Home | 11 ஆம் வகுப்பு | 11வது அரசியல் அறிவியல் | குடியரசுத் தலைவர் முறை அரசாங்கம்

நிறைகள் - குடியரசுத் தலைவர் முறை அரசாங்கம் | 11th Political Science : Chapter 6 : Forms of Government

   Posted On :  03.10.2023 08:25 am

11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 6 : அரசாங்கத்தின் வகைப்பாடுகள்

குடியரசுத் தலைவர் முறை அரசாங்கம்

குடியரசுத்தலைவர் முறை அரசாங்கமானது அதிகாரப் பிரிவினை கோட்பாட்டின்படி கட்டமைக்கப்பட்டது. இது கடமைப்பாடற்ற, நாடாளுமன்றம் சாராத அல்லது நிரந்தரமான செயலாட்சி அமைப்பு என்று அழைக்கப்படுகிறது.

குடியரசுத் தலைவர் முறை அரசாங்கம்

குடியரசுத்தலைவர் முறை அரசாங்கமானது அதிகாரப் பிரிவினை கோட்பாட்டின்படி கட்டமைக்கப்பட்டது. இது கடமைப்பாடற்ற, நாடாளுமன்றம் சாராத அல்லது நிரந்தரமான செயலாட்சி அமைப்பு என்று அழைக்கப்படுகிறது. அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா மற்றும் இலங்கை போன்ற நாடுகள் குடியரசுத்தலைவர் முறை அரசாங்கத்திற்கு உதாரணமாகும்


குடியரசுத்தலைவர் முறை அரசாங்கத்தின் இயல்புகள்

அமெரிக்க குடியரசுத் தலைவர் அரசு மற்றும் அரசாங்கத்திற்கு தலைவர் ஆவார். அரசின் தலைவர் என்ற முறையில் அவர் பெயரளவிலான நிலையினை வகிக்கிறார். அரசாங்கத்திற்குத் தலைவர் என்ற முறையில் அரசாங்கத்தின் செயலாட்சி பிரிவை தலைமையேற்று நடத்துகிறார்.

குடியரசுத் தலைவர் வாக்காளர் குழுவினால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவரது பதவிக்காலம் நான்கு ஆண்டுகள் ஆகும். அமெரிக்கா நாடாளுமன்றத்தின் (காங்கிரஸ்) பதவி நீக்க முறையின் மூலம் அரசமைப்பிற்கு எதிரான தீவிரமான செயல்பாட்டின் காரணமாக மட்டுமே அவரை பதவி நீக்கம் செய்ய முடியும்.

குடியரசுத் தலைவர் தனது அமைச்சரவை குழு அல்லது சிறிய அமைப்பின் உதவியுடன் அரசாங்கத்தை நடத்துகிறார். அது 'சுயவிருப்ப அமைச்சரவை’ (Kitchen cabinet) என அழைக்கப்படுகிறது. இது தேர்ந்தெடுக்கப்படாத துறை செயலாளர்களைக் கொண்ட ஓர் ஆலோசனைக் குழுவாகும். இந்த அமைச்சரவை குழுவில் உள்ளவர்கள் அனைவரும் குடியரசு தலைவராலேயே தேர்ந்தெடுக்கப்பட்டு நியமனம் செய்யப்படுகின்றனர். அவர்கள் அனைவரும் குடியரசுத் தலைவருக்கு கடமைப்பட்டவர்கள் ஆவர். மேலும் அவர்கள் குடியரசுத் தலைவரால் எந்த நேரத்திலும் பதவி நீக்கம் செய்யப்படலாம்.

குடியரசுத் தலைவரும் அவருடைய செயலாளர்களும் (அமைச்சர்கள்) அமெரிக்க நாடாளுமன்றத்திற்குப் (காங்கிரஸ்) பொறுப்பானவர்கள் அல்ல. மேலும் அவர்கள் நாடாளுமன்றத்தில் (காங்கிரஸ்) உறுப்பினர்களாக இருக்க வேண்டுமென்பதோ அதன் கூட்டத்தொடரில் பங்குகொள்ள வேண்டுமென்ற அவசியமோ கிடையாது

குடியரசுத் தலைவருக்கு நாடாளுமன்றத்தின் கீழவையான பிரதிநிதிகள் சபையினைக் கலைக்கும் அதிகாரம் இல்லை. அமெரிக்க குடியரசுத் தலைவர் முறையின் அடிப்படை சாராம்சமானது அதிகார பிரிவினைக் 'கோட்பாடு' ஆகும். மேலும் சட்டமன்றம், செயலாட்சி மற்றும் நீதித்துறை சார்ந்த அதிகாரங்கள் தனித்தனியே பிரிக்கப்பட்டு மூன்று வெவ்வேறு சுதந்திரமான அங்கங்களிடம் வழங்கப்பட்டுள்ளது.


நாடாளுமன்ற முறை அரசாங்கத்திற்கும், குடியரசுத்தலைவர் முறை அரசாங்கத்திற்கும் இடையேயான வேறுபாடுகள்.


குடியரசுத் தலைவர் முறை அரசாங்கம்

1. குடியரசுத் தலைவர் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்

2. குடியரசுத் தலைவரே மேலான அதிகாரம் பெற்றவர்

3. அதிகாரப் பிரிவினை

4. சுதந்திரமான கிளைகள்

5. குடியரசுத் தலைவரே அரசின் தலைவராவார் 

6. குடியரசுத் தலைவரே அரசாங்கத்தின் தலைவராவார் 

7. குடியரசுத் தலைவரே தலைமைப் பணியை ஏற்கிறார்

8. குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்திற்கு (காங்கிரஸ்) பொறுப்பானவர் கிடையாது.

நாடாளுமன்ற முறை அரசாங்கம்

1. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்ட அரசியல் கட்சியின் தலைவரே பிரதம மந்திரியாவார்

2. மத்திய சட்டமன்றமே மேலான அதிகாரம் கொண்டதாகும்

3. அதிகாரப் பிரிவினை கிடையாது அதிகாரம் மையப்படுத்தப்பட்டிருக்கும்

4. ஒன்றுடன் ஒன்று கலந்த பணிகளை உடைய சுதந்திரமான கிளைகள்

5. குடியரசுத் தலைவரே அரசின் தலைவராவார்

6. பிரதமமந்திரியே அரசாங்கத்தின் தலைவராவார்

7. கூட்டுத்தலைமை

8. நாடாளுமன்றத்தில் கூட்டுப் பொறுப்புணர்வு மற்றும் தனிப்பொறுப்புணர்வு உண்டு.


"உலக வங்கி - உலக மேம்பாட்டு அறிக்கை 1997: மாறிவரும் சூழலில் அரசின் நிலை"

இந்த அறிக்கையானது வேகமாக மாறிவரும் உலக சூழலில் அரசு எவ்வகையில் நாட்டின் வளர்ச்சியில் சிறப்பாகப் பங்களிக்கலாம் என்பதைக் குறித்ததாகும். அரசு என்ன செய்ய வேண்டும், எவ்வாறு செய்ய வேண்டும் என்பதுடன் அரசு தன்னை எவ்வாறு மேம்படுத்திக் கொள்ளலாம் என்பன குறித்தும் இவ்வறிக்கையில் விவாதம் செய்யப்பட்டுள்ளது. மையப்படுத்தப்பட்ட திட்டமிடல் மற்றும் கலப்பு பொருளாதாரம் சார்ந்த அரசாங்கங்கள் தற்போதைய காலகட்டத்தில் சந்தை சார்ந்த பங்கினைக் குறைத்துக் கொண்டு வருகின்றன. இதற்குத் தோல்வியில் முடியும் அரசின் தலையீடுகள் காரணமாகும்.

இவ்வறிக்கை மேற்கூறிய கருத்துக்கு எதிராக சில முக்கியமான தருணங்களில் அரசின் தலையீடு சந்தையில் தேவை என்பதை வலியுறுத்துகிறது. பொருளாதாரம் சார்ந்த நிறுவனச் சூழலில் சட்டத்தின் ஆட்சியைச் செயல்படுத்தும் பங்கு அரசிற்கு உள்ளது. மேலும் நாட்டின் மேம்பாட்டிற்கு அரசின் சந்தை சார்ந்த தலையீடு அத்தியாவசியம் என கருதுகிறது. அரசாங்கத்தை குறைந்தபட்ச அரசாக சுருக்குவதற்கு இது எதிர்ப்பு தெரிவிக்கிறது. மேலும் தனியார் தொழில்கள் மற்றும் தனிமனிதர்களின் செயல்பாடுகளுக்கு தகுந்த ஊக்கம் மற்றும் ஆதரவினை நல்கும் சிறப்பான அரசே மேம்பாட்டிற்குத் தேவை என விளக்குகிறது.

 இவ்வறிக்கை அரசிற்கு சில சீர்திருத்தங்களை வலியுறுத்துகிறது. முதலாவதாக, அரசின் செயல்பாடுகளையும், அதன் திறன்களையும் சமன்படுத்துதலில் கவனம் செலுத்துதல் மற்றும் இரண்டாவதாக, அரசின் திறன்களை மேம்படுத்துவதற்கு அரசு நிறுவனங்களை மாற்றியமைப்பதற்கான வழிமுறைகளை கண்டுணர வேண்டும்.

இவ்வறிக்கையின்படி, பின்வரும் ஐந்து அடிப்படைப் பணிகளை அரசாங்கம் தனது நோக்கங்களாக மேற்கொள்ள வேண்டும். இவை இல்லையென்றால் நிலையான, வறுமையில்லாத மற்றும் அனைவருக்குமான வளர்ச்சியை நாம் அடைவது சாத்தியமற்றதாகும்.

அவையாவன.............. 

1. நாட்டில் அடிப்படைச் சட்டத்தை நிறுவுதல் 

2. பேரியல் பொருளாதார நிலைத்தன்மையை பாதுகாத்தல் 

3. அடிப்படைக் கட்டமைப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பில் முதலீடு செய்தல் 

4. சமூகத்தில் எளிதில் இலக்காகும் நிலையில் உள்ளவர்களை பாதுகாத்தல் 

5. சுற்றுச் சூழல் பாதுகாப்பு

Tags : Features நிறைகள்.
11th Political Science : Chapter 6 : Forms of Government : Presidential Form of Government Features in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 6 : அரசாங்கத்தின் வகைப்பாடுகள் : குடியரசுத் தலைவர் முறை அரசாங்கம் - நிறைகள் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 6 : அரசாங்கத்தின் வகைப்பாடுகள்