வடிவியல் | இரண்டாம் பருவம் அலகு 4 | 7ஆம் வகுப்பு கணக்கு - பாடச்சுருக்கம் | 7th Maths : Term 2 Unit 4 : Geometry
பாடச்சுருக்கம்
• ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களின் கூடுதல் 180°.
• ஒரு முக்கோணத்தின் வெளிக்கோணமானது அதன் இரு உள்ளெதிர்க் கோணங்களின் கூடுதலுக்குச் சமமாகும்.
• ஒரு முக்கோணத்தின் வெளிக்கோணங்களின் கூடுதல் 360°.
• இரு கோட்டுத்துண்டுகளின் நீளங்கள் சமம் எனில் அவை சர்வசமம்.
• இரண்டு கோணங்களின் கோண அளவுகள் சமம் எனில், அவை சர்வசமக் கோணங்கள் ஆகும்.
• இரு தள உருவங்களின் ஒத்த பக்கங்களும் ஒத்த கோணங்களும் சமம் எனில் அவை சர்வசமத் தள உருவங்கள் ஆகும்.
• ஒரு முக்கோணத்தின் மூன்று பக்கங்கள் மற்றொரு முக்கோணத்தின் மூன்று பக்கங்களுக்குச் சமம் எனில், அவை சர்வசம முக்கோணங்கள். இது ப-ப-ப கொள்கை என அழைக்கப்படும்.
• ஒரு முக்கோணத்தின் இரு பக்கங்களும், அப்பக்கங்களுக்கு இடைப்பட்ட கோணமும் மற்றொரு முக்கோணத்தின் ஒத்த இரு பக்கங்களுக்கும், அவற்றிற்கிடைப்பட்ட கோணத்திற்கும் சமமாக இருந்தால் அம்முக்கோணங்கள் சர்வசம முக்கோணங்கள் எனப்படும். இது ப-கோ-ப கொள்கை என அழைக்கப்படும்.
• ஒரு முக்கோணத்தின் இரண்டு கோணங்களும் கோணங்களைத் தாங்கும் பக்கமும் மற்றொரு முக்கோணத்தின் ஒத்த பக்கங்களுக்குச் சமம் எனில், அவை சர்வசம முக்கோணங்கள். இது கோ-ப-கோ என அழைக்கப்படும்.
• ஒரு செங்கோண முக்கோணத்தில், செங்கோணத்திற்கு எதிரே அமையும் பக்கம் மிகப் பெரியதாக அமையும். இது கர்ணம் என அழைக்கப்படும்.
• ஒரு செங்கோண முக்கோணத்தில் கர்ணமும் மற்ற ஏதேனும் ஒரு பக்கமும் மற்றொரு செங்கோண முக்கோணத்தின் கர்ணத்திற்கு மற்ற ஏதேனும் ஒரு பக்கத்திற்கும் சமம் எனில், அவை சர்வசம முக்கோணங்கள். இது செ-க-ப கொள்கை என அழைக்கப்படும்.
இணையச் செயல்பாடு
செயல்பாட்டின் இறுதியில் கிடைக்கப் பெறுவது
படி-1:
கீழ்க்காணும் உரலி/விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்தி ஜியோ ஜீப்ரா இணையப் பக்கத்தில் ‘வடிவியல்’ என்னும் பணித்தாளிற்குச் செல்லவும், "கோணங்களின் கூடுதல் பண்பு" மற்றும் 'சர்வசம முக்கோணம்' என்னும் இரு செயல்பாடுகள் உள்ளன.
படி-2 :
1. கோணங்களின் கூடுதல் பண்புச் செயல்பாட்டில், முனைப்புள்ளிகள் A,B மற்றும் C ஐ இழுத்து, கோண வடிவங்களை மாற்றுக, மேலும் கோணங்களின் கூடுதல் பண்பை சரிபார்க்க.
2. சர்வசம முக்கோணத்தில் P ஐ இழுப்பதன் மூலம் நீலநிற முக்கோணத்தை நகர்த்தியும் நழுவலைப் பயன்படுத்தியும் சுழற்றி முக்கோணங்களைப் பொருத்திப் பார்க்கலாம்.
செயல்பாட்டிற்கான உரலி
வடிவியல் : https://www.geogebra.org/m/f4w7csup#material/gqagexmx
அல்லது விரைவுக் குறியீட்டை ஸ்கேன் செய்க