Home | 8 ஆம் வகுப்பு | 8வது அறிவியல் | பருக உகந்த நீர்

பண்புகள், சுத்திகரிப்பு, நீரின் கடினத்தன்மை - பருக உகந்த நீர் | 8th Science : Chapter 13 : Water

   Posted On :  29.07.2023 06:07 am

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 13 : நீர்

பருக உகந்த நீர்

1. பருக உகந்த நீரின் தன்மைகள் 2. நீரைத் தூய்மையாக்கல் 3. நீரின் கடினத்தன்மை

பருக உகந்த நீர்

நீ கடலில் நீந்திக் கொண்டிருக்கும்போது கடல்நீரை அறியாமல் விழுங்கிவிட்டதாகக் கற்பனை செய்து பார். நீ எப்படி உணர்வாய்? வாந்தி எடுப்பதுபோல் உணர்வாய் அல்லவா? கடல்நீரில் அதிகளவு உப்பு கலந்திருப்பதே இதற்குக் காரணமாகும். ஒவ்வொரு லிட்டர் கடல் நீரிலும் 35 கிராம் சாதாரண உப்பு எனப்படும் சோடியம் குளோரைடு கரைந்துள்ளது. அது உவர் நீர் எனப்படும். இது பருகுவதற்கு உகந்ததல்லாத நீர் எனப்படுகிறது.

மனித நுகர்வுக்குத் தகுதியான நீரே பருக உகந்த நீர் எனப்படும். ஒவ்வொரு லிட்டர் பருக உ உகந்த நீரும் 1 முதல் 2 கிராம் சாதாரண உப்பையும், கரைந்த நிலையிலுள்ள பிற உப்புக்களையும் கொண்டுள்ளது. சாதாரண உப்பான சோடியம் குளோரைடைத் தவிர, சிறிதளவு கால்சியம் (Ca), மெக்னீசியம் (Mg), பொட்டாசியம் (K), தாமிரம் (Cu) மற்றும் துத்தநாக (Zn) உப்புகளும் நீரில் கலந்துள்ளன. இந்த தாது உப்புகள் நீருக்கு சுவையைத் தருகின்றன. இவைதவிர, மனிதனின் வளர்சிதை மாற்றத்திற்கும் இன்றியமையாதது. பருக உகந்த நீரில் காற்றும் கலந்துள்ளது.

சாக்கடலில் (Dead Sea) நீரின் இந்த ஏரி உப்புத்தன்மை மிக அதிகம். இது உப்பு நிறைந்த ஒரு ஏரியாகும். கடலுடன் இணைந்திருக்காமல் தனித்துக் காணப்படுகிறது இது நிலத்தால் சூழப்பட்டுள்ளதால் இதிலுள்ள நீர் ஆவியாகி உப்புத்தன்மையின் அளவு சீராக அதிகரித்து வருகிறது. தற்போது அதன் உப்புத்தன்மை மிக அதிகமாக இருப்பதால் கடல் வாழ் உயிரினங்கள் அதில் வாழ முடியாது. எனவேதான், இது சாக்கடல் என்று அழைக்கப்படுகிறது.


 

1. பருக உகந்த நீரின் தன்மைகள்

பருக உகந்த நீரின் தன்மைகள் கீழே தரப்பட்டுள்ளன.

• பருக உகந்த நீர் நிறமற்றதாகவும், மணமற்றதாகவும் இருக்க வேண்டும்.

• பருக உகந்த நீரானது தெளிந்த நிலையில் இருக்க வேண்டும்.

• பாக்டிரியா, வைரஸ் மற்றும் புரோட்டோசோவா போன்ற நுண்ணுயிர்கள் நீக்கப்பட்டதாக இருத்தல் வேண்டும்.

• மாசு மற்றும் திடப்பொருள்கள் அற்றதாக இருத்தல் வேண்டும்.

• நமது உடலுக்குத் தேவையான உப்புகள் மற்றும் தாதுக்களைக் கொண்டிருத்தல் அவசியம். மேலும், வாயுக்களும் நீரில் கலந்திருக்கவேண்டும்.


செயல்பாடு 5

ஒரே வகையைச் சேர்ந்த இரண்டு தொட்டிச் செடிகளை எடுத்துக் கொள்ளவும். ஒரு தொட்டிச்செடிக்கு குழாய் நீரையும், மற்றொரு தொட்டிச்செடிக்கு கடல்நீரையும் ஊற்றவும். சில நாட்கள் கழித்து தாவரங்களின் வளர்ச்சியைக் கவனிக்கவும்.


2. நீரைத் தூய்மையாக்கல்

பூமியின்மீது காணப்படும் மொத்தமுள்ள தூயநீரில் 1% மட்டுமே ஆறு மற்றும் ஏரிகளில் காணப்படுகிறது. மீதமுள்ள நீர் பனிப்பாறைகள் மற்றும் துருவப் பகுதிகளில் உறைந்து காணப்படுகிறது. இந்த நீரில் மாசு மற்றும் திடப்பொருள்கள் கலந்திருப்பதால் இது குடிப்பதற்கோ, சமைப்பதற்கோ, துவைப்பதற்கோ, குளிப்பதற்கோ ஏற்றதல்ல. மேலும், இவற்றில் பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகளும் உள்ளன. இந்நீரை சுத்திகரிக்காமல் நாம் அருந்தினால் நீரின் மூலம் பரவும் நோய்களாகிய டைபாய்டு, காலரா போன்ற நோய்கள் ஏற்படக்கூடும். எனவே, வீடுகளுக்கு அனுப்பும் முன்பு இந்த நீரை வடிகட்டி, சுத்திகரிப்பு செய்யவேண்டும். நீர் சுத்திகரிப்பு நிலையங்களில், நீரைச் சுத்திகரிக்க பல்வேறு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இந்த வழிமுறைகளைப் பற்றி கீழே காண்போம்.

ஒவ்வொரு ஆண்டும் 4.6 மில்லியன் குழந்தைகள் வயிற்றுப் போக்கினால் இறக்கின்றனர். தூய நீர் சுகாதாரம் மற்றும் உடல்நலத்தை மேம்படுத்துகிறது.


வீழ்படிவாக்குதல்

ஆறு மற்றும் ஏரிகளிலிருந்து பெறப்படும் நீரானது பெரிய கலன்களில் சேகரிக்கப்படுகிறது. பிறகு கழிவுகளை வீழ்படியச் செய்வதற்காக எந்தவித அசைவுமின்றி அது கலன்களில் அப்படியே நிலைநிறுத்தப்படுகிறது. இதனால், மாசுகள் கொள்கலனின் அடிப்பகுதியில் படிகின்றன. சில நேரங்களில் வீழ்படிதலை துரிதப்படுத்துவதற்காக பொட்டாஷ் படிகாரமானது நீருடன் சேர்க்கப்படுகிறது. இந்நிகழ்வினை ஏற்றம் (loading) என்கிறோம். பொட்டாஷ் படிகாரமானது மாசுடன் சேர்ந்து வீழ்படிதலைத் துரிதப்படுத்துகிறது.

வடிகட்டுதல்

பிறகு, வீழ்படிவுக் கொள்கலனிலிருந்து நீரானது வடிகட்டுதல் கலனுக்கு நீரேற்றம் செய்யப்படுகிறது. வடிகட்டுதல் கலனின் அமைப்பானது மணல், கூழாங்கல், கல்கரி மற்றும் கான்கிரிட் அடுக்குகளால் ஆனது. நீரானது இந்த அடுக்குகளின் வழியாக உள் இறங்கும்பொழுது, நீரில் கலந்துள்ள மாசுக்கள் முற்றிலும் நீக்கப்படுகின்றன.

நுண்ணியிர் நீக்கம்

கிருமி மற்றும் பாக்டீரியாக்களை நீக்குவதற்காக வடிகட்டப்பட்ட நீரானது வேதிமுறைக்கு உட்படுத்தப்படுகிறது. இம்முறை நுண்ணுயிர் நீக்கம் எனப்படும். இந்நிகழ்விற்காக குளோரின் மற்றும் ஓசோன் வாயுக்கள் பயன்படுத்தப்படுகின்றன. வடிகட்டுதல் கலனிலிருந்து பெறப்பட்ட நீரானது நுண்ணுயிர் நீக்கம் செய்யப்படுவதற்காக குளோரின் கலனிற்கு அனுப்பப்படுகிறது. போதுமான அளவு குளோரின் சேர்க்கப்படும் நிகழ்வானது குளோரினேற்றம் எனப்படுகிறது. கிருமிகளை அழிப்பதற்காக ஓசோன் வாயுவும் உட்செலுத்தப்படுகிறது. இந்த முறைக்கு ஓசோனேற்றம் என்று பெயர்.


நீரின் மீது காற்று மற்றும் சூரிய ஒளி விழுமாறு செய்வதன் மூலமாகவும் நுண்ணுயிர் நீக்கம் செய்யலாம். காற்றிலிருக்கும் ஆக்சிஜன் மற்றும் சூரிய ஒளி ஆகியவை நீரிலுள்ள கிருமிகளை அழிக்கின்றன. காற்றினைச் செலுத்துவன் மூலம் கிருமிகளை நீக்கம் செய்யும் முறை காற்றேற்றம் எனப்படும்.

நீரில் கலந்துள்ள மாசுக்கள் மற்றும் கிருமிகளை நீக்குவதற்கு சுத்திகரிப்பான்கள் பயன்படுகின்றன. மேலும், இவை நீரின் சுவையையும் கூட்டுகின்றன. RO என்பது நீர் சுத்திகரிப்பான்களில் பயன்படுத்தப்படும் 'Reverse Osmosis எனப்படும் தொழில்நுட்பத்தைக் குறிக்கிறது. மேலும், சில RO க்களில் கிருமிகளை அழிக்கக் கூடிய புறஊதா (UV) அலகுகளும் நீரைச் சுத்திகரிப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றன.

 

3. நீரின் கடினத்தன்மை

துணிகளை வெளுப்பதற்கு நாம் சோப்பு மற்றும் டிடர்ஜெண்டைப் பயன்படுத்துகிறோம். இவை நீருடன் நுரையை உருவாக்கி துணிகளிலிருக்கும் அழுக்கை எளிதில் அகற்றுகின்றன. நீரில் பல உப்புகள் மற்றும் தாதுக்கள் கரைந்துள்ளன. குறைந்தளவே உப்புகள் கரைந்துள்ள நீரை நாம் மென்னீர் என்கிறோம். இந்த நீரில் சோப்பு, டிடர்ஜெண்டு ஆகியவை எளிதில் நுரையினை உருவாக்குகின்றன.


சில நேரங்களில் உப்பு மற்றும் தாதுக்கள் நீரில் அதிகளவில் கரைந்திருக்கும். நுரைக்குப் பதிலாக 'ஸ்கம்' என்ற படிவை ஏற்படுத்துகின்றன. இது அழுக்கு நீக்குதலை மேலும் கடினமாக்குகிறது. இவ்வகையான நீரானது கடின நீர் என்றழைக்கப்படுகிறது. கால்சியம் மற்றும் மெக்னீசியம் உப்புகள் நீரில் கரைந்திருப்பதே அதன் கடினத்தன்மைக்குக் காரணமாகும். கடினத்தன்மையானது நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ இருக்கலாம். தற்காலிக கடினத்தன்மை கால்சியம், மெக்னீசியத்தின் கார்பனேட் மற்றும் பைகார்பனேட் உப்புகளால் ஏற்படுகிறது. நிரந்தர கடினத்தன்மையானது கால்சியம், மெக்னீசியத்தின் குளோரைடு மற்றும் சல்பேட் உப்புகளால் ஏற்படுகிறது.


செயல்பாடு 6

பலவிதமான நீர் ஆதாரங்களிலிருந்து நீரைச் (ஆறு, ஏரி, குளம், கிணறு) சேகரிக்கவும். வெவ்வேறு சோதனைக் குழாய்களில் ஒரே அளவிலான நீரை எடுத்துக் கொள்ளவும். அளவுகோல் கொண்டு நீர்மட்டத்தைக் குறித்துக்கொள்ளவும். ஒரு சொட்டு திரவ சோப்பை அனைத்து சோதனைக் குழாய்களிலும் சேர்க்கவும்.

ஐந்து முறை சோதனைக்குழாயினை நன்கு குலுக்கி, ஒவ்வொரு குழாயிலும் நுரை தோன்றும் உயரத்தைக் குறித்துக்கொள்ளவும். இதனை அட்டவணையில் பதிவு செய்யவும். இவற்றில் எது கடினநீர்? எது மென்னீர்? இதற்கான காரணத்தை உங்களால் கூறமுடியுமா?



அ. கடினநீரின் குறைபாடுகள்

• இந்த நீர் சலவை செய்வதற்கு ஏற்றதல்ல. இது துணிகளுடன் சேர்ந்து 'ஸ்கம்' என்ற பொருளை உருவாக்குகிறது. மேலும் இது சோப்பு மற்றும் டிடர்ஜெண்ட்களின் செயல்திறனைக் குறைப்பதோடு துணிகளையும் சேதப்படுத்துகிறது.

•இது பாத்திரங்கள் மற்றும் கொள்கலன்களின் மீது கடினமான படிவுகளை உருவாக்கி அவற்றைச் சேதப்படுத்துகிறது.

• தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் எந்திரப் பாகங்களின் மீது படிவுகளை ஏற்படுத்தி, அவற்றின் செயல்திறனைக் குறைக்கிறது.

• நீண்ட காலத்திற்கு இந்நீரைப் பருகினால் வயிற்று உபாதைகள் ஏற்படும்.



ஆ. நீரின் கடினத்தன்மையை நீக்குதல்

தற்காலிக மற்றும் நிரந்தரக் கடினத் தன்மையைப் பொருத்து, நீரின் கடினத் தன்மையினை நீக்கும் முறையானது மாறுபடுகிறது. அவற்றுள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

கொதிக்க வைத்தல்

தற்காலிக கடினத் தன்மையானது கொதிக்கவைத்தல் மூலம் நீக்கப்படுகிறது. சூடுபடுத்தப்படும்பொழுது கால்சியம் ஹைட்ரஜன் கார்பனேட் சிதைவடைந்து கரையாத கால்சியம் கார்பனேட் உருவாகிறது. வடிகட்டுவதன் மூலம் கரையாத கார்பனேட்டுகள் நீக்கப்படுகின்றன. இதன்மூலம் குடிப்பதற்கு உகந்த நீர் கிடைக்கிறது.

சலவை சோடாவைச் சேர்த்தல்

சலவை சோடாவைச் சேர்ப்பதன் மூலம் நிரந்தரக் கடினத் தன்மையை நீக்கலாம். சலவை சோடாவானது குளோரைடு மற்றும் சல்பேட்டுகளை கரையாத கார்பனேட் உப்புகளாக மாற்றுகிறது. இந்த கரையாத கார்பனேட்டுகள் வடிகட்டுதல் மூலம் நீக்கப்படுகின்றன.

அயனி பரிமாற்றம்

நீரின் கடினத் தன்மையை அகற்றுவதற்கான மற்றொரு முறை அயனி பரிமாற்றம் ஆகும். நீரினை அயனி பரிமாற்றம் செய்யும் பிசின்களுள் அனுப்பும் போது கால்சியம் மற்றும் மெக்னீசியம் அயனிகள் சோடியம் அயனிகளாக மாற்றப்படுகின்றன. இது கடின நீரை மென் நீராக மாற்றுகிறது.

வாலை வடித்தல்

தற்காலிககடினத்தன்மை மற்றும் நிரந்தர கடினத் தன்மையை வடிகட்டுதல் முறையால் அகற்றலாம். இம்முறைக்கு உட்படுத்தப்பட்டபின் பெறப்படும் காய்ச்சிய நீர் வாலை வடிநீர் என்று அழைக்கப்படுகிறது. இது மிகவும் தூய்மையான நீராகும்.


வாலை வடிநீர் மற்றும் காய்ச்சிய நீர் சுவையாக இருப்பதில்லை. காற்று, கார்பன் டைஆக்சைடு மற்றும் தாதுக்கள் கரைந்துள்ளதாலேயே குடிநீர் நல்ல சுவையைப் பெற்றுள்ளது.

Tags : Characteristics, Purification, Hardness of Water பண்புகள், சுத்திகரிப்பு, நீரின் கடினத்தன்மை.
8th Science : Chapter 13 : Water : Potable Water Characteristics, Purification, Hardness of Water in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 13 : நீர் : பருக உகந்த நீர் - பண்புகள், சுத்திகரிப்பு, நீரின் கடினத்தன்மை : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 13 : நீர்