இந்திய அரசமைப்பின் ஒற்றையாட்சி இயல்புகள்
அ) உறுதியான மத்திய அரசாங்கம்
அதிகாரப்பகிர்வானது மத்திய அரசுக்குச் சாதகமாக இருப்பதுடன், அதிகாரம் சமநிலையற்று பகிரப்பட்டிருக்கும். முதலில் இந்தியாவில் மத்தியப்பட்டியலானது மாநிலப் பட்டியலைவிட அதிக அதிகாரங்கள் கொண்டிருக்கிறது. இரண்டாவதாக முக்கியமான அதிகாரங்கள் அனைத்தும் மத்திய அரசிடமே இருக்கிறது. மூன்றாவதாக பொதுப்பட்டியலிலும் மத்திய அரசின் அதிகாரமே மேலோங்கி இருக்கிறது.
ஆ) மாநில நிலப்பரப்புகளின் மீதான மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாடு
இந்திய நாடாளுமன்றம் தன்னிச்சையாக மாநிலங்களின் பெயர், நிலப்பரப்பு மற்றும் எல்லைகளை வரையறை செய்ய இயலும்.
இ) ஒற்றை அரசமைப்பு
இந்திய அரசமைப்பானது மத்திய அரசமைப்பை உள்ளடக்கியது ஆகும். இதன்படி மட்டுமே மத்திய, மாநில அரசாங்கங்கள் செயல்பட முடியும்.
ஈ) அரசமைப்பின் நெகிழும் தன்மை
இந்திய அரசமைப்பின் பெரும்பான்மையான பகுதியை நாடாளுமன்றம் தன்னிச்சையாக அரசமைப்பு சட்ட திருத்தத்தின் மூலமாக மாற்றலாம். இம்மாற்றங்களைச் செய்ய சாதாரண பெரும்பான்மை அல்லது சிறப்பு பெரும்பான்மை பெற்றிருந்தால் போதுமானதாகும்.
உ) மாநிலங்களின் சமநிலையற்ற பிரதிநிதித்துவம்
கூட்டாட்சி தத்துவத்தின்படி நாடாளுமன்றத்தின் மேலவையில் மாநிலங்களுக்கு சமமான பிரதிநிதித்துவம் அளித்தல் வேண்டும். மாறாக இந்திய மாநிலங்களுக்கு சமமான பிரதிநிதித்துவம் மாநிலங்களவையில் அளிக்கப்படவில்லை.
ஊ) நெருக்கடி நிலை அதிகாரங்கள்
இந்தியாவில் நெருக்கடி நிலை பிரகடனத்தின் போது மத்திய அரசாங்கம் மிகவும் வலிமையாக இருப்பதுடன் மாநில அரசுகள் மத்திய அரசின் முழுக்கட்டுப்பாட்டின் கீழ் சென்றுவிடும். நெருக்கடி நிலை காலத்தில் கூட்டாட்சி நடைமுறையானது அரசமைப்புச் சட்டதிருத்தம் செய்யப்படாமலேயே ஒற்றையாட்சி நிலைக்கு சென்றுவிடும். இவ்வகையான மாற்றம் எந்தவொருகூட்டாட்சி அமைப்பிலும் கிடையாது.
எ) ஒற்றைக் குடியுரிமை
இந்தியா ஒற்றைக்குடியுரிமை என்னும் முறையினை ஏற்றுக்கொண்டுள்ளது. நம் நாட்டில் இந்தியக் குடியுரிமை மட்டுமே உள்ளது, மாநிலங்களுக்கு தனி குடியுரிமை கிடையாது.
நம் நாட்டில் எந்த மாநிலத்திலும் பிறந்த அல்லது வசிக்கின்ற அனைத்து குடிமக்களும், மாநில வேறுபாடின்றி நாடு முழுவதும் ஒரே மாதிரியான உரிமைகளைக் கொண்டிருக்கின்றனர். அமெரிக்கா, சுவிட்சர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற கூட்டாட்சி அரசுகளில் குடிமக்கள் 'இரட்டைக் குடியுரிமை' பெற்றுள்ளனர். அதாவது தேசியக் குடியுரிமை மற்றும் மாநிலக் குடியுரிமை ஆகியவையாகும்.
ஏ) ஒருங்கிணைந்த ஒரே நீதித்துறை
இந்தியாவில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் உச்ச நீதிமன்றத்திலிருந்து கீழமை நீதிமன்றங்கள் வரை படிநிலை அமைப்பின் அடிப்படையில் உள்ளது. இந்திய நீதிமன்றங்களுக்கு நேரடி மற்றும் மேல்முறையீட்டு அதிகாரங்கள் உள்ளன.
ஐ) அகில இந்தியப் பணிகள்
இது அகில இந்திய பணிகள் அல்லது மத்தியப் பணிகள் மற்றும் மாநில குடிமைப் பணிகள் ஆகியவற்றின் இயல்புகளைக் கொண்டுள்ளது. மத்திய மற்றும் அகில இந்தியப் பணிகள் ஆகியவை ஒரே சீரான நிர்வாக முறைமை மற்றும் செயல்முறையினை இந்தியா முழுமைக்கும் ஊக்குவிக்கின்றன.
ஒ) ஆளுநர் நியமனம்
மாநில ஆளுநர் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை, குடியரசுத்தலைவரால் நியமிக்கப்படுகிறார், இவர் குடியரசுத் தலைவரின் விருப்பத்தின் அடிப்படையிலேயே பணியைத் தொடர்கிறார். ஆளுநர் என்பவர் மாநிலத்தின் செயலாட்சித்துறைத் தலைவர் ஆவார். அவருக்கு சட்டமன்றம், செயலாட்சி, நீதித்துறை மற்றும் நெருக்கடி நிலை தொடர்பான அதிகாரங்கள் உண்டு.