வரலாறு - ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள் | 11th History : Chapter 17 : Effects of British Rule
ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள்
கற்றல் நோக்கங்கள்
கீழ்கண்டவை பற்றி அறிதல்
• இந்தியாவில் ஆங்கிலேயக் கிழக்கிந்திய வணிக நிறுவனத்தின் அதிகாரத் தோற்றமும் வளர்ச்சியும்
• ராபர்ட் கிளைவின் இரட்டை ஆட்சிமுறையின் தோல்வியும், ஒழுங்குமுறைச் சட்டப்படி (1773) வணிக நிறுவனத்தின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் வரிக் கொள்கையும்
• காரன்வாலிஸ் வங்காளத்தில் அறிமுகப்படுத்திய நிலையான நிலவரித் திட்டம்; சர் தாமஸ் மன்றோ சென்னை மாகாணத்தில் அறிமுகப்படுத்திய இரயத்துவாரி முறை
• வெல்லெஸ்லியின் துணைப்படைத் திட்டம் மூலமாகவும் டல்ஹௌசியின் வாரிசு உரிமை இழப்புக் கொள்கை மூலமாகவும் இந்தியப் பகுதிகளை ஆங்கில ஆட்சியுடன் இணைத்தல்
• இந்திய ஆட்சியாளர்களுடன் ஆங்கிலேயக் கிழக்கிந்திய கம்பெனியின் உறவுகள்
• காரன்வாலிஸ் மற்றும் வெல்லெஸ்லியின் குடிமையியல், நீதி, நிர்வாகச் சீர்திருத்தங்கள்
• வில்லியம் பெண்டிங், டல்ஹௌசி காலத்தில் ஏற்பட்ட சமூக, கல்வி சீர்திருத்தங்கள், இருப்புப்பாதை, தொலைத்தொடர்பு, கல்வி, பொதுப்பணித்துறைச் சீர்திருத்தங்கள்
• காலனி அரசு, பாசன வசதி செய்து தராமையாலும், காடுகளை அழித்தமையாலும் பஞ்சம் ஏற்பட்டு விவசாயிகள், கைவினைஞர்கள் நாட்டை விட்டு குடிபெயர்ந்து கூலி உழைப்பை மேற்கொள்ளல்
• தாதாபாய் நௌரோஜியின் செல்வச் சுரண்டல் கோட்பாடு
அறிமுகம்
முகலாயப் பேரரசின் வீழ்ச்சியோடு மைய அதிகாரம் நொறுங்கியதால் ஓர் ஆங்கிலேய வணிக நிறுவனம் இந்தியாவை கையகப்படுத்தும் நிலை ஏற்பட்டது. ஆரம்பத்தில் ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனியின் நோக்கம் நிர்வாகம் செய்வது அல்ல; மாறாக அது சிக்கலில்லாமல் வியாபாரம் புரிவதாகவே இருந்தது. எனினும், வங்காளத்தில் 1770இல் ஏற்பட்ட கடுமையான பஞ்சத்திற்குப் பின் சற்றே அதிகாரத்தை பொறுப்புணர்வு கொண்டதாக அவர்கள் மாற்றினர். ஒருபுறம் பாரபட்சமான சுரண்டல் பொருளாதாரக் கொள்கையைக் கடைபிடித்த போதும், அவர்கள் தாங்கள் ஆண்ட மக்களின் பாதுகாப்பையும் அவர்களின் நீதி நடைமுறைகளையும் காக்க முயல்வதாகப் பறை சாற்றிக் கொண்டார்கள். பாரம்பரிய அரசாட்சி சர்வாதிகாரக் கொடுமையை உள்ளடக்கியதாக இருப்பதாலும், எதிர்பாராத படையெடுப்புகளாலும் கள்வர்களாலும் மக்கள் இன்னல் அனுபவிப்பதாலும் தங்களின் அதிகாரம் விரிவடைவது தவிர்க்க முடியாததென நியாயப்படுத்திக் கொண்டார்கள். இருப்புப்பாதை ஏற்படுத்தியதும், தந்தி தொடர்பு முறையும், எதிர்ப்புகளை ஒடுக்கவும், உள்ளூர் மக்களை எளிதாகக் கட்டுப்படுத்தவும் உதவின. ஆங்கிலேயரின் விவசாய, வணிகக் கொள்கைகள் இந்தியப் பொருளாதாரத்தை நாசப்படுத்தின. இந்திய நாட்டின் வளங்கள் பல வகைகளிலும் கொள்ளை போயின. பாதிக்கப்பட்ட விவசாயிகளும் நெசவாளர்களும் இதன் விளைவாக 1830களின் பின் அதிக அளவில் ஆங்கிலேய அதிகாரம் பரவியிருந்த நாடுகளில் இருந்த தோட்டங்களுக்கு கூலி உழைப்பாளிகளாகப் புலம்பெயர்ந்தார்கள்.