இந்திய அரசமைப்பின் கூட்டாட்சி இயல்புகள்
அ) இரட்டை அரசாங்கம்
இந்திய அரசமைப்பின்படி மத்திய அளவில் ஒன்றியமும் அதன் பரப்பரளவிற்குள் மாநில அரசாங்கங்கள் என இரண்டு வகையான அரசாங்கங்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த இரண்டு அரசாங்கங்களும் அரசமைப்பில் கூறப்பட்டுள்ளவாறு தனக்கென தனிப்பட்ட அதிகாரங்களைக் கொண்டு செயல்படுகின்றன.
ஆ) எழுதப்பட்ட அரசமைப்பு
இந்திய அரசமைப்பு எழுதப்பட்ட விதிகளைக் கொண்டிருப்பதால் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் திருத்தங்கள் கொண்டுவருவது கடினமாகும்.
இ) அதிகாரப் பங்கீடு
இந்திய அரசமைப்பின் ஏழாவது அட்டவணையின்படி மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் மத்திய பட்டியல், மாநில பட்டியல் மற்றும் பொதுப் பட்டியல் என்ற அடிப்படையில் அதிகாரம் பங்கிட்டு அளிக்கப்பட்டுள்ளது.
ஈ) அரசமைப்பின் மேலான தன்மை
இந்தியாவில் அரசமைப்புச் சட்டமே நாட்டின் மிகவும் உயர்ந்த சட்டமாகும். மத்திய மற்றும் மாநில அரசுகள் இயற்றும் சட்டங்கள் அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு இருத்தல் வேண்டும்.
உ) நெகிழா அரசமைப்பு
ஒவ்வொரு அவையிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை என்ற நடைமுறையின் மூலமே அரசமைப்புச் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும் ஆளும் கட்சியினரால் மிக எளிதாக அரசமைப்பு சட்டத்திருத்தம் கொண்டுவர இயலாது.
ஊ) சுதந்திரமான நீதித்துறை
இந்தியாவில் நீதிமன்றமானது சட்டமன்றம் மற்றும் செயலாட்சித் துறையின் தலையீடு இல்லாமல் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதன் தேசிய மற்றும் மாநில அளவிலான அதிகார எல்லைகளின் படி அவை நேரடி, மேல் முறையீட்டு மற்றும் நீதிப்புனராய்வு பணிகளை மேற்கொள்கிறது.
எ) ஈரவைச் சட்டமன்றம் முறை (Bicameralism)
இந்திய நாடாளுமன்றமானது மேலவை மற்றும் கீழவை என இரண்டு அவைகள் கொண்டதாகும். மேலும் கீழவை நிதி தொடர்பான சட்டமியற்றலை மேற்கொள்ளும் அதிகாரம் கொண்டதாகும்.