எண்கள் | பருவம் 1 அலகு 1 | 6 ஆம் வகுப்பு கணக்கு - அன்றாட வாழ்க்கைச் சூழ்நிலையில் பெரிய எண்களின் பயன்பாடு | 6th Maths : Term 1 Unit 1 : Numbers
அன்றாட வாழ்க்கைச் சூழ்நிலையில் பெரிய எண்களின் பயன்பாடு
நான்கு அடிப்படைச் செயலிகளை எப்படிப் பயன்படுத்துவது என்பது பற்றி முன்பே அறிவோம். மேலும் சில எடுத்துக்காட்டுகளைக் கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தலைப் பயன்படுத்திப் பார்ப்போம்.
எடுத்துக்காட்டு 1.6
ஒரு பொருட்காட்சியில் 1 ஆவது 2 ஆவது 3 ஆவது மற்றும் 4 ஆவது நாள்களில் விற்ற நுழைவுச் சீட்டுகள் முறையே 1,10,000, 75,060, 25,700 மற்றும் 30,606. 4 நாள்களிலும் மொத்தமாக விற்பனை செய்யப்பட்ட மொத்த நுழைவுச் சீட்டுகள் எத்தனை?
தீர்வு
முதல் நாள் விற்ற நுழைவுச் சீட்டுகளின் எண்ணிக்கை = 1,10,000
2 ஆம் நாள் விற்ற நுழைவுச் சீட்டுகளின் எண்ணிக்கை = 75,060
3 ஆம் நாள் விற்ற நுழைவுச் சீட்டுகளின் எண்ணிக்கை = 25,700
4 ஆம் நாள் விற்ற நுழைவுச் சீட்டுகளின் எண்ணிக்கை = 30,606
நான்கு நாட்களில் விற்ற மொத்த நுழைவுச் சீட்டுகளின் எண்ணிக்கை = 2,41,366
எடுத்துக்காட்டு 1.7
ஓர் ஆண்டில், மொத்த காகித விற்பனை நிறுவனம் (Whole–sale) 7,50,000 குறிப்பேடுகளில் 6,25,600 குறிப்பேடுகளை விற்பனை செய்துள்ளது. விற்பனை ஆகாத குறிப்பேடுகளின் எண்ணிக்கையைக் காண்க.
தீர்வு
மொத்தக் குறிப்பேடுகளின் எண்ணிக்கை = 7,50,000
விற்ற குறிப்பேடுகளின் எண்ணிக்கை = 6,25,600
விற்பனை ஆகாத குறிப்பேடுகளின் எண்ணிக்கை = 1,24,400
எடுத்துக்காட்டு 1.8
ஒரு கைபேசிக் கடையில், ஒரு மாதத்தில் விற்பனையான கைபேசிகளின் எண்ணிக்கை 1250 ஆகும். ஒவ்வொரு மாதமும் அதே எண்ணிக்கையில் விற்பனையானால் இரண்டு ஆண்டுகளில் விற்பனையாகும் மொத்த கைபேசிகளின் எண்ணிக்கையைக் காண்க.
தீர்வு
ஒரு மாதத்தில் விற்பனையான கைபேசிகளின் எண்ணிக்கை = 1250
1 ஆண்டு = 12 மாதங்கள்
2 ஆண்டுகள் = 2 × 12
= 24 மாதங்கள்
24 மாதத்தில் விற்பனையான மொத்த கைபேசிகளின் எண்ணிக்கை = 1250 × 24 = 30,000
2 ஆண்டுகளில் விற்பனையான மொத்த கைபேசிகளின் எண்ணிக்கை = 30,000
எடுத்துக்காட்டு 1.9
ஓர் அரசுத் திட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுவில் உள்ள 500 பெண்களுக்கு ₹10,00,000 ஆனது சமமாகப் பிரித்துக் கொடுக்கப்பட்டது. ஒவ்வொரு பெண்ணுக்கும் கொடுக்கப்பட்ட தொகையைக் காண்க.
தீர்வு
500 பெண்களுக்குக் கொடுக்கப்பட்டத் தொகை = ₹ 10,00,000
ஒரு பெண்ணுக்குக் கொடுக்கப்பட்டத் தொகை = 10,00,000 ÷ 500 = ₹2,000
ஒவ்வொரு பெண்ணுக்கும் கொடுக்கப்பட்டத் தொகை = ₹2,000.