன்றவை இத்தகைய இடர்பாடுகளுக்கு சில எடுத்துக்காட்டுகள் ஆகும். எந்த ஒரு காப்பீட்டு கழகமும் இத்தகைய இடர்பாடுகளை ஏற்றுக்கொள்ளாது. எனவே இவை காப்பீடு செய்யப்படாதவை.
இடர்பாடுகள் என்கின்ற கருத்து முதல் வகையானவைக்குப் பொருந்தும் (அளவிடக்கூடிய, காப்பீடு செய்யக் கூடிய). நிலையற்ற தன்மை என்ற கருத்து இரண்டாவது வகைக்குப் பொருந்தும் (எதிர்பார்க்க இயலாத, கணக்கிடமுடியாத அளவிட முடியாத, காப்பீடு செய்யப்படாதவை போன்றவை ஆகும்)
நைட்டின் (Knight) கூற்றுப்படி இலாபம் என்பது இடர்பாடுகளை எதிர்கொள்வதன் மூலம் தோன்றுவது அல்ல; ஏனெனில் தொழில் முனைவோர் இத்தகைய இடர்பாடுகளுக்கு எதிராக பொருத்தமான காப்பீட்டை எடுப்பதன் மூலம் தன்னைப் பாதுகாத்துக் கொள்கிறார்கள். ஆனால் நிலையற்ற தன்மைக்குரிய நிகழ்வுகள் இத்தகைய பாதுகாப்புகளைப் பெறுவதில்லை. தொழில் முனைவோர் நிலையற்ற தன்மையின் நிகழ்வின் சுமையை ஏற்றுக்கொள்வதன் மூலம் அவர் வெகுமதியைப் பெறுகிறார்; இவ்வெகுமதியே இலாபம் ஆகும்.
தொகுப்புரை
இந்த அத்தியாயத்தில் நிலம், உழைப்பு, மூலதனம் மற்றும் அமைப்பு போன்ற உற்பத்திக் காரணிகளின் விலை நிர்ணயம் பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது. சுருங்கக் கூறினால் அனைத்துக் கோட்பாடுகளும் உற்பத்திக் காரணிகளின் விலை நிர்ணயத்தை விவரித்துள்ளன. ஆயினும் எந்த ஒரு தனிக் கோட்பாடும் அனைத்து அம்சங்களையும் முழுமையான கண்ணோட்டத்துடன் அணுகவில்லை. உண்மையான நிதர்சன நிலை, கோட்பாடுகளில் விளக்கப்பட்ட நிலைகளிலிருந்து மாறுபட்டு காணப்படுகின்றன.பகிர்வுக் கோட்பாடுகள் பகிர்வு பற்றிய வழிகாட்டுதல்கள் எனலாமேயொழிய 100 சதவீத நிறைவான விளக்கமாகக் கொள்ளலாகாது. எனினும் அறிவியல் சார்ந்த ஆய்வுகள் நிறைவு நிலையை நோக்கி பயணிக்கின்றன என்பதை மறுக்கலாகாது.
சொற்களஞ்சியம்
பகிர்வு
உற்பத்திப் பணியில் அமர்த்தக் கூடிய காரணிகளின் சொந்தக்காரர்களுக்கு அல்லது முகவர்களுக்கு செல்வத்தைப் பகிர்தல்.
வாரம்
நிலத்தை பயன்படுத்துவதற்கான வெகுமதி.
கூலி
உழைப்பாளரின் வெகுமதி.
வட்டி
முதலீட்டை பயன்படுத்த வழங்கப்படும் விலை
இலாபம்
தொழில் முனைவோர் அல்லது அமைப்புகளின் வெகுமதி.
போலிவாரம்
குறுகிய காலத்தில் உற்பத்திக்காக, மனிதனால் உருவாக்கப்ட்ட உபகரணங்களின் மூலம் ஈட்டுகின்ற உபரியே போலி வாரம் ஆகும்
மாற்று வருவாய்
ஒரு காரணியை அதன் தற்போதைய பயன்பாட்டில் நீடித்திருக்க வழங்கப்படும் குறைந்தபட்ச ஊதியம்.
பணக்கூலி
ரொக்கப்பணமாக உழைப்பாளி வெகுமதியைப் பெறுவது பணக்கூலி ஆகும்.
உண்மைக்கூலி
பண்டங்களாகவோ, பணிகளாகவோ, பணக்கூலியின் மூலம் கூலி வாங்கும் திறனே உண்மைக்கூலி ஆகும்.
கடன் நிதி
மூலதனத்தின் ஒரு பகுதியை கடனாகப் பெருவதே கடன் நிதி
புத்தாக்கம்
வியாபார நோக்கத்திற்காக கண்டு பிடிப்புகளை உட்படுத்துவது ஆகும்.