அலகு 6
அரசாங்கத்தின் வகைப்பாடுகள்
கற்றலின் நோக்கங்கள்
மாணவர்கள் பின்வருவனவற்றை அறிந்து கொள்ளலாம்
❖ அரசாங்கத்தினை வரையறை செய்தல்
❖ அரசாங்கத்தின் நோக்கத்தினைப் புரிந்து கொள்ளுதல்
❖ அரசாங்கத்தின் பல்வேறு வகைகளை விவரித்தல்
❖ அரசாங்கத்திற்கும் மற்றும் குடிமக்களுக்கும் இடையேயான தொடர்பினைப் புரிந்து கொள்ளுதல்
❖ அரசாங்கத்தின் செயல்பாடுகளை கூர்ந்து ஆராய்தல்
அறிமுகம்
அரசாங்கம் என்பது அரசின் மிக முக்கிய அங்கமாகும். அரசாங்கம் என்பது அரசியல் மற்றும் நிர்வாகம் சார்ந்த துறைகளின் உறுப்பினர்களை உள்ளடக்கியது ஆகும்.
மக்கள் நலன் சார்ந்த கொள்கை உருவாக்கத்திலும், நடைமுறைப்படுத்துவதிலும் அரசாங்கம் மிக முக்கியப்பங்கு வகிக்கின்றது. மேலும் அரசாங்கம் என்பது சட்டம் இயற்றுதல், நடைமுறை சார்ந்த பணிகளையும் மேற்கொள்கிறது. சட்டமன்றம், செயலாட்சித் துறை மற்றும் நீதிமன்றம் ஆகிய மூன்றும் அரசமைப்பின் அடிப்படையில் அரசாங்கத்தின் அங்கங்கள் ஆகும். இம்மூன்று அங்கங்களும் அரசின் நோக்கங்களுக்குச் செயல்முறை வடிவம் கொடுக்கின்றது. அரசாங்கத்தைப் பின்வரும் வகையில் ஒற்றையாட்சி, கூட்டாட்சி, நாடாளுமன்ற முறை, குடியரசுத்தலைவர் முறை என வகைப்படுத்தாலம்.
மாணவர்களின் சிந்தனைக்கு.....
❖ அரசாங்கம் எனும் சொல்லைக் கேட்டவுடன் மாணவர்கள் மனதில் தோன்றுவது என்ன?
❖ எந்தெந்த வகையில் நீங்களோ, உங்கள் குடும்பமோ அல்லது குடிமக்களோ அரசாங்கத்துடன் எவ்வகை தொடர்பில் இருக்கிறீர்கள்?
❖ உங்கள் அன்றாட வாழ்க்கையில் அரசாங்கத்தின் பங்களிப்பை கண்டுணர முடிகிறதா?
❖ அரசாங்கம் என்பது தவிர்க்க முடியாததா? அல்லது அரசாங்கம் இல்லாத நிலையிலும் குடிமக்கள் வாழ்க்கையை தொடர இயலுமா?
❖ அரசாங்கத்தின் செயல்பாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பங்களிப்பையும், நியமனம் செய்யப்பட்ட அதிகார வர்க்கத்தினரின் பங்களிப்பையும் உங்களால் பிரித்து அறிய முடிகின்றதா?
❖ அரசாங்கத்தின் சில துறைகளை கண்டுணர்ந்து அவற்றை மத்திய, மாநில மற்றும் உள்ளாட்சி சார்ந்த துறைகள் என இனம் கண்டு வகைப்படுத்தவும்.
❖ அரசாங்கத்தை உங்கள் சொந்த வார்த்தைகளில் வரையறுக்கவும்.
கட்டுப்பாடுகள் மற்றும் சமநிலைகள் (குடியரசுத் தலைவர் முறை)
ஐக்கிய அமெரிக்க குடியரசு – Checks and Balances (Presidential form)
சட்டமன்றப் பிரிவின் மீதான கட்டுப்பாடுகள்
❖ சட்டங்களை முன்மொழியலாம்
❖ சட்டங்களை ரத்து செய்தல் காங்கிரசின் சிறப்புக் கூட்டத் தொடர்களுக்கு அழைக்கலாம்
❖ நியமனங்கள் செய்தல்
❖ வெளிநாட்டுடனான உடன்படிக்கைகளுக்கான பேச்சுவார்த்தையில் ஈடுபடுதல்
செயலாட்சிப் பிரிவின் மீதான கட்டுப்பாடுகள்
❖ குடியரசுத் தலைவரின் ரத்து அதிகாரங்களை மீறிச் செயல்படும் அதிகாரமிக்கதாகும்
❖ செயலாட்சியின் நியமனங்களை உறுதிசெய்தல்
❖ உடன்படிக்கைகளுக்கு ஒப்புதல் அளித்தல்
❖ போரைப் பிரகடனப்படுத்துதல்
❖ நிதி ஒதுக்கீடு செய்தல்
❖ குடியரசுத் தலைவரை பதவி நீக்க நடைமுறையின் மூலம் அகற்றுதல்
செயலாட்சிப் பிரிவின் மீதான கட்டுப்பாடுகள்
❖ செயலாட்சியின் நடவடிக்கைகளை அரசமைப்பிற்கு முரணானதாக பிரகடனப்படுத்துதல்
நீதித்துறை பிரிவின் மீதான கட்டுப்பாடுகள்
❖ கூட்டாட்சி நீதிபதிகளை நியமிக்கிறார்
❖ கூட்டாட்சியிலுள்ள குற்றவாளிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்குதல்
நீதித்துறைப் பிரிவின் மீதான கட்டுப்பாடுகள்
❖ கூட்டாட்சியின் கீழமை நீதிமன்றங்களை உருவாக்குதல்
❖ நீதிபதிகளைப் பதவி நீக்கமுறையின் மூலம் அகற்றுதல்
❖ நீதித்துறையின் முடிவுகளை மீறும் அதிகாரம் கொண்டதுடன் சட்டத்திருத்தத்தினை முன்மொழியலாம்
❖ கூட்டாட்சி நீதிபதிகளின் நியமனங்களை அங்கீகரித்தல்
சட்டமன்றப் பிரிவின் மீதான கட்டுப்பாடுகள்
❖ சட்டமன்றத்தின் நடவடிக்கைகளை அரசமைப்பிற்கு முரணானதாக பிரகடனப்படுத்துதல்
குறிப்பிடத்தக்க மேற்கோள்
"எந்த ஒரு மனிதனும் தனக்கு தெரியாத அல்லது அனுபவம் இல்லாத துறையில் செயல்பட விரும்புவதில்லை, அரசாங்கம் என்ற கடினமான மற்றும் மிகுதியான திறன் தேவைப்படும் துறையில் ஈடுபட தமக்குத் தகுதி உள்ளதாகக் கருதி அனைவரும் செயல்பட விரும்புகின்றனர்".-சாக்ரடீஸ்
பல்வேறு வகையான அணுகுமுறைகள் மூலம் அரசாங்கத்தை அறிந்து கொள்ள முயல்வது நமக்கு அரசாங்கத்தின் தோற்றம் மற்றும் அதன் செயல்பாடுகளை விரிவாக அறிந்து கொள்ள உதவுகிறது.
(அ) ஒப்பீட்டு மற்றும் வரலாற்று அணுமுறை
ஒப்பீட்டு மற்றும் வரலாற்று அணுகுமுறையானது மேற்கத்திய அரசியல் நிறுவனங்களைப் பண்டைய காலம் முதல் தற்காலம் வரை கற்றறிந்து உள்ளது. இந்த அணுகுமுறை விளக்கரீதியான தன்மையை கொண்டது. அரிஸ்டாட்டில், மாண்டெஸ்க்யூ மற்றும் லாக் ஆகியோர் இவ்வணுகுமுறையினைக் கையாண்டு அரசாங்கங்களை பகுத்தாய்ந்தனர்.
உதாரணமாக, அரிஸ்டாட்டில் தனது மிகச்சிறந்த படைப்பான 'அரசியல்' எனும் புத்தகத்தை எழுதும்முன் 158 நாடுகளின் அரசமைப்புகளை பகுத்தாய்ந்துள்ளார். மாண்டெஸ்க்யூ இங்கிலாந்து அரசமைப்பை பகுத்தாரய்ந்து பின்னர் இங்கிலாந்து அரசமைப்பின் உறுதித்தன்மைக்கு 'அதிகாரங்களின் பிரிவினையே காரணம்' என கண்டுணர்ந்தார்.
(ஆ) சட்ட மற்றும் நிறுவனம் சார்ந்த அணுகுமுறை
பெந்தம், ஆஸ்டின் மற்றும் டைசி போன்ற அறிஞர்கள் இந்த அணுகுமுறையினைக் கையாண்டனர். இது அரசியல் நிறுவனங்களின் முறையான சட்டக் கட்டமைப்பை மையமாக கொண்டதாகும்.
அரசாங்கம் மற்றும் சட்டத்திற்கு இடையேயான தொடர்புகளை விளக்குவதற்கு ஏதுவாக சிலகோட்பாடுகளை உருவாக்கம் செய்ய இந்த அணுகுமுறை உதவுகின்றது. பெந்தம் இங்கிலாந்து சட்டத்தை சீரமைப்பு செய்த தன்னிகரற்ற அறிஞர் ஆவார். ஆஸ்டின் இறையாண்மையின் சட்டரீதியான அடிப்படையை உணர்த்தியவர் ஆவார். மேலும் இவர் இறையாண்மை என்பது பிரிக்க இயலாத, மாற்றித்தர முடியாத மற்றும் இறுதியான அதிகாரம் என்று கூறியவர் ஆவார். ஏ.வி.டைசி அரசாங்கத்தினை சட்டத்தின் அடிப்படையிலும், அரசாங்கள் பிறகிளைகளில் அதன் செயலாக்கத்தினைப் பொறுத்தும் மதிப்பிடுகிறார்.
(இ) அரசியல் பொருளாதார அணுகுமுறை
இது அரசியலுக்குப் பொருளாதாரம் சார்ந்த விளக்கங்களை அளிக்கின்றது. மேலும் சந்தையின் பங்களிப்பு, உற்பத்தி வழிமுறைகள் மற்றும் சமூகத்திற்கு உற்பத்தி பொருட்களை கொண்டு செல்வது குறித்தும் இது விவாதிக்கின்றது. இந்த அணுகுமுறை தாராளவாத அரசியல் பொருளாதாரம் மற்றும் மார்க்சிய அரசியல் பொருளாதாரம் என இருவகையாக வகைப்படுத்தப்படுகின்றது.
(ஈ) அரசியல் சமூகவியல் அணுகுமுறை
இந்த அணுகுமுறையானது சமூகவியல் மற்றும் மானுடவியல் சார்ந்து உள்ளது. மேலும் இதனை அமைப்புசார் அணுகுமுறை என்றும் கூறலாம். அரசாங்கம் அல்லது அரசியல் அமைப்பு என்பது சமூகம் எனும் பெரிய கட்டமைப்பில் உள்ளடங்கியது துணை அமைப்பு என்று அரசியல் சமூகவியல் உறுதி செய்கின்றது. இந்த அணுகுமுறை பெரிய மற்றும் சிறிய அமைப்புகளுக்கிடையேயான தொடர்பை ஆராய்கின்றது.
மாண்டெஸ்க்யூ அரசாங்கத்தை மூன்று விதமாக வகைப்படுத்துகிறார், அவை முறையே குடியரசு, முடியாட்சி மற்றும் கொடுங்கோல் அரசாங்கம் ஆகும்.
குடியரசு அரசாங்கம்
இவ்வகை அரசாங்கத்தில் மக்கள் இறையாண்மை அதிகாரத்தை பெற்றுள்ளனர்.
முடியாட்சி அரசாங்கம்
இது ஒரு தனி மனிதனின் ஆட்சியாகும். அத்துடன் நிலையாக நிறுவப்பட்ட சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடத்தப்பெறுவது ஆகும்.
கொடுங்கோல் அரசாங்கம்
ஒரு தனிமனிதனின் விருப்பு, வெறுப்பிற்கு உட்பட்டே ஆளுகை நடைபெறும். மேலும் நிறுவப்பெற்ற மற்றும் நிலையான சட்டதிட்டங்கள் கிடையாது. மாண்டெஸ்க்யூவின் கூற்றுப்படி, அரசு தொடர்ந்து நீடித்திருப்பதற்கு "உறுதியான சமுதாயத்தினுடைய குறிப்பிட்ட உத்வேகத்தின் பண்பியல் வடிவத்தை சார்த்திருக்கிறது".