ATP அமைப்பு (Structure of ATP)
ATP உற்பத்திக்கு சுவாசித்தல் நிகழ்ச்சி காரணமாக உள்ளது.
கார்ல்
லோமென் (1929) என்பவர் ATP யைக் கண்டறிந்தார். ATP ஒரு நியுக்ளியோடைடு இதில்
அடினைன் என்ற ஒரு காரம், ரைபோஸ் எனும் பெண்டோஸ் சர்க்கரை மற்றும் மூன்று ஃபாஸ்பேட்
தொகுதிகள் காணப்படும். மூன்று ஃபாஸ்பேட் தொகுதிகளில் இறுதியில் உள்ள இரண்டு ஃபாஸ்பேட்டுகள்
உயர் ஆற்றல் பிணைப்புகளால் இணைக்கப்பட்டுள்ளது (படம் 143). ஒரு ATP நீராற்பகுப்படையும்
போது 7.3 கிலோ கலோரி அல்லது 30.6 கிலோ ஜூல் ஆற்றல் வெளிப்படுகிறது. இது அனைத்து உயிர்செல்களிலும்
காணப்படுகிறது. ஆகவே இது செல்லின் ஆற்றல் நாணயம்
என்று அழைக்கப்படுகிறது . ATP செல்லுக்குள் உருவாகும் ஒரு உடனடி ஆற்றல் மூலமாகும்.
ATP யிலிருந்து பெறப்படும் ஆற்றல் கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள் மற்றும் கொழுப்புகள்
உருவாக்கத்திற்குப் பயன்படுகிறது. இதனடிப்படையில் லிப்மேன் (1941) என்பவர் ஆற்றல் மாற்றக் கருத்தாக்கத்தை உருவாக்கினார்.
உங்களுக்குத் தெரியுமா?
செல்லுக்குள் ATP மட்டுமே அதிக ஆற்றல்
கொண்ட சேர்மம் அல்ல. வேறுசில அதிக ஆற்றல் கொண்ட சேர்மங்களும் உள்ளன. எடுத்துக்காட்டு
GTP (குவானோசின் ட்ரை ஃபாஸ்பேட்) மற்றும் UTP (யுரிடின் ட்ரை ஃபாஸ்பேட்).