Home | 11 ஆம் வகுப்பு | 11வது அரசியல் அறிவியல் | நாடாளுமன்ற முறை அரசாங்கம்

வரையறை, நிறைகள், குறைகள், இயல்புகள் - நாடாளுமன்ற முறை அரசாங்கம் | 11th Political Science : Chapter 6 : Forms of Government

   Posted On :  03.10.2023 07:23 am

11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 6 : அரசாங்கத்தின் வகைப்பாடுகள்

நாடாளுமன்ற முறை அரசாங்கம்

மக்களால் தேர்தெடுக்கப்பட்ட மக்களாட்சி அரசே நாடாளுமன்ற முறையாகும்.

நாடாளுமன்ற முறை அரசாங்கம் 

மக்களால் தேர்தெடுக்கப்பட்ட மக்களாட்சி அரசே நாடாளுமன்ற முறையாகும். நாடாளுமன்ற முறை அரசாங்கத்தில் செயலாட்சியானது தனது கொள்கைகள் மற்றும் செயல்பாட்டிற்காக, நாடாளுமன்றத்திற்குப் பொறுப்பானதாகும். மாறாக குடியரசுத் தலைவர் முறை அரசாங்கத்தில், செயலாட்சியானது சட்டமன்றத்திற்கு தங்களது கொள்கைகள் மற்றும் செயல்பாட்டிற்காக பதில் சொல்ல அவசியம் கிடையாது. மேலும் செயலாட்சியானது அரசமைப்பின் அடிப்படையில் சட்டமன்றத்திடம் இருந்து சுதந்திரமாக இயங்குகிறது.

நாடாளுமன்ற முறை அரசாங்கம் என்பது அமைச்சரவை முறை அரசாங்கம் என்றும், கடமைப்பாடுடைய அரசாங்கம் அல்லது வெஸ்ட் மினிஸ்டர் (West Minister) அரசாங்கம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கிலாந்து, ஜப்பான், கனடா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் நாடாளுமன்ற முறை அரசாங்கத்தைப் பின்பற்றுகின்றன.

ஐவர் ஜென்னிங்ஸ் நாடாளுமன்ற முறை அரசாங்கத்தை அமைச்சர் குழுமுறை என்று அழைக்கிறார். ஏனெனில் அமைச்சரவை என்பது நாடாளுமன்ற அரசாங்க முறையினுடைய அதகாரத்தின் மையக்கருவாக விளங்குகிறது. நாடாளுமன்ற முறை அரசாங்கம் என்பது கடமைப்பாடுடைய அரசாங்கமாகும். இதில் அமைச்சரவை என்பது உண்மையான செயலாட்சியாகும். மேலும் இது நாடாளுமன்றத்திற்கு பொறுப்பானதாக இருப்பதுடன் அதன் நம்பிக்கையை பெற்ற வரையிலும் பதவியில் நீடிக்கிறது. இங்கிலாந்தில்தான் நாடாளுமன்ற முறை அரசாங்கம் தோன்றியது. இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் அமைவிடம் வெஸ்ட் மினிஸ்டர் (West Minister) ஆகும். எனவே நாடாளுமன்ற முறை அரசாங்கம் வெஸ்ட் மினிஸ்டர் (West Minister) முறை அரசாங்கம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கிலாந்தின் பிரதம மந்திரி மற்ற அமைச்சர்களை ஒப்பிடுகையில் அதிக அதிகாரம் கொண்டவர். இவர் தனது அமைச்சரவையில் சம்மானவர்களில் முதன்மையானவராக (Primus interpares) கருதப்படுகிறார். தற்போதைய காலகட்டத்தில் பிரதம மந்திரியின் அதிகாரங்கள் அதிகரித்துள்ளது. பிரிட்டனின் அரசியல் மற்றும் நிர்வாகத்தில் தற்போதைய பிரதம மந்திரி ஆதிக்கம் செலுத்துகிறார்.


நாடாளுமன்ற முறை அரசாங்கத்தின் இயல்புகள் 

) பெயரளவு செயலாட்சி மற்றும் உண்மையான செயலாட்சி

குடியரசுத் தலைவர் பெயரளவு அதிகாரம் கொண்ட செயலாட்சியாவார் (dejure executive (or) titular executive). மாறாக பிரதம மந்திரி உண்மையான அதிகாரம் கொண்ட செயலாட்சியாக விளங்குகிறார் (de-facto executive). இவ்வகையில் குடியரசுத் தலைவர் நாட்டின் தலைவர் என்றும் பிரதம மந்திரி அரசாங்கத்தின் தலைவர் என்றும் கருதப்படுகிறார்

) பெரும்பான்மை பெற்ற அரசியல் கட்சியின் ஆட்சி

நாடாளுமன்றத்தின் கீழவையில் பெரும்பான்மைப் பெற்ற கட்சியே ஆட்சி அமைக்கின்றது. அக்கட்சியின் தலைவர் குடியரசுத் தலைவரால் பிரதம மந்திரியாக நியமிக்கப்படுகிறார். பிற அமைச்சர்கள் பிரதம மந்திரியின் ஆலோசனையின் பேரில் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றனர். எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் கட்சிகளின் கூட்டணியை குடியரசுத் தலைவர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பார்

) கூட்டுப் பொறுப்புணர்வு

அமைச்சர்கள் நாடாளுமன்றத்திற்கு கூட்டுப் பொறுப்பாகும் கடமைப்பட்டவர்கள். இதுவே நாடாளுமன்ற முறை அரசாங்கத்தின் அடிப்படை கோட்பாடாகும்

) இரட்டை உறுப்பினராதல்

அமைச்சர்கள் ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்திலும் செயலாட்சிப் பிரிவிலும் உறுப்பினர்களாக இருப்பர்

) பிரதம மந்திரியின் தலைமை

நாடாளுமன்ற முறை அரசாங்கத்தின் பிரதம மந்திரியே தலைமை பொறுப்பு வகிக்கிறார். அவரே அமைச்சரவை குழு, நாடாளுமன்றம் மற்றும் ஆட்சியிலுள்ள கட்சியின் தலைவர் ஆவார். இவ்வகையில் பிரதம மந்திரி அரசாங்கத்தின் செயல்பாடுகளில் குறிப்பிடத் தகுந்த மிக முக்கிய பங்கு வகிக்கிறார்.


நாடாளுமன்ற முறை அரசாங்கத்தின் நிறைகள் 

) சட்ட மன்றம் மற்றும் செயலாட்சி இடையேயான நல்லிணக்கம்

நாடாளுமன்ற முறை அரசாங்கத்தின் மிகப்பெரிய நன்மையாதெனில் அது அரசாங்கத்தின் அங்கங்களான சட்டமன்றம் மற்றும் செயலாட்சிக்கு இடையே நல்லிணக்கமான உறவுகள் மற்றும் கூட்டுறவினை ஏற்படுத்துகிறது. செயலாட்சி பிரிவு உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாகவும் இருப்பதால் அவர்களுக்கிடையே சிக்கல்கள் எழுவதிற்கான சாத்தியம் குறைவாகிறது. எனவே அவர்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்

) கடமைப்பாடுடைய அரசாங்கம்

நாடாளுமன்ற முறை அரசாங்கம் ஒரு கடமைப்பாடுடைய அரசாங்கம் உருவாவதற்கு வழிவகுக்கின்றது.அமைச்சர்கள் அவர்களுடைய அனைத்து செயல்களுக்கும் நாடாளுமன்றத்திற்கு கடமைப்பட்டவர்கள் ஆவர். நாடாளுமன்றமானது கேள்வி நேரம், விவாதங்கள், ஒத்திவைப்பு தீர்மானம் மற்றும் நம்பிக்கையில்லா தீர்மானம் போன்ற கருவிகள் மூலம் அமைச்சர்கள் மீது கட்டுப்பாடுகள் செலுத்துகின்றது

) எதேச்சதிகாரத்தை தடைசெய்தல்

அதிகாரங்கள் ஒரு தனி நபரிடம் இல்லாமல் அமைச்சரவை என்ற ஒரு குழுவிடம் உள்ளதால் தனிநபர் தன்னிச்சையாக செயல்படும் வாய்ப்புகள் குறைவாகும். இதன் மூலம் அமைச்சர்கள் சர்வாதிகாரியாக செயல்பட இயலாது. மேலும் அமைச்சர்கள் நாடாளுமன்றத்திற்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர்களாக இருப்பதுடன் அவர்களை நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் நீக்கம் செய்வதற்கும் வாய்ப்புகள் உண்டு

) பரவலான பிரிதிநிதித்துவம்

நாடாளுமன்ற முறை அரசாங்கத்தின் அனைத்து வகுப்பினர் மற்றம் அனைத்து பகுதியினர் என அனைவருக்கும் பரந்துபட்ட பிரதிநிதித்துவம் அளிக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் பிரதமந்திரி இக்காரணிகளை தனது அமைச்சரவையை முடிவு செய்யும்போது கருத்தில் கொள்வார்.


நாடாளுமன்ற முறை அரசாங்கத்தின் குறைகள் 

) நிலைத்தன்மையற்ற அரசாங்கம் 

நாடாளுமன்ற முறையானது நிலைத்தன்மை உடைய அரசாங்கத்தைத் தராது. அரசாங்கம் தன்னுடைய பதவிகாலத்தை நிறைவு செய்வதற்கான எந்த ஒரு உத்திரவாதமும் கிடையாது. அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நம்பிக்கையின் அடிப்படையிலேயே பதவியை தொடர இயலும். ஒரு நம்பிக்கையில்லா தீர்மானமோ, கட்சி தாவலோ அல்லது நிலைத்தன்மையற்ற கூட்டாட்சி அரசாங்கமோ எந்நேரத்திலும் அரசாங்கத்தின் நிலைத்தன்மையை பாதிக்கும் வாய்ப்புகள் உள்ளன

) கொள்கைகளில் தொடர்ச்சி இல்லாமை

நீண்ட கால கொள்கைகளையோ, திட்டங்களையோ நாடாளுமன்ற முறை அரசாங்கத்தின் மூலம் உருவாக்கி செயல்படுத்துவது கடினமாகும். இதற்கு காரணம் அரசாங்கத்தின் நிலைத்தன்மையற்ற பதவிக் காலமே ஆகும். ஆளுங்கட்சி மாறும் நிலையில் அரசாங்கத்தின் கொள்கைகள் மாறுவது சாதாரணமாக நடக்கக்கூடியதாகும்

) அமைச்சரவையின் சர்வாதிகாரம்

ஆளுங்கட்சி நாடாளுமன்றத்தில் ஒரு உறுதியான பெரும்பான்மை பெறும் நிலையில் அமைச்சரவையானது எல்லையற்ற அதிகாரம் பெற்று ஒரு சர்வாதிகார தன்மையுடன் செயல்பட வாய்ப்புகள் உண்டு

ஹரால்டு J.லாஸ்கி (Harold J.Laski) கூற்றுப்படி நாடாளுமன்ற முறை அரசாங்கம் செயலாட்சி பிரிவிற்கு சர்வ வல்லமையுடன் செயல்படுவதற்கான ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கின்றது

ராம்சே முர் (Ramsay muit) முன்னாள் பிரிட்டிஷ் பிரதம மந்திரி இதனை அமைச்சர் குழுவின் சர்வாதிகாரம் என்று குற்றம் சாட்டுகிறார்

) அதிகார பிரிவினைக்கு எதிராக இருத்தல்.

நாடாளுமன்ற முறை அரசாங்கத்தில் செயலாட்சியும், சட்டமன்றமும் ஒருங்கிணைந்து உள்ளது. அமைச்சரவையானது சட்டமன்றம் மற்றும் செயலாட்சி பிரிவிற்கு தலைமை ஏற்கிறது. இக்காரணத்தால் நாடாளுமன்ற முறை அரசாங்கம் அதிகார பிரிவினை அடிப்படையிலான கோட்பாட்டிற்கு எதிராக செயல்படுகிறது என்றே கூறலாம்


இந்திய அரசமைப்பினை உருவாக்கியவர்கள் ஏன் நாடாளுமன்ற அரசாங்க முறையினை ஏற்றனர்

நாடாளுமன்ற அரசாங்க முறையுடனான பரிச்சயம் உண்டு 

அதிக பொறுப்புணர்வுக்கான விருப்புரிமை 

சட்டமன்றத்திற்கும், செயலாட்சிக்கும் இடையேயான பிரச்சனைகளைத் தவிர்க்க வேண்டியது அவசியமாகும்

இந்திய சமுதாயத்தின் தன்மை அடுத்த முக்கியமான காரணமாகும். இந்தியா உலகிலேயே மிகவும் அதிகமான கலப்பு மரபுகளையும், சிக்கலான பன்மை சமூகங்களையும் கொண்ட மாநிலங்கள் உள்ள நாடுகளில் ஒன்றாகும். ஆகவே அரசமைப்பினை உருவாக்கியவர்கள் நாடாளுமன்ற அரசாங்க முறையினை ஏற்றனர். அது பல்வேறு பிரிவுகள், விருப்பங்கள் மற்றும் பகுதிகளுக்கு அரசாங்கத்தில் பிரதிநிதித்துவம் தர பெரும் வாய்ப்புள்ளதாகும். இது மக்களிடையே தேசிய உணர்வினை வளர்ப்பதுடன் தணிக்கை செய்யப்பட்ட இந்தியாவினை கட்டமைக்கிறது எனலாம்

Tags : Definition, Merits, Demerits, Features வரையறை, நிறைகள், குறைகள், இயல்புகள்.
11th Political Science : Chapter 6 : Forms of Government : Parliamentary form of government Definition, Merits, Demerits, Features in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 6 : அரசாங்கத்தின் வகைப்பாடுகள் : நாடாளுமன்ற முறை அரசாங்கம் - வரையறை, நிறைகள், குறைகள், இயல்புகள் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 6 : அரசாங்கத்தின் வகைப்பாடுகள்