கூட்டாட்சி முறை அரசாங்கம்
ஒற்றையாட்சி மற்றும் கூட்டாட்சி என்ற வகைப்பாடு என்பது மாநிலங்கள் மற்றும் மத்திய அரசாங்களுக்கிடையேயான உறவுகளின் அடிப்படையில் அமைவதாகும். கூட்டாட்சி அரசாங்கம் என்பது தேசிய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கிடையே அரசமைப்பிலான அதிகார பிரிவினையின் அடிப்படையில் அமைவதாகும். அதன் அடிப்படையில் அவ்வரசுகள் தங்களுக்கென உள்ள அதிகார எல்லையின் படி சுதந்திரமாகச் செயல்பட முடியும். அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து, ஆஸ்திரேலியா, கனடா, ரஷ்யா, பிரேசில் மற்றும் அர்ஜென்டினா ஆகிய நாடுகள் கூட்டாட்சி முறையிலான அரசாங்கத்தினை கொண்டுள்ளன. கூட்டாட்சி மாதிரியிலான அரசமைப்பில் தேசிய அரசாங்கமானது மத்திய அரசாங்கம் அல்லது ஒன்றிய அரசாங்கம் எனவும், வட்டார அரசாங்கங்கள் மாநில அரசாங்கம் அல்லது மாகாண அரசாங்கம் எனவும் அறியப்படுகின்றன.
அ) இரட்டை அரசாங்கம்
இந்திய அரசமைப்பின்படி மத்திய அளவில் ஒன்றியமும் அதன் பரப்பரளவிற்குள் மாநில அரசாங்கங்கள் என இரண்டு வகையான அரசாங்கங்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த இரண்டு அரசாங்கங்களும் அரசமைப்பில் கூறப்பட்டுள்ளவாறு தனக்கென தனிப்பட்ட அதிகாரங்களைக் கொண்டு செயல்படுகின்றன.
ஆ) எழுதப்பட்ட அரசமைப்பு
இந்திய அரசமைப்பு எழுதப்பட்ட விதிகளைக் கொண்டிருப்பதால் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் திருத்தங்கள் கொண்டுவருவது கடினமாகும்.
இ) அதிகாரப் பங்கீடு
இந்திய அரசமைப்பின் ஏழாவது அட்டவணையின்படி மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் மத்திய பட்டியல், மாநில பட்டியல் மற்றும் பொதுப் பட்டியல் என்ற அடிப்படையில் அதிகாரம் பங்கிட்டு அளிக்கப்பட்டுள்ளது.
ஈ) அரசமைப்பின் மேலான தன்மை
இந்தியாவில் அரசமைப்புச் சட்டமே நாட்டின் மிகவும் உயர்ந்த சட்டமாகும். மத்திய மற்றும் மாநில அரசுகள் இயற்றும் சட்டங்கள் அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு இருத்தல் வேண்டும்.
உ) நெகிழா அரசமைப்பு
ஒவ்வொரு அவையிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை என்ற நடைமுறையின் மூலமே அரசமைப்புச் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும் ஆளும் கட்சியினரால் மிக எளிதாக அரசமைப்பு சட்டத்திருத்தம் கொண்டுவர இயலாது.
ஊ) சுதந்திரமான நீதித்துறை
இந்தியாவில் நீதிமன்றமானது சட்டமன்றம் மற்றும் செயலாட்சித் துறையின் தலையீடு இல்லாமல் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதன் தேசிய மற்றும் மாநில அளவிலான அதிகார எல்லைகளின் படி அவை நேரடி, மேல் முறையீட்டு மற்றும் நீதிப்புனராய்வு பணிகளை மேற்கொள்கிறது.
எ) ஈரவைச் சட்டமன்றம் முறை (Bicameralism)
இந்திய நாடாளுமன்றமானது மேலவை மற்றும் கீழவை என இரண்டு அவைகள் கொண்டதாகும். மேலும் கீழவை நிதி தொடர்பான சட்டமியற்றலை மேற்கொள்ளும் அதிகாரம் கொண்டதாகும்.
• உள்ளாட்சியினுடைய தன்னாட்சி மற்றும் தேசிய ஒருமைப்பாடு ஆகியவற்றிற்கு இடையே சமரசத்தினை ஏற்படுத்துகிறது.
• மத்திய, மாநில அரசாங்கங்களுக்கிடையே அதிகாரம் பகிரப்படுபவதால் நிர்வாகத் திறன் மேம்படுகிறது.
• அளவில் மிகப்பெரிய நாடுகள் உருவாவதற்கு வாய்ப்புகள் உருவாகின்றது.
• அதிகாரங்கள் பங்கீடு செய்யப்படுவதால் மத்திய அரசாங்கம் ஏதேச்சதிகாரத்துடன் செயல்படுவதைக் கட்டுப்படுத்த இயலும்.
• மிகப்பெரிய நாடுகளுக்கு கூட்டாட்சி அரசாங்கம் மிகவும் பொருத்தமானதாகும்.
• பொருளாதார மற்றும் பண்பாட்டு வளர்ச்சிக்கு இது மிகவும் நன்மையாகும்.
• ஒற்றையாட்சி அரசாங்கத்தோடு ஒப்பிடும்போது கூட்டாட்சி அரசாங்கங்கள் வலிமையற்றவை ஆகும்.
• கூட்டாட்சி அரசாங்கங்கள் அதிக செலவினங்களை கொண்டதாகும்.
• பிரிவினைவாத மனப்போக்கு உருவாக பொதுவான வாய்ப்புகள் உள்ளன.
• நிர்வாகத்தில் ஒருமுகத் தன்மையை கொண்டுவர இயலாது.
• தேசிய ஒருமைப்பாட்டிற்கு இது ஒரு அச்சுறுத்தலாகும்.
• மத்திய மாநில அரசுகளுக்கிடையேயான அதிகாரப் பங்கீடு பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
• இரட்டைக் குடியுரிமை
• மாறிவரும் சூழல்களுக்கேற்ப நெகிழா அரசமைப்பினை எளிதாகத் திருத்துவது இயலாததாகும்.
• சில சமயங்களில் மாநில அரசாங்கங்கள் அயலுறவுக் கொள்கையில் தடையை ஏற்படுத்துகின்றன.
கூட்டாட்சி மற்றும் ஒற்றையாட்சி அரசாங்கத்திற்கிடையேயான வேறுபாடுகள்
ஒற்றையாட்சி
1. ஒரு அடுக்கு அரசாங்கம் மற்றும் துணை அலகுகள்
2. பெரும்பாலும் ஒற்றை குடியுரிமை
3. துணை அலகுகள் சுதந்திரமாகச் செயல்பட இயலாது
4. அதிகாரப் பகிர்வு என்பது கிடையாது
5. அதிகாரக் குவிப்பு
கூட்டாட்சி
1. இரண்டு அடுக்கு அரசாங்கம்
2. இரட்டைக் குடியுரிமை
3. கூட்டாட்சி அலகுகள் மத்திய அரசுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும்.
4. அதிகாரப் பகிர்வு என்பது இருக்கும்
5. அதிகாரப் பரவலாக்கம்
நாடு நாடாளுமன்றம்
1. இஸ்ரேல் - நெசெட்
2. ஜெர்மனி - பன்டஸ்டாக்
3. ஜப்பான் - டயட்
4. நார்வே - ஸ்டோர்டிங்
5. நேபாளம் - ராஷ்டிரிய பஞ்சாயத்து
6. பாகிஸ்தான் - தேசிய சபை
7. ரஷ்யா - டூமா
8. அமெரிக்கா - காங்கிரஸ்
9. தென் ஆப்பிரிக்கா - நாடாளுமன்றம்
10. சுவிட்சர்லாந்து - கூட்டாட்சி சபை